Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-9

9

அடிவானத்தில் சூரியன் மெல்லக் கீழிறங்க அந்திமஞ்சள் வானம் எங்கும் சிதறி மாலை நேரத்தை ரம்யமாக்கிக் கொண்டிருந்தது.

பிடுங்கி நடப்பட்ட நாற்றுகள் பச்சைபசேலென்று கண்ணைப் பறிக்கும் அழகோடு கழனியெங்கும் அசைய வேலையை முடித்து ஆண்சட்டையணிந்த பெண்களும் ஆண்களும் கரையேறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள்

வலசை திரும்பும் பறவைகளின் கீச்சொலிக்கு ஈடாக சலசலத்துக் கொண்டே நடக்க…

இவை எவற்றையும் ரசிக்கக்கூடிய மனநிலையில் அஸ்வின் இல்லை.

உள்ளங்கைக்குள் உலகமே வந்தபின் கிராமங்கள் கூட புதுமைக்குள் நுழைந்து அவரவர் ஸ்மார்ட் ஃபோன் லாப்டாப் என கலக்கிக்கொண்டிருக்க‌ இன்னும்

பழமையைக் கொண்டாடிக் கொண்டு மூர்க்கமாகத் திரியும் அப்பா.

அவருக்கு அடங்கிப்போய்த் தன் சுயத்தை விட்டு அடிமையாய் மறுகும் அம்மா.

இப்படியான சூழலில் பாரதியின் புதுமைப் பெண்ணாய் மிளிரும் நிரல்யா எப்படி பொருந்துவாள்?

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலாகிவிடுமா?

கலங்கிய அவன் சிந்தையில் கல்லெறிந்தது அந்த மெஸேஜ் டோன்.

நிரல்யா தான்.

அடக்கடவுளே!

இங்கு நடந்த களேபரத்தில் அவளுக்கு தினம் போடும் ஹாய் பை மெசேஜ் கூட விடுபட்டிருக்கிறது ஒரு மாதமாய்..

கல்யாண கலாட்டா தெரிய வேண்டாமென்றுதான் மொபைலில் பேசாமல் இருந்தான்.இனியும் மௌனம் காப்பது சரியல்ல.சில விஷயங்களை கோடிட்டு காட்டிவிட வேண்டும்.முழுவதும் இங்கிருந்து பேச முடியாது.

இங்கே சுவருக்கும் காதுண்டு.பேசுவது ஒன்றிரண்டாய்த் திரிந்து அப்பாவிடம் போனால் அவ்வளவு தான்.திரும்ப சென்னைக்கே போகமுடியாது.

மொபைலில் எண்ணை அழுத்திய அடுத்தநொடி லைனுக்கு வந்தாள் நிரல்யா.

“ஹலோ ரிப்போர்ட்டர்.எந்த சால்ஜாப்பும் செல்லாது. பத்துநிமிஷத்தில் 

நாம் எப்பவும் மீட் பண்ற இடத்துக்கு வர்றீங்க”

“நான் இருக்கிற இடத்திலிருந்து பத்து நிமிஷத்தில் அங்கு வரணும்னா ராக்கெட்டில் தான் வரணும்.”

“மை காட்.எங்கே இருக்கீங்க சந்திரமண்டலத்திலா?”

“மணல்குடில ..என் சொந்த ஊரில்.

ஒரு முக்கிய வேலையா வந்தேன்‌.இரண்டொரு நாள்ல வந்துடுவேன்.அப்ப விபரமாக பேசுவோம்”




“வெயிட்..ஆன்ட்டீ எப்படி இருக்காங்க?இப்ப ஓகேயா?என் ஹெல்ப் ஏதாவது தேவையா?”

சரமாரியான அவள் கேள்விகளால் திணறிப்போனவன் அத்தனைக்கும் பதில் சொல்லி வைத்தான். உடனடியாக அவளை சந்தித்து தன்னைப் பற்றிய எல்லா விஷயத்தையும் சொல்லிவிட முடிவெடுத்தான். தன் குடும்ப சூழல் புரிந்து அவள் ஏற்றுக்கொண்டால் சரி. இல்லை காதலை முறித்துக் கொண்டாலும் மௌனமாக விலகிவிட வேண்டியது தான்.

