Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-3

(3)

“மீனாள்… யார் பேரும்மா மீனாள்?” ஐயருக்கு அவர்களுடைய வீட்டில் இருப்பவர்களை நன்றாகத் தெரியுமாதலால் புரியாமல் கேட்டார்.

லலிதா ஆசையுடன் தன் வயிற்றில் கையை வைத்து தடவினாள். 

“எனக்கு பிறக்கப் போற குழந்தையோடப் பெயர்” என்றாள் பரவசமாக.

“இப்பவெல்லாம் வயித்துல இருக்கற பிள்ளை ஆணா பொண்ணானு ஸ்கேன் பண்ணி சொல்ல மாட்டாங்களே. உனக்கு யாரு சொன்னா? பெண் குழந்தைன்னு பேரெல்லாம் முன் கூட்டியே வச்சுட்டே.” ஐயர் சிரித்தார். 

“ஸ்கேன் பண்ணி யாரும் சொல்லலை. இறந்து போன என்னோட முதல் குழந்தை மீனாளோட மறுபிறவிதான் இது. அவதான் மறுபடியும் என் வயித்துல வளர்றா. அதனாலதான் அவளுக்கு வைக்க நான் செலக்ட் பண்ணின பேரையே இந்தக் குழந்தைக்கும் வைக்கப் போறேன்.” என்றாள்.

ஐயர் சிரித்தார். “வயித்துல இருக்கற புள்ளை பேர்ல அர்ச்சனை பண்ற பொண்ணை இப்பத்தான் பார்க்கிறேன். உன் ஆசைப்படியே இது பொண்ணா பிறக்கட்டும்னு அம்மாள்கிட்ட வேண்டிக்கிறேன்.” என்றபடி உள்ளே அர்ச்சனை செய்ய சென்றார் ஐயர்.

வீரமணி ஒரு மாதிரி முகம் வெளிறி நின்றிருந்தான். அர்ச்சனை முடிந்து அம்மன் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர் இருவரும். சற்று நேரம் கோவில் பிரகாரத்திலேயே உட்கார்ந்திருந்து விட்டு காருக்குத் திரும்பினர்.

வரும் போது லலிதாவின் முகத்தில் இருந்த வாட்டம் இப்பொழுது இல்லை. மாறாக தெளிவும், நம்பிக்கையும் தெரிந்தது. நெற்றிப் பொட்டிற்கு மேலே பூசிய விபூதியும், கீழே வைத்த சந்தனமும் அவளுடைய முகத்திற்கு தெய்வீக அழகைத் தந்திருந்தது.

வீட்டை நோக்கி காரை செலுத்தியபடியே கேட்டான் வீரமணி.

“லலிதா…”

“ம்…சொல்லுங்க”

“பொறக்கப் போறது பொண்ணுதான்னு எப்படி நீ இவ்வளவு தெளிவா நம்பறே?”

“தாயறியாத சூலும் உண்டோன்னு சொல்லுவாங்களே. அப்படித்தான். பொறக்கப் போறது நம்மோட மீனாதான். அவளோட மறு ஜென்மம் இது”

“வரும்போது என்ன சொன்னே? இந்த விதி , தலையெழுத்திலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைன்னே”

“இப்பவும் அதைத்தான் சொல்றேன். முதல்ல பொறந்த கொழந்தை சாகனும்னு விதி இருக்குங்கறதை நான் நம்பலை. இறப்புங்கறது உடம்புக்குத்தான். ஆன்மாவுக்கு இல்லை. என் குழந்தையோட ஆன்மா மறு பிறப்பெடுத்திருக்கு. வாழனும்னு விதிக்கப்பட்டிருக்குது. 




முதல் குழந்தைக்கு மீனாள்னு பெயர் வச்சு வளர்க்கனும்னு கனவு வளர்த்தேன். அந்தக் கனவு இப்ப நிறைவேறப் போகுது.”

“ஆனா… அம்மாவுக்கு ஆண் குழந்தைதான் கனவு”

“அது வெறும் பகல் கனவுதான். பெண்ணாப் பிறந்தா என்ன தூக்கி குப்பத்தொட்டியிலா போட்டுடப் போறாங்க? கொஞ்சோ கொஞ்சோன்னு கொஞ்சத்தான் போறாங்க.” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள் லலிதா.

