Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-4

(4)

பாத்திரம் விழுந்த சத்தத்தில் கூடத்தில் பேச்சு நின்றது. லலிதாவிற்கு கைகள் வெட வெடவென நடுங்கின. பாத்திரம் விழுந்து பாலெல்லாம் தரையில் கொட்டிவிட்டதே மாமியார் திட்டப் போகிறாள் என்று எண்ணியல்ல அந்த நடுக்கம். சாபம் என்று சொன்னாளே அது தந்த அதிர்ச்சிதான். வயிற்றில் உள்ள குழந்தை பெரும் சூறாவளி காற்றில் சுழல்வதைப் போல் ஒரு அவஸ்தை. 

தரையில் கொட்டிய பாலை துணியெடுத்து சுத்தமாகத் துடைத்தாள். பிறகு வேறொரு பாத்திரத்திலிருந்த பாலை எடுத்து காபி போட்டாள். சர்க்கரைப் போட்டுக் கலக்கினாள். ஆனால்…

மனதிலோ ஏதோ கசப்பு விழுந்து கலக்குவதைப் போலிருந்தது. 

காபியை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். ஏதோ மாட்டிக் கொண்ட திருடனைப் போல் இருவரும் திரு திருவென விழித்தபடியிருந்தனர்.

“காபி எடுத்துக்கங்க.”

“உள்ள என்ன சத்தம்?” சுந்தரவள்ளி முறைப்பாய் கேட்டாள். 

“ஒன்னுமில்லை. பாத்திரம் கீழே விழுந்திட்டு.”

இருவருக்கும் கொடுத்துவிட்டு கணவனுக்கான டம்ளரை எடுத்துக் கொண்டு அவனுடைய அறைக்கு வந்தாள். அவனுக்கும் காபியைக் கொடுத்தவள் அங்கிருந்த ஜன்னல் வழியே கூடத்தைக் கவனித்தாள். 

அவர்கள் மேலும் என்ன பேசுகிறார்கள் என உன்னிப்பாய் கவனித்தாள். காபியை ஊதி ஊதி குடித்தபடியே கோமதி கேட்டாள். 

“ஏதோ… சாபம்ன்னியே… என்னாது அது?”

“ஸ்… சும்மாயிரு. நாம பேசினது என் மருமகளுக்கு கேட்டுதோ என்னவோ. பாத்திரம் கீழே விழுந்த சத்தத்தை கேட்டில்ல “

“ப்ச் அதெல்லாம் ஒன்னும் கேட்டிருக்காது. அவ கைத் தவறி பாத்திரத்தை கீழேப் போட்டிருப்பா. நீ சொல்லு அது என்ன சாபம்?”

இப்ப வேண்டாம். என் மருகமளுக்கு தெரியக் கூடாது. தெரிஞ்சா பயந்துடுவா. நாம ஆத்தங்கரைக்குப் போவோமில்ல. அங்க வச்சு சொல்றேன். நீ மொதல்ல காபியைக் குடிச்சுட்டு கிளம்பு.” சுந்தரவள்ளி கோமதியை விரட்டாதக் குறையாக சொன்னாள்.

அவர்கள் பேசியது கிசுகிசுப்பான குரலில் லலிதாவின் காதை வந்தடைந்தது. நெஞ்சுக்குள் திக்திக்கென்றானது. ஒருவித பயம் அவளுக்குள் உண்டானது. வீரமணி ஏதோதோ கேட்க எதற்கும் பதில் சொல்ல முடியாமல் “எனக்கு களைப்பாயிருக்கு. நான் போய் கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு  அங்கிருந்து தன் அறைக்கு வந்தாள்.

சாய்ந்துப் படுத்தாள். மாய்ந்து மாய்ந்து மனம் அதையே நினைவுப் படுத்தியது. பாய்ந்து பாய்ந்து தாக்கும் கணைகளாக மாமியார் சொன்ன வார்த்தைகள் வேதனையை வேய்ந்துக் கொண்டே கொண்டேயிருந்தன.

‘பொண்ணு பொறந்தா செத்திடுமா?’

‘ஆமா…எங்க குடும்பத்திற்கு அப்படி ஒரு சாபம்’ 

நெஞ்சில் ஏற்பட்ட அதிர்வு நீங்கவில்லை. நினைக்க நினைக்க படபடப்பு கூடிக்கொண்டே போனது. கை கால்கள் நடுங்கின.

அப்படியானால் என் முதல் குழந்தை இறந்தது சாபத்தாலா? ஜன்னியினால் இல்லையா?

அது பெண்ணாகப் பிறந்ததால் இறந்ததா? ஆணாகப் பிறந்திருந்தால் இறந்திருக்காதோ? உயிருடன் இருந்திருக்குமோ?