ஆனால் அவனால் முடியுமா?

இப்போதைக்கு ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி இங்கிருந்து உடனே கிளம்பியாக வேண்டும்.வேகமாக நடை போட்டவனைத் தடுத்து நிறுத்தியது அந்தக் குரல்..

“அச்சு!”

வித்யாவதி தான்‌ எதிரில் நின்றிருந்தாள்.

“அச்சு! இப்படி வாப்பா.வீட்டில் தான் உன்னோடு பேசக்கூட முடியல. அதுதான் கோவிலுக்குப் போற சாக்கில் வந்தேன்.”

கண்கள் கலங்க நின்றிருந்தவளைப் பார்த்துப் பதறிப்போனான்.

“இப்படி ஓரமா கோவில் குளத்துப் படிக்கட்டில் உட்காரு.வா.உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.”

சொல்லுங்க மா.நான் என்ன செய்யணும்.

“உன் அப்பா பார்க்கிற பெண்ணை நீ கட்டிக்க கூடாது.எனக்கு சத்தியம் செய்வாயா பா?”

நல்லா படிச்சு வேலை பார்க்கிற தைரியமான பொண்ணை தான் நீ கட்டணும்.இந்த அம்மாவோட ஆசையை நிறைவேத்துவியா?”

 கேட்காமலேயே வரம் கிடைத்தால் கசக்குமா என்ன? இந்த ஷணமே நிரல்யாவை கூட்டிவந்து அம்மா முன் நிறுத்த ஆசையாக இருந்தது. ஆனால் அவசரக்கோலமாய் அள்ளித் தெளித்து விடக்கூடாது.நிறுத்தி நிதானமாக அடியெடுத்து வைக்க வேண்டும்.

அம்மாவை நெருங்கி அமர்ந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

 “கவலைப்படாதீங்க மா.நல்லா‌ படிச்சு அழகான அறிவான பெண்ணைத் தான் உங்களுக்கு மருமகளா கொண்டு வருவேன்.அவ உங்களுக்கு பக்கபலமா இருப்பா ம்மா.”

“ஓ…அப்ப ஏற்கனவே பார்த்து வச்சிட்டியா?என்ன நடக்குது?”

“அம்மா..சீக்கிரமே உங்க மருமகளை காட்டறேன்.கொஞ்சம் பொறுங்க.”

பின்னே எதுக்கு உங்க அப்பா ஏற்பாடு பண்ண பொண்ணை கட்டிக்க சம்மதிச்ச?எனக்கு மனசே ஆறலை போ.”

“அம்மா அதெல்லாம் சும்மா லுல்லாயி..

நீங்க மனசை அலட்டாம நிம்மதியா இருங்க.அநாவசியமா என் விஷயமா‌ அப்பாகிட்ட பேச்சு கொடுக்காதீங்க.அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க வேளா வேளைக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.”

மகனின் பேச்சு வித்யாவுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது.

“இருந்தாலும் உங்க அப்பா ரொம்ப பிடிவாதக்காரர்‌.இந்நேரம் அடுத்த திட்டம் போட ஆரம்பிச்சிருப்பார்.ஜாக்ரதையா இரு”

மகனுக்கும் எச்சரிக்கை கொடுத்துவிட்டு “நான் முன்னாடி போறேன்.நீ‌ மெதுவா வா” எனக் கிளம்பினாள்.

அம்மா! ஒரு நிமிஷம்.உங்களுக்குத் துரோகம் பண்ணின அந்த பாதகத்தி யாரு? உங்களோட இந்த நிலைமைக்கு அவங்க தான் காரணமா?

மகனைப் பார்த்ததில் கனிந்து கிடந்த வித்யாவின் முகம் சிவந்து போனது.

