Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-5

5

அது வழக்கமான பெண்பார்க்கும் படலம் போலில்லை.அவன் கனகலிங்கத்திடம் ஏதோ தொழில் விபரம் பேசிக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த பெண்களை அவனுக்கு பெயர் சொல்லி அறிமுகப்படுத்தினார் கனகலிங்கம்.

 தாரணி சிறு நடுக்கத்துடன் கை குவிக்க, திவ்யா முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே போய்விட்டாள். இந்த இரண்டு வகை வரவேற்பில் எதிலும் எந்த பாதிப்பில்லாது கனகலிங்கத்துடன் தனது பேச்சை தொடர்ந்தான் அவன்.

 அவன் தான் மாப்பிள்ளை என்பதை கற்பகம், மாப்பிள்ளை எப்படி இருக்கிறார் தாரு? என்று இவளிடம் ரகசிய குரலில் கேட்டபோதுதான் அறிந்தாள். தாரணி வாய் திறந்து பதில் சொல்ல முடியாமல் என்னவோ தடுக்க தலையை மட்டும் அசைத்து விட்டு நகர்ந்தாள்.

அன்று இரவு பதினோரு மணி வரை பெரியப்பா பெரியம்மா திவ்யா மூவரும் மொட்டை மாடியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். திவ்யா கோபமாக கத்துவது மெலிதாய் அறைக்குள் வரை கேட்டது.

 பெருமூச்சொன்றுடன் தாரணி விழிகளை இறுக்க மூடி தூங்க முயற்சித்தாள். வியர்வையில் களைந்து வடியும் சந்தன பொட்டுடன் புரோட்டாவிற்கு மாவு பிசைந்தான் கரியன்.

 திவ்யாவின் எதிர்பார்ப்புகள் தாரணிக்கு மிக நன்றாகவே தெரியும். தாரணிக்கு மட்டுமல்ல அவள் அம்மா அப்பாவிற்கும் மிக நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது இவனை எப்படி அவளுக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார்கள்?

 மறுநாள் காலை திவ்யா கத்திக் கொண்டிருந்தாள் “என் வாழ்க்கையில் உங்கள் இஷ்டப்படி முடிவெடுக்கும் உரிமையை யார் கொடுத்தது? இதற்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். மீறி கட்டாயப்படுத்தினீர்களானால் வீட்டை விட்டு ஓடி விடுவேன் அல்லது தூக்கில் தொங்கி விடுவேன்” உயர்ந்த குரலில் அறிவித்தவரின் முதுகில் பொத்தென்று ஒரு அறை விழுந்தது.

 வழியில் கத்தியபடி திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள். கனகலிங்கம் ஓங்கிய கையுடன் நின்றிருந்தார். முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.”கழுதை! போனால் போகுது பெத்த பெண்ணாச்சேன்னு நானும் பொறுத்து பொறுத்து போகிறேன். நீ ரொம்பவும் ஆடுகிறாய். வாயை மூடிக்கொண்டு நான் விரல் நீட்டிய இடத்தில் கழுத்தை நீட்டிவிட்டு ஒழுங்காக வாழப்பார். இல்லையென்றால் நான் கொலைகாரனாக தயங்க மாட்டேன்”

திவ்யா விக்கித்து நின்றாள். இதுவரை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசாத தந்தை. இவ்வளவு ஆக்ரோசத்தை எதிர்பார்க்காதவள் பேச்சு மூச்சில்லாமல் அமர்ந்து விட்டாள். வீட்டில் அனைவருக்குமே அதிர்ச்சிதான். கனகலிங்கம் வெளியே போய்விட, மற்றவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும் பயந்திருந்தனர்.

இவ்வளவு ஆணித்தரமாக இருக்குமளவு பெரியப்பாவிற்கு அவன் அப்படி என்ன முக்கியம்? மறுநாள் காலை கல்லூரி பஸ் அவன் ஓட்டலை கடக்கும் போது தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் தாரணி.அவளுக்கும் சேர்த்து தலையை வெளியே நீட்டினாள் புவனா.

“ஏய் இருக்கிறார்டி.பஸ் காலேஜுக்குள் நுழையறதுக்கு முன்னாடியே  குதிச்சு இறங்கிடுவோமா?”




