Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-23

23

 அது முன்னிரவு நேரம். சாமி சப்பரத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தது. சப்பரம் கோவிலை அடைந்த பிறகு அன்றைய கலை நிகழ்ச்சிகள் ஏதாவது ஆரம்பமாகும் .ஊர் முழுவதும் அப்போது அங்கே தான் கூடிவிடும் .இப்போதே சாமி பார்க்கும் எண்ணத்துடன் கிட்டத்தட்ட எல்லோருமே கோவிலை சுற்றியே குவிந்து கிடந்தனர் .வெறிச்சோடிக் கிடந்த வீதிகள் வசதியாக இருக்கும் என்று எண்ணியோ என்னவோ அந்த இருவரும் சுகந்தியின் வாயைப் பொத்தி சற்று ஓரமாக வரிசையாக புதிதாக முளைத்திருந்த கடைகளின் பின்புறம் இழுத்துச் சென்றனர்.  சுகந்தி அடம்பிடிக்க சட்டென ஒருவன் அவள் முகத்தில் துணிப்பை ஒன்றால் மூடி கட்டினான். அத்தோடு இருவருமாக அவளை குண்டுகட்டாக தூக்கி போய் மரங்களின் பின்னால் சற்றே மறைவாக நிறுத்தி இருந்த அம்பாசிடர் கார் ஒன்றின் உள்ளே ஏற்றினர் .மறுவினாடியே அந்த கார் பறந்துவிட்டது .

கொட்டும் மேளமும் உருமியும் போட்டி போட்டு முழங்கிக்கொண்டிருந்த திருவிழா சூழ்நிலையில் தாரிகா சத்தமிட்டு இருந்தாலும் யாருக்கும் கேட்டிருக்காது .அவளுமே சத்தம் இடக்கூடிய நிலைமையிலும் இல்லை .சுகந்திக்கு அவளது அப்பாவால் தானே ஆபத்து என்று நினைத்தோம். இப்போதுதான் இருவரும் சேர்ந்து விட்டார்களே.. இது யார் புதிதாக முளைத்த வில்லன்?   இந்த மூளை பிறாண்டலில் அவள் இருந்தபோது எக்கச்சக்க புகையை கக்கியபடி அம்பாசிடர் கிளம்பி விட்டது .பிறகுதான் உணர்வுக்கு வந்தவள் மனதில் உடனடி நினைவுக்கு வந்தவன் அபிஷேக் தான். சட்டென தனது போனில் அபிஷேக்கின் நம்பரை அழுத்தியபோது அபிஷேக்கே அங்கே தென்பட்டான் .

சுற்றும் முற்றும் தலைதிருப்பி அவன் தேடிய விதத்தில் சுகந்தியை தான் தேடுகிறான் என்பது புரிந்து அவனருகே ஓடி ” சீக்கிரமாக போங்கள். சுகந்தியை யாரோ காரில் தூக்கிக் கொண்டு போகிறார்கள்”  படபடத்தாள் .

” என்னது …? யார் அது…? ”  அபிஷேக்கின் அதிர்ச்சி உச்சபட்சமாக இருந்தது.  “இப்போதுதானே அவளுக்காக கரும்புச்சாறு வாங்கப் போனேன். அதற்குள் யார் ….? ” புலம்பியபடி ஓரமாக நிறுத்தி இருந்த தனது பைக்கிற்கு ஓடினான்.

”  இதோ இந்தப் பக்கம்” திசையைக் காட்டி அனுப்பி விட்டு திரும்பியவள் அதிர்ந்தாள்.

 அங்கே மயில்வாகனன் நின்றிருந்தான் அப்போதுதான் ஊர் திரும்பியிருப்பான் போலும். அவனது கார்  சற்று ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .

” என்னவாயிற்று …? ” வேகமாக இவள் அருகில் நெருங்கி விசாரித்தான் .

” யார் என்று தெரியவில்லை. யாரோ இருவர் சுகந்தியை….”   பேசிக்கொண்டிருக்கும்போதே மயில்வாகனன் காருக்கு ஓடினான்.

