Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-8

8

திவ்யா கணவரோடு அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்‌. மகள்‌ திடீரென்று வரவும்‌ என்ன ஏதென்று பதறிப்‌ போனாள்‌ பார்வதி.

“அம்மா…அ…௮ண்ணனோட கல்யாண விஷயம்‌ என்னன்னு இவர்‌ என்னை தொளைச்சி எடுக்கிறார்‌. வயசு ஏறிக்கொண்டே போகுதே இப்படியே விட்டுட்டா நல்லாவா இருக்கும்னு கேட்கிறார்‌. அதான்‌ நீங்களே நேரில்‌ வந்து பேசுங்கன்னு கூட்டிட்டு வந்தேன்‌”. பார்வதியின்‌ முகம்‌ சோர்ந்து போனது.

“என்ன செய்யறது திவ்யா நானும்‌ உங்க அப்பாவும்‌ எவ்வளவோ சொல்லி பார்த்துட்டோம்‌ கேட்டா தானே? கல்யாணமே வேணாம்‌ பொண்ணு பார்க்க வர மாட்டேன்னு பிடிவாதமா இருக்கான்‌. நாங்க பொண்ணோட ஜாதகத்தை பாத்துட்டோம்‌. ஒன்பது பொருத்தம்‌ இருக்கு…இந்த மாதிரி வேற ஜாதகம் அமையுறது சந்தேகம்‌ தான்‌”.  

“அத்தை இந்த வரணையே முடிச்சிடலாம்‌ கவலைப்படாதீங்க, இளமாறன் கிட்ட நான்‌ பேசுறேன்‌…” என்று சொல்லிவிட்டு இளமாறனின்‌ அறையை நோக்கி சென்றான்‌ கோபி.

அரை மணி நேரத்துக்கு பிறகு காபி எடுத்துக்கொண்டு அண்ணனுடைய அறைக்கு சென்ற திவ்யாவுக்கு பெரும்‌ ஷாக்‌. காரணம்‌ அண்ணன்‌ சொல்லிக் கொண்டிருந்த அந்த விஷயம்‌ அரைகுறையாக காதில்‌ விழுந்ததும் காபி கப்போடு வாசலிலேயே நின்று விட்டாள் திவ்யா‌.

“என்னுடைய மனைவி ஸ்தானத்துல அவளைத்‌ தவிர வேற யாரையும் நினைச்சு பார்க்க முடியல அத்தான்‌. வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அவ கூட நான்‌ மனசார வாழ்ந்துட்டேன்‌. இனிமே எனக்குன்னு வாழ்க்கை இல்லை. சாகுற வரைக்கும்‌ நான்‌ இப்படியே இருந்துடுறேன்‌. தயவுசெய்து  என்னை யாரும்‌ கட்டாயப்படுத்தாதீங்க?” என்று நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தான்‌ இளமாறன்‌.

“ஓகே இளமாறன்‌ நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா உங்களுக்குதான் அவங்க இல்லன்னு ஆயிடுச்சு ஏன்‌ திரும்பவும்‌ அதே நினைச்சுக்கிட்டு இருக்கணும்‌? யாருக்காகவும்‌ யாரோட வாழ்க்கையையும்‌ வீணாகக்‌ கூடாது. உங்களையே நம்பி இருக்கிற பெத்தவங்களோட நிலைமையை நினைச்சு பாருங்க? நீங்க நேசிச்ச பொண்ணு உங்களுக்கு கிடைக்கல அது கஷ்டமாதான்‌ இருக்கும்‌. அதுக்காக எத்தனை வருஷம்‌ அதேயே நினைச்சுகிட்டு இருப்பீங்க…? கிட்டத்தட்ட மூணு வருஷம்‌ ஆயிடுச்சு இன்னமோ அந்த பொண்ணையே நினைச்சிகிட்டு இருக்கிறதில என்னங்க பிரயோஜனம்‌?”.




 

வாசலில்‌ நிழலாட தலையை உயர்த்திப்‌ பார்த்தனர்,‌

“வா…திவ்யா…” என்றான்‌ இளமாறன்.  

