Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-9

9

கடந்த இரண்டு நாட்களாய்‌ விட்டை சுத்தம்‌ செய்கிறேன்‌ என்ற பெயரில் இழுத்துப்‌ போட்டுக்‌ கொண்டு வேலை செய்ததில்‌ தேவகியின்‌ உடல் சோர்வாய்‌ இருந்தது.

விநாயகத்திற்கும்‌ இரண்டு நாட்களாய்‌ ஓய்வில்லை. பழைய சோபா டைனிங் டேபிள்‌ எல்லாவற்றையும்‌ தூக்கிப்போட்டுவிட்டு புதியதாய்‌ ஒரு செட்‌ வாங்கி போட்டார்‌. வாசலில்‌ புது வரவாய்‌ குரோட்டன்ஸ்‌ பூச்செடிகள்‌ என நர்சரியில்‌ இருந்து இறக்கினார்‌. மகள்கள்‌ இருவரையும்‌ வைத்துக்கொண்டு பூச்செடி தொட்டிகளை ஆங்காங்கே வைத்து அழகு படுத்தினார்‌.

வெளிப்புறத்திற்கு மட்டும்‌ பெயிண்ட்‌ பண்ண வேண்டும்‌ என்று ஆரம்பித்த வேலை ஹால்‌ வரை நீண்டு ஒரு வழியாக முற்றுப்பெற்றது.

மதியத்திற்கு மேல்‌ மகள்கள்‌ இருவரையும்‌ பியூட்டி பார்லர்‌ அனுப்பி வைத்துவிட்டு சமையல்‌ பாத்திரங்களை ஏற கட்டி, மீண்டும்‌ ஒருமுறை வீட்டை பெருக்கி துடைத்து சுத்தம்‌ பண்ணி வைத்தாள்‌ தேவகி.

மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்க வேண்டிய ஸ்விட்‌ பலகாரங்கள்‌ டைனிங் டேபிளில்‌ வீற்றிருந்தது.

சுமார்‌ நான்கு மணி வாக்கில்‌ பார்லரில்‌ இருந்து வந்த மகள்களுடன் மாலதியும்‌ அவள்‌ கணவரும்‌ வந்தார்கள்‌. அண்ணன்‌ மகளுக்கு அலங்காரம் பண்ணுகிறேன்‌ என்று செம்பருத்தியை அழைத்துக்‌ கொண்டு அறைக்குள் சென்றாள்‌ மாலதி.

அறை கதவை உட்புறமாக தாழிட்டு விட்டு திரும்பிய மாலதி,

“என்ன செம்பருத்தி? இந்த வரன்‌ வேணான்னு திட்டவட்டமாக சொல்லிட வேண்டியதுதானே? எதுக்கு சம்மதிச்சே?” என்று எரிச்சலுடன் கேட்டாள்‌.

“அத்த…முதல்ல அவங்க வரட்டும்‌ அதுக்கப்புறம்‌ பார்த்துக்கொள்ளலாம்‌…”

அத்தை கேட்பாள்‌ என்று முன்பே தீர்மானித்து வைத்திருந்த பதிலை பட்டென்று சொன்னாள்‌ செம்பருத்தி. 

“அதுக்கில்ல செம்பருத்தி நீதானே சொன்ன முன்னாடியே தடுத்துட்டோம்னா பொண்ணு பார்க்க வர மாட்டாங்கன்னு அப்புறம்‌ ஏன்‌ சம்மதிச்சேன்னு கேட்டேன்‌…” குரலில்‌ குழைவு தெரிந்தது.

அறை கதவை தட்டி விட்டு வாணி உள்ளே வந்தாள்‌.




“அத்தை அல்ரெடி ரொம்ப டைம்‌ ஆயிடுச்சாம்‌ அக்காவுக்கு சீக்கிரமா புடவை கட்டி விட சொன்னாங்க அம்மா…”

“இதோ… பத்து நிமிஷத்துல கட்டி கூட்டிட்டு வரேன்‌…” என்று வாணியை  அனுப்பிவிட்டு கதவை சாத்தினாள்‌ மாலதி. அதன்‌ பிறகு அவளாக எதுவும் கேட்கவில்லை இவளும்‌ மேற்கொண்டு எதுவும்‌ பேசாமல்‌ அமைதலோடு இருந்தாள்‌.

