Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-14 (நிறைவு )

14

ராஜய்யனும், பூமணியும் தயங்கித் தயங்கி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைய, அவர்கள் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நடந்து வந்தான் சரவணன்.

அவர்களோடு வந்தவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர் ஸ்டேஷனுக்குள் வராமல் வெளியிலேயே நின்றனர்.

இன்ஸ்பெக்டருக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த குமரேசன் மெல்லத் திரும்பிப் பார்த்தார்.  ராஜய்யன் மற்றும் பூமணிக்குப் பின்னால் தன் சரவணன் வருவதைக் கண்டதும்  ‘விருட்’டென எழுந்து, “சரவணா… என் தங்கமே!” என்றபடி அவனை நோக்கிச் செல்ல,

அவன் தன் முகத்தில் சந்தோஷத்திற்கு பதில் குழப்பத்தை வைத்துக் கொண்டு ஓரடி பின்னோக்கிச் சென்றான்.  அவன் கை அவனையுமறியாமல் பூமணியின் சேலையைக் கொத்தாகப் பற்றிக் கொண்டது.

“சரவணா…. அப்பாடா” என்றார் பாலு.

பாலுவின் முகத்தைப் புதிதாய்ப் பார்த்து, பூமணியின் முதுகிற்குப் பின்னால் நன்றாகவே மறைந்து கொண்டான்.

சரவணன் அருகில் சென்று அவனை குமரேசன் பலவந்தமாய்த் தூக்கி கொண்டு வந்து தன் நாற்காலியில் அமர்ந்து, தன் மடியில் வைத்துக் கொண்டார்.

மெல்லத் தலையைத் திருப்பி அருகில் அமர்ந்திருந்த சுமதியைப் பார்த்த அடுத்த கணம், குமரேசனின் மடியிலிருந்து தாவிக் குதித்து, ராஜய்யனிடம் வந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் சரவணன்.

 “என்ன சார் உங்க மகன்னு சொல்றீங்க!… அவன் உங்களைக் கண்டு பயந்து அந்தாளு கிட்டேயல்ல ஓடறான்?” இன்ஸ்பெக்டர் கேட்க,

 பாலு பதில் சொன்னார், “சார்… அது வந்து… இவங்க இவரோட ரெண்டாவது சம்சாரம்,… பயன் மூத்த சம்சாரத்து மகன்… அதனால புதுசா கல்யாணமாகி வந்த இவங்களுக்கு பிரைவஸி இல்லாம இருந்திருக்கு!… பையன் கொஞ்சம் டிஸ்டர்பன்ஸா தெரிஞ்சிருக்கான்!… அதனால அவங்க கொஞ்சம் ரஃப் அண்ச் டஃப்…ஆ நடந்திருக்காங்க!… பயல் வீட்டுல இருக்கப் பிடிக்காம வெளிய போயிட்டான்!… “என்று சொல்லி விட்டுத் திரும்பி ராஜய்யனையும், பூமணியையும் ஒரு பார்வை பார்த்து வீடு, “ஐ திங்க்… இவங்கதான் அவனைக் கடத்திக் கொண்டு வந்திட்டாங்க!”ன்னு நெனைக்கறேன்”




 

 அதைக் கேட்டு கோபமான ராஜய்யன், “யோவ்,.. “உங்க வீட்டு வழி சொல்லு கொண்டு போய் விடறேன்!… கொண்டு போய் விடறேன்”னு லட்சம் தடவை கேட்டுப் பார்த்திட்டேன்!… ம்ஹும்… பயம் அந்த வீட்டுப் பக்கமே போகக் கூடாதுங்கறதுல உறுதியா இருந்திருக்கான்!… அம்மா சேலையை கட்டிப் பிடிச்சுக்கிட்டுத் தூங்கற பயலை டார்ச்சர் பண்றதுக்காகவே அவனோட அம்மா சேலை மொத்தத்தையும் தூக்கி எங்கிட்டப் போட்டுட்டீங்க!… அதனால் பயல் அந்த வாசத்தைப் பிடிச்சுக்கிட்டு என் பின்னாடியே வந்திட்டான்!… இப்ப இங்க வந்து எங்க எல்லோர் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவனாயிட்டான்!… அதான் உங்களைப் பார்த்து மிரளறான்… என்கிட்டே வந்து ஒளியறான்”

