Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-8

8

“உனது படிப்பிற்கு எந்த இடைஞ்சலும் வராது என்று மாப்பிள்ளை வீட்டில் அன்றே சொல்லி விட்டனரே. மாப்பிள்ளையின் கடை உங்கள் காலேஜ் பக்கத்தில்தானே இருக்கிறது, தினமும் காலை உன்னை கொண்டு வந்து கல்லூரியில் விட்டுவிட்டு அவர் ஹோட்டலுக்கு போவதாக சொல்லியிருக்கிறார். வேறு எதுவும் அவரை மறுப்பதற்கான காரணங்கள் இல்லை.அதனால் நீ போய் கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பி”

இது இவ்வளவுதான் என முடித்துவிட்டார் கனகலிங்கம்.

துவண்ட நடையுடன் உள்ளே திரும்பியளிடம் “நாளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து உன்னை பார்க்க வருகிறார்கள். கல்லூரிக்கு லீவ் போட்டுவிட்டு கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு இரம்மா” என்றார்

இதை ஏன் முன்பே சொல்லவில்லை,  அலறினாள் தாரணி, மனதிற்குள் தான்…

——

என் மனைவியின் உடன் பிறந்த தங்கையின் மகள்தான் தாரணி. பிரசவத்திலேயே அவளுடைய அம்மா இறந்து போக,அப்பா தசரதன் மிகவும் மனம் நொந்து போனார். மனைவி இல்லாத வாழ்க்கையில் குழந்தை பாரமென நினைத்து,  பிறந்து பத்து நாட்களேயான பச்சை குழந்தையை கோவில் வாசலில் போட்டுவிட்டு ஊரை விட்டு போக முயன்றான். 

 நான் தசரதனை நன்றாக திட்டி விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். தசரதன் ஊரை விட்டு போய் விட்டான். என் மாமனாரும் மாமியாரும் வயதானவர்கள், அவர்களால் குழந்தையை வளர்க்க முடியாது.அன்று நானும் என் மனைவி கற்பகமும் மனமுவந்து தாரணியை எங்கள் இரண்டாவது மகளாக ஏற்றுக் கொண்டோம். இதோ இன்று வரை தாரணி எங்கள் பெறாத மகள்”.

“இவளுடைய அப்பா என்ன ஆனார்?”

” இரண்டு வருடங்களுக்குப் பிறகு தசரதன் திரும்ப வந்தான். மனைவி பற்றிய நினைவில் வாழ்க்கையை வெறுத்து இமயமலையில் ஏதோ ஆசிரமத்தில் சேர்ந்து விட்டானாம். இரண்டு வருடங்களில் அங்கேயும் போரடித்துவிட்டது போலும். மீண்டும் வந்து நின்றான். அவன் முகத்தில் விழிக்கவே நான் விரும்பவில்லை. வீட்டை விட்டு வெளியேற்றி விட்டேன். சென்னையில் ஏதோ வேலை பார்ப்பதாக அவன் சொன்ன ஞாபகம். இடையில் இங்கு வந்து மகளைப் பார்த்து விட்டு போவான்”

  தாரணியின் வாழ்க்கை அவலங்களை கனகலிங்கம் தெளிவாக விளக்கிக் கொண்டிருக்க, அவருக்கு எதிரே அமர்ந்திருந்த அம்மாவும் மகனும் தலையசைத்து கேட்டுக் கொண்டிருந்தனர். இப்படி தனது குடும்ப விசயம் அடுத்தவர் முன் கோழி அரிசியாய்  இறைபடுவதை விரும்பாத தாரணி உதட்டை மடித்து கடித்துக் கொண்டு தலை குனிந்து அவர்கள் முன் அமர்ந்திருந்தாள்.

“இன்று உங்கள் ஹோட்டலுக்கு லீவா சார்?” திவ்யா அக்கறையாய் கேட்க அவன் புன்னகைத்தான்.

“ஒரு மணி நேரம் டைம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்”

“என்ன சார் இது? உங்களுக்கு பெண்பார்க்க வரும் நாளில் கூட ஒரு முழு நாள் லீவு எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?” சர்வேஷ் கேட்டான்.

“இந்த பிசினஸை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். முழு நாளெல்லாம் விட்டு வர முடியாது. நான்தான் முன்பே பெண்ணை பார்த்து விட்டேனே,என் அம்மாவிற்காகத்தான் வந்தேன்”




தாரணிக்கு திக்கென்றது.அன்று இவன் கடை தேடி போனதை நினைவிலா வைத்திருக்கிறான்?

“எப்போது பார்த்தீர்கள்?” கேட்ட திவ்யாவின் குரலிலும் ஏகப்பட்ட சந்தேகங்கள்.