அறையை விட்டு ஹாலுக்கு வந்த மகளைப்‌ பார்த்து இரண்டு கைகளாலும் திருஷ்டி கழித்தாள்‌ தாய்‌.

“செம்பருத்திக்கு இந்த நிறம்‌ ரொம்ப எடுப்பா இருக்கு…!”என்று சொல்லும் போதே தேவகியின்‌ முகத்தில்‌ பூரிப்பு ஒளி வீசியது.

“அண்ணி செம்பருத்திக்கு… கழுத்துல காதுல போட நகை எடுத்துட்டு வாங்க…”

“இதோ ஒரு நிமிஷத்துல வரேன்‌” என்று இடப்புறம்‌ இருந்த அறையை நோக்கி சென்றவள்‌ கையில்‌ சிறு பெட்டியோடு திரும்பி வந்தாள்‌.

மெலிதாய்‌ இருந்த நெக்லஸையும்‌ தடிமனாக இருந்த இரண்டு வளையல்களையும்‌ மாலதி கையில்‌ கொடுத்து இதை செம்பருத்திக்கு போட்டு விடு என்றாள்‌.

“அண்ணி… ரொம்ப சிம்பிளா இருக்கு இந்த நகை. இருக்கிற நகை எல்லாம் எடுத்துட்டு வாங்க போட்டு உட்கார வைப்போம்‌.” 

“ஐயோ வேணா அத்தை எனக்கு நிறைய நகப்‌ போட்டுக்க எப்பவுமே பிடிக்காது. உடம்பு ரொம்ப வெயிட்டா இருக்குற மாதிரி தோணும்‌. இந்த ரெண்டும்‌ போதும்‌ ப்ளீஸ்‌… என்று செல்லமாக முகம்‌ சிணுக்கிய செம்பருத்தியை அதற்கு மேல்‌ கட்டாயப்படுத்த வேண்டாம்‌ என்ற முடிவுக்கு வந்தாள்‌ மாலதி.

“பொண்ணுன்னு இருந்தா பூ வெச்சா தானே நல்லா இருக்கும்‌ அக்காவுக்கு பூமட்டும்‌ மிஸ்ஸூங்‌..” என்றாள்‌ வாணி.

“பாத்தியா எல்லாத்தையும்‌ பார்த்து பார்த்து செஞ்சவளுக்கு பூ வைக்கணும்னு தோணலை பாரு…” என்ற மாலதி,

“அண்ணி பூ எங்க வச்சிருக்கீங்க பிரிட்ஜ்ல இருக்கா?”

“இதோ இங்க இருக்கு அத்தை நான்தான்‌ காட்டினேன்‌ நல்லா இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே பாலித்தீன்‌ கவருக்குள்‌ இருந்த பூப்பந்தை அத்தையிடம்‌ நீட்டினாள்‌ வாணி.

அடர்த்தியாக கட்டி வைத்திருந்த முல்லை மொட்டுக்களை எடுத்து செம்பருத்தி தலையில்‌ சூடினாள்‌ மாலதி.

“அக்கா இப்போ உன்ன பார்க்கும்போது எப்படி இருக்கு தெரியுமா? தேவதை மாதிரி இருக்கு…” என்று அக்காவை ரசித்தாள்‌ வாணி.

அப்போது பரபரப்பாக உள்ளே நுழைந்தார்‌ விநாயகம்‌.

“என்னம்மா எல்லாம்‌ ரெடியா செம்பருத்திக்கு அலங்காரம்‌ எல்லாம் முடிஞ்சிடுச்சா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, கிட்ட வந்துட்டாங்களாம்‌. இன்னும்‌ கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்னு சொல்லி இருக்காங்க…”

“அப்படியா சரி சரி மாலதி செம்பருத்திய ரூமுக்கு கூட்டிட்டு போ…”

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்‌ வாசலில்‌ கார்‌ வந்து நிற்கும்‌ சத்தம்‌ கேட்கவே வாணி பரபரப்போடு கதவறகே சென்றாள்‌. 

