Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-10

10

உடையையும்‌ உடல்‌ மொழியையும்‌ வைத்து கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம்‌ அது ராஜராஜன்தான்‌ என்று கணித்திருந்தாள்‌ செம்பருத்தி. அவனுக்கு கல்யாணம்‌ ஆனதுகூட பொய்‌ தகவலாய்‌ இருக்கக்‌ கூடாதா? என்றெண்ணியது அவளின்‌ பேதை மனம்‌. அப்படித்தான்‌ இருக்கும்‌ என்று எண்ணிக்கொண்டு அவன்‌ முகத்தை ஏறிட்டபோது, அவளின்‌ முகம் மாறிப்போனது. அதே உயரம்‌ அதே நிறம்‌ ஆனால்‌ இவன்‌ அவனில்லை அவனுக்கென்று ஒரு தனி கம்பீரம்‌ இருக்கும்‌.

ஏமாற்றத்தோடு திரும்பி அறைக்குள்‌ வந்தவள்‌ உடைகளை களைந்து வேறு உடைக்கும்‌ மாறி, அலங்காரத்தையும்,‌ ஒப்பனையையும் கலைத்து விட்டு படுக்கையில்‌ சாய்ந்தாள்‌. என்ன இது யாரைப்‌ பார்த்தாலும்‌ அவனுடைய முகம்‌ போலவே தோன்றுதே?

திறந்திருந்த அறைக்‌ கதவை தட்டி விட்டு அப்பா அம்மா இருவரும்‌ உள்ளே வந்தார்கள்‌.

“செம்பருத்தி அந்த மாப்பிள்ளை பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிடுச்சாம், அவங்க வீட்ல இருக்குறவங்க அத்தனை பேருக்கும்‌ உன்னை பிடிச்சிடிச்சுன்னு சொன்னாங்க அடுத்த வாரத்தில்‌ நிச்சயதார்த்தம் வைப்பதென்று பேசி முடிவு பண்ணியிருக்கோம்‌…” என்றார்‌ விநாயகம்‌.

“அப்புறம்‌ மாப்பிள்ளை உன்னுடைய போன்‌ நம்பரை கேட்டு வாங்கிட்டு போயிருக்கார்‌. அனேகமா இரண்டு நாளில்‌ உனக்கு கால்‌ பண்ணுவாருன்னு நினைகிறேன்‌. உனக்கு சொல்லணும்னு அவசியம்‌ இல்ல தைரியமான பொண்ணுதான்‌ இருந்தாலும்‌ பார்த்து பக்குவமா பேசு…” என்றாள்‌ தேவகி.




அவர்களை பொறுத்தவரை இந்த வரனை விட்டுடக்கூடாது என்பதில் உறுதியோடு இருப்பதாய்‌ தோன்றியது. எது எப்படி இருந்தாலும்‌ என்‌ மனசுக்குள்‌ மறைத்து வைத்திருக்கும்‌ அந்த காதல்‌ கதையை இளமாறனிடம்‌ சொல்லி விட வேண்டும்‌. எனக்கும்‌ ராஜாவுக்கும்‌ உண்டான காதல்‌ விஷயம்‌ அவனுக்கு கண்டிப்பாக தெரியவேண்டும்‌ என்பதில்‌ தெளிவாக இருந்தாள்‌.

அடுத்த நாள்‌ முழுவதும்‌ இளமாறனிடமிருந்து எந்த போனும்‌ வரவில்லை. ஆனால்‌ அதற்கும்‌ மறுநாள்‌ கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது ஏதோ புது நம்பரில்‌ இருந்து கால்‌ வந்தது. போனை எடுத்து, ஹலோ…” என்று இவள்‌ சொன்ன மறுநிமிடம்,‌

“நா…நான்‌ இளமாறன்‌ பேசுறேன்‌. நீ நீங்க செம்பருத்தி தானே?“ஆ…ஆமாம்‌…சொல்லுங்க?

“இந்த நம்பர்‌ உங்க அப்பா கொடுத்தார்‌…” என்றான்‌ குரலில்‌ தடுமாற்றம் தெரிந்தது.

“ஆமா…அப்பா  சொன்னார்‌…” அவனாக பேசட்டும்‌ என்று சற்று நேரம்‌ காத்திருந்தாள்‌.

“உங்க கிட்ட பேசணும்‌…”

“இப்பதான்‌ காலேஜ்‌ முடிஞ்சு வந்துகிட்டு இருக்கேன்‌…”

“தெரியும்‌… எல்லோகலர்‌ சுடிதார்தானே?”

“எப்படி…?” சுற்றிலும்‌ பார்வையை சுழற்றினாள்‌.

“பஸ்‌ ஸ்டாண்டு கிட்ட நிக்கிறீங்க…?” என்றான்‌.

பட்டென்று குழம்பிப்‌ போனாள்‌ எங்கிருந்து நம்மை பார்த்துக்‌ கொண்டிருக்கான்‌ என்று மீண்டும்‌ ஒரு முறை பார்வையை சுழல விட்டாள்‌.

