Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-26

26

 ”அவனை வெளியே இழுத்து போடுடா …”

” கழுத்தை சீவுடா “

” ஓரே குத்து …குடல் வெளியே தொங்கனும் “

இப்படியான ஆவேசக் கூச்சல்களுடன் சூழ்ந்து கொண்ட ஊர் ஜனங்களை தடதடவென கை கால்கள் நடுங்க பார்த்தார் ராஜவேலு .தாரிகா திகைத்தாள்.

” என்னப்பா இது …? இவர்களுக்கு இந்த அளவு கோபம் வருமளவு என்ன காரியம். செய்தீர்கள் ? “

”  அ…அது …வ…வந்து …இ…இவர்கள் தறி நெசவாளிகள் .இவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்த வேலையை வேறு ஆட்களுக்கு மாற்றி விட  பேசிக் கொண்டிருக்கிறேன் .அது தெரிந்து விட்டது போலும் …” ராஜவேலுவின் குரல் நடுங்கியது.

” ஏன்பா அப்படி செய்தீர்கள் ? இவர்கள் பாவம் …இரண்டு வேளை சாப்பிடுவதே அந்த தறி வேலையை வைத்துத்தான் .அதையும் பிடுங்கினீர்களென்றால் …? “

”  இவர்கள் அந்த சுந்தரேசன் பக்கத்து ஆட்கள் .தர்மராஜாவிற்கு எனக்கும் பகையான பிறகு , நான் சுந்தரேசன் மூலம்தான் இங்கே தொழில் பார்த்துக் கொண்டிருந்தேன் .இப்போதோ மச்சானும் , மாப்பிள்ளையும் சேர்ந்து விட்டார்களாமே …சுந்தரேசன் எனக்கு தறி ஓட்ட முடியாது என்று சொல்லிவிட்டான் .அவனை ….” ராஜவேலு பல்லைக் கடிக்க …

” இதற்காகத்தான் அவர் மகள் சுகந்தியை கடத்தி , அவரை மிரட்ட நினைத்தீர்களாக்கும் …?  என்ன மனிதர் பா நீங்கள் …? “

” ஆமாம் .நான் அப்படித்தான் .எனக்கு தொழில் முக்கியம் . அந்த சுகந்தி எப்படியோ தப்பிப் போய்விட்டாள் . என் திட்டம் வீணாகி விட்டது .இனி இந்த ஊரில் தறி நெய்பவன் ஒருவன் கூட நிம்மதியாக இருக்க கூடாது .ஒரு தறி கூட இங்கே ஓடக் கூடாது .இந்த தொழிலையே …ஊரையே நான் அழித்துக் காட்டுவேன் …”

”  அடப் பரதேசி நாயே …நீயெல்லாம் அழிக்கும் அளவுக்கா எங்கள் ஊர் சீப்பட்டுப் போய் கிடக்கிறது …? ” கர்ஜித்தபடி உள்ளே வந்தார் சுந்தரேசன் .கொத்தாக ராஜவேலுவின் சட்டையை பிடித்தார் .

”  உனக்காக இத்தனை வருடங்களாக என் மச்சானைக் கூட எதிர்த்துக் கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கிறேன் .நீ கடைசியாக என் மகளையே கடத்துகிறாயா …? உன்னையெல்லாம் …” ஆவேசத்துடன் கை உயர்த்தியவர் , மிரண்டு நின்ற தாரிகா பக்கம் பார்வை போகவும் கையை இறக்கினார் .

”  குணவதியை மகளாக பெற்றிருக்கிறாயடா .பிரிந்து கிடந்த எங்கள் குடும்பத்தை சேர்த்து வைத்த அம்பிகை உன் மகள் .இதோ உன்னை அடிக்க போகும் போது அவள் கண்ணில் பதட்டம் தெரிகிறதே …ஐய்யோவெனும் பரிதவிப்பு தெரிகிறதே …பிறகும் எப்படி உன் மேல் கை வைப்பேன் ? ” சுந்தரேசன் அளவற்ற வெறுப்புடன் ராஜவேலுவை கீழே தள்ளினார் . தாரிகா அவரை நன்றியுடன் பார்த்தாள்

”  ஒரே ஒரு கண்ணசைவு போதும் .வெளியே கூச்சலிடும் எங்க ஊர்ஜனங்க உள்ளே நுழைந்திடுவாங்க .பிறகு நடப்பதை  நான் சொல்லத் தேவையில்லை …செய்யவா ..