“நீ போகாத உள்ள போ அப்பா போய்‌ கூப்பிடுவார்‌.” என்றாள்‌ தேவகி.

“ஏம்மா மாப்பிள என்னை பார்த்துட்டு புடிச்சிருக்குன்னு என்னையே கட்டிப்பாறோன்னு பயமா இருக்கா?” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்‌கொண்டு இரண்டடி பின்னடைந்தாள்‌.

“போட்டேனா… பேச்சை பாரு வயசுக்கு மீறிய பேச்சு உள்ள போ…” என்று செல்லமாக மகளை கண்டித்து அனுப்பி விட்டு கணவரோடு வாசற்கதவு அருகே சென்று நின்றாள்‌ தேவகி.




காரை விட்டு இறங்கியவர்களை வாங்க வாங்க என்று கணவன்‌ மனைவி இருவரும்‌ இருகரம்‌ கூப்பி வரவேற்று வீட்டிற்குள்‌ அழைத்தார்கள்‌. மாப்பிள்ளை யார்‌ என்று பார்க்கும்‌ ஆர்வத்தில்‌ தேவகி கால்களை எக்கி பார்த்து முகம்‌ சோர்ந்தாள்‌.

“என்னங்க போட்டோல காட்டுன பையன்‌ மாதிரி யாருமே இல்லையே?. அவங்க ரெண்டு பேரும்‌ தங்கச்சியும்‌ தங்கச்சி விட்டுக்காரரா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்‌ மாப்பிள்ளை வரலீங்களா?” கணவர்‌ காதில்‌ கிசுகிசுதாள்‌.

விநாயகத்திற்கும்‌ அதே கேள்விதான்‌ ஏன்‌ மாப்பிள்ளை வரலை? என்று யோசனையோடு உடன்‌ வந்த உறவினர்‌ கண்ணனை கேள்வியோடு நோக்கிய போது இதை புரிந்து கொண்ட மணாளன்‌ சட்டென்று பதில்‌ சொன்னார்‌.

“நாங்க முன்னாடி வந்துட்டோங்க பையன்‌ அடுத்த கார்ல பின்னாடி வரான்‌…”என்றார்‌.

“ஓ…அப்படிங்களா! வரட்டும்‌ வரட்டும்‌ நீங்க வாங்க… என்று அவர்களை  அழைத்து சென்று சோபாவில்‌ அமர வைத்து விட்டு தங்கை மாலதியிடம்‌ தண்ணீர் கொடுக்க சொன்னார்‌. கண்ணாடி கிளாஸில்‌ தண்ணீர் எடுத்து வந்த மாலதியையும்‌ அருகில்‌ நின்றிருந்த கணவர்‌ பாபுவையும்‌ அறிமுகப்படுத்தி வைத்தார்‌. அவர்களும்‌ தங்கள்‌ குடும்பத்தாரை அறிமுகப்படுத்தினார்கள்‌.

காபி சாப்பிடலாமா என்று கேள்வி எழுப்பினார்‌ விநாயகம்‌.

“அதெல்லாம்‌ பையன்‌ வந்த உடனே பாத்துக்கலாம்‌. அம்மா நீங்களும் இப்படி உட்காருங்க. ஆமா உங்களுக்கு ரெண்டு பொண்ணுன்னு சொன்னாங்க இன்னொரு பொண்ணு என்ன படிக்கிறாங்க…?” என்றாள்‌ பார்வதி.

“இன்னொரு பொண்ணு பிளஸ்‌டூ படிக்கிறா மேக்ஸ்‌ குரூப்‌ எடுத்திருக்கா…”

மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல்‌ இரு தரப்பினரும்‌ அமைதி காக்க. “தம்பிக்கு இந்த வீட்டு லோகேஷனை‌ ஷேர்‌ பண்ணி இருக்கீங்களா?” என்றார்‌ கண்ணன்‌.