“வேண்டாம்ப்பா.நல்ல விஷயம் பேசின சந்தோஷத்தில் இருக்கிற இந்த நேரத்தில் அந்த படுபாவி நம்பிக்கைத் துரோகி யைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்.கூட இருந்தே குழி பறித்த குள்ளநரியை நான் நினைச்சுக்கூட பார்க்க விரும்பல.”

சரி மா.உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க.

அதற்குமேல் அவளிடம் கேட்டு வருத்தப்பட வைக்க விரும்பாமல் வீட்டுக்கு வந்தவனுக்கு வேறொரு பிரச்சினை காத்திருந்தது.

சேகரனின் ஒன்று விட்ட அண்ணன் பூபாலன் வேறொரு ஏற்பாட்டோடு அங்கு வந்து இறங்கியிருந்தார் 

சேகரனைவிட பத்து வயது பெரியவர்.ஆனாலும் சேகரனுக்கு அவர்தான் ஆதர்ச ஹீரோ.அவர் மனைவி மக்களை அடிமையைப் போல் நடத்துவதைப் பார்த்துதான் சேகரன் கெட்டுக் குட்டிச்சுவரானது.பெற்ற தாயை கீழ்த்தரமாக பேசுவது அவர்க்கு சர்வசாதாரணம்.அவருக்கு பிறந்தது இரண்டுபெண்கள்,ஒரு பையன். .மகனுக்கு படிப்பு ஏறவில்லை. கூடாத சேர்க்கையில் துஷ்டனாக வளர்ந்தான். பெண்களை ஏழெட்டு வகுப்பிலேயே படிப்பை நிறுத்தி அசலூர் மிராசுதாருக்கு கட்டிவைத்து விட்டார். இப்போது அந்த வழியிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து வைத்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறார்.

அவரைப் பார்த்ததுமே வித்யாவுக்கு அடிவயிறு கலங்கியது.




“என்னடா சிங்கக்குட்டி. பட்டணத்தில‌ பொம்பளைங்க பேன்ட் போட்டு திரிவாளுங்களாமே..எப்படி சமாளிக்கிற?”

வேட்டுச் சிரிப்போடு அவர் கேட்க முகம் வெளிறிய வித்யாவை கண்களால் அமர்த்தி விட்டு அவர் பாணியிலேயே பதிலுரைத்தான் அஸ்வின்.

ஆம்பளை மாதிரி பேண்ட் போட்டாலும் ஆகாசத்தில பறந்தாலும் பொம்பளை பொம்பளைதானே‌ பெரியப்பா. நம்மளை மீற முடியுமா?

“அதானே! நீ கட்டியாள இன்னொரு கழுதையைப் பார்த்து வச்சிருக்கேன் டா.”

“கழுதையை அடக்கிறதில என்ன வீரம் இருக்கு.அடங்கா குதிரையை மடக்கணும்.”

“அட..நீ அப்படி வர்றியா…

சேகரா ஒம்புள்ள உன்னைவிட விவரக்காரன் டோய்…”

“ஆமாம் பெரியப்பா பெரிய படிப்பு படிச்சவளைக் கொண்டுவந்து இந்த கொட்டடியில் கட்டணும்.சரியா?”

என்றவன் அம்மாவைப் பார்த்து‌ கண்சிமிட்டினான்.

“அதே தாண்டா.என்ன இருந்தாலும் நீ படிச்சவன்.சரியா யோசிக்கிற.சேகரா இந்த பட்டிக்காடெல்லாம் வேணாம். படிச்ச பட்டணத்துக் குட்டிகளைப் பாரு.நான் சொல்லிப்புட்டேன்.நீ மீறப்படாது.”

அவர் பேச்சை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் சேகரன் தத்தளிக்க அஸ்வினோ மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தான்.

அம்மா பச்சைக்கொடி காட்டிவிட்டாள்.அப்பாவை ஆஃப் செய்யும் ஸ்விட்ச்‌ கண்டுபிடிச்சாச்சு.

“நிரல்யா! என் கண்ணே!இதோ ஓடோடி வர்றேன்.”