“உங்களுக்கு ஆப்போஸிட்‌ சைடில்‌ ஒயிட்‌ ஷிப்ட்‌ காரில்‌ இருக்கிறேன்‌.” 

“நான்‌ எங்க வரணும்‌…” என்றாள்‌ சிறு கோபத்துடன்‌ காருக்குள் உட்கார்ந்துகொண்டு கலாய்கிறானா?

“நீங்க அங்கேயே இருங்க நான்‌ வரேன்‌…”

சரி…”

அவன்‌ காரை அவள்‌ அருகில்‌ வந்து நிறுத்தினான்‌. பின்பக்க டோரை திறந்து ஏறிக்கொண்டாள்‌.

இருவரும்‌ எதுவும்‌ பேசிக்கொள்ளவில்லை. சுமார்‌ ஐந்து நிமிடத்திற்கு பிறகு ஒரு ரெஸ்டாரென்ட்‌ அருகில்‌ வந்து நிறுத்தினான்‌. இருவரும்‌ இறங்கி உள்ளே சென்றார்கள்‌.

அங்கே பணிபுரியும்‌ ஓரிரு பணியாட்கள்‌ இவனுக்கு வணக்கம்‌ சொன்னார்கள்‌. இவனும்‌ அவர்களை பார்த்து சிநேகிதமாய்‌ சிரித்தான்‌. அடிக்கடி இங்கே வருவான்போல என்று எண்ணினாள்‌. இவளை அங்கேயே நிறுத்திவிட்டு பில்போடும்‌ இடத்திற்கு சென்றவன்‌ அங்கிருந்தவனிடம்‌ சிரித்து பேசிவிட்டு திரும்ப வந்து இவளை அழைத்துக்கொண்டு லிப்டுக்கு அருகில்‌ வந்தான்‌.

“செகென்ட்‌ ஃபுளோர்‌ ஃபிரியா இருக்கும்‌ அங்க போய்‌ பேசலாம்‌ என்றான்‌. செகென்ட்‌ புளோர்‌ பாதிக்குமேல்‌ பூசெடிகளை நிரப்பிக்கொண்டு கண்ணுக்கு குளிர்ச்சியாய்‌ இருந்தது.

“இங்க உட்கார்ந்து பேசலாமா?” என்றான்‌ இவள்‌ சம்மதமாய்‌ தலையை அசைத்தாள்‌. இவனிடம்‌ இப்போதே பேசிவிட வேண்டும்‌ என்ற தீர்மானத்தோடு இருந்தாள்‌.

இருவரும்‌ எதிர்‌ எதிர்‌ இருக்கையில்‌ அமர்ந்தார்கள்‌ அங்கே ஆட்களின் நடமாட்டம்‌ குறைவாகவும்‌ அமைதியாகவும்‌ இருந்தது.

“நான்‌ இளமாறன்‌ எங்க ஃபேமிலிய பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்‌. உங்க ஃபேரன்ட்ஸ்‌ சொல்லி இருப்பாங்கன்னு நினைகிறேன்‌. ஆனால்‌ நான்‌ என்னை பற்றின சில விஷயங்கள்‌ உங்ககிட்ட ஷேர் பண்ணனும்‌…” என்றான்‌.

“நானும்‌…யோசனையோடு அவள்‌ முகத்தை ஏறிட்டவன்‌ “ஓகே நீங்களே ஃபர்ஸ்ட்‌ சொல்லுங்க?” என்றான்‌.

“இல்ல நீங்க சொல்லுங்க அப்புறம்‌ நான்‌ சொல்றேன்‌…”

சற்றுநேர யோசனைக்கு பின்‌,

“ம்ம்‌… நான்‌ ஒரு பெண்ணை ஸ்கூல்‌ டேஸ்ல இருந்து லவ்‌ பண்ணினேன்…” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை ஏறிட்டான். அவள் அமைதியாக இருந்தாள். ஒரு சில நொடிக்கு பிறகு மீண்டும் பேச்சை தொடர்ந்தான்.

“ஆனால்‌ லவ்‌ பிரேக்கப்‌ ஆயிடுச்சு… அவள்‌ வேறொரு பையனை கல்யாணம்‌ பண்ணிக்கிட்டு வெளிநாட்டிற்கு போயிட்டாள்‌. இந்த விஷயம்‌ எங்க வீட்ல எல்லாருக்கும்‌ தெரியும்‌ இதை உங்ககிட்ட மறைக்க கூடாதுன்னு தான்‌ ஷேர் பண்ணினேன்‌. நீங்க என்ன சொல்லணும்‌ அத சொல்லுங்க…?”