“அண்ண…கிட்ட வந்துடிச்சு நினைக்கிறேன்‌ இதோ அண்ணன்‌ தான்‌ கால்‌ பண்ணுது…” என்றவள்‌ “அண்ணா சொல்லுண்ணா எங்க இருக்க? என்று ஆர்வத்தோடு கேட்டவள்‌ மறுநிமிடம்‌ முகம்‌ மலர்ந்தாள்‌. “அண்ணா வீட்டு கிட்ட வந்திருச்சாம்‌. ஓகே இதோ வரேன்ணா…”

“இல்லம்மா நீங்க உட்காருங்க நான்‌ போய்‌ பாத்துட்டு வரேன்‌…” என்று மாலதியின்‌ கணவர்‌ சட்டென்று எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.செம்பருத்தியின்‌ அறையில்‌ இருந்தாள்‌ வாணி

“அக்கா மாப்பிள்ள இப்பதான்‌ வர்றாருன்னு நினைக்கிறேன்‌…” என்று ஜன்னல்‌

திரையை விலக்கிவிட்டு கண்களை ஜன்னல்‌ கம்பிக்குள்‌ நுழைத்து பார்த்தாள்‌. அப்போது காரை விட்டு முதலில்‌ இறங்கியவன்‌ சுற்றிலும்‌ ஒரு முறை பார்வையை சுழல விட்டான்‌.

அக்கா ரெண்டு பேரு நிக்கிறாங்க வெள்ளை சட்டை போட்டு இருப்பவர்‌ தான் மாப்பிள்ளன்னு நினைக்கிறேன்‌. மாப்ள ஸ்மார்ட்டா இருக்காரு என்று சொன்னபோது சற்று யோசனையுடன் ஜன்னல்‌ பக்கமாக திரும்பியவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அதே வெள்ளை சட்டை அதே உயரம்‌ அதே உடலமைப்பு ஆனால்‌ முகம்‌ தெரியாதபடி முதுகைக்காட்டிக்கொண்டு நின்றான்‌.

இவன்‌ எப்படி இங்கே…? இனி பார்க்கவே கூடாது…பார்க்க போவதேயில்லை  என்று நினைத்திருந்தவன்‌ என்‌ வீட்டு வாசலிலா? என்ன நடக்குது கடவுளே என்னோட கண்ணுக்கு ஏதாவது பிரச்சனையா? ஜயோ…அவனுடைய கல்யாண வாழ்க்கைவேறு குறுக்கே நிற்குதே ஆனாலும்‌ அவன்‌ என்‌ காதலன்தான்‌. என்‌ காதல்‌ உண்மையானது.

கடவுளே என்ன சோதனை இது. உடன்‌ வந்தவன்‌ வெள்ளை சட்டைக்காரரிடம்‌ ஏதோ சொல்ல அவன்‌ குலுங்கி குலுங்கி சிரிப்பது உடல் மொழியிலிருந்து புரிந்தது.

அந்த வரிவடிவான சிரிப்பு மனக் கண்முன்னால்‌ வந்து நிற்க, சே..தலையை உதறி சிந்தனையை மாற்றினாள்‌. தங்கை அருகில்‌ இருக்கிறாளே என்ற உணர்வு தட்டிய அடுத்த நொடியே இயல்பாக இருப்பது போல்‌ காட்டிக்‌ கொள்ள தீவிர முயற்ச்சியில்‌ இறங்கினாள்‌.

அக்காவின்‌ திடீர்‌ மாற்றத்தை பார்த்த வாணிக்கு சிரிப்பு பொத்துக்‌ கொண்டு வந்தது.

“அப்படின்னா உனக்கு மாப்பிள்ளையை ரொம்ப புடிச்சிருச்சுன்னு அர்த்தம்‌ அதானே? அப்பா அம்மா கிட்ட போய்‌ சொல்லிடவா?” என்று அவள்‌ அறை கதவருகே சென்ற போது,

“ஏய்‌ வாணி சும்மா இருக்க மாட்டியா இப்படியெல்லாம்‌ பேசக்கூடாது புரியுதா? என்‌ விஷயத்தை நான்‌ பாத்துக்குறேன்‌ நீ ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கணும்‌…” தங்கையை பொய்கோபத்தோடு  கண்டித்தாள்‌.