காதில்‌ விழுந்ததாய்‌ காட்டிக்‌ கொள்ளாமல்‌ இருவருக்கும்‌ காபி கொடுத்தாள்.

“உங்க அண்ணன்‌ கிட்ட பேசிட்டேன்‌ அவர்‌ பெண்‌ பார்க்க வருவாரு கவலைப்பட வேண்டாம்‌. அத்த கண்கலங்கிட்டு நின்னாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ போய்‌ சொல்லு அண்ணா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாருன்னு…”

இருவரின்‌ பேச்சிலும்‌ பெரிய முரண்பாடு இருப்பதை உணர்ந்த திவ்யா குழப்பத்தோடு கணவனின்‌ முகத்தை ஏறிட்டாள்‌.

“அத்தான்‌ அது வந்து…”

“நீங்க எதுவும்‌ பேசாதீங்க இளமாறன்‌ எல்லாத்தையும்‌ நான்‌ பார்த்துக்கிறேன் நீ போம்மா திவ்யா.”

திவ்யா அறையை விட்டு வெளியேறும்‌ வரை இருவரும்‌ பேசிக் கொள்ளவில்லை. கணவனுக்கும்‌ அண்ணனுக்கும்‌ இடையில்‌ என்ன உரையாடல்‌ நடந்ததென்று தெரியாது. ஆனாலும்‌ வெளியில்‌ வரும்போது அவன்‌ முகம்‌ சோர்வோடூ இருந்தது. கணவர்‌ அண்ணனின்‌ கையை பற்றி கொண்டு வருவதை பார்த்து சற்று நிம்மதியடைந்தாள்‌ திவ்யா.

“அத்தை இளமாறனுக்கு வர புதன்கிழமை பொண்ணு பாக்க போறோம்‌. அந்த பொண்ண ஏற்கனவே போட்டோல பார்த்திருக்கோம்‌. ஜாதகமும் பொருந்தியிருக்கு. அப்புறம்‌ என்ன வர தையிலேயே கல்யாணத்தை முடித்து விடுவோம்‌.” என்றான்‌ தெளிவாக.

என்ன பேசியிருப்பான்‌ என்று தாயும்‌ மகளும்‌ ஒருவர்‌ முகத்தை ஒருவர் பார்த்துக்‌ கொண்டார்கள்‌. ஒரு விஷயம்‌ மட்டும்‌ ஆச்சரியமாகவே இருந்தது திவ்யாவுக்கு. கணவர்‌ சொன்ன கருத்தை மறுக்காமல்‌ அண்ணன் அமைதியாக நின்றது தான்‌ அது. 

அன்று மாலை வரை விட்டில்‌ இருந்து கறி விருந்து சாப்பிட்டு விட்டு கணவன்‌ மனைவி இருவரும்‌ கிளம்பும்‌ போது வெளியில்‌ சென்றிருந்த மணாளன்‌ வீட்டிற்கு வந்தார்‌.

“என்ன மாப்ள அதுக்குள்ள கிளம்பிட்டீங்க…?”

“ஒன்னும்‌ இல்ல மாமா வந்த விஷயம்‌ முடிஞ்சிடுச்சு. அதாவது பொண்ணு பாக்குற விஷயம்‌ ஓகே ஆயிடிச்சி. புதன்கிழமை நாம எல்லாரும்‌ போய் அந்த பொண்ண பார்த்துட்டு வந்துடலாம்‌. டைமிங்‌ என்னன்னு சொல்லுங்க அதுக்கு தகுந்த மாதிரி நான்‌ ஹாஸ்பிடல்ல பர்மிஷன்‌ கேட்டுட்டு வந்துடறேன்‌.” என்றான்‌.

தன்னாலும்‌ மனைவியாலும்‌ முடியாத விஷயத்தை மாப்பிள்ளை இவ்வளவு எளிதாக முடித்திருக்கிறாரே! என்று ஆச்சரியத்தோடு பார்த்தார்‌ மணாளன்‌.

