Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-8

8

“டேய் எவண்டா அங்க? கிளம்புங்கடா போய் உண்டு இல்லைன்னு ஆக்கிப்புடலாம். அப்பல இருந்து இப்ப வரை பொட்டச்சிங்க ஆட்டம் கூடிப் போயித்தான் கிடக்கு. அவ படிச்சவளா இருந்தா என்ன? படிக்காதவளா இருந்தா என்ன? நாலெழுத்து படிச்சாத் தான் கொம்பு வருமுன்னு நினைச்சா நடுவீட்டுல கெடக்கறதுக்கும் கொம்பு முளைச்சுருச்சுடோய்! போய் அவ தலைமுடியைப் புடிச்சு ஆட்டற ஆட்டுல.. ஐயோ சாமின்னு கதறிக்கிட்டு எம் பின்னாடி வரமாட்டா? எல்லாப் பொட்டச்சிகளுக்கும் என்னையும், என் வீட்டயும் கண்டா இளப்பமாத் தான் இருக்கு போலிருக்கு.” 

மீசையை முறுக்கிக் கொண்ட சேகரன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தன் ஆட்களுடன் வீட்டை விட்டு இறங்கினார்.

“எங்க போறீங்க?”

“விடுறா அஸ்வின்! நீ ஆம்பளையா இருந்தாலும் எப்படி பொறுப்பா அப்பன் சொல்றதக் கேட்டு நடந்துக்கற? அந்த ஓடுகாலி நாயி..”

“அப்பா! அவங்க இன்னொருத்தர் வீட்டுப் பொண்ணு. நாம ஏன் அனாவசியமா அவங்களைப் பேசணும்?”

“ஓடு காலி தாண்டா! உனக்குத் தெரியாது பொம்பளைங்களப் பத்தி. காலைச் சுற்றும் பாம்பு மாதிரி அவளுங்க. பார்த்துக்கிட்டே இருக்கணும். நாம சூதானமா இல்லன்னா நம்மளையே ஒரு கொத்து கொத்திப்புட்டு எவனோடயாவது ஓடிடும்க. இதோ இந்த பருத்தியூரான் மக அமுங்குணியாட்டம் சரிசரின்னு தலையாட்டிட்டு விட்டுருக்கு பாரு ரூட்டு. இதெல்லாம் என் காலத்துலயே பார்த்தவண்டா நானு. அன்னிக்குத் தள்ளினேன் பொட்டச்சிகளை அடுப்பங்கரைக்கு. அப்படி கிடக்கற உங்கம்மா என்ன குறைஞ்சா போயிடுச்சு? உடுக்கத் துணி இருக்கு. கொட்டிக்கச் சோறு இருக்கு. வேற என்ன? “

ஆங்காரமாய்க் கத்திய தந்தையை வெறுப்பாகப் பார்த்தான் அஸ்வின். 

இன்னொரு வீட்டுப் பெண்ணையே எது சொல்லவும் தங்களுக்கு உரிமை இல்லை எனக் கருதுபவன் தன் தாயைப் பற்றியே தந்தை பேசவும் முகமெல்லாம் சிவந்தது. முறுக்கேறியது அவன் கைகள்.

“வேண்டாம்டா அச்சு!” மெல்லிய குரலில் அவன் பக்கம் வந்து முணுமுணுத்தாள் வித்யா.

கோபத்தை ஒருவழியாய் அடக்கியவன் சேகரனிடம்

“அப்பா! இதெல்லாம் வேண்டாத வேலை. ஏதோ ஒரு பொண்ணு.. அதுக்குப் பிடிச்சத செஞ்சுருக்கு. அதை நான் பார்த்தது கூடக்  கிடையாது. அதை என்னத்துக்கு நாம தலையில் சுமந்துக்கிட்டு திரியணும். வாங்க உள்ள! வேற வேலையைப் பார்ப்போம்.” தன்மையாய்ப் பேசி இழுத்தான் வீட்டுக்குள்.

கூட நின்றிருந்தவர்களும் ஒத்துப் பாடினர்.

“போய் என்னாகப் போதுப்பா? அவ அப்பங்காரனே அவுகள தேடிட்டிருக்கானாம்! வரட்டும். பேசிப்போம்பா!” 