“ஒரு வேளை அம்மாவோட ஆசைப்படி ஆணாப் பொறந்தா நீ மட்டும் என்ன குப்பத் தொட்டியிலா போட்டுடப் போறே? கொஞ்சோ கொஞ்சோன்னுதான் கொஞ்சப் போறே.” அவனும் வாய்விட்டு சிரித்தான்.

ஆனால் லலிதா சிரிக்கவில்லை. உறுதியாக சொன்னாள். 

“அப்படியெல்லாம் எதுவும் நடக்கப் போறதில்லை. பெண்குழந்தைதான்…என் மீனாள்தான் பிறக்கப் போறா”

“பார்க்கலாம். ஜெயிக்கப் போறது அம்மாவா நீயான்னு?”

லலிதா மிகவும் கலகலப்பாக பேசிக் கொண்டே வந்தாள். பெற்றெடுக்காமலேயே பிள்ளை கைக்கு வந்ததைப் போல் குதூகலித்தாள்.

இருவரும் வீட்டிற்கு வந்த போது கூடத்தில் கோமதியம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் சுந்தரவள்ளி.

கோமதி அதே தெருவில் வசிப்பவள்தான். மருமகள் மீது குறை சொல்வதற்கென்றே ஒரு நாளைக்கு பத்துதடவையாவது வந்துவிட்டுப் போவாள்.

இப்பொழுதும் அப்படித்தான் ஒரு வருகைத் தந்திருந்தாள். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவள் லலிதாவைப் பார்த்ததும் “வா… வா… கோவிலுக்குப் போய்ட்டு வர்றியா?” என்றாள்.

“ஆமா அத்தை” அந்த கிராமத்தில் உள்ள எல்லா பெண்களையும் வெளியூரிலிருந்து கட்டிக் கொண்டு வந்த பெண்கள் அத்தை என்று அழைப்பதுதான் வழக்கம்..

கோவில் பிரசாதத்தை மாமியாரிடம் கொடுத்தாள் லலிதா.

“அட…இன்னைக்கு சக்கரைப் பொங்கலா? கமகமன்னு வாசம் வருது.” கோமதி சின்னக் குழந்தையைப் போல் எச்சிலூறினாள்.

தொன்னையிலிருந்த சர்க்கரைப் பொங்கலை கொஞ்சமாய் எடுத்து கோமதிக்கு கொடுத்தவாறே “இதை தின்னுப்புட்டு தொன்னையைத் தூக்கிப் போடாம மூட்டைக் கட்டிக்கிட்டு எடுத்துட்டு வந்தியா?’ என்றாள் சுந்தரவள்ளி.

“நீ சொல்றது நல்லாயிருக்கே. கோவில் பிரசாதத்தை எல்லாருக்கும் கொடுத்துட்டு சாப்பிட்டாத்தான் பலன்.” என்றாள் கோமதி.

“ஐயர் உங்களுக்குன்னே தனியா கொடுத்தார் அத்தை”

“அப்படியா? அந்த ஐயருக்கு எப்பவும் என் மேல மரியாதை.” பெருமையாக தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் சுந்தரவள்ளி.

“மரியாதையா? பயம்னு சொல்லு. அடுத்த தடவை கோவிலுக்குப் போனா நீ அவரை உண்டு இல்லைன்னு ஆக்கிட மாட்டே? அதுக்குப் பயந்துதான் கொடுத்து விட்டிருப்பார்.” கோமதி கொல்லென சிரித்தாள்.

லலிதா சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.




“உனக்கு ரொம்பத்தான் கொழுப்பு” கோமதியைத் திட்டிய சுந்தரவள்ளி,

“இந்தா… நீ கொஞ்சம் எடுத்துக்கிட்டு வீரபாண்டிக்கும் கொடு” என்று தொன்னையில் மிச்சம் இருந்ததை நீட்டினாள்.

“இல்லை அத்தை நாங்க கோவில்லயே சாப்பிட்டோம். இது ஐயர் உங்களுக்காகக் கொடுத்தது.”

“இந்தா… புள்ளதாச்சி பொண்ணை பொழுது போன நேரத்துல சர்க்கரைப் பொங்கலை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதே. நெய்யும் வெல்லமும் சேர்ந்துக்கிட்டு ஏதாவது செஞ்சிடப் போகுது.” என்று கூறிய கோமதி மீதத்தையும் வாங்கி சப்புக் கொட்டி  சாப்பிட்டாள்.

