Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-18

18

ஆரஞ்சில் கறுப்பு கட்டங்கள் போட்ட காஞ்சி மென்பட்டுப் புடவையை பாந்தமாக உடலில் சுற்றிக்கொண்டு கண்ணாடியில் பார்த்த அமுதவாணி தனது முகத்தில் குழந்தைத்தனம் மறைந்து பொறுப்பு கூடியிருப்பதாக உணர்ந்தாள்.

பார்வதி நெருக்கமாக தொடுத்து வைத்திருந்த முல்லை பூவை சரமாக வழியும்படி பின்னலில் சூடிக்கொண்டவள் கீழே இறங்கிய போது விபீசன் மாடி ஏறி மேலே வந்து கொண்டிருந்தான்.

இவளது அலங்காரத்தை யோசனையாக பார்த்தவன் “எங்கே போகிறாய்?” என்றான்.

அமுதவாணி அவனை விழி தாழ்த்தி பார்க்க முடிந்தது. ஏனெனில் அவன் நான்கு படிகள் கீழே நின்றிருந்தான். எப்போதும் உயரமாகவே இருப்பவன் இன்று இதோ கீழே இருக்கிறான் ஒரு அலட்சிய சிரிப்பு அவளிடம்.

“சொல்லி விட்டுத்தான் போக வேண்டுமா?” தலை சரித்து அவள் கேட்ட எதிர் கேள்விக்கான வினை அவனிடம் இல்லை. விழிகளில் ஒரு மாதிரி சொக்கலுடன் அவளை பார்த்திருந்தான். “அழகாக இருக்கிறாய் அம்மு”

மிக நேராக இதயத்தை தாக்கிய இந்த சொற் தாக்குதலை எதிர்பாராத அமுதவாணி சற்று தடுமாறி வேகமாக அவனை கடக்க இறங்க, குறுக்கில் கைவைத்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“எங்கே வேண்டுமானாலும் போ ,ஆனால் என்னை விட்டு போய் விடாதே” கரகரத்தது அவன் குரல்.

அந்த குரலையும் அணைப்பையும் உள்வாங்கிக் கொண்டவள் தலை உலுக்கி தன்னை மீட்டுக் கொண்டு அவன் தோளில் மெல்ல தட்டினாள். “போதும் விடுங்க”

விபீசன் அவளை விடுவிக்க மெல்லிய கொலுசொலியுடன் படிகளில் இறங்கியவளை மென்மையாய் அழைத்தான். “அம்மு காதல் கொஞ்சம் தெரிகிறதா?” எதிர்பார்ப்போடு கேட்டான்

அட பாருடா இந்த ராட்சசனுக்கும் லேசாக காதல் வாடை அடிக்கிறது… மனதிற்குள் சிரித்துக் கொண்டவள் ஆட்காட்டி விரலின் நுனியை காட்டி “கொஞ்சூண்டு” கொஞ்சும் குரலில் சொல்லிவிட்டு ஓடினாள்.

அமுதவாணி கோவிலை அடைந்தபோது முன்பே ஏற்பாடு செய்திருந்ததால் அபிஷேகத்திற்கு தயாராக வைத்திருந்தனர்.




 

” ஆரம்பிக்கலாமாம்மா?” பூசாரி கேட்க “முக்கியமான ஆள் வர வேண்டியிருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்” என்றபடி வாசலை பார்த்தவள் மலர்ந்தாள்.

காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்தவர் சுந்தர்ராமன். “வாணிம்மா” கைகளை விரித்தபடி வந்தவரை “முதலில் சாமி கும்பிடலாம்” என்றாள்.

அபிஷேக ஆராதனை முடிந்ததும் தந்தையும் மகளும் கோவிலின் கல் படிகளில் அமர்ந்தனர். நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டனர்.

“அங்கேயே இரு அம்மு. இன்று என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நீ வீட்டிற்குள் போக முடியாது” மகேஸ்வரி அவளை வீட்டு வாசலில் மறித்தாள்.

“அத்தை” விபீசன் தயக்கமாக அழைக்க “நீ சும்மா இருடா, இவளுக்கு நீ கொடுக்கும் இடம்தான். சொல்லுடி உன் மனதில் என்னதான் நினைத்திருக்கிறாய்? அந்த ஆளை கோவிலில் சந்தித்தாயாமே?” அன்னையின் அதிகாரம் கொடி கட்டி பறந்தது மகேஸ்வரியின் குரலில்.

கோபப்படுவாள் என நினைத்ததற்கு மாறாக கண்கள் கலங்க மென்மையாய் புன்னகைத்தாள் அமுதவாணி. “இப்போது நான் உள்ளே வரவா இல்லை இப்படியே போய் விடவா?” இதையும் மலரின் மிருதுவுடன்தான் கேட்டாள்.

