Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-24

24

 தன்னை நோக்கி ஓடி வந்த மனைவியை சலனமின்றி எதிர்கொண்டான் மயில்வாகனன் . ” இங்கே பாருங்கள் அம்மாவை நீங்கள் தானே அழைத்து வந்தீர்கள் ?  இங்கே எல்லோரும் அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார்கள் ” புகார் கூறும் குழந்தையாய் முன் நின்றவளுக்கு தனது போனை எடுத்துக் காட்டினான் மயில்வாகனன் .

அதில் அபிஷேக் அழைத்திருக்கிறான் என்ற செய்தி இருந்தது .”   உதவி செய்ய என்னை அழைத்திருக்கிறான். இப்போது நான் போகலாம் தானே ? ” அனுமதி கேட்டு போனை காட்டியபடி நின்றான்.

 அந்தக் கணத்தில் தாரிகாவின் மனதில் தமயந்தி , சாந்தாமணி , தர்மராஜா அன்பரசி , அனந்தநாயகி என எல்லோரும் மறைந்துபோக .சுகந்தி மட்டுமே முழுவதுமாக வியாபித்து நின்றாள்.

” ஐயோ அபிஷேக்கால் முடியவில்லையா  ?  வாருங்கள் நாம் போகலாம் ”  கணவன் கை கோர்த்துக் கொண்டாள் .

” நீ எதற்கு  ?  வேண்டாம் .அங்கே ஆபத்து இருக்கலாம் .”மயில்வாகனன் அவளை தவிர்க்க முனைந்தான் .

“முடியாது .ஒருவேளை சுகந்தியின் இந்த நிலைக்கு நான் தான் காரணமோ என்ற குற்ற உணர்வு எனக்குள் இருக்கிறது.  இதனைத் தீர்க்க வேண்டுமானால் நானும் உங்களுடன் வந்தே தீருவேன் .ஆபத்து எனக்கும் சேர்த்தே வரட்டும்.”அவன் தோளோடு ஒட்டிக் கொண்டாள்.




 வாசல் அருகே நின்று இவர்கள் இருவரும் பேசிய பேச்சுக்கள் ஹாலின் நடுவே நின்று கொண்டிருந்த மற்றவர்களுக்கு கேட்காமல் போக ,அவர்கள் அனைவரையும் பார்வையால் அளந்த மயில்வாகனன் ஏதோ முடிவெடுத்து அவர்கள் பக்கம் கை காட்டினான் .

” அப்பா ஒரு முக்கியமான வேலை .நானும் தாருவும் வெளியே போய்விட்டு வருகிறோம். அதுவரை எல்லோரும் அமைதியாக இருங்கள் ” என்றான் .

“எதுவும் பிரச்சனையா மயிலு ? ”  தர்மராஜா வேகமாக அருகே வர அவரை கையசைத்து நிறுத்தினான் .

” இல்லை அப்பா .கோவில் திருவிழா விஷயம்தான் .ஒரு சிறிய தவறு.  கமிட்டி உறுப்பினர்களிடம் பேசி அதனை சரி செய்து விட்டு வருகிறேன் .தாரிகா இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதனால் அவளையும் கூட்டிக்கொண்டு போகிறேன்  ” சொல்லிவிட்டு தந்தை அருகில் வரும் முன் தாரிகாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

” அபிஷேக் என்ன சொன்னார் ? “

” ஏதோ சுகந்தி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டானாம் .  உள்ளே போக முடியவில்லையாம். என்ன செய்வது என்று கேட்கிறான் “

ஊரைத் தாண்டி காட்டுப்பகுதிக்குள் இருவரும் வந்தனர் .காரை நிறுத்திவிட்டு மரங்கள் அடர்ந்திருந்த பள்ளத்தாக்கிற்கு தாரிகாவின் கையை பிடித்துக் கொண்டு மயில்வாகனன் உள்ளே இறங்கினான் .சில எட்டுக்கள் கடந்ததுமே அபிஷேக் பரபரப்புடன் அவர்கள் அருகே வந்து சேர்ந்து கொண்டான்.