? “

” வேண்டாம் சித்தப்பா … என் அம்மாவிற்கு நான் பதில் சொல்லவேண்டும் ” கெஞ்சுதல் தெரிந்த தாரிகாவின் குரலின் பின் எதுவும் செய்யும் எண்ணம் சுந்தரேசனுக்கு வரவில்லை .




ஆனால் வெளியே நிலைமை கட்டுக்கு மீறியது .  சுந்தரேசன் வாசலில் நிறுத்தியிருந்த ஆட்களை தாண்டி உள்ளே நுழைந்த கிராமத்து ஜனங்கள் ராஜவேலுவை குறிவைத்து பாய்ந்தனர் தாரிகா  அவசரமாக அவர்களுக்கு இடையில் வந்தாள் .

”  வேண்டாம் .அவர் தெரியாமல் தவறு செய்து விட்டார் .அந்த தவறுகளை திருத்திக் கொள்வார் .அவரை விட்டு விடுங்கள்.”

” இதை நம்ப சொல்கிறாயா ? போம்மா அங்கிட்டு…  உன்பவுசும் உன் அப்பன் பவுசும் எங்களுக்குத் தெரியும் .நீயும்  இதற்கெல்லாம் உடந்தை தானே ?  ” கூட்டத்திற்குள் ஆளாளுக்கு பேச தாரிகா குழம்பினாள் .இந்த பிரச்சனையில் நான் எங்கே வருகிறேன் ?

“எனக்கு ஒன்றும் தெரியாதே “

” நீ அந்த கரிமூட்டம் குடும்பத்துடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருப்பவள்தானே ? இப்போது அந்த குடும்பத்தினரை தானே எங்களுக்கு பதிலாக தறியில் உட்கார வைக்க  உன் அப்பன் ஏற்பாடு செய்திருக்கிறான் ”  கூட்டத்தில் ஒரு பெரியவர் தெளிவாக விளக்க தாரிகா அதிர்ந்தாள் .

”   ஐயோ இந்த விபரம் எனக்குத் தெரியாதே .நான் சாதாரணமாக தானே அவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறேன் .”

” இல்லை.. இதனை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் .  நீயும் உன் அப்பாவும் சேர்ந்து திட்டம் போட்டுத்தான் இதனை செய்திருக்கிறீர்கள் .நீ முன்னால் வந்து அந்த குடும்பத்தினருடன் நைச்சியமாக பேசி அவர்களை வசப்படுத்தி விட்டாய் .இப்போது உன் அப்பன் பின்னால் வந்து நிற்கிறான் “

பலமாக தலையசைத்து மறுத்தாள் தாரிகா .அடக்கடவுளே எதார்த்தமான அவளது பழக்கம் இப்படி வந்து முடிந்துவிட்டதே… அவள் கண்கள் அங்கும் இங்கும் பரிதவித்தனர். “அப்பாவை மறைத்துக்கொண்டு மகள் நின்றாலானால் அவளையும் சேர்த்து வெட்ட வேண்டியது தான். இவளும் நிறைய தப்புகள் செய்திருக்கிறாள்.  வெட்டினால் பாதகமில்லை.”  கூட்டத்தில் ஒருவன் குரல்கொடுக்க இரண்டு மூன்று பேர் சேர்ந்து தாரிகாவை நெருங்க ராஜவேலு பதட்டத்துடன் மகளை தன் பின்னால் இழுக்க முயல , சுந்தரேசன் கையில் துப்பாக்கியுடன் இடையில் வர இவர்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டு முன்னால் தோன்றினான் மயில்வாகனன் .

அவன் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை வெறும் கைகளைத்தான் வைத்திருந்தான் இரு கை உயர்த்தி மக்களின் ஆவேசத்தை அடக்க முயன்றான்.

” ..”  கொஞ்சம் பொறுங்கள் நீங்கள் எல்லோரும் ஒன்றை மறந்து விட்டீர்கள் .இவள் ராஜவேலுவின் மகள் மட்டும் அல்ல .என் மனைவியும் கூட ” மயில்வாகனின் நினைவுறுத்தலில் கூட்டம் சிறிது தயங்கியது .