”  நான் போய் பார்க்கிறேன் “

தாரிகா பின்னேயே ஓடி அவன் கையைப் பிடித்து இழுத்தாள் . ”  உங்கள் வீர தீர பராக்கிரமங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்கிறீர்களா ?  எப்போதும் நீங்களே ஹீரோவாக இருக்க வேண்டும் என்பது இல்லை. சில தேவையான நேரங்களுக்கு இரண்டாவது ஹீரோவாகவும் இருக்கலாம். “

” என்ன சொல்கிறாய் ?  எனக்கு ஒன்றும் புரியவில்லை. வழியைவிட்டு நகர் .அங்கே சுகந்திக்கு ஆபத்து .”

“அவளை காப்பாற்றத்தான் அபிஷேக் போயிருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார் . நீங்கள் இங்கேயே இருங்கள் . “

” அப்படி அவனை நம்பி சுகாவை விடச் சொல்கிறாயா ? ” திமிறி நின்ற அவனது இரு தோள்களையும் தன் மெல்லிய விரல்களால் அழுத்தி பற்றினாள் .

 ” மயிலு ப்ளீஸ் நான் சொல்வதை கேளுங்கள் .நான் சுகந்தியின் நல்வாழ்க்கைக்காகத் தான் சொல்கிறேன் .இரண்டு நாட்களாக திருவிழா நேரங்களில் நான் அபிஷேக்கையும் சுகந்தியும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் .அபிஷேக்கிற்கு சுகந்தி மேல் இருக்கும் பிரியம் அவளுக்கு   அவர்மேல் இல்லை.  அவள் ஏதோ ஒரு தயக்கத்துடனேயே இருக்கிறாள் அவள் மனதில் ஹீரோவாக முதல் படியில் இருக்கும் நீங்கள்   கீழ் படிக்கு இறங்கும் நேரம் வந்துவிட்டது .அவளுடைய ஹீரோவாக அபிஷேக் மட்டுமே என்றும் இருக்க வேண்டும் .இப்போது அதற்கான நேரம் தானாகவே அமைந்து வந்திருக்கிறது .இதில் நீங்கள் இடையூறு செய்ய வேண்டாம் .ப்ளீஸ்… கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள்”




தாரிகாவின் விளக்கத்திற்கு மயில்வாகனனின் முகம் இறுகிப்போய் மாறியது.   அவனது விரைத்த முகத்தை பார்த்த தாரிகா திடுமென ஒன்று தோன்ற  , அவன் தோள்களில் சரிந்து இரு கைகளையும் அவன் முதுகுபுறம் கொடுத்து இறுக்கி அணைத்துக் கொண்டாள் .மென்மையாக முதுகினை நீவி விட்டாள்.

‘  மயிலு ரிலாக்ஸ் எதுவும் தவறாக நடக்காது.  எல்லாம் நன்மைக்கே தேனினை குழைத்து  சொற்களை வடித்தாள் .

இரு உள்ளங்கைகளையும் இறுக்கி மூடிய அவன் கண்களையும் அழுந்த மூடிக்கொண்டு அப்படியே நின்றான் .பிறகு ஒரு வேகத்துடன் தன்னை அணைத்து நின்ற தாரிகாவை இறுக்கி தன்னோடு சேர்த்து அணைத்தான். வினாடிக்கு வினாடி அவனது அணைப்பு  வேகம் கூடிக்கொண்டே போனது .தாரிகா தனது உடம்பு  பகுதி பகுதியாக உதிர்ந்து விழுந்துவிட போகிறது என்றே மிகு நிச்சயமாக நினைத்தாள்.

அணைப்பின் வேகத்தை சிறிதும் குறைக்காமல் முரட்டுத்தனமாக அவள் தலையை பற்றி தன்னருகே இழுத்து அவள் உதடோடு உதட்டைப் பொருத்தினான் .  மனிதனின் செயல் இல்லை இது ..என தாரிகா நோகும்படி அவளை துன்புறுத்துவதாக இருந்தது அந்த இதழ்அணைப்பு.குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாக  தன் உடலை உணர்ந்தாள் தாரிகா .

” இந்த முத்தம் எப்போது முடியும்…? ஆனால் இது முத்தம் தானா …,?  உள்ளுக்குள் நொந்து கண்கள் சொருக அவள் மயக்கத்திற்கும் விழப் போன நேரம் அவள் இதழ்களை ..அவளை.. விடுவித்தான்.