” இதோ இந்தப் பக்கம்தான் …” வழிகாட்டி அழைத்துப் போனான்.  இன்னும் ஒரு சிறு இறக்கம் இறங்கிய பின் காடு அடர்த்தியானது . மூவரின் கைகளிலும் செல்போன் டார்ச் ஒளி மட்டுமே .பாதையை அனுமானித்து நடந்தனர் .

”  இந்தப் பக்கம் இப்படி ஒரு வீடு இருப்பது எனக்கே தெரியாது .இன்று தான் தெரிந்து கொண்டேன் ”  அபிஷேக் பேசிக்கொண்டே முன்னால் நடந்தான் .

“உனக்கு என்ன தான் தெரியும் ”  மயில்வாகனன் முணுமுணுத்தான் .தாரிகா அவனை பேசாமல் இருக்கும்படி சைகை செய்தாள்.




 ஓங்கி வளர்ந்திருந்த தேக்கு மரங்களின் பின்னே ஒளிந்து கொண்டு  ”  ஜாக்கிரதையாக தலையை மட்டும் நீட்டி பாருங்கள் .அதோ அங்கே ஒரு மர வீடு தெரிகிறது இல்லையா ?   அங்கேதான் சுகந்தியை பிடித்து வைத்திருக்கிறார்கள்”  முணுமுணுப்பாய் சொன்னான் அபிஷேக்.

பர்ணசாலை போன்ற தோற்றத்துடன் அங்கே ஒரு மரவீடு இருந்தது .  சோகையாக ஒன்றிரண்டு மின் விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன

” சுகந்தியை யார் கடத்தி வைத்திருப்பார்கள் ? ”  தாரிகா மயில்வாகனனிடம் சந்தேகம் கேட்க ,அவன் அபிஷேக் அறியாமல்  இரக்கமின்றி நச்சென்று அவள் உச்சந்தலையில் கொட்டினான் .

” ம் …உன் அப்பா… பேசாமல் வாயை மூடு ”   எரிந்து விழுந்தான் .அவனை முறைத்தபடி தாரிகா வாயை மூடிக்கொண்டாள்.

  “இவ்வளவு தூரம் வந்தாயே ..உள்ளே போவதற்கு என்ன ?  “அடுத்த எரிந்து விழல் அபிஷேக்கிற்கு .

“அது.. அவர்கள் கைகளில் துப்பாக்கி வைத்திருந்தார்கள். ”  அபிஷேக் வாசலில் அமர்ந்திருந்த இருவரை காட்டிச் சொன்னான்.

 தாரிகா அற்பப் பதரே என்பது போல் அவனை பார்த்தாள்.

”   இவனை எல்லாம் ஹீரோவாக்கி இவனுக்கு நான் இரண்டாவது ஹீரோவாக இருக்க வேண்டுமா ? “மயில்வாகனன் மெல்லிய குரலில் தாரிகாவிடம் ஞாயம் கேட்டான். தாரிகா  தேக்கு மரங்களின் மேல் இருந்த  ஏதோ ஒன்றை வேடிக்கை பார்த்தாள் .அவள் பதில் சொல்லப் போவதில்லை என உணர்ந்த மயில்வாகனன் அபிஷேக்கிடமே திரும்பினான் .

” துப்பாக்கி ….?  அது உன்னிடமும் இருக்கும் தானே  ? ” கிண்டலாக கேட்டான்.

” இதோ இருக்கிறதே ” அபிஷேக் எடுத்துக் காட்டினான்.

” ஓ …இருக்கும் .ஆனால் …சுடத் தெரியாது ”  அடுத்த எள்ளல் கேள்வி.

” நன்றாகத் தெரியுமே .அதோ அந்த உச்சியை சுடவா ? ” உயர்ந்த தேக்கு மர உச்சியை  குறிவைத்து சுட ஆயத்தமானான் அபிஷேக் .மயில்வாகனன் அவன் துப்பாக்கியை வேகமாக மடக்கினான்.

