Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-7

7

பைக்கில் ஏறிக்கொண்டு திவ்யாவிற்கு கையசைத்த அந்த இளைஞன் ஸ்டார்ட் பண்ணி வண்டி நகர்ந்தவுடன் தைரியமாக ஒரு பறக்கும் முத்தத்தையும் அவளுக்கு அனுப்பினான். திடுக்கிட்டு திவ்யாவை திரும்பிப் பார்க்க அவள் முகம் சிவக்க நின்றிருந்தாள்.

 தாரணியுனுள் ஆத்திரம் அலைகளாக பரவ, வேகமாக அவள் அருகே போய் தோளை பற்றி உலுக்கினாள். “திவ்யா இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? யார் அது ?என்ன இப்படி பொது இடத்தில் இன்டீசன்டாக தயவு நடந்து கொள்கிறீர்கள் ?” கோபமாக கேட்டாள்.

 திவ்யா ஒரு மாதிரி பரக்க விழித்தாள். “என்ன மாட்டிக் கொண்டோமென்று 

விழிக்கிறாயா? சொல் யார் அவன்?”

” என்ன பதில் வேண்டும் உனக்கு?” கேட்டபடி ஹோட்டலின் அருகிலிருந்த காபி ஷாப்பில் இருந்து வந்தார் கனகலிங்கம்.

அவரை அங்கே எதிர்பார்க்காத தாரணி விழித்தாள். “பெரியப்பா ,வந்து… திவ்யா..”




” திவ்யாவிற்கு என்ன? நான் தான் அவளை இங்கே கூட்டி வந்தேன்.திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளையோடு கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்று திவ்யா சொன்னாள்.அவர்கள் இருவரையும் பேசவிட்டு நான் காபி ஷாப்பில் இருந்தேன். உனக்கு என்ன பிரச்சனை?”

 தாரணி புரியாமல் குழப்பத்துடனேயே நின்றிருந்தாள். “இல்லை பெரியப்பா… வந்து…”

 திவ்யா அவளை உற்றுப் பார்த்தபடி நின்றாள். “என்னம்மா உனக்கு திவ்யாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை 

தெரியாதில்லையா? அதனால்தான் யாரோ என்று நினைத்து விட்டாய் போல! இப்போது நன்றாக பார்த்துக் கொண்டாய்தானே? இவர்தான் திவ்யாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை”

தாரணிக்கு தலை சுழல்வது போலுருந்தது. உதடுகள் உலர்ந்தன. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு பேச்சு வராமல் சதி செய்தது. “அப்படியென்றால் அவர்…?” சிரமப்பட்டு நாவை அசைத்து கேட்டாள்.இவர்கள் கரியனை ஏமாற்றி விட்டார்களா?

 “எவர்?” கனகலிங்கம் புரியாமல் கேட்க ,திவ்யாவின் விழிகளில் ஒரு பளிச்சிடல் வந்தது.

” அந்த ஹோட்டல்காரரை கேட்கிறாயா?” தலை அசைக்கக்கூட மனமற்று நின்றிருந்தாள் தாரணி. 

“யாரைக் கேட்கிறாள்?” கனகலிங்கம் திவ்யாவிடம் விசாரிக்க, திவ்யா முகத்தில் மந்தகாச புன்னகையுடன், “நீங்கள் தாரணிக்கு பார்த்திருக்கிறீர்களே அப்பா, அந்த ஹோட்டல்கார மாப்பிள்ளையைப் பற்றி கேட்கிறாள். ஒருவேளை தாருவுக்கும் அவள் மாப்பிள்ளையுடன் இதுபோல் தனியாக பேச வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்னவோ?”

“அப்படியா தாரணி?” கனகலிங்கம் கேட்க தாரணி கால்கள் வலுவிழந்து துவள்வதை உணர்ந்தாள். “எனக்கு ஒரு மாதிரி மயக்கம் வருவது போல் இருக்கிறது பெரியப்பா. வீட்டிற்கு போகலாம்” சொல்லிவிட்டு அவர்களை எதிர்பார்க்காமல் அந்தப் பக்கம் போன ஆட்டோவை கை நீட்டி நிறுத்தி ஏறி உள்ளே விழுந்தாள்.

“நீ என்ன நினைத்தாய்? அந்த ஸ்ட்ரீட் ஹோட்டல் கரிசட்டிதான் எனக்கு பார்த்திருக்கும் மாப்பிளை என்றா?” அக்கறையாய் விசாரித்தாள் திவ்யா.

“எ…எனக்கும் மாப்பிள்ளை பார்த்திருப்பதே தெரியாதே திவ்யா…”

“ஷ்…அந்த விசயத்தை நான். உனக்கு சொல்லவேயில்லையோ? சாரிம்மா மறந்துட்டேன்”

தாரணி அவளை அதிர்வாய் பார்த்தாள்.”உனக்கு தெரியுமா,?”

“தெரியுமே,அம்மா உன்னிடம் பேச சொன்னார்கள்.என் கல்யாண டென்சனில் உன்னிடையதை மறந்து விட்டேன்”

ஆக இவள் வேண்டுமென்றே மறைத்திருக்கிறாள்.மீள முடியாத தூரம் வந்ததும் சொல்லியிருக்கிறாள்.




