Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-10

10

சமையலறையில் வித்யா கண்ணீரைப் பெருக்கிக் கொண்டு பானைகளை உருட்டிக் கொண்டிருந்தாள். சட்டென உள்ளே சென்றவள் ஒரு பழம் புடவையின் அடியிலிருந்த ஒரு நோட்டை எடுத்துப் பார்த்தாள். சில வரிகள் அவள் கையெழுத்தில் சுளீரென்று அவள் கண்ணில் பட்டது.

“கல்விக் கரையை அடைவோம் – பல

காசினித் தொழில்கள் புரிவோம்

ஏது தடைகள், வெல்வோம் – வா!

யாதுமாகி நிற்போம்!”

மளுக்கென்று புதிதாக வந்த கண்ணீர் காகிதத்தில் பட்டுத் தெறித்தது.

“வித்யா! நாளை பெண்கல்விக்காக நாம ஆரம்பிக்கப் போற நிரல்யாங்கற ட்ரஸ்டின் வைர வரிகள் இவை.  நல்லா இருக்கா?” என்ற வார்த்தைகள் – அவள், ஜானகி – சொன்ன வார்த்தைகள் – தீக்கோலாய் இன்று நெஞ்சில் சூடிட்டது.

“நான் ரிஸர்ச்சில் போகப் போறேன். நம்ம வித்யா தான் கற்றதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிற நோபிள் புரொஃபஷனை எடுத்துக்கப் போறா! இனிமே அவ சாதாரண வித்யா இல்லை, புரொஃபஸர் வித்யா!”

“புரொஃபஸர் வித்யா! புரொஃபஸர் ஜானகி! தூத்தெறி!” எல்லைமீறிய ஆத்திரத்தில் வித்யாவுக்குப் படபடவென்று வந்தது. தலைசுற்றும் போலிருந்தது.

“அம்மா! அம்மா என்னம்மா ஆச்சு?” பதட்டமாய் அவளருகில் நெருங்கி அமர்ந்தான் அஸ்வின்.

“ஒ… ஒண்ணுமில்லைப்பா…” தன்னைச் சுதாரித்துக் கொள்ளப் பாடுபட்டாள் வித்யா. 

“அம்மா! நீங்க இப்படி ஓவர் எமோஷனலா ஆகிறதைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதைக் கேளுங்கம்மா! நீங்கதானே சொல்வீங்க, நான் நல்லா படிச்ச, தன் காலில் நிற்கற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு! நிரல்யா கோல்ட் மெடலிஸ்ட் மா! அது மட்டுமில்லை, இன்றைக்கு யங் லாயர்ஸ்க்கு மத்தியில் அவ ஒரு ஷைனிங் ஸ்டார். அவ சீனியரே அப்படித்தான் சொன்னார், தெரியுமா? 

“அவ இங்கே கல்யாணம் பண்ணி வரதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? அப்பா பெண்கள் அடக்கமா இருக்கணும்னு சொல்றாரே தவிர, அவங்களைக் கஷ்டப்படுத்தணும்னு சொன்னதில்லையே. உங்களுக்கும் வேண்டிய வசதிகள் செய்து கொடுத்திருக்கார் இல்லையா? என்ன, கோபத்தில் கை ஓங்கிடறார்ங்கறதைத் தவிர… உங்க மேல வெறுப்பு இருந்தா உங்களுக்கு அடிபட்டதும் மருத்துவமனையில சேர்ப்பாரா? 

இங்கே கல்யாணம் பண்ணி வர பெண்ணே, படிச்சவளா, பண்பட்டவளா, ஊரே போற்றுகிறவளா இருக்கும்போது, அவருடைய கட்டுப்பெட்டி எண்ணங்களும் மாறலாம் இல்லையா? 