“லலிதா. புடவையை மாத்திக்கிட்டு எனக்கும், கோமதிக்கும் சூடா காபி போட்டு எடுத்தா” அதிகாரமாக உத்தரவிட்டாள் சுந்தரவள்ளி. 

“ என்னா சுந்தரவள்ளி. கோவிலுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்திருக்கா. களைச்சிப் போயிருப்பா. அவளைப் போய் வேலை வாங்கறே?” கோமதி கடிந்துக் கொண்டாள்.

“ஆமா…. கோயில் இங்கிருந்து நூறு கிலோ மீட்டர் இருக்கு. இவ நடந்தே போயிட்டு வந்திருக்கா பாரு. அப்படியே களைச்சுப் போக. கார்ல அலுங்காம குலுங்காம போயிட்டு வந்திருக்கறவளுக்கு களைப்பாயிருக்குமா?”

“கார்ல போயிட்டு வந்தா என்ன? புள்ளதாச்சி பொண்ணு இல்லையா? களைப்பாயிருக்காதா?” 

“ஆமா.. இவதான் அதிசயமா உலகத்துல புள்ளத்தாச்சியா இருக்கா பாரு. நாமெல்லாம் புள்ளயா பெத்தோம்?  ரோட்ல கிடந்த புள்ளைங்களைத்தானே எடுத்து வளர்த்தோம்? போ… போய் காபியை போட்டு எடுத்தா” அதட்டினாள் சுந்தரவள்ளி. 

“சரி அத்தை.” என்றபடி உள்ளே வந்தாள் லலிதா. காரில்தான் போய்விட்டு வந்தாள். ஆனால்… அடித்துப் போட்டதைப் போலிருந்தது. அப்படியே படுத்துவிடலாம் போல் அசதியாகயிருந்தது. சத்தியமாக ஒரு டம்ளரைக் கூட எடுத்து வேறிடத்தில் வைக்க முடியாது போலிருந்தது. ஆனால் சுந்தரவள்ளியின் அதிகாரம் அத்தனை களைப்பையும் மீறி வேலை செய்ய வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பட்டுப்புடவையை கழற்றிப் போட்டுவிட்டு பழைய சேலைக்கு மாறிய லலிதா சமையலறைக்கு செல்ல தன்னறையிலிருந்து வெளியே வந்தாள்.

“உன் மருமக வயித்தைப் பார்த்தா பொறக்கப் போறது பொண்ணாத்தான் இருக்கும்னு தோணுது.’

கோமதி சொல்ல சுந்தரவள்ளி சுள்ளென்று விழுந்தாள்.

“உன் வாயை வச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டே? பொண்ணு பொறக்குமாமில்ல பொண்ணு. ஏன் ஒரு பொண்ணு பொறந்து போயி சேர்ந்தது போதாதா?”

“ஏன்… கோபப்படறே? முதல்ல பொண்ணு பொறந்தது தங்காமப் போயிடுச்சுங்கறதுக்காக பொம்பளைப் புள்ளையே வேண்டாம்ன்னா எப்படி?”

“பொம்பளைப் புள்ளை வேண்டாம்னு சொல்லலை. எங்கக் குடும்பத்துல பொண்ணு பொறந்தா உயிரோட இருக்காது.”

மாமியார் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள் லலிதா. சமையலறைக்குள் நுழைந்தவள் சட்டென்று காதை ஹாலிலேயே வைத்தாள்.

“என்ன சொல்ற நீ” கோமதியும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் கேட்டாள்.

“எங்கக் குடும்பத்துல பொண்ணே பொறக்காது. என் மாமியாருக்கும் பொண்ணு கிடையாது. எனக்கும் பொண்ணு கிடையாது. அப்படியே தப்பித் தவறி பொண்ணு பொறந்தா அது உயிரோட இருக்காது. செத்துடும். அதனாலதான் அவளுக்கு ஆம்பளைப் புள்ளையா பொறக்கனும்னு வேண்டிக்கிறேன்”

“பொண்ணு பொறந்தா இருக்காதா? செத்துடுமா? என்ன சுந்தரவள்ளி சொல்ற நீ”

“ஆமா… கோமதி எங்கக் குடும்பத்திற்கு அப்படி ஒரு சாபம்” 

கையிலிருந்த பால் பாத்திரம் அதிர்ச்சியில் லலிதாவின் கையிலிருந்து விழுந்து சிதறியது.




What’s your Reaction?
+1
9
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!