அவள் அருகே அமர்ந்து கைகளைப் பற்றிக் கொண்டு குழைவாக பேசினாள் திவ்யா “ஏன் தாரு உனக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லையா?”

 தாரணி எதற்குமே பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. “உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் எப்போதும் உனக்கு நல்லதுதான் செய்வார்கள் தாரு. நீ பேசாமல் அவர்களுக்கு தலையாட்டிக்கொண்டே போய்விடு”. விஷமச் சிரிப்புடன் சொன்னவளை வெறுப்பாய் பார்த்தாள் தாரணி. 

இதே அறிவுரைகளை தானே எனக்கும் சொன்னாய், இப்போது என் மனது புரிகிறதா? சொல்லாமல் சொன்னபடி திமிர் பார்வை பார்த்தாள் திவ்யா.

“திவ்யாக்கா நான் படிக்க வேண்டும்.இன்னமும் ஒரு வருட படிப்பு எனக்கு இருக்கிறது. அதற்குள் ஏன் திருமணம்? இப்போது மனதளவில் நான் இந்த திருமணத்திற்கு தயாராக இல்லை”

 சத்தமின்றி மெலிதாக இரு கை தட்டினாள் திவ்யா “வெல்செட் தாரு இதே வார்த்தைகளை நான்கு நாட்களுக்கு முன்பு கேட்ட ஞாபகம் இல்லை.எதற்காக என்னை காப்பியடிக்கிறாய் தாரு?” மூக்கை சுருக்கி கொஞ்சிய  திவ்யாவில் மிகவும் நொந்தாள் தாரணி.

 எங்கே எப்போது விபரங்களை தவறவிட்டேன்…? தனக்குள் அலசி ஆராய்ந்தாள். கற்பகமும் 

கனகலிங்கமும் மகளுக்கு திருமணம் வீட்டு மாப்பிள்ளை போன்ற பொதுவான வார்த்தைகளையே பேசிக் கொண்டிருந்ததில் மகள் என்று திவ்யாவையே நினைத்து விட்டாள். அத்தோடு இன்னமும் முடிக்காமல் இருக்கும் அவளது படிப்பு.

 இப்படி இருவருக்கும் சேர்த்து பெரியப்பா மாப்பிள்ளை பார்ப்பார் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை.நகைகளையும் பணத்தையும் கொண்டு வந்து கொடுத்த அப்பா நினைவிற்கு வந்தார்.ஆக இந்த திருமண விஷயம் அப்பாவிற்கும் தெரிந்திருக்கிறது.

 மகளுக்கான கடமையாக எண்ணித்தான் நகைகளையும் பணத்தையும் கொண்டு வந்திருக்கிறார்.தசரதன் வந்த அன்று மாலையே கற்பகம் அவள் அப்பா கொடுத்துப் போன நகைகள் என்று 50 பவுன் நகைகளை தாரணியிடம் தந்து விட்டிருந்தாள்.பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு அவற்றை கற்பகத்திடமே கொடுத்திருந்தாள் தாரணி.

இங்கே எல்லோருக்கும் இந்த இரட்டை திருமணம் தெரிந்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ள போகும் அவளை தவிர. திவ்யாவின் மணமகன் சென்னையில் புகழ்பெற்ற ஐடி கம்பெனியில் பணிபுரிகிறானாம்.

 ஆக மகளுக்கு படித்த உயர் பதவியில் இருக்கும் அழகான மணமகன். இவளுக்கு பரோட்டா போடும் ஹோட்டல்காரன். அந்த நேரத்தில் தாரணி இறந்து போன தன் தாயை நினைத்து ரொம்பவே வருந்தினாள். அம்மா என்னுடன் இருந்திருக்காமல் போனீர்களே! வாய்விட்டு கதறத் தோன்றியது. ஆனால் அந்த வீட்டிற்குள் அவளுக்கு அழக் கூட ஏது சுதந்திரம்?




தாரணி வருந்தி நிற்பது திவ்யாவிற்கு ஒருவகை உற்சாகத்தை கொடுத்ததோ…என்னவோ! இரண்டு மணமகன்களையும் ஒத்துப் பார்த்து தான் எப்போதும் தாரிணியை விட உயர்ந்தவள்தான் என்ற எண்ணம் வர, பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திருமண வேலைகளில் முழு உற்சாகத்துடன் ஈடுபட துவங்கினாள்.

அதனால் வீட்டினுள் சந்தோசமும் கலகலப்பும் திரும்ப வருத்தத்தில் இருந்தவள் தாரணி மட்டுமே.

“எனக்கு ஒரு வருட படிப்பு இருக்கிறது பெரியப்பா. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்கிறேன்” எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கனகலிங்கத்தின் முன் நின்று சொல்லிவிட்டாள். 

கனகலிங்கம் கண் கண்ணாடியை சுழற்றி துடைத்து மாற்றிக் கொண்டு தீர்க்கமாக அவளை பார்த்தார்.உள்ளுக்குள் கனகலிங்கம் அன்று திவ்யாவின் முதுகில் கொடுத்த அடி இப்போது தாரிணி மனதிற்குள் ஓடி உடலை நடுங்க வைத்தது.




What’s your Reaction?
+1
30
+1
24
+1
4
+1
0
+1
0
+1
1
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!