இந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறேனே? செத்துப் போன என் மகளே மறுஜென்மமாக என் வயிற்றில் வளர்வதாக நான் நம்பிக் கொண்டிருக்கிறேனே… அப்படியானால் இதுவும் பெண்ணாகப் பிறந்தால் இறந்துவிடுமா? நினைவே தூக்கி வாரிப் போட்டது. திடீரென வயிற்றில் புரளும் குழந்தை உள்ளேயே வீரிட்டழும் சத்தம் அவளுடைய காதுகளை எட்டியது. கண்களில் சுழற்ச்சி உண்டானது.




ச்சை.. சாபமாவது மண்ணாங்கட்டியாவது? இந்த கிராமத்து கிழவிகளுக்கு வேறு வேலையே இல்லை. சும்மா… சாபம்.. செய்வினை, மாயம், மந்திரம் என்று…

அலட்சியப்படுத்த நினைத்தாள். ஆனால்…சாபத்தால்தான் முதல் பெண் குழந்தை இறந்தது என்று மாமியார் சொன்ன பிறகு அவளால் அந்த முதல் கர்ப்பத்தையும், அதன் பேரானந்தத்தையும், அதைத்தொடர்ந்து சந்தித்த பேரதிர்ச்சியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

கண்கள் குளமாக அவளுடைய கால்கள் அனிச்சையாக எழுந்து நடந்தன.  பின் பக்கத் தோட்டத்திற்கு வந்தாள். கிணற்றை ஒட்டியிருந்த மல்லிகைப்பந்தலின் அருகே வந்தாள். 

அந்த இடத்திற்கு வந்ததுமே அவளுடைய உடலில் ஒரு விறைப்புத் தன்மை வந்து ஒட்டிக் கொண்டது. கண்கள் நிலைக் குத்திப் போக சிலை போல் அந்த மல்லிகைப் பந்தலின் கீழே சிமென்ட் தரையில் கண்ணாடி சுவர்களால் அமைக்கப்பட்ட சிறிய கோபுரத்தின் உள்ளே ஆளுயர பித்தளை குத்துவிளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

அந்த மல்லிகைப் பந்தலின் நான்கு பக்க தூண்களையும் சுற்றி கொடிகள் படர்ந்து தூண்கள் இருப்பததையே மறைத்திருந்தது. மேற் பரப்பில் போடப்பட்டிருந்த கம்பிகள் கொஞ்சம் கூட தெரியாமல் கொடிகள் பரவி பூத்துக்  குலுங்கின. நேற்றைய உதிர்ந்த மலர்களெல்லாம் அந்த கண்ணாடி மண்டபத்தில்  கொட்டி சிமென்ட் தரை முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களாய் சிதறிக் கிடந்தன. 

மல்லிகைப் பந்தல் என்பதால் வெறும் மல்லிகைக் கொடி மட்டும் இல்லை. ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு கொடி படர்ந்திருந்திருந்தது. மல்லிகை, முல்லை, சந்தன முல்லை, ஜாதி மல்லி என நான்கு விதமான கொடி வகைகள் நான்கு தூணிலும் ஏறி படர்ந்து பரவி பளிச்சென மலர்ந்து சிரித்தும், உதிர்ந்தும் இருந்தன.

கூடைக் கூடையாகப் பறித்தாலும் பறித்து மாளாது. அத்தனை மலர்கள். ஆனால்… ஒரு மொட்டைக் கூட பறிக்க மாட்டாள் லலிதா. வேறு யாரையும் பறிக்கவும் விட மாட்டாள். கூந்தலில் வைத்துக்கொள்ளவோ, பூஜைக்கோ கூட பறிக்க அனுமதிக்காத அவள் கடையிலிருந்து காசுக்கொடுத்து பூ வாங்குவாள். 

அத்தனைப் பூக்களும் அர்ச்சனையாக, ஆராதனையாக, ஆசிர்வாதமாக அந்த கண்ணாடி கோபுரத்தில் சொரிய வேண்டும் என விரும்புவாள். காய்ந்த பூக்களைக் கூட தன் கைக்கொண்டு அகற்றி துணி கொண்டு துடைப்பாளே தவிர. ஒரு முறை கூட துடைப்பத்தால் அந்த இடத்தை கூட்டிப் பெருக்க மாட்டாள். 

காரணம்….




அங்கே… உறங்கிக் கொண்டிருப்பது அவளுடைய மீனாள்.

குபுக்கென கண்ணீர் பொங்க அந்த மல்லிகைப் பந்தலின் கீழே சிமென்ட் தரையில் அமர்ந்தாள் லலிதா.  தரையில் உதிர்ந்திருந்த பூக்களை  அள்ளி  கண்ணாடிக் கோபுரத்தின் மீது தூவினாள். எரிந்துக் கொண்டிருந்த குத்துவிளக்கின் தீபச் சுடராய் மீனாள் சிரித்தாள்.

