Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்-4

4

சக்தி இந்த வீதிக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னால் ……..

அன்வர் மிகவும் களைப்பாக இருந்தான். அவன்  உடலின் ஒட்டு மொத்த பலமும் விரையமானது போன்ற நிலைமை. கண்கள் மங்கலாகத் தெரிந்தன. தலை கிறுகிறுத்தது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. வண்டின் ரீங்காரம் போன்ற ஒரு ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

கைகளை தூக்க முயன்றான் முடியவில்லை. கால்களை அசைக்க முயன்றான்  இயலவில்லை. உடலை திருப்ப எத்தனித்தான் கடுகளவும் திரும்பவில்லை.

விழிகளை சுற்றுமுற்றும் சுழட்டினான்.  அவர்களின் வீடு முற்றிலும் அலங்கோலமாய் கிடந்தது. தந்தை இஸ்மாயில்  இயலாத ஒரு கோணத்தில் தலைவாசலில்  விழுந்து கிடந்தார். அவர் உடலில் உயிர் இருப்பதற்கான சாத்தியம் நிச்சயம் இல்லை. அண்ணன் சிக்கந்தர் வயிற்றில்  சொருகப்பட்ட  நீண்ட கத்தி முதுகு வழியாக வெளியேறி இருந்தது. அவனது முதுகுப்புறமாக வெளியேறிய கத்தி அலமாரியில் குத்திக்கொள்ள,  சுவரில் தொங்க விட்ட படம் போல் அப்படியே நின்றபடி இருந்தான். விரைத்த விழிகளுடன்   விழித்த அவனது பார்வை அன்வரை என்னவோ செய்தது.




“அம்மா….அம்மா நீ எங்கே இருக்கிறாய், நீ…..இருக்கிறாயா”? அந்த கேடு கெட்டவன் உன் தலையில் கட்டையால் அடித்தானே அருகில் இருந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே!..

இப்பொழுது வீல் என்ற அலறல் ஒலி இது அண்ணி சாய்ராபானு உடையது.  ஐயோ அவளை மறந்து போனேனே, அதனால்தான் அண்ணன் என்னை இப்படி வெறித்துப் பார்க்கிறானா?

வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள் நாங்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தோம். என் வயிற்றில் இருக்கும் கரு தான் என்ன தீங்கு செய்து விட்டது அதன்மீது கருணை வையுங்கள்.

சாயிராவின் கதறல்  அன்வரின் காதுகளில் விழ,  துவண்டு போயிருந்த உடம்பிற்கு மீண்டும் வலு சேர்த்துக் கொண்டான். இப்பொழுது அவனுடைய நிலையை கவனித்தான். அவனை கயிற்றால் முற்றிலும் சுற்றிக் கட்டி கயிறை கட்டிலோடு இணைத்து இருந்தனர் .உடலை சிறிதும் அசைக்க முடியாதபடி கட்டுக்கள் வலுவாய் இருந்தது. எப்பாடு பட்டாலும் கட்டுக்களை விடுவித்து ஆக வேண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தான்.

” வீல்”  மீண்டும் சாய்ரா பானு வின் குரல். அந்தக் குரலை தொடர்ந்து அவள் தப்பித்து ஓடும் சப்தம் அவளை தொடர்ந்து நிறைய எண்ணிக்கையிலான நபர்கள் விரட்டிக்கொண்டு செல்லும் சத்தம்.

அண்ணி வீட்டை விட்டு வெளியே  ஓடிச் சென்று இருக்க வேண்டும். கட்டிலோடு சேர்ந்து உடலை இழுத்துக்கொண்டு ,மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான் நீளமான அந்த தெருவை முழுமையாக பார்க்க முடிந்தது.

பத்துக்கும் மேற்பட்ட முரடர்களுக்கு மத்தியில் தப்பிச் செல்ல வழி ஏதும் இல்லாமல், கைகூப்பி மன்றாடிக் கொண்டிருந்தாள் அவள். அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், தன் வயிற்றை தொட்டுக்காட்டி உயிரை பிச்சையாக போடும்படி மன்றாடிக் கொண்டிருந்தாள்.

அன்வருக்கு ரத்தம் கொதித்தது. இவர்களை என்ன செய்கிறேன் பார் என்று சூளுரைத்த படி உடலை வேகமாக அசைத்து கட்டுக்களை தளர்த்திக் கொள்ள முயன்றான்.

தெரு முழுவதிலும் ஏகப்பட்ட  மக்கள் கூடி கிடந்தனர். ஆனால், சாயிரா விற்கு உதவுவார் யாரும் இல்லை.  அந்த வெறி பிடித்த கும்பல் சாயிராவை உடையற்றவளாக மாற்றியது.