சந்தோஷத்தில் தலைகால் புரியாமல்

“ஏய் அப்பத்தா.. ஒரு ஓரமா உட்கார்ந்து பாக்கை இடி”.

என்றவன் அம்மாவைப் பார்த்து கண்சிமிட்டி

“வந்தவருக்கு ஒரு காப்பித்தண்ணி கொடுக்காம இங்கே வாயைப் பிளந்து நிக்கிறதா? எல்லாம் வீட்டு ஆம்பளை சொல்ல வேண்டியிருக்கு!”

என்று எரிந்துவிழ..சேகரன் புளகாங்கிதமடைந்தார்

பெரியப்பாவோ முரட்டு மீசையைத் தடவி பெருமையோடு அவனைப் பார்த்தார்.

சமயம் பார்த்து அப்பாவிடம் சொல்லி ஊருக்குக் கிளம்பவும் அனுமதி வாங்கியவன்.

“தயாரா இருங்க மேடம்.சீக்கிரமா உங்களை பொண்ணு கேட்டு வர்றோம்.”

என்று நிரல்யாவுக்கும் மெசேஜ் அனுப்பினான்.

நிரல்யாவுக்கு உள்ளமெல்லாம் பூரித்தது.அதே சமயம் இன்னும் அம்மாவிடம் பகிராமலிருப்பது உறுத்தியது.

“அம்மா! என் வாழ்க்கையைப் பற்றி முக்கியமான முடிவெடுக்கணும்.உங்க கிட்ட இத்தனைநாள் சொல்லாமலிருந்ததே தப்பு.ஸாரி மா.மிஸ் யூ மா.”

மனதார மன்னிப்பு கேட்டபடியே உறங்கிப் போக..

அதே நேரம் ஜானகியும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார்.

 மகளின் கல்யாணத்துக்கு தன்னுடைய கடந்தகாலமோ நிரல்யாவின் பூர்வீகமோ  தடையாக இருந்துவிடக்கூடாதென்ற பயம் அவரை வாட்டி வதைத்தது.

இனிமேலும் பொறுப்பதில் பயனில்லை.நிரல்யாவிடம் எல்லா உண்மைகளையும் உடைக்கும் காலம் வந்துவிட்டது

இது பற்றியெல்லாம் அறியாத அஸ்வின் உற்சாகத்தின் உச்சியிலிருந்தான்.

எண்ணியது ஈடேறப்போகிறது என்ற தெனாவெட்டில் அம்மாவிடம் விடைபெற வந்தவன்

“கொஞ்சமே கொஞ்சநாள் பொறுத்துக்குங்கம்மா.என் நிரூ வந்து எல்லாத்தையும் தலைகீழா மாத்துவா”

“என்ன சொன்ன? நிரூவா?

என் மருமக பேர் என்னடா?”

“நிரூ…நி..ர…ல்..யா”

ஒவ்வொரு எழுத்தாக ரசித்து அவன் உச்சரிக்க…

ஆயிரங்கோடி மின்னல் ஒன்றாய்த் தாக்கியது போல் நிலைகுலைந்து நின்றாள் வித்யா.

இந்தப் பேர் எப்படி? அகஸ்மாத்தாய் அமைந்ததா இல்லை அஸ்வின் பழைய விவரம் அறிந்து தன்னிடம் விளையாடுகிறானா?

அவள் மனநிலை புரியாமல்

“தயாரா இருங்க அம்மா.இனி நம்ம ஆட்டத்தைக் காட்டுவோம்”என்றபடி அஸ்வின் வெளியேற

ஓடிப்போய் தன்னுடைய பெட்டியைத் திறந்து அதை எடுத்துப் பார்த்தாள்.பின் குளியலறையில் புகுந்து மனப்பாரம் தீரும் வரை அழுது முடித்தவள்..

மகனிடம் அந்தப்பெண் வேண்டாம் என சொல்ல தீர்மானித்தாள்.

இதையெல்லாம் மீறி நிரல்யாவைக் கை பிடிப்பானா அஸ்வின்?




What’s your Reaction?
+1
8
+1
10
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!