இவளை எப்படி சமாளிக்க? கவலையாய் புவனாவை பார்த்தாள்.”சின்ன எக்சைட்மென்ட்.சொன்ன மாதிரி குதிக்கவா போகிறேன்? எதுக்கு மூஞ்சியை இப்படி வச்சிக்கிற?”

“உளறாமல் வா புவனா.அந்த சந்தனப்பொட்டுக்காரனுக்கு கல்யாணமாகப் போகுது”

“என்னது?” ஏகமாய் அதிர்ந்தாள் புவனா.”உண்மையாகவா? உனக்கு எப்படியடி தெரியும்?”

” தெரியும்.சும்மா நோண்டி நோண்டி கேட்காதே. எப்போதும் கனவுலகத்தில் அலைவதை நிறுத்திவிட்டு ஒழுங்காக படிக்கும்  வழியை பார்”

புவனாவின் முகம் அழுவதற்கு தயாராவதை கண்டவளுக்கு எரிச்சல் வந்தது.” முட்டாளா நீ? போகிறவன் வருகிறவனெல்லாம் உனக்கு காதலனா? ஏதோ பார்க்க கொஞ்சம் நன்றாக இருந்தான். ஒரு பத்து நாட்களுக்கு சைட் அடித்துக் கொண்டாய் .அத்தோடு நிறுத்து. அதற்கு மேல் கண்டபடி புத்தியை அலைய விடாதே”

புவனா மூக்கை உறிஞ்சியபடி பஸ்சை விட்டு இறங்கி போனாள். 

வீடு அடுத்த ஒரு வாரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தது. திவ்யா ஒரு மாதிரி வெறித்த விழிகளுடனே நடமாடிக் கொண்டிருக்க தாரணிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.

ஒரு நாள் இரவு பக்கத்தில் படித்திருந்தவள் மெலிதாய் விசும்ப, தாரணி மனது கேட்காமல் அவள் தோளை சமாதானமாக தொட்டாள். உடன் திரும்பிய திவ்யா தாரணியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அப்பா இவ்வளவு கண்டிப்பாக இருப்பார்னு நான் நினைக்கவே இல்லை தாரணி.எனக்கு இப்போது கல்யாணம் பண்ணவே பிடிக்கவில்லையே”

“ஏன் திவ்யா இன்னமும் மூன்று மாதங்களில் உன் படிப்புதான் முடிந்து விடுகிறேதே…பிறகு கல்யாணத்திற்கு என்ன தயக்கம்?”

“மனதளவில் நான் திருமணத்திற்கு தயாராக வேண்டாமா? அத்தோடு அப்பா பாத்திருக்கும் அந்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்க வேண்டாமா? எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அப்பா சொன்ன உடனேயே மாடு மாதிரி தலையாட்ட சொல்கிறாயா?” அழுகை குறைந்து இப்போது திவ்யாவின் குரலில் ஆத்திரம் வந்திருந்தது.

 இதற்கு மேல் அவளிடம் பேசினால் கட்டுப்பாடிழந்து கத்த ஆரம்பிப்பாள் என்பதால் தாரணி அவள் தோள்களை வருடிவிட்டு “உன் வாதத்திலும் நியாயம் இருக்கிறது. யோசிக்கலாம் திவ்யா. இப்போது தூங்கு “என்று விட்டு மறுபக்கம் திரும்பி படுத்து உறங்க முயன்றாள்.

மறுநாள் காலைப் பொழுது தாரணிக்கு சுகமாக விடியவில்லை. ஏனென்றால் காலை நேரத்திலேயே வந்து நின்றிருந்தார் தசரதன்.பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த கனகலிங்கம் தசரதனை பார்த்ததும் புருவங்களை சுருக்கினார். 

“கொஞ்சம் பேச வேண்டும்” தசரதன் குரலில் தடுமாற்றம்.

“கற்பகம்” கனகலிங்கம் உள்ளே பார்த்து கத்தினார். கற்பகம் வேகமாக ஓடி வந்து நிற்க, இருவரையும் பார்த்து கைகூப்பினார் தசரதன்.

“உங்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். வந்து என்னிடம் கொஞ்சம் பணமும் நகையும் இருக்கிறது. தாரணிக்காக…”

கனகலிங்கம் கோபத்தோடு திரும்பிப் பார்க்க தசரதனின் பேச்சு பாதியிலேயே தடைபட்டு நின்றது.




What’s your Reaction?
+1
36
+1
29
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!