Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-21

21

 ஜன்னல் வழியாக தெரிந்த வானத்தை பார்த்தபடி கட்டிலில் படுத்திருந்தாள்  தாரிகா .அவள் மனது பெரும் குழப்பத்தில் இருந்து.தனிமை அவளை பிய்த்துத் தின்றது.

ஒற்றைச் சுவருக்கு அந்தப் பக்க மறு அறையில் இருக்கும் கணவனின் நினைவில் அவள் மனம் இந்த வகை குழப்பத்தில் ஆழ்ந்தது.  இவன் ஏன் ஒரு மாதிரியாகவே நடந்து கொள்கிறான் ?.சங்கரேஸ்வரியும் சுகந்தியும் அவர்கள் வீட்டிற்கு போய் விட்டனர் .20 வருடங்களாக பிரிந்து இருந்தவர்கள் இரண்டே நாட்களில் சேர்ந்துவிட்டதை ஊர் முழுவதும் ஆச்சரியமாக பேசினர் .தர்மராஜா , தமயந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமயந்தி கூட தாரிகாவிற்கு தனது சந்தோஷத்தை தெரிவித்துகொண்டாள் .  ஊருக்குள் அனைவரும் மருமகள் வீட்டிற்கு வந்த நேரம் என்று குறிப்பிட்டு பேசினர் . தர்மராஜா பெருமிதமாக தன் மருமகளை போற்றி கொண்டார். தன்னைச் சுற்றி இருந்த அத்தனை பேரிடமும் வாழ்த்துக்களையும் சந்தோசங்களையும் பெற்ற தாரிகாவின் மனம் முழு திருப்தி அடையவில்லை .அவள் எதிர்பார்த்த  இடத்தில் இருந்து அவளுக்கான போற்றுதல் எதுவும் கிடைக்கவில்லை. அத்தையையும் அத்தை மகளையும் சுந்தரேசன் குடும்பத்தினரிடம் பேசி சேர்த்தவன் பிறகு மௌனம் ஆகிவிட்டான். இரண்டு நாட்களாக ஒரு கற்சிலை போல் வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருந்தான் .

பிரிந்து படுத்த தம்பதிகளின் படுக்கை ,சமாதானம் பேச சம்பவங்களோ நிகழ்வுகளோ ஏதுமின்றி பிரிந்தாற் போன்றே இருந்தது.  வெறுமை விரவிய தனது வாழ்வை சரிப்படுத்தும் வழிவகை புரியாமல் தாரிகா திகைத்திருந்தாள்.

சுகந்தியை பிரிந்த துயரமோ என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை .

” என்னென்னவோ ஜாலம் செய்து என்னை என் பிறந்த வீட்டில் இருந்து பிரித்து விட்டாய் தானே ?

என் வயிற்றெரிச்சல் உன்னைச் சும்மா விடாது ”  இப்படி ஒரு சாபத்தை சங்கரேஸ்வரி தாருகாவிற்கு கொடுத்துவிட்டு தான் போனாள்.

இந்த சாபங்கள் எல்லாம் உண்மையாக இருக்குமோ ?

ஒருவேளை சங்கரேஸ்வரி சித்தியின் சாபம்தான் என் வாழ்வை படுத்துகிறதோ ?  குழப்பத்துடன் எண்ணியபடி புரண்டு படுத்தாள் தாரிகா .

சங்கரேஸ்வரி சுகந்தி இருந்தவரை இதுபோல் தனித்தனி அறைகளில் சிறு பயத்துடனே பிரிந்து படுக்க வேண்டி இருந்தது.  ஆனால் இப்போது தர்மராஜாவோ தமயந்தியோ மாடி பக்கமே வருவதில்லை .ஆதலால் அவர்களது பிரிதலை கண்டுகொள்ளவும் ஆட்கள் இல்லை .




பெருமூச்சு ஒன்றுடன் எழுந்து அமர்ந்த தாரிகா தொண்டை காய்ந்து இருக்க அறைக்குள் தண்ணீர் இல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தாள்.  அதேநேரம் மாடி ஏறி வந்த தமயந்தி தாரிகா தனி அறையில் இருந்து வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியுற்று நின்றாள். அவள் விழிகள் பூட்டப்பட்ட கதவுகள் இருந்த மகனின் அறையின் மீது படிந்து மீண்டது .தாரிகாவின் மீது குற்றச்சாட்டுடன் பாய்ந்தது .இப்போது இந்தக் கணத்தில் தான் எதுவும் பேச முடியாது என எண்ணிய தாரிகா வேகமாக அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள்.

“உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை  ?  “தமயந்தியின் கேள்விக்கு யாருக்கோ என்பது போல் நின்றிருந்தாள் தாரிகா.

” மயிலுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை ?  “தமயந்தியின் கேள்விக்கு ஜன்னல் வழியாக வேப்பமரக் கிளை குருவியை சுவாரசியமாக பார்வையிட்டாள் தாரிகா.

,” உன்னைத்தான் கேட்கிறேன். என் மகனுக்கும் உனக்கும் இடையே என்ன பிரச்சனை ? “

” ஒரு பிரச்சனையும் இல்லையே ” தாரிகா தோள்களைக் குலுக்கினாள்.

”  இல்லை .நான் பார்த்தேன்..”

”  என்ன பார்த்தீர்கள்? “

”  வந்து …நீங்கள் இருவரும் தனித்தனி அறையில்…” தமயந்தி தடுமாறினாள் .

” அது எங்கள் கணவன்-மனைவி ப்ரைவசி . அதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் ? “

”  நான் என் மகனின் வாழ்க்கையை பார்க்கிறேன்”

” சாப்பிட்டானா இல்லையா…  என்ற கவலை கூட இல்லாமல் மகனிடம் முகம் காட்டும் நீங்கள் வாழ்க்கையை பற்றி கவலைப் படுகிறீர்களா ?  இதனை நான் நம்ப வேண்டுமா? “

 தமயந்தி அவளை வெறித்தாள்.

” மயிலு உன்னை திருமணம் செய்ததை நான் விரும்பவில்லை.  என்னை ஒதுக்கி உனக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக உணர்கிறேன். அதனால்தான் எங்கள் இருவருக்கும் இடையே இந்த பனிப்போர் .”

” இதனை உங்கள் மகனிடமே நேரிடையாக தெரிவித்திருக்கலாமே .”

“அவனுக்கே தெரியாமலா  இருந்திருக்கும் …? ” தமயந்தியின் கேள்வியில் தாயின் எதிர்பார்ப்பு

ஆனால் தாரிகா மயில்வாகனனுக்கு புரியவில்லை என்று தான் நினைத்தாள்.  தாயின் எதிர்பார்ப்பை அவன் புரிந்து கொள்ளவில்லை. இந்த உலகில் பெண்ணின் ஆழ்மன எதிர்பார்ப்பை உடனடியாக உணர்ந்து கொள்ளும் ஆண்மகன் இல்லை என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

தமயந்தியின் கண்கள் தாரிக்காவின் கழுத்தில் கிடந்த செயினில் படிந்தது. கை நீட்டி அதனை வருடினாள் .”  இதனை உங்கள் மகன்தான் என் கழுத்தில் போட்டு விட்டார்”  தாரிகா சொன்னாள்.

”  அன்று எனக்கு தாலி கட்டுவதற்காக மணவறையில் அமர்ந்தபோது அபிஷேக்  கொண்டுவந்த தாலிச் செயினை என் கழுத்தில் போட பிடிக்காமல் ஒரு மஞ்சள் கயிற்றை மட்டுமே கட்டினார் .பிறகு வெறும் கயிறு மட்டும் வேண்டாம் என்று நினைத்திருப்பார் போலும் அதனால் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி போட்டார்”




“ஓ …” தமயந்தி முகத்தில் சிறு திருப்தி நிலவியது போல் தோன்றியது .”  இந்த அளவு என் மகன் யோசித்திருக்கிறான். ஆனால் நீ அவனை ஒதுக்கி வைத்திருக்கிறாய். என்ன காரணம்..? ” தனது ஆரம்பக் கேள்விக்கு திரும்ப வந்தாள்.

” இதனை உங்கள் மகனிடமே கேளுங்கள் ” சொல்லிவிட்டு தாரிகா நகர்ந்து விட்டாள் .

 அன்று இரவு சாப்பிடும்போது எப்போதும் போல் உணவறையில் அமைதியே நிலவியது .தமயந்தி கணவன் மகன் இருவருக்குமே பரிமாறுவது இல்லை .அதனை தாரிகா தான் செய்து கொண்டிருந்தாள். தமயந்தி அடுப்படிக்குள் இருந்து கொண்டு பரிமாறுவதை கவனிப்பாள் .

“ஒரு நிமிடம் இங்கே வாருங்கள் அத்தை ”  அழைத்தாள். தர்மராஜா மருமகளை ஆட்சேபமாக பார்க்க மயில்வாகனன் கேள்வியாக பார்த்தான்.

”  மாமா வெறும் மஞ்சக் கயிறு வேண்டாம் என்று அவரது செயினை என் கழுத்தில் சுழட்டி போட்டார் உங்கள் மகன் .இப்போது எனக்கு தாலி செயின் வாங்கி கொடுத்து விட்டார். அதனால் இந்த அவருடைய செயினை நான் அவருக்கு திருப்பிக் கொடுக்கிறேன்.” அறிவிப்பாய் சொன்னபடி தனது கழுத்தில் கிடந்த செயினை சுழற்றி கணவனின் கழுத்தில் போட்டாள் .