” முட்டாள் . என்ன செய்கிறாய் ?   இப்போது உன் வீரத்தை வெளிப்படுத்தி அங்கு இருப்பவர்களை இங்கே வர வைக்க போகிறாயா ? “

” நீங்கள் தானே கேட்டீர்கள் அண்ணா ?  நான் பயந்தது துப்பாக்கியால் சுடுவதற்காக அல்ல. என் மீது உள்ள கோபத்தில் சுகந்தியை அவர்கள் ஏதாவது செய்துவிட்டால்… அந்த பயத்தில் தான் உள்ளே போகாமல் திரும்பி விட்டேன் ”  விளக்கினான்.

 இப்போது தாரிகா மயில்வாகனை அர்த்தத்துடன் பார்க்க அவன் இரு கை உயர்த்தி சமாதானம் சொன்னான்.

”  சரி இப்போது நான் முன்னே போய் வாசலில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த வீட்டிற்கு பின் வாசல் உண்டு .நீ அந்த வழியாகப் போய் உள்ளே நுழைய முடியுமா என்று பார் ” அபிஷேக்கிற்கு திட்டம் வகுத்தான்.

 தாரிகாவை பத்திரமாக மரத்தின் பின்னாலேயே நிறுத்திவிட்டு ஆண்கள் இருவரும் பதுங்கிப் பதுங்கி வீட்டை நோக்கி நடந்தனர்.  மயில்வாகனன் நேரடியாக வாசலில் நின்றவர்களிடம் சென்று பேச்சுக் கொடுக்க,  அபிஷேக் பின்புறம் சென்றான். இரண்டே நிமிடங்களில் அந்த காவல்காரர்களிடம் பேசியபடியே வேகமாக அவர்கள் அருகில் அமர்ந்து கொண்ட மயில்வாகனை தாரிகா ஆச்சர்யமாக பார்த்தாள் .இவன் என்ன மந்திர வித்தை காரனா …?




 பத்து நிமிடங்கள் அவர்களுடன் பேசியவன் காட்டுக்குள் கைகாட்டி  ஏதோ பேசியபடி இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தான்.  மூவரும் காட்டுக்குள் மறைந்ததும் தாரிகா மெல்ல வீட்டை நோக்கி போனாள் .பின்புற கதவை உடைக்க முடியாமல் அபிஷேக் திணறிக் கொண்டு இருக்க ,கல்லை எடுத்து அவன் கையில் கொடுத்து உடைக்குமாறு சொன்னாள் .முன்புறம் காவலாளிகள் இல்லை என்ற தகவலை அவள் சொன்னதும் தைரியமான அபிஷேக் சத்தத்தை பற்றிய கவலை இன்றி கதவை கல்லால்  ஓங்கி உடைத்தான் .

வேகமாக உள்ளே போகப் போனவனின் கையை பிடித்தவள் ”  நீங்கள் மட்டுமே இங்கே வந்ததாக சுகந்தியிடம் சொல்லுங்கள் .எங்களை சொல்ல வேண்டாம் . ” என்றாள் .

ஒரு நிமிடம் திகைத்த அபிஷேக் பின் நன்றியை கண்களில் தேக்கி தலையசைத்து விட்டு வீட்டினுள் ஓடினான் . ” அத்தான்…”   என்ற கூச்சலுடன் சுகந்தி ஓடிவந்து அவனை கட்டிக் கொள்வதை நிழல் உருவமாக பார்த்த தாரிகா திருப்தியுடன் பின்னால்  மரக்கூட்டங்களுக்கு நடந்தாள்.

” என்ன உன் எண்ணம் நிறைவேறியதா ? ” அங்கேதான் மயில்வாகனன் நின்றிருந்தான்

” நீங்களும் இங்கேதான் இருந்தீர்களா ? எப்படி …?  அவர்களை என்ன சொல்லி அழைத்து போனீர்கள் ? “

” அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள்தான் .  ஊர்க்காரர்கள் .இந்த காட்டுக்குள் புதையல் இருப்பதாக புரளி உண்டு .அந்தப் பக்கம் ஏதோ தரையில் தட்டுப்பட்டதாகவும் , வந்து தரையை தோண்ட உதவுமாறும் அழைத்து போனேன் .புதையல் ஆசையில் வந்தார்கள் “

” இது எந்த இடம் ? “

”  இது தனியார் ஒருவருக்குச் சொந்தமான தேக்கு மரக்காடு .இந்த இடத்தை விலைக்கு வாங்கி அவர் தேக்கு மரங்களை வளர்த்து விற்று வருகிறார் “

” ஓ…ஆனால் இந்த வீடு …ஐயோ …இதோ அவர்கள் திரும்ப வந்துவிட்டார்களே ” அலறிய தாரிகாவின் வாயை மூடினான் .