“எனக்கு பதில் சொன்னால்தான் உள்ளே வர முடியும்”

“உங்கள் ஆதரவு எனக்கு தேவையில்லை. இது எனக்கு உரிமையான வீடு”

“நானே இல்லாமல் உனக்கு இங்கே எப்படியடி உரிமை வரும்?” 

” இது உங்களுக்கு பிறந்த வீடு.ஆனால் எனக்கு புகுந்த வீடு .எந்த வீட்டில் பெண்களுக்கு அதிக உரிமை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” ஸ்தம்பித்து நின்றிருந்த மகேஸ்வரியின் தோள் தொட்டு நகர்த்தி விட்டு உள்ளே போனாள் அமுதவாணி.

“அம்மு நீ என்ன நினைக்கிறாய்? உன் அம்மாவும் அப்பாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணுகிறாயா?” விபீசன் கேட்டான்.

“ஏன் கூடாதா?”

விபீசனின் முகத்தில் மிகுந்த வேதனை தெரிந்தது. “வேண்டாம் அம்மு. மகியின் வேதனையை சிறுவயதிலிருந்து பார்த்தவன் நான்.இப்போது மீண்டும் அவர்களை உன் தந்தையுடன் சேரச் செல்வது கிட்டத்தட்ட அவர்களை தற்கொலை செய்யச் சொல்வதற்கு சமம்”

“சரி அதை பிறகு பார்க்கலாம். உங்கள் மகியை எதிர் வீட்டுக்கு போய் தெய்வாம்மாவை பார்த்துவிட்டு வரச் சொல்லுங்கள்”

” ஏய் ” கையை ஓங்கி விட்டான் விபீசன். 

“தயக்கம் வேண்டாம் சும்மா அடியுங்கள்” வாகாக கன்னம் திருப்பி காட்ட ,ஓங்கிய கையை இறக்கி கொத்தாக ஒரு பக்கத்து கன்னத்தை பற்றி ஆட்டினான்.

“என்னதான்டி நினைப்பு உனக்கு ?ஏன் இப்படி எல்லோரையும் படுத்துகிறாய்?”

“சொல்ல முடியாது போடா” இத்தோடு அவனுடனான பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் “டா” உபயோகித்தாள்.

ஆனால் விபீசன் அவள் இடையில் இரு கைகோர்த்து தனக்கு நெருக்கமாக இழுத்துக்கொண்டு, முகத்தோடு குனிந்து “என்ன சொன்னாய் ?”என்றான்.

இவ்வளவு அருகில் அவன் முகத்தைப் பார்த்ததும் இறுக்கி விழி மூடிக்கொண்டாள் “தள்ளிப் போங்க”.

“உன் அம்மா எதிர் வீட்டுக்கு போக வேண்டாமா?”

பளிச்சென விழி திறந்தவள் “உங்களால் போக வைக்க முடியுமா?”

“நிச்சயம்.ஆனால் நீ என்னிடம் கொஞ்சம் பதமாக நடந்து கொள்ள வேண்டும்”

“பதமாகவா… அப்படியென்றால் ?” 

” இதமாக… பதமாக…என் சொல்படி…” ஒற்றை விரலால் அவள் முகத்தை சுற்றி வட்டமிட்டவன், இதழ்களை வருடி “ஒரே ஒரு முத்தம் அம்மு”என்றான் கெஞ்சலாக.

” ம்ஹூம்” வேகமாக தலையாட்டி மறுத்தவளை, “எதிர்வீடு…” என்று ஜன்னலைக் காட்டி மிரட்டினான்.

“ராட்சசன்” முனங்கியவள் “நிச்சயமாக உங்களால் முடியும்தானே?” சந்தேகம் கேட்டாள்.

“அதெல்லாம் பக்காவாக செய்து முடித்து விடுவேன. வா” அடுத்தொரு கேள்விக்கு வாய் திறந்தவளை கேட்க விடாமல் செய்தான்.

விபீசன் மகேஸ்வரியிடம் சென்று என்ன பேசினானோ… அன்று மாலையே மகேஸ்வரி தயக்கத்துடன் எதிர் வீட்டிற்கு போனாள்.

வெகு நேரம் கழித்து திரும்பி வந்தவளின் முகம் கலங்கி, அழுததால் கண்கள் சிவந்திருந்தன. “என்ன விஷயம்மா?” பரிவாக கேட்டார் மாணிக்கவேல்.

“தெய்வா செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறாள் அண்ணா. அவர் தெய்வாவை வீட்டை விட்டு விரட்டி விட்டாராம்”

“அடப்பாவி ஏனாம்?”

“தெய்வா தன்னுடைய வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கிறாள்”

அனைவரும் அதிர்ந்தனர். 




What’s your Reaction?
+1
26
+1
25
+1
4
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!