தமயந்தியின் முகம் மலர்வதை பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டாள். தர்மராஜா ” சரிமா ”  என்றபடி குனிந்து சாப்பிடத் தொடங்கினார் .அவருக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை.

 ஆனால் மயில்வாகனனின் முகத்தில் ஒரு பிரகாசம். சாப்பிட்டு  முடித்து கை கழுவியவன் துண்டிற்குப் பதிலாக தாயின் சேலையை எடுத்து கை துடைத்தான்.

 ” சரிதானே  அம்மா? ”  கேட்டான்

தமயந்தியின் கண்கள் கலங்கின. கை உயர்த்தி மகனின் கன்னங்களை வருடியவள் ”  ரொம்ப திருப்தி ” என்று தழுதழுத்தாள் .

”  இந்த செயினை எனது ஆறாவது வயதில் நீங்கள் மிகவும் ஆசையாக வாங்கி எனக்கு கொடுத்தீர்கள். அன்றிலிருந்து ஒருநாள்கூட நான் இதனை பிரிந்ததில்லை. அன்று ஒரு இக்கட்டான நிலைமை. நம் குடும்பத்தின் சார்பாக தாருவின் கழுத்தில் உடனடியாக ஏதாவது தங்கம் போட்டே ஆக வேண்டிய சூழ்நிலை. அதனால்தான் வேறுவழியில்லாமல் என்னுடைய இந்த செயினை தாருவின் கழுத்தில் போட்டேன். இந்த செயினின் முக்கியத்துவம் தாருவின் கழுத்திற்கு போனதும்தான்  அதிகமாகிவிட்டது இல்லையா அம்மா ? “

 மகனின் கேள்வியில் இருந்த அர்த்தத்தில் தமயந்தி நெகிழ்ந்தாள் . ” உண்மைதான் மயிலு.  உன் மனைவியின் கழுத்தில் போட வேண்டிய புனிதமான மாங்கல்யமாக எனது செயினை நினைத்திருக்கிறாய். இது நீ எனக்குக் கொடுத்த கவுரவம். இதனை நான் தவறாக நினைத்து விட்டேன் .அதற்காக என்னை மன்னித்துவிடு “..

“ஐயோ என்னம்மா நீங்கள் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு …” சமாதானத்துடன் அன்னையின் தோள் வருடி அணைத்துக்கொண்டவனது பார்வை அப்போது மனைவியின் மீது இருந்தது .

சரிதானா… என்று ஐயம் கேட்டுக்கொண்டிருந்தது. இரு விரல் சேர்த்து சூப்பர் என சைகை காட்டிய தாரிகா தாய் மகனுக்கு தனிமை கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். மனைவி மகனின் பாசப் பிணைப்பில் தோள்களை குலுக்கிய தர்மராஜா தானும் அங்கிருந்து சென்றார் .




“இந்த வீட்டில் ஒவ்வொருவராக சரி பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.

உங்களை மட்டும் விட்டு  விட மாட்டேன் மாமா .உங்களுக்கும் இருக்கிறது எதிர்பார்த்திருங்கள் .”விலகிச் செல்லும் தர்மராஜனை முதுகை பார்த்தவாறு முணுமுணுத்தாள் தாரிகா.

“அம்மாவின் மனதில் இந்த உறுத்தல் தான் இருக்கிறது என்பதை நான் உணராமல் போனேன் .உன்னால் எப்படி கண்டு கொள்ள முடிந்தது தாரிகா ? “மயில்வாகனன்  கேட்டான்.

” உறவுகள் மேல் அக்கறை இருப்பவர்களுக்கு சிறு தடுமாற்றத்தையும் உணர்ந்து கொள்ள முடியும் . உங்கள் அம்மாவின் பார்வை அடிக்கடி என் கழுத்து செயின் மீது இருந்தது .ஒருவித ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் .அதனை வைத்து நானாக கணித்து பேசினேன் .அது நல்லபடியாக முடிந்து விட்டது.”

”  நான் மீண்டும் உனக்கு கடமைப்பட்டவன் ஆகிறேன் என் அம்மாவை எனக்கு உணர வைத்ததற்கு மிகுந்த நன்றி தாரு “

” கடமையா எனக்காக என்ன கொடுமை எப்படி இருக்கிறீர்கள் ? “

” இதுவரை இல்லை தான் .ஆனால் உனக்கென்றே நான் சிலவை செய்தே தீருவேன் ”  உறுதியளித்து விட்டு நகர்ந்தான் மயில்வாகனன்.