அப்போதுதான் அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட குமரேசன், “ஏண்டி மொத்தப் பொடவைகளையும் தூக்கி… குடுகுடுப்பைக்காரனுக்கா போட்டே?… என்கிட்ட பாத்திரக்காரனுக்குப் போட்டேன்!னு மொதல்ல பொய் சொன்னே?… அதுக்கப்புறம் தீ வெச்சுக் கொளுத்திட்டேன்!”னு சொன்னே!… எல்லாமே பொய்யா?” கோபமாய்க் கேட்டார்.

சுமதி தலை குனிய,

“ஹும்… உன்னால என் மகனே என்னைத் தூக்கி வீசுற நெலமைக்கு வந்திட்டேன்!… இதுக்கு மேலேயும் உன்னை எதுக்குடி நான் என் கூட வெச்சிருக்கணும்!” குமரேசன் குரலை உயர்த்தியது,

 “ச்சூ…. இதென்ன போலீஸ் ஸ்டேஷனா இல்லை சந்தைக்கடையா?… நீங்க உங்க சண்டையையெல்லாம் கோயமுத்தூருக்குப் போய் உங்க வீட்டுல வெச்சுக்கங்க!… மொதல்ல பிரச்சினைக்கு வாங்க!… பையனைக் கூட்டிக்கிட்டுப் போறீங்களா?.. சொல்லுங்க அதுக்கான பேப்பர்ஸ் நான் ரெடிபண்ணனும்!…  “சும்மா…ம்ம்ம்…சரி கூட்டிட்டுப் போங்க”ன்னு சொல்லு வெறுமனே அனுப்ப முடியாது” இன்ஸ்பெக்டர் கத்தினார்.

 சரிங்க இன்ஸ்பெக்டர்… நாங்க சரவணனை எங்க கூட கூட்டிட்டுப் போறோம்!… எத்தனை பேப்பர்ஸ்ல கையெழுத்துப் போடணும்… குடுங்க போடறேன்” குமரேசனும் சற்றும் உரத்த குரலில் பேச,

ராஜய்யன் முகம் சுண்டிப் போனது.

பூமணி கண் கலங்கியே விட்டாள்.

வெளியில் காத்திருந்த மூக்கையன், “நம்ம சரவணனைக் கூட்டிக்கிட்டுப் போறாங்களாம்” என்று அறிவிப்பாய்ச் சொல்ல,

 “வேண்டாம்… வேண்டாம்” எல்லோரும் கோரஸாய்க் கத்தினர்.

அதைக் கண்டு கோபமான இன்ஸ்பெக்டர், ராஜய்யனைப் பார்த்து, “என்னய்யா… ஆளுங்களைத் தயார் பண்ணிக் கூட்டிட்டு வந்திருக்கியா?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டார்.

 “அய்யய்யோ சார்… அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க சார்!.. பையன் இத்தனை நாளு எங்க கூட இருந்ததில் அவங்க எல்லோரும் பையன் மேலே பாசமாயிட்டாங்க சார்!… அதனாலதான் வேண்டாம்னு சொல்றாங்க சார்!…” ராசய்யன் சமாளித்தான்.  உண்மையில் அவனுக்கே சரவணனை அனுப்ப மனமில்லைதான்.  ஆனாலும், பெத்தவங்க வந்து கூட்டிட்டுப் போறேன் என்கிற போத தடுக்கவா முடியும் அவனால்?.

 அப்போது சன்னமாய் அந்த குரல் ஒலிக்க எல்லோரும் அமைதியாகினர்.