இருவரையும்‌ அனுப்பி வைத்துவிட்டு அறைக்குள்‌ வந்து படுத்துக்கொண்டார்‌. என்ன நடக்குது பொண்டாட்டி முகத்துல தெளிவில்லை. மகன்‌ முகமும் நல்லா இல்லை. ஆனா பொண்ணு பாக்குற விஷயம்‌ ஓகே ஆயிடுச்சுன்னு மாப்பிள்ளை சொல்றார்‌. சரி நாம எதுக்கு தோண்டி துருவிக்கிட்டு? நடக்கிறது நடக்கட்டும்‌ என்று எண்ணியவர்‌ மனைவியை அழைத்து,

“என்னடி அவங்களுக்கு புதன்கிழமை நாம வர்ற விஷயத்தை சொல்லிடவா? இல்ல கண்ணன்‌ கிட்ட போன்‌ பண்ணி சொல்லவா?”

“நான்‌ கண்ணனுக்கு போன்‌ பண்ணி சொல்லிட்டேங்க..”

“அட இவ்வளவு பாஸ்ட்டா இருக்க? ஏதாவது ஒரு விஷயம்‌ சொன்னா மறந்துட்டேன்‌ அப்படி இப்படின்னு சொல்றவ, இப்போ என்ன முந்திக்கிட்டு சொல்லி இருக்க?”




“என்னுடைய கஷ்டத்தை புரிஞ்சுக்கோங்க எனக்கு போராட சக்தி இல்லை. என்‌ பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டு நான்‌ ஓய்வா இருக்கணும்னு நினைக்கிறேன்‌. இன்னு எத்தனை காலத்துக்கு நான் வாழ போறேன்‌.”மனைவியின்‌ பேச்சு இவரை கஷ்டப்படுத்தி இருக்க வேண்டும்‌.

“போதும்‌ போதும்‌ தேவையில்லாத விஷயத்தையெல்லாம்‌ பேசிக்கிட்டு இருக்காத, எல்லாம்‌ நல்லபடியா நடக்கும்‌ எதுக்கும்‌ நான்‌ ஒரு வார்த்தை பேசிடறேன்‌..” என்று விநாயகத்துக்கு கால்‌ பண்ணி புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு பெண்‌ பார்க்க வருகிறோம்‌ என்ற செய்தியை தெரியப்படுத்தினார்‌ மணாளன்‌.

சற்று நேரத்திற்குப்‌ பிறகு மகள்‌ திவ்யாவுக்கு கால்‌ பண்ணினாள்‌ பார்வதி.

“அம்மா சொல்லுங்கம்மா…”

“அது ஒன்னுமில்ல உன்‌ பக்கத்துல யாரு இருக்கா மாப்பிள்ளை இருக்காரா…?”

“இல்லம்மா அவர்‌ என்னை இறக்கிவிட்டுட்டு உடனே கிளினிக்‌ போயிட்டார்‌…”

“சரி அதான்‌ உன்கிட்ட ஒரு விஷயம்‌ கேட்கலாம்னு…?”

“சொல்லுமா…ஒன்னு இல்ல மாப்பிள இளமாறன்‌ கிட்ட என்ன பேசினார்‌.? அவனை எப்படி சம்மதிக்க வச்சாரு? எனக்கு மண்டையே பிச்சுக்கலாம் போல இருக்கு உடனே தெரிஞ்சுக்கணும்னு போன்‌ பண்ணினேன்‌”.

“அதுவா…அண்ணன்‌ சொன்னிச்சாம்‌ அந்த பொண்ண மறக்க முடியாது வேற கல்யாணம்‌ பண்ணிக்க முடியாதுன்னு. இவரு உடனே ஒரு ஷாக்‌ கொடுத்திருக்கார்‌. அதாவது எல்லாருக்கும் லைஃப்ல காதல்‌ வர்றது சகஜம்தான்‌. அதையே நெனச்சுக்கிட்டு இருந்தா நம்ம வாழ்க்கையை இழந்தது மட்டும்‌ இல்லாம இந்த வாழ்க்கை கொடுத்த பெத்தவங்களுக்கும்‌ கஷ்டத்தை கொடுத்துட்டு இருக்கோம்னு அர்த்தம்‌. நான் கூட காலேஜ்‌ படிக்கும்‌ போது ஒரு பொண்ண லவ்‌ பண்ணினேன்‌ அவங்க வேற மதத்தை சார்ந்தவங்க, எங்க வீட்ல ஒத்துக்கல அதனாலதான் வேணாம்னு விட்டுட்டு உன்‌ தங்கச்சியை கல்யாணம்‌ பண்ணிகிட்டேன்னு சொல்லி இருக்கார்‌…”