‘தலைச்சங் குழந்தையை சுடுகாட்டுல புதைக்கக் கூடாது. அதுவும் தலைச்சன் பெண் குழந்தை. மந்திர வாதிக்கும், குடுகுடுப்பைக்காரனுக்கும் கொடுத்து வச்ச மாதிரியாயிடும். தோண்டி மண்டை ஓட்டை எடுத்துட்டுப் போய் மை தயாரிச்சுடுவானுங்க. அதனால கொல்லைப் பக்கமே புதைச்சுடலாம். நம்ம புள்ளை நம்மக்கிட்டயே இருக்கும். நாலு கிழமையில வெளக்கேத்தி வைக்கலாம்.”

அத்தனை வேதனையிலும் அத்தைக்காரியின் இந்த வார்த்ததைகள் கொஞ்சம் ஆறுதலாகயிருந்தது. வேறு யாருக்காவது நிகழ்ந்திருந்தால் மந்திரவாதியாவது, மந்திரமாவது என பகுத்தறிவு பேசியிருப்பாள். ஆனால் சில சமயம் மூட நம்பிக்கைகள் கூட ஆறுதலையும், நிம்மதியையும் தந்துவிடுகின்றன. உயிர் இல்லை என்றாலும் தன் பக்கத்திலேயே தன் குழந்தையின் உடல் இருக்கப் போகிறது என்ற ஆறுதல்.

குழந்தையைப் புதைத்த இடத்தில் சிமென்ட் தளமிட்டு நான்கு பக்கமும் தூண் நிறுத்தி, நடுவில் கண்ணாடி கோபுரம் வைத்து குத்துவிளக்கேற்றினாள். பகல் இரவு எந்நேரமும் விளக்கில் எண்ணெய் குறையாமல் சுடரவிட்டாள். நான்கு தூண்களின் கீழும் மல்லிகை, முல்லை, சந்தன முல்லை, ஜாதி மல்லி என கொடிகளை நட்டு, படர விட்டு தன் குழந்தையின் மேனியை பூப் புனித நீராட்டினாள். 

சமையலறை ஜன்னல் வழியே சமைத்துக்கொண்டே நொடிக்கொரு தரம் மல்லிகைப் பந்தலைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள், 

\hஜகான் சிறையிலிருந்தபடியே மும்தாஜின் சமாதியைப் பார்த்தபடியே மரணித்ததைப் போல். 

அவளுடைய படுக்கையறையிலிருந்து ஜன்னல் வழியேப் பார்த்தாலும் மல்லிகைப் பந்தல் அவளுடன் பேசும். அந்த தீப ஒளியைப் பார்த்தபடியே அவள் வெகு நேரம் வரை விழித்திருப்பாள்.

தான் அமர்ந்திருந்த சிமென்ட் தரையை தன் கைகளால் மென்மையாக வருடினாள் லலிதா. 

முதல் குழந்தை. முதன் முதலாக கருவுற்றிருக்கிறோம் என்றதும் எவ்வளவு மகிழ்ந்தாள்? ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு உற்சாகமாகயிருந்தாள்? பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். அதற்கு மீனாள் என பெயர் வைக்க வேண்டும் என பெயரும் தேர்ந்தெடுத்துவிட்டாள்.

ஆனால்…ஆசைப்பட்ட மாதிரியே பெண் குழந்தை தங்க விக்ரகம் போல் பிறந்தும் சரியாய் ஒரே வாரம் கழித்து குழந்தை இறந்துவிட்டது. 

பைத்தியம் பிடித்ததைப் போல் அழுதாள் லலிதா. தன் ஆசைக்கனவுகள் கண்ணெதிரே களைந்ததைப் போல் கைவிட்டுப் போன உயிர். அவளை நடைப்பிணமாக்கியது. 

அவளை தேற்றிக் கொண்டு வருவதே வீரமணிக்கு பெரும்பாடாகப் போனது. எப்படியோ தேற்றி ஒருவாறு அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான். 

இதோ… மீண்டும் கர்ப்பமாகயிருக்கிறாள். தன் வயிற்றில் தன்னைவிட்டு பிரிந்து போன தன் முதல் குழந்தையே மறுபடி கருக்கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறாள். பெண்ணாகப் பிறந்து வாய் நிறைய கூப்பிட்டு மகிழாத மீனாள் என்ற பெயரையே வைத்து  அழைக்க வேண்டும் என ஆசையோடு காத்திருக்கிறாள். 

ஆனால்…. சாபம்? பெண்ணாகப் பிறந்தால் இறந்துவிடும் என்ற வார்த்ததை அவளையும் மீறி அவளை ஆட்கொண்டது. அடிமனதில் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டானது. 

இரவு…

கணவனிடம் அதைப் பற்றிக் கேட்ட போது அவனுடைய முகம் மாறியது.




What’s your Reaction?
+1
6
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!