”  இவளை நான் என் மனமார விரும்பி திருமணம் செய்து கொண்டிருக்கிறேன் .ஏதோ வேலையாக சென்றவன் இவளை பார்த்ததும்  மிகப் பிடித்து நம் எதிரியின் மகள் என்பதை கூட மறந்து திடீரென திருமணம் செய்து கொண்டு வந்தேன் .இது உங்கள் எல்லோருக்கும் தெரியும் “

“ஆமாம் ஐயா இவள் உங்களையும் ஏமாற்றி இருக்கிறாள். ”  ஒரு இளைஞன் கத்த …

” என்னை ஒருவரால்  ஏமாற்ற முடியுமா ? நான் ஏமாறக் கூடியவனா …?  மயில்வாகனனின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

”  நாம் காலம் காலமாக ஒதுக்கி வைத்து வந்த கரிமூட்டம் குடும்பத்தினருடன் என் மனைவி நல்ல எண்ணத்துடன் தான் பழகி வந்தாள் .அவர்களது தொழிலை மாற்றி வேறு தொழில் அவர்களுக்கு ஆரம்பித்து அவர்களையும் கௌரவமாக வைக்க எண்ணினாள்தான். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் நெசவுத் தொழில் அல்ல .ஊருக்கு வெளியே தரிசாகக் கிடக்கும் எங்களது 50 ஏக்கர் நிலத்தை அந்த ஜனங்களுக்கு எழுதிவைக்க சொல்லியிருக்கிறாள் .அதில் அவர்களை விவசாயம் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறாள்.”




 இப்போது கூட்டத்தினர் தங்களுக்குள் சலசலவென பேசிக் கொண்டனர்.

”  இது உண்மையா ? “

மயில்வாகனன் தன் சட்டை பைக்குள் இருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்து நீட்டினான் .” எங்களது சொத்துப் பத்திரம் இதனை அந்த மக்களுக்கு  தானப் பத்திரம் எழுதித் தரப் போகிறேன் ” சொன்னபடி அதில் அங்கேயே வைத்து கையெழுத்திட்டான் .

”  இரண்டே நாட்களில் இந்த பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து விடுவேன் .இனி இவர்கள் கரி மூட்டக்காரர்கள் இல்லை .அவர்களும் விவசாயிகள் .தரிசை கொத்தி சரி செய்து கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள் .தாழ்ந்த இனத்தினர் இல்லை.  நமக்கு இணையான மனிதர்கள் ” மயில்வாகனின் கணீர் பேச்சில் அந்த இடமே அமைதியாக , கூட்டத்தை விலக்கியபடி உள்ளே ஓடி வந்தனர் கரிமூட்டம் குடும்பத்தை சேர்ந்த சிலர் .

” ஐயா எங்களையும் மனிதராக மதித்து உயர்த்தி விட்டீர்களே.  இதற்கு நாங்கள் என்ன செய்யட்டும் …? ” மயில்வாகனின்   காலில் விழப் போனவர்களை தடுத்து தாரிகா பக்கம் கை காட்டினான்.

”  இது என் முடிவல்ல .இதோ என் மனைவியின் ஆசை .இந்த ஊர் மக்கள் அனைவரும் தொழிலும் குடும்பமுமாக வாழ வேண்டுமென்பதே அவளது ஆசை. அதனை அவளது அன்புக் கணவனாக நான் நிறைவேற்றியிருக்கிறேன். அவ்வளவுதான் “.

தன்னை சூழ்ந்து கொண்டு அன்பு காட்டிய அந்த எளிய மக்களிடம் திணறிய தாரிகா கண்களில் நீர்வடிந்தது.  இப்போது ஊர் மக்கள் அனைவரின் கண்களுக்கும் அவள் அந்த முத்தால பரமேஸ்வரி அம்மனாகவே தெரிந்தாள் .

” நானும் ,  தர்மராஜா மச்சானும் எங்கள் பகை மறந்து ஒன்றாகி இந்த ஊரில் பிரிந்து கிடக்கும் தறி நெசவாளிகளை இணைத்து நெசவை பெரிய அளவில் செய்யப் போகிறோம் . அதனை இதோ இந்த ராஜவேலு மூலமாக சென்னை , கோயம்புத்தூர் தவிர வெளி மாநிலங்களிலும் சந்தைப்படுத்த போகிறோம் .இனி நம் ஊர் விவசாயம் , நெசவு என்று செழித்து் வளரப் போகிறது . அப்படித்தானே  ராஜவேலு ? ” சுந்தரேசனின் கேள்விக்கு ராஜவேலுவுக்கு மீந்திருந்த ஒரே வழி தலையசைப்பது மட்டுமே.

ஊர் ஜனங்கள் மனதார மூன்று பேரையும் தங்கள் தொழில் முதலாளிகளாக ஏற்றுக் கொண்டு ஆவேசம் குறைந்து ஊருக்குள் திரும்பினர்.