“மாமா! உசுப்பேத்தாதீங்க! அந்தப் பொண்ண அத்துக்கட்டிட்டு திரும்ப நான் கட்டிக்கறதா? என்னால முடியாது மாமா. வேணும்னா உங்க மகனுக்கு பார்க்கச் சொல்லி எங்கப்பாட்ட சொல்லவா?” பேசிய மாமனின் வாயை அடைக்க அஸ்வின் அவரருகில் சென்று பேசியதும்

ஆளை விட்டால் போதுமென்று அவர்..

“ஏம்ப்பு! நம்ம அஸ்வினுக்கென்ன பொண்ணா கெடைக்காது. ஓடிப் போனவளப் போய் தொசம் கட்டி இழுத்துக்கிட்டு. விடுறா சேகரா. விட்டுப்புட்டு இன்னொரு பொண்ணப் பாரு. மாமனா வந்து நின்னு கல்யாணத்த முடிக்கறேன். எல்லாரும் வாங்கப்பு. சேகரன் செத்த கண்ணசரட்டும்!”  என்றவர் திரும்பி அஸ்வினிடம்

“என்ன மாப்ளே! சரிதானே!” என்க

“சரிதானாவா? ஓரண்டை இழுத்துட்டு ஓடவா பார்க்கற?”

“என்ன மாப்ளே?” 




“பின்ன இன்னொரு பொண்ணு பார்க்கச் சொல்ற?” மல்யுத்த வீரன் போல் நின்றுகொண்டு அடிக்குரலில் பேசிய அஸ்வினின் கொலைவெறிப் பார்வைக்கு கூட இருந்தவர்களோடு சட்டெனக் காணாமல் போனார் அவன் மாமா.

“ஆனானப் பட்ட ஆனைக்கட்டி வம்சத்து ஆணழகன் கண்ணுக்கு அவனுக்கெங்க பொண்ணிருக்கு?”

அப்பத்தா நீட்டி முழக்கி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.

“ஏ! கெழவி!” கத்திய சேகரனைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார் அப்பத்தா.

“ஊரெல்லாம் பொண்ணிருக்க உறக்கம்விட்டுக் காத்திருந்தேன். ஊருசனம் உறங்கிடுச்சோ ஒருத்தி வந்து சேரலையே! ம்ஹும்!” புடவை தலைப்பில் மூக்குச் சளியைச் சிந்தியவளைப் பார்த்து

“அப்பத்தா! தூண்டி விடாதீய! சும்மா இருங்க!” அஸ்வின் கத்தினான்.

“வாக்கப் பட்டு வந்தவ தான் வழிமாறி வந்துப்புட்டா. வழித்தடத்த காணலையே வந்துவிடு பொன்னாத்தா!*

விர்ரென்று பறந்து வந்து விழுந்தது அந்தத் தட்டு. கப்பென்று பாட்டை நிறுத்தினார் அப்பத்தா. சேகரன் தான் கோபத்தில் தன் பக்கத்தில் உள்ள தட்டை எடுத்து விட்டெறிந்திருந்தார்.

” சொல்லிக்கிட்டே இருக்கேன். சும்மா பிலாக்கணம் வச்சுக்கிட்டு இருக்க. வாயை மூடிக்கிட்டு கெடக்கறதுன்னா வாசல்ல கெட. இல்லன்னா உம் மருமகளோட உள்ளாற போய் வடிச்சுக் கொட்டு”

“இல்லடா வந்து..”

“என்ன வந்து..போயி? எல்லாம் எனக்குத் தெரியும். இந்த சேகரன் ஒரு தடவ தான் ஏமாறுவான். காலம் பூரா ஏமாற கால்ல கொலுசு மாட்டிக்கிட்டா சுத்தறேன்? அந்த பருத்தியூரான் முதல்ல பொண்ணைக் கண்டுபிடிச்சு கூட்டிக்கிட்டு வரட்டும். அப்புறம் வச்சுக்கறேன் கச்சேரி. டேய் அஸ்வின்! நீ ஒண்ணும் ஊருக்குப் போய் கிழிக்க வேணாம். அவ வந்தவுடனயே அத்துக் கட்டிட்டு உனக்கு கட்டி வச்சுட்டுத் தான் மறு வேலை. ஆமா!”