“ஐயையோ என்னடி நீ இவ்ளோ பெரிய விஷயத்தை? இவ்வளவு சாதாரணமா சொல்ற…?”

“இரு…கேளு…கேளு அவர்‌ இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லிட்டார்‌. ஒரு பெண்ணை லவ்‌ பண்ணியது இரண்டு தரப்பிலும்‌ பிரச்சனையானது. பெற்றோர்கள்‌ சம்மதிப்பாங்கன்னு நினைச்சோம் ஆனா ரெண்டு குடும்பத்திலும்‌ சம்மதம்‌ கிடைக்கல…அவங்களை கஷ்டப்படுத்தி நாமா நல்லா இருக்க முடியாதுன்னு சொல்லி ரெண்டு பேரும்‌ பிரிந்து விட்டதை சொன்னாரும்மா…”

“திவ்யா….”

“இதுல என்ன தப்பிருக்கு அவர்‌ உண்மையை சொல்லிட்டார்‌ நான்‌ அத  பெருசா எடுத்துக்கல…கல்யாணத்துக்கு முன்னாடி லவ்வு அது இதுன்னு இருக்கிறது சகஜம்தானே? அதுக்கப்புறம்‌ மனுஷன்‌ எப்படி இருக்காருன்னுதான்‌ பார்க்கணும்‌. இதெல்லாம்‌ பெருசா எடுத்துக்கிட்டு இருந்தா லைஃப்ல நிம்மதியா இருக்க முடியாதும்மா. இப்ப என்‌ புருஷன்‌ என்‌ சொல்லுக்கு கட்டுப்படுகிறார்‌. என்ன மகாராணி மாதிரி வச்சிருக்கார்‌ இதைவிட என்ன வேணும்‌ சொல்லு? நான்‌ அவருடைய பழைய வாழ்க்கை கிளறிக்கிட்டு இருந்தா இப்ப இருக்குற நிம்மதியும்‌ போயிடும்‌. எதுவா இருந்தாலும்‌ டேக் இட்‌ ஈசியா எடுத்துக்கணும்‌…”

மகள்‌ பேசியதை பிரமிப்புடன் கேட்டுக்‌ கொண்டிருந்தாள்‌ பார்வதி.

“அலோ,,,அம்மா லைன்ல இருக்கியா இல்லையா?”

“லைன்ல இருக்கேன்ம்மா… ஆனா உன்‌ அளவுக்கு பக்குவம்‌ எனக்கில்ல. நான்‌ இன்னமும்‌ பழைய காலத்துல இருக்கேன்னு எனக்கே தோணுது. எவ்வளவு திறமையா பேசுற! அதுவும்‌ உன்னை வெளி உலகம்‌ தெரியாம வளர்த்தேன்‌. இப்போ இந்த அளவுக்கு பக்குவமா இருக்குறத நினச்சா பூரிப்பா இருக்குடீ…மகளே! நீ எந்த சூழ்நிலையிலும்‌ நல்ல பொண்ணா இருப்பே! நல்ல மருமகள்னு பேர்‌ எடுப்பேன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. உண்மையிலேயே மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்‌. உன்‌ வீட்டுக்காரர்‌ மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்‌…” என்று அம்மா சொல்லவும்‌,