இதெல்லாம் நானா சொல்லலை. நீங்க நினைச்சது, நீங்க சொன்னது! இப்போ திடீர்னு உங்களுக்கு நிரல்யா பற்றிச் சொன்னதும், இல்லை, அவங்க அம்மாவைப் பற்றிச் சொன்னதும் 

இத்தனைக் கோபம் வருதுன்னா, ஜானகி என்ற பெயருள்ள யாராலோ நீங்க அதிகமா பாதிக்கப்பட்டிருக்கீங்க, அந்த வலிதான் கோபமா வெளிப்பட்டிருக்குன்னு எனக்குப் புரியுது. நிரல்யாவோட அம்மா ரொம்ப நல்லவங்கம்மா. அவங்க பெயர் உங்களுக்குப் பிடிக்கலைன்னா, வேறு பெயர் சொல்லிக் கூப்பிட்டுட்டுப் போங்க! இந்த அளவு உங்களை இல்லாஜிகலா கோபப்பட வெச்ச அந்த ஜானகி யாரு? அவ என்ன செஞ்சா? எங்கிட்ட சொன்னீங்கன்னா உங்க மனப்பாரம் குறையும்னா சொல்லுங்க” என்றான் அஸ்வின்.

வித்யா கொஞ்சநேரம் அழுதாள். பிறகு “சொல்றேம்ப்பா” என்றாள்.

================




பல ஆண்டுகளுக்கு முனனால். இன்றைக்கெல்லாம் முப்பத்தைந்து வருஷம் இருக்குமா?

ஜானகி, வித்யாவதி உயிர்த்தோழிகள். பாலர் பள்ளியிலிருந்து ஒன்றாகவே படித்து வருகிறார்கள். அவர்கள் இருவருடைய குடும்பமும் சேகரன் குடும்பத்தைப்போல் கட்டுப்பெட்டியான குடும்பம்தான். அடம்பிடித்து இருவரும் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். அந்தப் பெருமை அவ்வப்போது பேச்சில் தெரியும். இளம்வயது, பூமியையே புரட்டிப் போடும் புயல்களாத் தங்களைக் கருதிக் கொள்ளும் மனது, அந்தப் புயலுக்குச் சற்றும் குறைபடாத ஆர்வ வேகம்…

இத்தனைக்கும் அவர்கள் உடைகள், வாழ்க்கை முறை எல்லாம் கட்டுப்பெட்டியாகவே இருந்தன. வீட்டிலும் கண்டிப்பு அதிகம்தான். அவர்கள் கேட்பதுபோல் சற்றுப் புது மோஸ்தரில் ஒரு தாவணிகூட வாங்கித்தர மாட்டார்கள். “என்ன புது நாகரீகம்? தலைதெறிச்சு விழுந்தா  படிப்பை நிறுத்திடுவேன்” என்ற மிரட்டல் ஏறக்குறைய தினமும் அவர்கள் இருவர் வீடுகளிலும் கேட்கும். 

பள்ளியில் இப்படியே சந்தோஷமும் சண்டைகளுமாய் ஐந்தாண்டுகளைக் கழித்துவிட்டார்கள். எஸ் எஸ் எல் ஸி வகுப்புத் தொடக்கத்தில்தான் ஜானகியின் அப்பா அவளுக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்தார்.

============

தனக்குத் தெரியாமல் கல்யாணம் பேசியிருக்கிறார்கள், தன்னிடம் சொல்லாமலே நிச்சயமும் செய்துவிட்டார்கள் என்று அறிந்ததும் ஜானகி வித்யாவிடம்தான் ஓடி வந்தாள். அழுது புலம்பி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கதறினாள். வித்யா எவ்வளவோ ஆறுதல் சொன்னாள். “கல்யாணம் பண்ணிக்கிட்டு  படியேன்” என்றுகூடச் சொல்லிப் பார்த்தாள்.

“மண்ணாங்கட்டி! அவங்க வீட்டுல பொம்பளைங்கள ஸ்கூல் படியே ஏற விட்டதில்லையாம்

நம்ம குடும்பங்களைவிடக் கட்டுப்பெட்டி, கண்டிப்பாம்” என்று விம்மினாள் ஜானகி.

வித்யாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஜானகியின் அழுகையை மௌன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கல்யாணம் நெருங்கியது. “நம்ம ஜானகிக்கு லட்சணமா மாப்பிள்ளை வாய்ச்சிருக்கான்! சொத்து வேற! ஜானகி குடும்பம் கெட்டிக்காரங்கதான்! கல்யாணத்தைத் தள்ளிப் போடாம சட்னு ஏற்பாடு பண்ணிட்டாங்களே!” என்று தெரு முழுவதும் பேச்சு. ஜானகிக்கும் வித்யாவுக்கும் நாராசமாக இருந்தது.