சரி தான் போடா நீ எனக்கு செய்யும் லட்சணம் தெரியாதா ?  பக்கத்து ரூமில் இருக்கும் பொண்டாட்டியை என்னவென்று எட்டிப் பார்க்க முடியவில்லை. நீயெல்லாம் வாய் பேசுகிறாய்… நொடித்துக் கொண்டாள் .

தமயந்தியும் மயில்வாகனம் பழைய மாதிரி கலகலப்பாக பழகத் துவங்கினர்.  தர்மராஜா மட்டும் இன்னும் தமயந்தியுடன் சிறு விலகலுடனேயே இருந்தார் .தாரிகா அதற்கான காரணத்தை ஆராயத் தொடங்கினாள் .

” உங்கள் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என்ன சண்டை ? ” மயில்வாகனனிடம் கேட்டாள்.

” சண்டையா …? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே”

” இல்லை அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிணக்கு இருக்கிறது .அதனை என்னால் உணர முடிகிறது .

“சரிதான் .அதற்கு நாம் என்ன செய்ய முடியும் ? ” விட்டேத்தியாக கேட்டவனை வெறித்தாள் தாரிகா.

 ” உங்கள் அம்மா அப்பாவைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கிறேன் “

 “ஏய் …” திடுமென உற்சாகமாக கூவினான் மயில்வாகனன்.

”  அங்கே பாரேன் அது சுகந்தி தானே ? “அவன் காட்டிய திசையில் போய்க் கொண்டிருந்தவள் சுகந்தியே தான். தாரிகாவும் மயில்வாகனமும் முத்தாலம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர் .இருவருமாக காலாற நடந்து போய் விட்டு வரும்படி அவர்களை ஏவியிருந்தாள் தமயந்தி .

மகன் மருமகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அவள் எடுத்த முயற்சியாக இது இருக்கலாம் .தாயை மீற முடியாமல் மயில்வாகனன் தாரிகாவுடன் வெளியே வந்து இருந்தான். இங்கேயும் அவர்களது தனிமைக்கு இடையூறாக மீண்டும் சுகந்தி.




மயில்வாகனன் உற்சாகத்துடன் சுகந்தியை நோக்கி நடக்க , தாரிகாவும்  வேறுவழியின்றி அவனை பின் தொடர்ந்தாள். நான்கு எட்டுக்கள் வைத்த பின் தான் சுகந்திக்கு சற்றுப் பின்னே வந்துகொண்டிருந்த அபிஷேக்கை கவனித்தாள்.  அவன் கையில் மடித்து கிண்ணமாகியிருந்த  தென்னை மட்டையில் சில நுங்குகளை வைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அதனை அவன் சுகந்திக்கென்று வாங்கியிருக்க வேண்டும் .

” சுகி ”  என்ற அழைப்புடன் வந்தவனை நோக்கி திரும்பிய சுகந்தி அந்த நொங்குகளை மென் சிரிப்புடன் வாங்கிக்கொண்டாள். இருவருமாக ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டு நுங்குகளை சாப்பிடத் துவங்கினர் .

“சுகந்தி காலேஜுக்கு போகிறாள். உனக்குத் தெரியுமா தாரிகா ?   இரு நான் போய் அவளிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வருகிறேன் ” சொல்லிவிட்டு முன்னால் நடந்த மயில்வாகனன்னின்  சட்டையை பிடித்து இழுத்தாள் தாரிகா.

” உங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கிறதா ?   அவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . இப்போது நீங்கள் போய் நின்றால் நன்றாகவா இருக்கும் ? ”  மயில்வாகனன் முகம் மாறியது. விருக்கென்று  திரும்பி மீண்டும் வீட்டை நோக்கி நடந்தான் .

” என்னை கோவிலுக்கு கூட்டி செல்லும் ஐடியா இல்லையா ? ”   தாரிகா அப்படியே நடுரோட்டில் நின்று இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு கேட்டாள்.

” எனக்கு வேறு வேலை இருக்கிறது என்னால் முடியாது .”  திரும்பாமலேயே பதில் சொல்லிக்கொண்டே நடந்தான் .

 கோபத்தில் முகம் சிவக்க ஒரு நொடி நின்ற தாரிகா மறுநொடி  கையை உயர்த்தி ” சரி தான் போடா ”  என்றாள் .

” அடியேய் ….”  என்ற வேகத்துடன் மயில்வாகனன் திரும்ப ,அதே நேரத்தில் ” அக்கா கோவிலுக்கு போறீங்களா ?நாங்களும் அங்கே தான் போகிறோம் .”  என்று கேட்டபடி ஆவலுடன்  அவள் அருகே வந்து நின்ற செவ்வரளி சம்பங்கி இடையே போய் பாதுகாப்பாக இருந்து கொண்டு கோவிலுக்கு அவர்களுடன் நடக்கத் துவங்கினாள் .




What’s your Reaction?
+1
22
+1
13
+1
2
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!