“சரி சரி…௮வர்‌ சொன்ன உடனே, அண்ணன்‌ ஒத்துகிச்சு! அந்த பொண்ணு பார்க்க வரேன்னும்‌ சொல்லிடிச்சு. ஏதாவது பிரச்சனை பண்ணினா உங்க தங்கச்சியை உங்க வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு..ஒரு வார்த்தை சொன்னாராம்‌ அதுல தான்‌ அண்ணா ஆடிப்‌ போயிருச்சாம்‌…என் தங்கச்சிக்காக இந்த விஷயத்துக்கு ஒத்துக்கிறேன்‌ சொன்னிச்சாம்‌. ஆனா எங்க அண்ணன்‌ பாவம்மா. அதுக்கு நினைச்ச வாழ்க்கை கிடைச்சிருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்‌… என்று கடைசியில்‌ மகள்‌ ஒரு சோக பெருமூச்சு விட தாய்க்கும்‌ அந்த சோகம்‌ தொற்றிக்கொண்டது.

“என்ன பண்ண சொல்றே? நம்ம கொடுத்து வச்சது அவ்வளவுதான்‌. சரி இந்த பொண்ணாலயாவது அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்‌. அவதான்‌ கல்யாணம்‌ பண்ணிக்கிட்டு நிம்மதியா செட்டில்‌ ஆயிட்டாளே?” என்று மனம்‌ சோர்ந்து சொன்னாள்‌ பார்வதி.




நான்கு நாட்கள்‌ உருண்டோடியது அன்று புதன்கிழமை பெண்‌ விட்டாரிடம் தாங்கள்‌ வருவதை மீண்டும்‌ ஒரு முறை உறுதிப்படுத்தி விட்டு அவர்கள் வீட்டின்‌ லோகேஷன்‌ அனுப்புமாறு சொன்னார்‌ மணாளன்‌.

“என்னங்க பொண்ணுக்கு பழம்‌ பூவெல்லாம்‌ வாங்கணும்‌ கொஞ்சம்  சீக்கிரமா கிளம்பி போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்‌…” என்றாள் பார்வதி.

“கொஞ்சம்‌ வெயிட்‌ பண்ணு திவ்யாவும்‌ மாப்பிள்ளையும்‌ வந்தவுடனே கிளம்பிடலாம்‌…” என்றார்‌.  

அவர்‌ சொல்லி வாய்‌ மூடவில்லை வாசலில்‌ கார் வந்து நின்றது. கோபி காரில்‌ இருக்க, திவ்யா மட்டும்‌ இறங்கி வந்தாள்‌.

“அப்பா…அம்மா…கிளம்பலாமா?”

“மாப்பிள்ளை கார்லேயே இருக்காரா?”

“ஆமாம்பா…அண்ணன்‌ எங்கே கிளம்பிடிச்சா இல்லையா?

“என்ன கேட்டா எனக்கெப்படி தெரியும்‌? சாப்பிட்டுட்டு ரூம்குள்ள போனவன்தான்‌ இன்னும்‌ ஆளையே காணல…போய்‌ கூப்பிட்டுட்டு வா…போ…”

“என்னங்க அவன்தான்‌ அப்பவே கிளம்பிட்டானே?

“கிளம்பிட்டானா…?”

“ஆமாங்க அவனுடைய ஃபிரண்டு வெளிநாடு போறானாம்‌ அவனை அனுப்பிட்டு பொண்ணு வீட்டுக்கு நேரா வரேன்னு சொல்லிட்டானே…”

“என்னடி நடக்குது? பொண்ணு பார்க்க போறது முக்கியமா? ஃபிரண்டு வெளிநாடு போறது முக்கியமா?

“அப்பா…டென்ஹன்‌ ஆகாதீங்கப்பா…௮ண்ணன்‌ சொன்னா சொன்ன நேரத்துக்கு கரைக்ட்டா வந்துடும்பா. நாம பூ பழமெல்லாம்‌ வாங்கிட்டு பொண்ணு விட்டுக்கு போறதுக்கு முன்னாடி அண்ணனுக்கு கால்‌ பண்ணுவோம்‌…”

“என்னமோ பண்ணுங்க…” என்றவரின்‌ முகத்தில்‌ கோபம்‌ மிச்சமிருந்தது.




What’s your Reaction?
+1
25
+1
17
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!