இதில் இன்னொன்று வேறு! “ஜானகிக்கு அழகில் குறைச்சலா? இல்லை அவங்க அப்பாவுக்குச் சொத்துக்குக் குறைச்சலா? இனம் இனத்தோடுதானே சேரும்?” என்று வித்யாவின் அப்பா முன்னால் குத்திக்காட்டுவதுபோல் பேசினார்கள். அவர் உடனே வித்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். வித்யா மிரட்டி அதை ஓரளவு அடக்கி வைத்தாள்.

கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தபோது, “வித்யா! நீயும் வந்து கல்யாணம் முடிகிறவரை நம்ம வீட்டிலேயே இரும்மா. ஜானகிக்குத் துணையா இருக்கும், எங்களுக்கும் கூடமாட ஒத்தாசையா இருக்கும்” என்று உத்தரவு போடாத குறையாக ஜானகியின் அம்மா சொல்லவே, வித்யாவுக்கு எரிச்சலாக வந்தது. இப்படி ஜானகியின் கனவுகளைச் சிதைத்து அவளைக் குடும்பச் சிறையில் தள்ளுவதே தவறு, இதில் நான் வேறு இவர்களுக்கு உடந்தையாக இருக்க வேண்டுமா? நாளும் பொழுதும் ஜானகி அழுவதை நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா?

அவளுடைய அம்மாவும் வற்புறுத்த, ஜானகியின் கண்கள் கெஞ்ச, அரைமனதாக ஒப்புக்கொண்டாள்.

ஆனால் ஜானகி அவளோடு இருந்தாளே தவிர, அவளிடம் அதிகம் பேசவில்லை, புலம்பவில்லை. தன் விதியை ஒப்புக்கொண்டுவிட்டாள் போல் தோன்றியது. வீட்டுக்காரர்களோடு பேசுவதைத் தவிர்த்தாள். “என்னோடு வித்யா இருந்தால் போதும்” என்றாள். கல்யாணத்தன்று காலையில் மௌனமாகவே எழுந்தாள். மௌனமாகவே குளித்து, உடைகளைத் தரித்தாள். வித்யா அவளோடு கூடவே நின்றாள்.

சடங்குகள் பாதி முடிந்திருந்த நிலையில் “கொஞ்சம் மேடைக்குப் போய் என் அம்மாவைக் கூட்டி வரயா? என் நெக்லஸ் எங்கேன்னு தெரியல” என்று ஜானகி சொல்ல, வித்யாவும் மேடைக்குப் போய் ஜானகியின் அம்மாவோடு திரும்பினாள். அங்கே —

ஜானகி இல்லை. அவள் விட்டுப்போன நகைகளும், பவுடர் வாசமும், மேஜை மேல் ஒரு கடிதமும் மட்டுமே.

அன்பு வித்யா,

வேதனை நிறைந்த மனதோடு விட்டுச் செல்கிறேன்! விடை கொடு! 

வித்யா, நான் போகிறேன். எனக்குப் பிடித்த வாழ்வைத் தேடி. நானே அமைத்துக் கொள்ளும் என் எதிர்காலத்தைத் தேடி. சிறகுகளைப் படபடத்தே மகிழும் கூண்டிலிருந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்துப் பறக்கும் வானத்தைத் தேடி.

என்றேனும் ஒருநாள் எதிர்படுவேன் அன்று என் சுதந்திரம் உனக்கு அரணாய் இருக்கும்!

அன்புடனும், கனவுகளுடனும்,

ஜானகி.

ஜானகியின் அம்மா கையில் கடிதத்துடன் நின்ற வித்யாவதியைச் சந்தேகமாய், வெறுப்பாய்ப் பார்த்தாள்.

==============

“ஐயோ! எல்லாரும் சேர்ந்து என்னைக் கொல்லாதீங்க! சத்தியமா எனக்கு ஜானகி இந்த மாதிரி ஒரு திட்டம் போட்டிருக்கான்னே தெரியாது! உங்களை ஏமாற்றினமாதிரி என்னையும் ஏமாற்றியிருக்கா!” கதறிக் கதறி அழுதாள் வித்யா.