“உங்கள் வீட்டில்தாங்க. அன்று நீங்கள் இருவரும் காலேஜ் முடித்து வரும்போது பார்த்தேனே! நீங்கள் கூட அன்று முகத்தை திருப்பிக் கொண்டு போனீர்களே!”

“ஆ… அது… அன்று… ஆமாம். அன்று… யாரோ என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிந்தது” திவ்யாவிடம் திணறல்.

“என்ன தெரிந்தது?” அவன் கேள்வியில் கூர்மை.

“நீங்கள் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்று தெரிந்தது” திவ்யா சமாளித்துக் கொண்டாள்.” உங்கள் கடை எங்கள் காலேஜில் மிகவும் பிரபலம் தெரியுமா? அங்கே படிக்கும் சில பேர் உங்கள் கடைக்கு வருவதற்காக மரமெல்லாம் ஏறிக் குதிப்பார்கள்” திவ்யா சொல்ல, தாரணியினுள்  பூமியையே அரைத்துக் கொண்டு படு வேகமாக ஓடியது ஒரு ரயில்.

“ஓ அப்படியா?” அவன் திவ்யாவின் பிரலாபத்தை மிக இலகுவாக எடுத்துக் கொண்டான்.

“நீ என்ன புள்ள படிக்கிற?” இவ்வளவு நேரமாக கனகலிங்கத்திடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்த அவன் அம்மா சுந்தராம்பாள் இப்போதுதான் முதன்முறையாக தாரணியிடம் பேசுகிறாள்.

தாரணி அவர்கள் வந்து அமர்ந்ததிலிருந்து இருவரையுமே ஏறிட்டு பார்க்கவில்லை.அவர்கள் அமர்ந்திருந்த சோபாவின் நான்கு கால்களைத்தான் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தாள்.

“இன்ஜினியரிங்” லேசான தடுமாற்றத்துடன் சொன்னாள்.

“என் மகனும் பெரிய படிப்பு படித்தவன்தான். ரெண்டு பட்டம் முடித்திருக்கிறான். புருஷன் போனதுக்கப்புறம் நாதியத்து நின்னாலும் வாயகட்டி வவுத்த கட்டி, என் பிள்ளையை ரெண்டு டிகிரி படிக்க வச்சுட்டேன்ல” தன் முதுகில் தானே தட்டிக் கொண்டாள்.

“ஏன் சாமி, உன்ன விட பெரிய படிப்பு படிச்சிருக்கா இந்த புள்ள?” மகனிடம் விளக்கம் கேட்டவரிடம் தெரிந்த பாமரத்தனம் தாரணிக்கு உறுத்தியது.

“ஆமாம்மா ,அவங்க இன்ஜினியர். நான் சாதாரண டிகிரிதானே! “பதில் சொன்னவனின் முகத்தை இப்போதும் நிமிர்ந்து பார்க்க தோன்றவில்லை.

எங்கோ எதிலோ தான் பலமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம், இதுதான் தாரணியின் மனதிற்குள் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

“மூன்றாவது வருடம் தானே படிக்கிறீர்கள்?” அவனது கேள்வி இப்போது நேரடியாக இவளிடமே. தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.




“சமையல் தெரியுமா புள்ள? கவுச்சில்லாம் சமைப்பியா?’

 இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் எண்ணமே தாரணிக்கு இல்லை. ஆஹா!உங்களுக்கு ஆக்கி போடத்தானே பிறந்திருக்கிறேன் நான்.

“அம்மா ஒரு பெரிய சமையல்காரனை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்களை போய் சமைக்க தெரியுமா என்று கேட்கிறீர்களே?” அவன் சொல்ல எல்லோரும் சிரித்தனர். தாரணிக்கு புன்னகைக்க கூட மனம் வரவில்லை.

” ம்க்கும் இந்தக் காலத்துல மனசார எந்தப் பொண்ணு சமைப்பேன்னு சொல்லுறா,சரி அதை விடு.எண்ணி பத்தாவது மாசமே எனக்கு ஒரு பேரக் குழந்தையை பெத்துக் கொடுத்திடு.அது போதும்”

பிள்ளை பெறுவதாவது…அவள் படிப்பு என்னாவது! தாரணி திடுக்கிட்டு உடன் நிமிர்ந்து பார்த்தது அவனைத்தான்.அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.இவள் பார்வையை சந்தித்ததும் லேசாக தலையாட்டி அழுத்தமாக இரு விழி மூடித் திறந்தான்.

அதெல்லாம் தேவையில்லை…நான் பார்த்துக் கொள்கிறேன் என அவனது செய்கைக்கு அர்த்தம் கண்டிபிடித்துக் கொண்ட தாரணியினுள் ஒரு வகை நிம்மதி மென் குமிழ்களாய் வெடித்து உருவாக ஆரம்பித்தது.




What’s your Reaction?
+1
41
+1
26
+1
2
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!