” இன்று அம்மனுக்கு பால்குடம் எடுக்கனும் “

” நாளை பூச்சொரிதல் …”

திருவிழா விசேசங்களை தங்களுக்குள் பேசியபடி கலைந்தனர் மக்கள். மக்களோடு மக்களாக நழுவப் பார்த்த ராஜவேலுவின் சட்டையை பிடித்து நிறுத்தினார் சுந்தரேசன் .

” நீ எங்கே போகிறாய் ?  பொதுவில் அடி வாங்கி சாக இருந்த உன்னை இந்த ஜனங்களுக்கு  முதலாளி ஆக்கி இருக்கிறோமே …? எங்களுக்கு என்ன செய்யப் போகிறாய் …? “

” ரொ…ரொம்ப நன்றி …” ராஜவேலுவின் குரல் குழறியது .

” நன்றி வேண்டாம் எங்களுக்கு . மன்னிப்பு வேண்டும் ”  ஆணித்தரமாக ஒலித்தது மயில்வாகனின் குரல் .

”  தப்புதான் .புத்தி கெட்டுப் போய் ஏதேதோ செய்ய நினைத்து விட்டேன் .என்னை மன்னித்து விடுங்கள் “




” நீ மன்னிப்பு கேட்க வேண்டிய ஆள் நாங்கள் இல்லை .வா  சொல்கிறேன் “

அவர்கள் அழைத்துப் போன இடம் மயில்வாகனின் வீடு .

இவனிடமா …? தர்மராஜாவை வெறித்தபடி ராஜவேலு தயங்கி நிற்க , தர்மராஜா ராஜவேலுவின் கழுத்தைப் பிடித்து தள்ளினார். அந்த வேகத்தில் ராஜவேலு விழுந்த இடம் சாந்தாமணியின் காலடி .

நிமிர்ந்து மனைவியை பார்க்க சாந்தாமணி நிலை குத்திய விழியுடன் அவரை வெறித்தபடி நின்றாள் .” சாந்தா எனக்கு இந்த ஒரே ஒரு முறை உன் அனுமதி வேண்டும் ” தர்மராஜா வேண்டலாக கேட்க சாந்தாமணி,    ம் …இந்த ஒரே ஒரு முறைதான் .ஆகட்டும் என்பது போல் விழிகளை இறுக மூடிக் கொண்டாள் .

தர்மராஜா ராஜவேலுவின் தோளை பற்றித் தூக்கி பட்டென கன்னத்தில் அறைந்தார் .” எனக்கு நிச்சயித்த பெண்ணை ஏதேதோ தகிடு தத்தம் செய்து கல்யாணம் செய்து கொண்டாயே .அவளோடு ஒழுங்காக குடும்பம் நடத்தினாயா ? எந்நேரமும் அவள் மேல் சந்தேகம். எப்போதும் சண்டை. உன்னோடு போராடி போராடி அவள் களைத்துவிட்டாள். கல்யாணம் முடிந்த பின்னாலும் என்றோ நிச்சயிக்கப்பட்டவனை இன்னமும் மனதில் நினைத்திருக்கிறாளென்று எப்படியடா உன்னால் கீழ்த்தரமாக நினைக்க முடிந்தது ?

உன்னிடம் அவள் படும் பாட்டை தெரிந்து கொண்டு கொஞ்சமாவது அவளை மீட்க நினைத்து தான் , என் மகனுக்கு உன் மகளை பெண் கேட்டு வந்தேன். அப்படி என்றால் எங்களுக்கிடையே என்ன உறவு முறை வருகிறதுடா முட்டாள் ? இதையெல்லாம் யோசிக்காமல் அன்றே கொச்சையாக பேசி என்னை விரட்டி விட்டாய் . அதோ அவள் முகத்தை பாருடா .பிறகும்  அப்படி நினைக்க தோன்றுமாடா ? பெண்களெல்லாம் போற்றப்பட வேண்டியவர்கள்.  மனைவிகளெல்லாம் மதிக்கப்பட வேண்டியவர்கள். நீ எவ்வளவோ கெடுதல் செய்தும் இன்னமும் உன்னைக் கணவனாக நினைத்துக் கொண்டிருக்கிறாள் பார் .இவள் அந்த முத்தால பரமேஸ்வரி தாயாரேதான்டா. அவள் கால்களில் விழுந்து உன் பாவங்களை கழுவிக் கொள் போ …,” தர்மராாஜாவின் தள்ளலில் மீண்டும் சாந்தாமணியின் கால்களில் விழுந்தார் ராஜவேல் .




What’s your Reaction?
+1
21
+1
13
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!