“சரி சரி நான்‌ வெளியில போறேன்‌ இங்க இருந்தா உன்ன பார்த்து எனக்கு பைத்தியம்‌ பிடிச்சிடும்‌ போலிருக்கு…”

என்று சொல்லி விட்டு லாவகமாக தன்‌ அறைக்கு நழுவினாள்‌ வாணி. இரண்டாவது நிமிடத்தில்‌ அறைக்குள்‌ வந்த அம்மா மகளின்‌ முகத்திலிருந்த பொலிவை கண்டு உச்சிமுகர்ந்தாள்‌.

“செம்பருத்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும்‌ வந்திருக்காங்க. மாலதி வந்து உன்னை கூட்டிட்டு வரும்போது எல்லாருக்கும்‌ வணக்கம் சொல்லணும்‌. அவங்க ஒக்காருன்னு சொன்னாலும்‌ அங்க உட்காராதே. பரவாயில்லன்னு சொல்லிட்டு அறைக்குள்‌ வந்துடனும்‌ என்ன நான் சொல்றது புரியுதா?”மகள்‌, தான்‌ சொன்னதை சட்டை பண்ணாதது போல்‌ தோன்றவே,

“சொல்றது புரியுதா இல்லையா”?

சற்று கோபமான தொணியில்‌ கேட்டாள்‌ தேவகி.

“புரியுதும்மா…நல்லா புரியுது…”

அடுத்த இரண்டாவது நிமிடம்‌ மாலதி வந்து இவளை அழைத்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்‌. அனைவரது பார்வையும்‌ செம்பருத்தியிடமிருந்தது. ஆனால்‌ அவளின்‌ தேடுதல்‌ வந்திருக்கும்‌ நபர்‌ ராஜாவா இல்லையா? என்பதில்‌ இருந்தது. பட்டுப்புடவை சரசரக்க காபி தட்டை கையில் ஏந்திக்கொண்டு ஒவ்வொரிடத்திலும்‌ கொடுக்கும்போது அன்று ராஜராஜன்‌ பேசியது நினைவுக்கு வந்தது. செண்பா… உன்னை ஒரு முறையாவது தழைய தழைய கட்டிய பட்டுப்புடவையும்‌, தலைநிறைய மல்லிகைபூவுமாய்‌ பார்க்க வேண்டும்‌. என்று சொன்னான்‌.

“செம்பருத்தி வெள்ளை சட்டை போட்டிருக்கிறவர்தான்‌ மாப்பிளை..பக்கத்தில்‌ இருப்பது அவருடைய பிரண்ட்‌ சுப்பு..”என்று கண்ணன்  அறிமுகப்படுத்த அந்த நேரம்‌ பார்த்து காஃபியை எடுக்க அவன்‌ கைநீட்ட தலையை உயர்த்தி பார்த்தவளுக்கு நெற்றிசுருங்கியது.

“இளமாறா பொண்ணை நல்லா பார்த்துக்கோ…” என்று அவன்‌ அம்மா சொன்னாள்‌.

இளமாறன்‌ தலையை உயர்த்தி பார்த்துவிட்டு பார்வையை விலக்கினான்‌.

“மாலதி…செம்பருத்தியை உள்ளே கூட்டிட்டு போ…” இது விநாயகம்‌.

“என்ன இளமாறன்‌ பார்த்தீங்களா? பொண்ணு பிடிச்சிருக்கா?” திவ்யாவின் கணவன்‌ கோபி இளமாறனின்‌ காதில்‌ கிசுகிசுத்தான்‌.




மொத்த பார்வையும்‌ இளமாறன்‌ மேல்‌ இருந்தது. அவன்‌ சொல்லப்போகும்‌ பதிலுக்காய்‌ காத்திருந்தார்கள்‌.அவனிடம்‌ பதில்‌ இல்லாமல்‌ போகவே,

“என்னப்பா உன்‌ ஃபிரண்டு என்ன சொல்றான்‌?” மணாளனின்‌ குரலுக்கு தலையை உயர்த்திய இளமாறன்‌ அருகில்‌ அமர்ந்திருந்த நண்பனின்‌ பக்கம்‌ சாய்ந்து அமர்ந்தான்‌.

“ஒரு நிமிஷம்‌ இருங்க கேட்டு சொல்றேன்‌…”என்ற சுப்பு இளமாறனை அழைத்துக்கொண்டு வாசலுக்கு சென்றான்‌. 




What’s your Reaction?
+1
23
+1
17
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!