” மயங்கி விழுந்து தொலையாதே”   தோளை பற்றி உலுக்கினான்.சுகாவிற்கு மட்டும் ஏதாவது நடந்தது என்றால் நான் மனிதனாகவே இருக்க மாட்டேன் “விரலாட்டி எச்சரித்தான்.

 இப்போது மட்டும் மனிதனாக வா இருக்கிறாய் மனதிற்குள் நினைத்துக் கொண்ட தாரிகாவின் இதழ்கள் எரிந்து கொண்டிருந்தன  .

காருக்குள் ஏறி ஸ்டார்ட் பண்ணியவன் நினைத்தாற்  போல் இறங்கிவந்து இருளில் திகைத்து நின்றிருந்தவளின் கையைப்பற்றி இழுத்து காரின் பின் சீட்டில் தள்ளினான்.  வெறிகொண்ட வேங்கை ஒன்றின்மீது கரடுமுரடான காட்டுப் பாதையில் பயணித்தது போன்று இருந்தது தாரிகாவிற்கு அந்த கார் பயணம். இறுதியில் அவளை வீட்டின் முன் இறக்கி விட்ட போது தாரிகாவிற்கு உடலில் பாதி உயிர் தான் இருந்தது.

” உள்ளே போய் உன்னை நீயே கொண்டாடிக் கொள் …”  வெறுத்த குரலில் சொல்லிவிட்டு மீண்டும் காரோடு போய்விட்டான்.

 இப்போது இவன் அபிஷேக்கிற்கு இடையூறாக போய்விட மாட்டானே வருத்தத்துடன் உடல் நடுங்க நின்றிருந்த தாரிகாவின் தோள்கள் மென்மையான கரம் ஒன்றினால் பற்றப்பட்டது. திரும்பிப் பார்த்தவள் ஆனந்தமாய் அதிர்ந்தாள் .

” அம்மா…”  ஏக்க கூச்சல் ஒன்றுடன் அங்கே நின்றிருந்த சாந்தாமணியின் மார்பில் தஞ்சம் அடைந்தாள். ஏனோ உடல் குலுங்கி அழத் துவங்கினாள் .

ஆதரவாக அவளை அணைத்துக் கொண்ட சாந்தாமணி மெல்ல அவள் முதுகை நீவிவிட துவங்கினாள். அவளது முகத்தில் நிறைய குழப்பம் தெரிந்தது

”  திருவிழா நேரமும் பொழுதுமாக அம்மாவும் மகளும் வாசலில் நின்று அழுது கொண்டிருந்தால் அந்த வீடு என்னாவது …? எரிச்சலான குரலில் திகைத்து திரும்பிப் பார்த்தாள் தாரிகா .

தமயந்தி கோபமான முகத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

” என்னவென்று தெரியவில்லை தமயந்தி .  தாருக்குட்டி அழுது கொண்டிருந்தாள் அதுதான் என்னவென்று கேட்டுக் கொண்டிருந்தேன் ”  சாந்தாமணி சமாதானமாக பேசினாள்.




” எதுவாக இருந்தாலும் இரண்டு பேரும் வீட்டிற்குள் வாருங்கள்.”  சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.

” தாரும்மா… என்னடா மாப்பிள்ளை உன்னைத் தேடித்தான் ஊருக்குள் வந்தார். அவரை பார்த்தாயா நீ  ? எப்படி வீட்டிற்கு  வந்தாய்  ? ஏன் அழுகிறாய் ? ”  சாந்தா மணியின் கேள்விகளில் தாரிகாவிற்கு சில விவரங்கள் புரிபட்டது.

 மயில்வாகனன் தான் சென்னையிலிருந்து சாந்தாமணியை  இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். ஊர் திருவிழா பார்ப்பதற்காக இருக்கலாம்.மனைவிக்கு அம்மாவின் வரவு சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று அவளிடம் சொல்லாமல் விட்டிருக்கிறான்.

இங்கே வீட்டில் சாந்தாமணியை இறக்கி விட்டுவிட்டு தாரிகாவை கூட்டி வர அவன் திருவிழா கூட்டத்திற்குள் வந்திருக்கிறான் .அம்மாவை மகளுக்கு காட்டும் ஆவலில் இருந்திருக்கிறான் .