 

              மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே, இதற்கு மேல் இந்த இடத்தை என்னால் விவரிக்க முடியாது. துள்ளத் துடிக்க கதறி அழ அவர்கள் சாஹிராவின் கருவை அறுத்தனர்.        அவர்களுடைய வீட்டைச் சுற்றிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர் தீ வீடு முழுவதும் மளமளவென்று பரவ ஆரம்பித்தது.

உயிர்  போவதற்காக துடித்து கொண்டு இருந்த சாயிராவின் உடலை தூக்கி அந்த நெறுப்பிலே வீசினர். கடவுளின் பெயரை கோசம் செய்தபடி  அந்த கும்பல் அங்கிருந்து விலக ஆரம்பித்தது.

இப்பொழுது அந்த முதியவர் அன்வரின் வீட்டிற்குள் நுழைந்து இருந்தார் .வேகவேகமாக வீடு முழுவதும் தேடினார். உயிரோடு யாராவது இருக்கிறீர்களா என்று சத்தமிட்டார். அன்வர் இன்னமும் கட்டுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பாடுபட்டு கொண்டிருந்தான்.  அந்த சத்தத்தால் அவர் அன்வர் கட்டிப் போடப்பட்ட அறையை நோக்கிச் சென்றார்.  அன்வர் விடுவிக்கப்பட்டான். ‘தாத்தா ‘,என்று கதறியபடி அவர் தோள் மீது சாய்ந்தான்.

அவனை தூக்கி நிறுத்தியபடி, பேசுவதற்கு எந்த நேரமும் இல்லை  தீ வீடு முழுவதும் பரவிவிட்டது. சீக்கிரம் வெளியேறி ஆகவேண்டும் வா என்று அழைத்தார். அவருடைய கையை பற்றியபடி தடுமாறி எழுந்தான். அன்வர் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய கடைசி வினாடியில், தாயிடம் இருந்து மெல்லிய முனகல் ஒலி வருவதை கண்டு அவள் உடலில் உயிர் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தான். இருவரும் சேர்ந்து அவளை தூக்கிக் கொண்டனர் .தீ நாக்குகளை விட்டு தப்பித்து வெளியேறினார்.

அன்வரையும் அவன் தாயாரையும் காப்பாற்றிய அந்த முதியவர் கோவிந்தன் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜு ஆவார்.  அவர் இவர்களது வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரர் மிக நெருங்கிய நண்பர்.




               என்னை மன்னித்துக்கொள் அன்வர் ,அந்த கொலை பாதகர்களை எதிர்த்து போராடும் வலிமை என்னிடம் இல்லை. உதவும் எண்ணம் உள்ளம் முழுவதும் இருந்தும் தளர்ந்து இந்த உடலால் ஒத்துழைக்க முடியவில்லை.

நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் தாத்தா,  நானும் என் தாயாரும் உயிர் பிழைத்து இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்னை விடுங்கள் என் கண்முன்னே நடந்த அவ்வளவு அநியாயங்களையும் கண்டும் தடுக்க முடியாமல் நான் உயிர் வாழ்வதற்கு செத்தே போயிருக்கலாம்.  ஆனால், என்னை பெற்ற தாயை காப்பாற்றி என்னிடம் நீங்கள் சேர்த்து இருக்கிறீர்கள் இதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி.

“இப்பொழுது நீ என்ன செய்யப் போகிறாய்  அன்வர்”?

அம்மா இன்னமும் சுயநினைவை அடையாமல்  வெறித்த பார்வையுடன் பேசவும் செய்யாமல் பொம்மை போல் இருக்கிறார். முதலில் அவருக்கு பாதுகாப்பு வேண்டும்  தேவையான மருத்துவ வசதியும் வேண்டும். எனக்கென்று இப்பொழுது அவரைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை.

              நான் நவகாளி செல்லலாம் என்று நினைக்கிறேன் தாத்தா.  அங்கே உங்களைப் போல் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் உண்டு. அவர் இல்லத்தில் எங்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இல்லை அன்வர் நீ நவகாளி செல்லவேண்டும் என்று எடுத்த முடிவு முற்றிலும் தவறானது. இவ்வளவு பெரிய சீரழிவின் பிறப்பிடமே நவகாளி தான்.  இப்பொழுது நீ இங்கு பார்த்துக்கொண்டிருக்கும் கொடுமைக்கும் மேலான கொடுமைகள் அங்கு நடந்து கொண்டிருக்கின்றன.

இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுவதுமாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் நீ அங்கு செல்வது உனக்கு நிச்சயமாக பாதுகாப்பு அளிக்காது.

இல்லை தாத்தா நான் பிறந்தது முதல்  அதிக காலம் இருந்தது நவகாளியில் தான். என்னால் என் பாதுகாப்பை அங்கே ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியும்.

இப்பொழுது கோவிந்தராஜன்  அவனுடைய கண்களை ஆழமாக ஊடுருவி அழுத்தமாகப் பார்த்தார். அந்த பார்வையின் வேகம் தாங்காமல்  தலையை குனிந்து கொண்டான் அன்வர்.