“கொட்டடில கெடக்கற ஆடு மாடாப்பா நாங்க? அறுத்து கட்டிட்டு அடுத்த கொட்டில்ல கட்டி வைக்க? ஊருல இருந்தவனை அம்மாக்கு விபத்துன்னு வரச் சொன்னீங்க ! வந்தேன்! பொண்ணு பார்த்திருக்கேன்.. கல்யாணம் பண்ணிக்கன்னீங்க! சரின்னேன்! அந்தப் பொண்ணு என்னப் பிடிக்காம வேற கல்யாணம் பண்ணிக்கிடுச்சு. அதுக்கு நானா பலிகடா? அத்துப்புட்டு திரும்ப என்னைய கட்டச் சொல்றீங்க. என்னால முடியாது. நானும் மேஜர் தான். எனக்கும் பேச உரிமை இருக்கு!” சேகரனுக்குப் பின்னால் வெளிறிய முகத்துடன் நிற்கும் வித்யாவதியைப் பார்த்தவாறே திட்டவட்டமாக உரைத்தான் அஸ்வின்.

“அடியேய் மூதேவி! அத்தனைக்கும் நீதானேடி காரணம்?  உம் மகனுக்கு உரிமை , கடமைன்னு பாடம் எடுத்தியா? போனவ அதான் உம் ப்ரெண்டு.. அவ  எடுத்த பாடத்தை பொங்கித் தீர்க்காம இவனுக்குக் கடத்திட்டியா? வகுந்துடுவேன் பார்த்துக்க! “

ஆவேசமாய் மனைவியின் முடியைக் கொத்தோடு பிடித்து முன்னிழுத்துத் தள்ள அஸ்வின் பாய்ந்து வந்து அம்மாவைத் தாங்கிக் கொண்டான்.

“என்னப்பா! என்ன செய்யறீங்க? பேசினது நான்! எதுக்கு அம்மாவை இழுக்கறீங்க?” 

“தோளுக்கு மேல வளந்த ஆம்பிளையை கை நீட்டி அடிக்க முடியாத அப்பனாப் போயிட்டேன்ல . அதுக்குத் தான் உன்ன பெத்தவள இழுத்தேன்!” ஆங்காரம் குறையாமல் கத்தினார் சேகரன்.

தலையைப் பிடித்துக் கொண்டான் அஸ்வின். வித்யாவதிக்கு அழுகை பொங்கியது. அழுத்தம் அதிகம் பெற்ற பலூனின் நிலைமையாய் இருந்தது அவள் மனது.  தன்னிலை அறியாது வெடித்தே விட்டாள்.

“அடியேய் பாதகத்தி! இது எல்லாத்துக்கும் நீ தாண்டி காரணம். யார் மன்னிச்சாலும் உன்னை நான் மன்னிக்க மாட்டேண்டி! மன்னிக்கவே மாட்டேன்.” ஆவேசமாகக் கத்தியவள் மடங்கி அழுதாள்.

அந்தகாரத்தில் மூழ்கிய ஆழ்கடல் முத்தாய் வீடே இறுக்கத்தில் கிடந்தது.  மொழிபெயர்த்துக் கடக்க முடியாத இறுக்கம் விடும் கணநேரத்து மூச்சு கூட இயலாமையின் கோர முகத்தைக் காட்டியது. 

என்றோ எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தின் வடுக்கள் காலப் பெட்டகத்தின் கண்ணாடியாய் ஒவ்வொரு செயலிலும் தம் முகத்தைக் காட்டும் போது அடிபட்டவளும் ஆட்பட்டவனும் ஆடித் தான் போகிறார்கள். 

அப்பத்தா என்னடாவென்றால் ஒப்பாரியில் ஒருபாட்டம் அழுகிறார். அப்பா என்னடாவென்றால் உம் ப்ரெண்டு சொல்லிக் கொடுத்தாளாவென அம்மாவை அடிக்கிறார். அம்மா என்னடான்னா அடி பாதகத்தின்னு யாரையோ சொல்றார். நிச்சயமா சம்திங் ராங்! இந்த வீட்டுல இருக்கறது நானு, அப்பத்தா, அம்மா, அப்பான்னு நாலு பேரு இல்ல.. அஞ்சாவதா ஒரு ஆளு இருக்கு. அது யாரு? அது தான் அம்மா சொன்ன அந்த பாதகத்தி! ஆங்! அது யாரு? வில்லனா? வில்லியா? 