அங்கே அவனுக்கு பிடிக்காத நிகழ்வுகள் நடக்க தாரிகாவை இங்கே இழுத்துக் கொண்டு வந்து தள்ளிவிட்டு கோபத்துடன் சென்றுவிட்டான். தாரிகா தாயின் மடியில் சரிந்து கொண்டாள்.

” ஒன்றுமில்லை மம்மு. திடீரென்று உங்களை பார்த்ததும் சந்தோஷத்தில் அழுகை வந்து விட்டது”  கொஞ்சலாக பேசினாள் .

” அப்படியா…? ”  நம்பலாமா வேண்டாமா என்ற யோசனை சாந்தாமணியின் குரலில்.

” என் மகனால் யாருக்கும் எந்தத் தொல்லையும் வராது வலியுறுத்தியபடி வந்தாள் தமயந்தி.

” அது எனக்குத் தெரியும் தமயந்தி .

அதனால் தானே தாரிகா வை இங்கே அனுப்பி வைக்க முடிவு செய்தேன். உன் பார்வையில் அவளுக்கு எந்த தீங்கும் வந்துவிடாது என்பது எனக்கு நிச்சயம் தான். “

” நம்பிக்கை …? என்னிடம் …?  இதனை நான் நம்ப வேண்டுமா ? ” எள்ளல் தெறித்தது தமயந்தியின் குரலில .

அத்தை ஏன் ஒரு மாதிரியாக பேசுகிறார்கள் தாரிகா குழப்பத்துடன் தாயைப் பார்க்க சாந்தா மணியின் இருண்டிருந்தது.

” தமயந்தி ப்ளீஸ் நமது பிரச்சினைகள் குழந்தை முன் வேண்டாமே .அவள் வருத்தப்படுவாள் “

தமயந்தி வெடுக்கென முகத்தை திருப்பிக் கொள்ள தாரிகா பெரும் குழப்பத்தில் விழுந்தாள்.

” அம்மா என்ன நடக்கிறது ?  உங்களுக்கும் அத்தைக்கும் ஏதாவது பிரச்சனையா ? “

 ” அதெல்லாம் ஒன்றும் இல்லை தாரும்மா .நாங்கள் இருவரும் நல்ல தோழிகள். அப்படித்தானே தமயந்தி  ? ” சாந்தா மணியின் கேள்விக்கு அரை மனதாக தலை ஆட்டி வைத்தாள் தமயந்தி .

அப்போது வாசல் பக்கம் யாரோ வருவது போல் தோன்ற சோபாவில் அமர்ந்திருந்த பெண்கள் எழுந்து நின்றனர். தர்மராஜா தனது இரு மகள்களுடன் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார். திருவிழா பார்க்க போயிருந்த  அவர்கள் திரும்ப வீடு வந்து இருந்தனர் .தர்மராஜா உடன்  அன்பரசி யும் அனந்த நாயகியும் வாசலிலேயே ஆணி அடித்தது போல் நின்றுவிட்டனர் .

” அப்பா இந்த அம்மா ஏன் இங்கே வந்திருக்கிறார்கள்  ? ” அனந்தநாயகி கத்த ..

அன்பரசி  ” அவர்களை வெளியே தள்ளுங்கள் ”  கூச்சலிட்டாள். தாரிகா அதிர்ந்தாள்.

இங்கே என்ன நடக்கிறது அன்பின் திரு உருவமான அவளது அன்னையே வீட்டை விட்டு வெளியே போகச் சொல்வதா ?   தாரிகா ஆவேசமானாள் .எல்லோரையும் ஒரு வழி பண்ணி விடும் நோக்கத்தில் அவள் வாயைத் திறந்தபோது மயில்வாகனன் வீட்டிற்குள் நுழைந்தான்.

தாரிகா அவனிடம் வேகமாக ஓடினாள் .கால் சிலம்பை கையில் ஏந்தி பாண்டியனிடம் ஓடிய கண்ணகியை ஒத்திருந்தது அவளது வேகம்.




What’s your Reaction?
+1
21
+1
15
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!