அன்வர் நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்கு நன்றாக புரிகிறது. உனக்கும் அங்கே சக்தி என்ற பெண்ணிற்கும் உள்ள நட்பு பற்றி உன் தந்தை ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார். உன் தந்தையைப் போன்ற மாமனிதர்கள் அடிக்கடி இந்த பூமியிலே பிறப்பதில்லை. அந்தப் பெண்ணை தன் மருமகளாய் ஏற்றுக்கொள்வதற்கு பெருமைப்படுவதாக சிலாகித்து என்னிடம் கூறியிருக்கிறார். இப்பொழுது நீ நவகாளி செல்ல வேண்டும் என்று விரும்புவதற்கு காரணம் அவள் தானே நேருக்கு நேராக வந்தது அவரது கேள்வி.

            தன் தந்தையை எண்ணி கண்களை இறுக மூடினான் அன்வர்.  கண்களில் கண்ணீர் கோடாக இறங்கியது.

அவன் முதுகை தட்டியபடி மேலும் பேசினார் கோவிந்தன். உன் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அன்வர் .    ஆனால், இப்பொழுது நீ  அங்கே செல்வது உனக்கு மட்டுமல்ல உன் தாய்க்கும் ஆபத்தை தரக்கூடும். நீ இங்கேயே தங்கி விடவும் முடியாது விடுதலை பெறும் காலம் வரை பாதுகாப்பான வேறு ஒரு இடத்திற்கு சென்றுதான் ஆகவேண்டும்.  என்னைக் கேட்டால் நீ பாகிஸ்தான் சொல்வது உனக்கு பாதுகாப்பானது என்று எண்ணுகிறேன்.

அங்கு ஏற்கனவே உனக்கு சொந்தமான வீடும் பந்தங்களும் இருக்கிறார்கள். அங்கு உன் தாய் சௌகரியமாக இருப்பாள் .அவளுடைய பாதுகாப்பை ஸ்திரப்படுத்திய பின்பு  இந்த பிரச்சனைகள் சிறிது ஓய்ந்த பிறகு நீ நவகாளி செல்லலாம் .

உன்னவளை உன்னோடு அழைத்துக் கொள்ளலாம் அந்த இறைவன் உனக்கு துணை நிற்பான். இப்பொழுது நீ நான் சொல்வதைக் கேள். நீ பாகிஸ்தான் சென்று விடு.

தாத்தா சொல்வது சரி என்பதை அன்வர் உணரத்தான் செய்தான். ஆனால், அவன் மனம் இப்பொழுது சக்தியை தேடியது. அவளது மடி மேல் சாய்ந்து கொண்டு  அழுவதற்காக உள்ளம் துடித்தது.

”  சக்தி”….. நீ எப்படி இருக்கிறாய்?  சக்தி  ஒரு நாள் ஒரே நாள்  என் ஒட்டு மொத்த வாழ்க்கையும் திசை மாறிப் போய் விட்டது. சக்தி இன்றல்ல நாளை, நாளையல்ல நாளை மறுநாள், அல்லது என்றாவது ஒருநாள் உன்னை கண்டு விடுவோம் என்று அனுதினமும் நாட்களை நகர்த்தி கொண்டு வந்தேன். இப்பொழுது எப்போதுமே உன்னை காணா முடியாமல் போய்விடுமோ என்று என் உள்ளம  பேதலிக்கிறது.

            
“நீ என்னை நினைத்து கொள்வாயா சக்தி”? தினம் தினம் நாம் ஒருவரை ஒருவர் பார்க்காது இருந்த நாட்களே இல்லை. இப்பொழுது நாம் இரண்டு ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை.

இப்பொழுதே, இந்த நிமிடமே ,இந்த வினாடி நேரமே நான் உன்னை பார்க்கவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கிறது. உன் மடியிலே நான் சாய்ந்து கொள்ள வேண்டும். உன்னுடைய பூ விரல்களால் என் தலையைநீ கோதிவிட வேண்டும்.  என்னுடைய ஒட்டுமொத்த இதய பாரத்தையும் உன் தலை மீது ஏற்றி வைத்துவிட்டு  ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடமாவது நிம்மதியாக கண்ணயர வேண்டும்.

“ஆமாமடா!!!! என் செல்லமே”, நான் உறங்கி எத்தனை நாட்கள் ஆகிவிட்டன என்று எனக்கே தெரியவில்லை. வாடா வா வந்து என்னை வாரி அணைத்துக் கொள். உன் மார்பில் சாய்த்துக் கொள்ள ஒரே ஒரு நிமிடம் என்னை உறங்க வைத்து விடடா என் கண்ணே!!!!.
(தொடரும்….)




What’s your Reaction?
+1
9
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!