“அதெப்படி? நீ கூடவே இருந்திருக்க? உங்கிட்ட சொல்லாமலா அவ எல்லாம் செய்வா? நீயும் அவளும் தான் நகமும் சதையுமாச்சே. உனக்குத் தெரியாம அவ வாழ்க்கைல ஒண்ணுமே நடக்காதுன்னு ஜம்பம் அடிப்பாளே. சொல்லு! எங்க போனா ஜானகி?” ரௌத்தரமானார் ஜானகியின் அப்பா.

“ஐயோ மாமா! எனக்கு எதுவுமே தெரியாது. என்னை நம்புங்க ப்ளிஸ்!”

“என்னடி ப்ளீஸ்?  இந்த இங்க்லீஷ் படிப்புத்தானே உங்களையெல்லாம் தலைதெறிச்சு ஆட விட்டிருக்கு! அடுத்த முஹூர்த்தத்திலேயே உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணி வெக்கறேன். இல்லேன்னா நீயும் ஓடிடுவ! அந்த ஓடுகாலியப் பார்த்து நீயும் ஓடிடுவே!” என்று பொறுமினார் வித்யாவின் அப்பா.

“இந்தாங்க! உங்க பொண்ணுதான் எங்க பொண்ணு மனசைக் கலைச்சு விட்டு ஓடிப் போக வெச்சிருக்கா! கண்ணுக்கழகா மாப்பிள்ளையைப் பார்த்தவுடனே தானே கட்டிக்கலாம்னு நினைச்சுட்டா போல! அதுதானே உங்க திட்டம்? அதானே உங்க பெண்ணைத் திட்டற மாதிரி நடிக்கறீங்க? இவருக்குத்தானே அடுத்த முஹூர்த்தத்தில் கல்யாணம் பண்ணப் பார்ப்பீங்க?” என்று ஜானகியின் அப்பா சுடச்சுடக் கேட்டதும் வித்யாவின் அப்பா குறுகிப் போனார்.

“அடுத்த முஹூர்த்தத்தை விடுங்க! இப்போ நின்னிடிச்சே, இந்த முஹூர்த்ததுக்கு நீங்கல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்று சேகரனின் அம்மா உறுமினாள். “இந்தக் கல்யாணம் நின்னு போனது எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? மணமேடை வரைக்கும் வந்து பொண்ணு ஓடிப் போயிட்டான்னா, நாளைக்கு யாருய்யா என் மகனுக்குப் பொண்ணு கொடுப்பான்?”

“இந்த பாருங்க, நடந்தது நடந்திருச்சு. மணமேடை வரைக்கும் வந்துட்டு சேகரன் எழுந்திருக்க வேண்டாம். அதோ நிக்குதே அந்தப் பொண்ணு, அவதானே இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் காரணம்? அவளே சேகரனைக் கட்டிக்கிட்டு உங்க குடும்பத்துக்குப் பண்ணின தப்புக்குப் பிராயச்சித்தம் செய்யட்டும்” என்றார் சேகரனின் மாமா.

“அதுதான் நியாயம்” என்று ஊர்க்காரர்கள் ஒத்து ஊதினார்கள்.

“என்னது? என் பொண்ணை எப்படியாவது தேடிக் கூட்டிட்டு வரேன், மாப்பிள்ளை கட்டிக்கட்டும். அதை விட்டுட்டு, என் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கின இந்தப் பாதகியையா அவர் கட்டிக்கணும்? அவங்க சதிக்கெல்லாம் ஊர்ப் பெரிய மனுசங்களுமா ஆதரவு தரீங்க?” என்று கத்தினார் ஜானகியின் அப்பா.




இதற்கிடையில் சேகரன் தன் தாயிடம்  வித்யாவதியை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.  வித்யாவதியும் தன் அப்பா காலில் விழுந்து தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் இப்போது தனக்குக் கல்யாணம் வேண்டாம் என்றும் கதறினாள். அவர்கள் இருவரின் பேச்சும் எடுபடவில்லை.