”  கத்தித் தொலையாதேடி .எத்தனை நேரம்தான் அவர்களும் ஏமாறுவார்கள் .பக்கத்தில் நான் இல்லையென்றதும் சந்தேகம் வந்திருக்கும் .திரும்பியிருப்பார்கள் “

” நீங்கள் ஏன் உடனே வந்தீர்கள் ?  இன்னமும் கொஞ்ச நேரம் அவர்களை அங்கேயே நிறுத்தியிருக்கலாமே ? “

”  ஏனோ …எனக்கென்ன தலையெழுத்து ?.உங்கள் ஹீரோவும்தான் கொஞ்சம் உடலை வருத்தட்டுமே …” மயில்வாகனன் அலட்சியம் காட்டிய நொடியே அபிஷேக் முன்னால் அந்த இருவரும் வந்துவிட்டார்கள் .

” கொஞ்சம் அசந்ததும் ஓடுகிறீர்களா…? ” துப்பாக்கியையும் நீட்டி விட்டனர் .

சுகந்தி வீலென அலற , தாரிகா மயில்வாகனை தள்ளினாள் .” போங்க …போய் காப்பாத்துங்க “

” சும்மா இருடி …”  தன் தோள் குத்தியவளின் கைகளை தடுத்து அவளை தன்னோடு இழுத்துக் கொண்டான் .அங்கே கவனித்தான் .

தன் வழி மறைத்த இருவரையும் ஒரு நொடி திகைத்து பார்த்த அபிஷேக் மறு நொடியே தன் துப்பாக்கியை எடுக்க ,  அதற்குள் அவர்கள் தங்கள் ஆயுத விசையை அழுத்தியிருந்தனர் .

” ந்நோ …” என்ற அலறலுடன் தாரிகா மயில்வாகனின் மார்பில் முகம் புதைக்க , குண்டு பாய்ந்தது …அபிஷேக்கின் துப்பாக்கியிலிருந்து …ஆம் அந்த அடியாட்களின் துப்பாக்கிகள் வெறும் ” க்ளக் ” சத்தத்தை மட்டுமே கொடுத்தது .

” அவர்கள் துப்பாக்கி தோட்டாக்களை எடுத்து விட்டேன் ”  தன் மார்பில் புதைந்திருந்த தாரிகாவின் காதுகளில் தகவல் சொன்னான் மயில்வாகனன்.

அவனை நிமிர்ந்து பார்த்த தாரிகாவின் கண்கள் டன் டன்னாக காதலை சுமந்திருந்தன .

இருவரது கால்களுக்கும் குறி பார்த்து தலா ஒரு புல்லட்டை பாய்ச்சிய அபிஷேக் , கீழே விழுந்தவர்களின் முகத்திலும் ஓங்கி மிதித்தான் .இத்தனை செய்கைகளுக்கும் அவன் கை சுகந்தியின் தோளின் ஆதரவு அணைப்பை விடவில்லை .விழுந்தவர்கள் மயங்கியதும் சுகந்தியை அணைத்தபடியே காட்டை விட்டு வெளியேற தொடங்கினான் .

” இப்போது இவனை நம்புகிறேன் ”  ஒளி சுமந்திருந்த மயில்வாகனின் விழிகளை பார்த்திருந்த தாரிகா சட்டென எம்பி அவன் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தாள் .மயில்வாகனன் புரிபடாத பார்வை ஒன்றை அவள் மேல் செலுத்தினான் .

 இரவு மெல்ல விடியத் தொடங்க ,   மூங்கில் காடு வெளிச்சம் வாங்க ஆரம்பித்தது .திருவிழா கொண்டாட்டங்கள் மங்கி ஊருக்குள் ஒரு வித பதட்டம் பரவத் தொடங்கியிருந்தது.




What’s your Reaction?
+1
18
+1
15
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!