ஒரு நிமிடம்‌ யோசித்தாள்‌ இவனிடம்‌ சொல்லலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. காரணம்‌ ஒருதலை காதல்‌ என்று மாறிப்போன தன்னுடைய காதலை சொன்னால்‌ அவனுடைய மனநிலை எப்படி இருக்கும் இவள்தான்‌ காதலித்திருக்கிறாள்‌ அவன்‌ இவளை கழட்டி விட்டு சென்று விட்டான்‌ என்று நினைக்கலாம்‌. அல்லது முதல்‌ பார்வையிலேயே காதல் வந்தது என்று சொன்னால்‌ முன்னே பின்னே பழகாத ஒருவர்‌ மேல்‌ காதல் கத்தரிக்காய்‌ என்று கதை விடுறாளோ? என கீழ்த்தரமாக கூட எண்ணலாம்‌. முதல்‌ சந்திப்பில்‌ இதை பகிர்ந்து கொள்ள வேண்டாம்‌. அடுத்த முறை சந்திக்கும்போது இந்த விஷயத்தை பற்றி சொல்லுவோம்‌ என்று முடிவுக்கு வந்தாள்‌.

“நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே?” என்று திரும்பவும்‌ அவளிடம்‌ கேட்டான்‌. “இல்ல என்னுடைய ஃபேமிலி பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்‌. உங்க அளவுக்கு எங்ககிட்ட வசதியில்லை…பின்னாடி ஏதாவது பிரச்சனை வருமோ என்று அது சம்மந்தமா இப்போதே பேசிவிடுவது நல்லதுன்னு தோணிச்சு…”என்று எதையோ பேச நினைச்சு எதையோ உளறினாள்‌.

செம்பருத்தி பேசியது அவனுக்கு திருப்திகரமா இல்லை. சற்றுநேரம் அமைதிகாத்தவன்‌ லேசாக தொண்டையை கனைத்துக்கொண்டு பேச தொடங்கினான்‌.




“வசதி என்னங்க பெரிய வசதி நாம்‌ நெனச்சா எதை வேணாலும் சம்பாதிக்கலாம்‌ எப்படி வேணாலும்‌ சம்பாதிக்கலாம்‌. பணம்‌ ஒரு பிரதானமாய்‌ என்னைக்கும்‌ நான்‌ நெனச்சதேயில்லை. என்ன புரிஞ்சுகிட்டு எங்க ஃபேமிலியோட உங்களால ஒத்துப்‌ போக முடியுமான்னு கேட்கத்தான் உங்கள இங்கே கூப்பிட்டேன்‌. உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா இப்பவே ஓபனா சொல்லிடுங்க? எனக்குதான்‌ உங்களை பிடிக்கவில்லை என்று மாற்றி சொல்லி இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்திடுறேன்‌.” என்றான்‌.

அப்படி பட்டென்று சொல்ல இவளுக்கு மனதில்லை உண்மையை பேசுவது ஒரு தவறா? அவன்‌ மனசுல இருக்குற எல்லாத்தையும்‌ கொட்டிட்டான்‌. விம்பாய்‌ இருக்கிற அளவுக்கு என்கிட்ட எந்த பிடிமானமும்‌ இல்லை. யாருக்காக நான்‌ காத்திருக்கணும்‌? நடுக்கடலில்‌ தத்தளிக்கும்‌ படகாய் காத்தடிக்கும்‌ திசையில்‌ சென்று கொண்டிருக்கிறேன்‌ நான்‌. இவனோடான இந்த வாழ்க்கை எனக்கு ஒரு பிடிமானதை தரும்‌ என்பதால்‌ சம்மதம் சொல்லி விடுவது என்ற முடிவுக்கு வந்தாள்‌.

“உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா எனக்கு ஒன்னும்‌ பிரச்சனை இல்ல ஓகேதான்‌…” என்ற மெல்லிய பெருமூச்சோடு சொல்லி முடித்தாள்‌.

அவன்‌ தனக்கு சம்மதம்‌ என்றான்‌ அதை கொண்டாடும்‌ வகையில் ஸ்விட்டோடு காபி வரவழைத்தான்‌. இருவரும்‌ காபியை குடித்துமுடித்தவுடன்‌, “சரி இங்கே ரொம்ப நேரம்‌ உட்கார்ந்து இருந்தா உங்களுக்குதான்‌ பிரச்சனை! இந்த ரெஸ்டாரென்ட்‌ காலேஜ்‌ பக்கத்துல இருக்கு ப்ரொபசர்‌ ஸ்டூடென்ட்‌ யாராவது இங்கே வரலாம்‌. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம்‌ முதலில்‌ இங்கிருந்து கிளம்பலாம்‌…” என்று பட்டென்று எழுந்தான்‌.

அக்கறையோடு அவன்‌ பேசிய விதம்‌ இவளுக்கு ஆறுதலாய்‌ இருந்தது. அதுமட்டுமல்லாமல்‌ இவளை தன்‌ காரில்‌ அவள்‌ வீட்டு தெரு முனைவரை அழைத்துவந்து விட்டுவிட்டு சென்றான்‌.

“சீக்கிரமா வந்துட்டீயே எப்படி வந்தே ஆட்டோவிலா? என்று கேட்ட அப்பாவிடம்‌ ‘ஆமாம்‌’ என்று முதல்‌ முறையாக பொய்‌ சொன்னாள்‌.




What’s your Reaction?
+1
24
+1
19
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!