நின்ற கெட்டிமேளம் மீண்டும் முழங்கியது. வித்யாவதியின் கழுத்தில் சேகரன் கட்டிய தாலி இறுகியது.

==========

“அந்தப் பாதகத்தி, ஜானகி, மட்டும் எனக்குப் பச்சைத் துரோகம் செய்திருக்கலேன்னா, நானும் படிச்சிருப்பேன்! எத்தனை கனவுகள்! எவ்வளவு லட்சியங்கள்! புரொஃபஸர் வித்யாவதி! டாக்டர் வித்யாவதி! சயிண்டிஸ்ட் வித்யாவதி! ஏன், ஒருவேளை அட்வகேட் வித்யாவதி!”

வித்யாவதி கண்ணீருடன் பொறும, அஸ்வின் பிரமித்து நின்றான். ஒருத்தி வாழ்வைக் குழிதோண்டிப் புதைத்து, அந்த மண்ணிலா உங்கள் எதிர்காலத்தின் விதையை நட்டீர்கள், ஜானகி? உங்கள் குழந்தைகளுக்கெல்லாம் நல்ல வாழ்வு எப்படி அமையும்? அவர்கள் நன்றாயிருப்பார்களா?

யாரென்றே தெரியாத எனக்கே இவ்வளவு கோபம் வருகிறதே, ஆண்டாண்டுகளாய் இந்த ஆத்திரத்தை உள்ளே புதைத்துப் புதைத்து, கனவுகள் உடைந்ததை எண்ணிக் கதறிக் கதறி, என் அப்பாவென்ற மனிதருக்கு அடிமையாய், வெறும் சமைக்கும் யந்திரமாய் வாழ்ந்திருக்கிறாளே இந்த அம்மா! இவளுக்கு எத்தனைக் கோபம் இருக்கும்?

அவள் ஜானகி என்ற பெயரைக் கேட்டதும் கோபப்பட்டதுகூட நியாயம் என்றே இப்போது தோன்றியது அவனுக்கு.

“அம்மா, கவலைப்படாதீங்க! நிரல்யாவும் அவள் அம்மாவும் ரொம்ப நல்லவங்க. புண்பட்ட உங்க மனதுக்கு அவங்கதான் மருந்தா இருக்கப் போறாங்க, பாருங்க!” என்றான் அஸ்வின்.

“இப்போகூட உன் காதலியைப் பற்றித்தான் உன் கவலை! நான் சொன்னதை நீ காதில் வாங்கினியா, இல்லையா?” என்றாள் வித்யா, சிரிப்பும் கோபமுமாய்.

“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? உங்க வாழ்வில் விளையாடின அந்த ஜானகி மட்டும் என் கையில் கிடைச்சா, அவளைக் கண்டந்துண்டமா வெட்டுவேன்! இல்லை, அது சரியான தண்டனை இல்லை! அவ குழந்தைகளை நிம்மதியா வாழ விடமாட்டேன். அவங்க கஷ்டத்தைப் பார்த்துப் பார்த்து, தன் குற்றங்களை நினைச்சு நினைச்சு அவங்களை வாழ்நாள் பூரா அழ வைப்பேன்” என்று அஸ்வின் ஆவேசமாய்ச் சொல்ல, வித்யாவதி நடுங்கினாள்.

“வேண்டாம்ப்பா, வேண்டாம்! அந்தத் துரோகியை நீ பார்க்கக்கூட வேண்டாம்! நான் சொன்னதையெல்லாம் மறந்துடு! நீ காரணம் கேட்டதால் சொன்னேன், அவ்வளவுதான். இந்தக் கஷ்டம் என்னோடு போகட்டும். நீ வாழ வேண்டியவன். நீ ஊருக்குப் போய் நீ ஆசைப்படற பொண்ணைக் கூட்டிவா, ஆசைதீரப் பார்க்கறேன்” என்றாள் வித்யா.

“இதோம்மா” என்று சொல்லி அன்றிரவே மகிழ்ச்சியாய் கிளம்பினான்  வரப்போகும் பூகம்பங்கள் தெரியாமல், உல்லாசமாய் காரில் பாடிக் கொண்டே ட்ரைவ் செய்தான் அஸ்வின்.




What’s your Reaction?
+1
7
+1
12
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!