 “நான் அவங்க கூட போக மாட்டேன்!… இங்கியே இவங்க கூட இருக்கேன்” சரவணன் ஆணித்தரமாய்ச் சொல்ல,

பூமணி வாய் விட்டே அழுது விட்டாள். ‘’ராசா… என் தங்கமே”

ராசய்யனுக்குள் ஒரு சந்தோச மின்னல் உடம்பின் எல்லாப் பகுதியிலும் ஓடி மறைந்தது.

மூக்கையன் அதையும் அறிவித்தான்.

கூட்டம் “ஹேய்ய்ய்ய்ய்ய்” என்று கூவியது.

இன்ஸ்பெக்டர் குழப்பமானார்.  “என்னங்க… உங்க பையனே உங்க கூட வரலேங்கறான்!”

 “சார்… இது ஏதோ சதி!.,.. இவங்கெல்லாம் பையன் மனசைக் கெடுத்து அப்படிச் சொல்லச் சொல்லியிருக்காங்க” என்ற குமரேசன் சரவணன் பக்கம் திரும்பி, “ராசா அப்பா வேண்டாமாடா?” தழுதழுத்த குரலில் கேட்டார்.

தன் சித்தியை ஓரப் பார்வை பார்த்து விட்டு, இட, வலமாய்த் தலையாட்டினான்.

 “சித்தி ஒண்ணும் சொல்ல மாட்டாங்க!… நான் பார்த்துக்கறேன் நீ வா” கெஞ்சினார் குமரேசன்.

 பாலுவும் எழுந்து வந்து சரவணன் அருகில் நின்று, குனிந்து, “என்னப்பா… நீ காணோம்!ன்னதும் உங்கப்பா எத்தனை துடிச்சுப் போனார் தெரியுமா?… நீ கிளம்பி வா… நான் பார்த்துக்கறேன் உன்னை” அவன் மனதை மாற்ற முயற்சித்தார்.

சட்டென்று தன் குரலைப் பெரிதாக்கிக் கொண்டு, “எனக்கு அங்க வரப் பிடிக்கலை!… அங்க எங்கம்மா இல்லை… இங்கதான் என் அம்மா இருக்காங்க!…” என்றபடி பூமணி அருகே போய் அவள் சேலையைப் பிடித்துக் கொண்டான்.

அவனை வாரியணைத்துக் கொண்டு குலுங்கினாள் பூமணி.




ராஜய்யன் தலையைக் குனிந்து கொண்டு விம்மினான்.

சில நிமிடங்கள் அங்கு அவஸ்தையான அமைதி நிலவ, இன்ஸ்பெக்டர் அந்த அமைதியைக் குலைத்தார்.   “பயல் வரமாட்டேன்னு சொன்ன பின்னாடி என்னால் பயலை உங்க கூட அனுப்ப முடியாதுங்க!… நான் கோயமுத்தூர் கண்ட்ரோல் ரூமுக்கு இந்த விஷயத்தைச் சொல்லிக்கறேன்!… நீங்க கிளம்புங்க” என்றார் குமரேசனையும், அவனுடன் வந்தவர்களையும்.

 “அதெப்படி சார்?… இவன் எங்க மகன்!… யாரோ எடுத்து வெச்சுக்கிட்டு தர மாட்டேன்னு சொன்னா… நாங்க சரின்னு கேட்டுக்கிட்டுப் போயிடணுமா?…” குமரேசன் கோபமாய்ச் சொல்ல,

 “ம்ம்ம்… ஒண்ணு செய்யுங்க!… இதோ இந்த ஊர் மக்கள் மேலே குறிப்பா இந்த ராஜய்யன் மேலேயும்… அவனோட அக்கா மேலேயும் ஒரு புகார் குடுங்க!… பிரச்சினை கேஸ் ஆகட்டும்!… கோர்ட்டு இதுக்கொரு முடிவைச் சொல்லட்டும்”

அடுத்த நிமிடமே, அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் ஒரு வெள்ளைத் தாள் வாங்கி,  “மள… மள”வென்று தனது புகாரினை எழுதினார் குமரேசன்.