குழம்பிக் கிடந்த மூளைக்குக் கோடு போட்ட அஸ்வின் தனக்குத் தானே ரிப்போர்ட்டர் வேலை பார்க்க ஆரம்பித்தான். 

சொந்த வீட்டுலயே சுத்திப் பார்க்க வச்சுட்டீங்களேடா? அடிப் பாதகத்தி! நீ யாரு? ஏன் எங்க வீட்டை இப்படி ஆட்டி வைக்கற? உன்னைய பார்த்தேன்.. வெட்டொண்ணு! துண்டு ரெண்டு தான்!

வேட்டியை மடித்துக் கட்டிய அஸ்வின் போனை எடுத்துச் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு 

“கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன். எங்கயும் போயிற மாட்டேன்!” 

சேகரனைப் பார்த்துச் சொல்லி விட்டுப் படி இறங்கினான்.

அதே நேரம் பொங்கும் பெருநதியாய் அடக்கி வைத்திருந்த ஆதங்கம் எல்லாவற்றையும் தன் தோழி மேக்னாவிடம் கொட்டிக் கொண்டிருந்தாள் நிரல்யா.

“ம்ப்ச்ச்! ஐ அம் டோட்டலி டிஸ்ப்பாயிண்டட் மேகி. எதுவுமே பிடிக்கல!”

“ஏன் நிரூ? பாலும் கசந்ததடி படுக்கையும் நொந்ததடி கதையா? சேனல்காரன் ஜூட் விட்டுட்டானா?” கண்ணடித்தாள் மேக்னா.

“சீ! சனியனே. வாயக் கழுவு. ஜூட் விட்டுட்டான்னு சொல்லாத! ஏதும் வேலையா இருக்கும்! பிஸியா இருப்பான். வந்துடுவான்!”

“இந்த சேனல்காரங்களே அப்படித் தான் நிரூ! வேலை வந்துட்டா வீடு கூட அப்புறம் தான். ஆனா உன் ஆளு உன்னைப் பார்த்தே மாசக் கணக்காச்சு போல. மீ டூ கேஸ் ஜெயிச்சப்ப அவரை நான் பார்த்தது!”

“நீ பார்க்கலேன்னா.. நாங்க மீட் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம்!” சப்பைக்கட்டு கட்டினாள் நிரல்யா. மீறிக் கண்ணில் நீர் துளிர்த்தது அவளுக்கு.

கலகலவென்று சிரித்த மேக்னா  

“ஃபார் யுவர் இன்பர்மேஷன்.. எதுவுமே பிடிக்கலன்னு பாட்டியாட்டம் நீட்டி முழக்கினது நீங்க தான் மிஸ். நிரல்யா!”

“போடி..!” 

“அச்சோ! பாப்பா ஏன் அழுது இப்போ.. டோண்ட் வொர்ரி பேபி. எத்தனை தைரியமான பொண்ணு நீ! உன்னைப் பார்க்க வராத உன் ஆளு மேல நம்ம சீனியர வைச்சு ஒரு கேஸ் போட்டுடு பேபி. ஓடி வந்துருவான் அந்த சேனல்காரன்!” நிரல்யாவைக் கட்டியணைத்த படி குறும்பாய் மேக்னா சொல்ல சுறுசுறுப்பாய்த் தன் போனை எடுத்தாள் நிரல்யா.

மெசெஜ் வந்ததன் அறிகுறியாய்

அஸ்வினின் மொபைல் கண்சிமிட்டி அழைத்தது.

“மிஸ்டர் ரிப்போர்ட்டர்! மனதைக் களவாடிவிட்டுத் தலைமறைவான குற்றத்துக்காய் யூ ஆர் அண்டர் அரெஸ்ட்! வில் மீட் யூ சூன் இன் த கோர்ட்!” 




What’s your Reaction?
+1
8
+1
10
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!