அதை வாங்கிப் படித்த இன்ஸ்பெக்டர், “போதும் … இதை வெச்சு நான் இவங்க மேலே எஃப்.ஐ.ஆர்.போடறேன்… அதுக்கப்புறம் கோர்ட்டு.… கேசு…ன்னு அலையுங்க!… ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் மிஸ்டர்.குமரேசன்… கோர்ட்டுல அந்த நீதிபதியே… இந்தப் பையனை உங்க கூட அனுப்பச் சொல்லி தீர்ர்புச் சொன்னாலும், பயல் அடுத்த நாளே வீட்டை விட்டு வெளியேறி இவங்க கூட வந்து சேர்ந்திருவான்!…” என்றார்.

 “சார்… என்ன சார் சொல்றீங்க?” குமரேசன் அச்சமாய்க் கேட்க,

 “நான் சொல்றேன் சார்!” என்று இடையில் புகுந்த ராஜய்யன், “சார்… திங்குற சாப்பாட்டால்தான் மனிதன் உயிர் வாழ்றான்!ன்னா… எந்த மனுஷனுமே செத்திருக்கக் கூடாது… ஏன்னா எல்லோருமே தெனமும் மூணு வேளை சாப்பிடறாங்க!… அதே மாதிரி சுவாசிக்கற காத்துலனாலதான் மனிதன் உயிர் வாழ்றான்!ன்னா… இங்க எவனுமே செத்திருக்கக்கூடது… ஏன்னா சுவாசிக்காதவன் எவனுமேயில்லை!… ஆக மனுஷன் உயிர் வாழ ஏதோ ஒரு ரகசியத்தை அந்த ஆண்டவன் வெச்சிருக்கான்… அது என்ன தெரியுமா?…  “அன்பு”… அது இல்லாததால் தான் இந்தப் பையன் தன் வீட்டிலிருந்து ஓடி வந்தான்!… அது எங்க கிட்டே இருந்ததினால் தான் எங்களை விட்டுப் போக மாட்டேன்!னு சொல்றான்!… இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட புரிஞ்சுக்க முடியாத நீங்கெல்லாம் படிச்சவங்களா?… பட்டணத்து நாகரீகவாசிகளா?… இல்லவே இல்லை… சரியான காட்டுவாசிகள்!“ தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான்.

பூமணியும் தன் பங்கிற்குப் பேசினாள்.  “எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும்!… அது போலத்தான் சில உறவுகள் எவ்வளவு அன்பாக நடித்தாலும் ஏதோவொரு விதத்தில் காயப்படுத்தியே தீருவார்கள்… இதோ இந்த சித்திக்காரி மாதிரி”

 “சரி… சரி… ஆளாளுக்குப் பேசிட்டு இருக்க வேண்டாம்!… சார் கம்ப்ளைண்ட் எழுதிக் குடுத்திட்டார்… மேற்கொண்டு செய்ய வேண்டியதை நான் பார்த்துக்கறேன்!… நீங்கெல்லாம் கிளம்புங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

“சார்… சரவணன்…?” ராஜய்யன் சந்தேகமாய் இழுக்க,

“நீங்கதான் கூட்டிட்டுப் போகணும்… அதிலென்ன சந்தேகம்?”

ராஜய்யனும், பூமணியும் சரவணனை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வர, காத்திருந்த மக்கள் “ஹேய்ய்ய்ய்ய்ய்” எனக் கூச்சலிட்டு தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொள்ள,

 தொங்கிப் போன முகத்துடன் வெளியே வந்து, காத்திருந்த ஆட்டோவில் ஏறியமர்ந்தனர் குமரேசனும், சுமதியும், பாலுவும்.

 “சில காலம் பழகினாலும் சிலரை விலகத் தோணுவதில்லை… பல காலம் பழகினாலும் பலரை நெருங்கத் தோணுவதில்லை” ஆட்டோவின் எழுதப்பட்டிருந்த வாசகத்தை சரவணன் மட்டும் படித்தான். 

(முற்றும்)




What’s your Reaction?
+1
11
+1
8
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!