Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-17

17

 “எதற்காக முகத்தை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறாய்?” விபீசன் கேட்க அமுதவாணி தலையசைத்தாள்.

“நிதர்சனங்கள்… வாயடைக்க வைத்து விட்டன. ஆனால் இது நீங்கள் எதிர்பார்த்ததுதானே? இந்த திட்டத்தோடுதானே என்னை கூட்டிப் போனீர்கள்?”

“அதில் தவறென்ன? நீ ஏன் எப்பொழுதும் உண்மையை எதிர்கொள்ள தயங்குகிறாய் அம்மு?”

அமுதவாணி விரக்தியாக சிரித்தாள். “தோலுரிந்த உண்மைகள் நெருப்பை கக்கும் நாகங்கள் போலிருக்கின்றன.நிஜம் என்று நம்ப வைக்கப்பட்ட என் பல வருட கற்பனைகளை தாண்டி வருவதற்கு கொஞ்சம் நாட்கள் பிடிக்கும் தானே?”

“ம்…இந்த பரமபத விளையாட்டில் நான் உனக்கு உதவ மட்டுமே செய்கிறேன் என்பதை நீ நம்ப வேண்டும்”

“நம்பிக்கை தானே வாழ்க்கை? எனக்கு ஒரு நெருடல். இங்கே இந்த எளிய கிராமத்து இடங்களை எதற்காக அவ்வளவு பிரம்மாண்டமானதாக மாற்றிச் சொல்ல வேண்டும்?”

பெரிய பள்ளிக்கூடம், பிரம்மாண்ட கோவில், அழகான டைப் ரைட்டிங் சென்டர், நீளமான கயிற்று பாலம்… தெய்வானையின் விவரணைகள் அமுதவாணியின் மனதிற்குள் தேளாய் கொட்டின.

“உன்னிடம் கூறப்பட்ட கதை நடந்த இடம் சென்னை அல்லவா? அதனால் எல்லா இடமும் பெரிதாக இருந்தன” அமுதவாணி விழி மூடி இந்த செய்தியை ஜீரணிக்க முயன்றாள்.

“மிஸ்டர் சுந்தர்ராமன் இங்கே தன் அக்கா வீட்டில் சில நாட்கள் தங்கிய போது நடந்த சம்பவங்களை அவரது சொந்த ஊரான சென்னையில் நடந்ததாக உன்னிடம் மாற்றி கூறப்பட்டிருக்கிறது”




 

அமுதவாணி இத்தனை நாட்களாக தன் மனதிற்குள் கோட்டை போல் உயர்ந்திருந்த கற்பனைகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்வதை உணர்ந்தாள். “இப்போது நான் என்ன செய்வது?” செய்வதறியாது தான் இந்த கேள்வியை கேட்டாள்.

“கையையும் காலையும் வைத்துக் கொண்டு சும்மா இருப்பது” பட்டென பதில் கொடுத்தான் விபீசன்.

கேள்வியாய் பார்த்தவளுக்கு பதிலாக கண்ணால் மூடப்பட்டிருந்த ஜன்னலை காட்டினான். “இந்த ஜன்னலை திறக்காமல் இருந்தாயானாலே போதும்”

அமுதவாணி உண்மை உணர்ந்து விட்டாள், இனி சொல்வதை கேட்பாள் என்று தான் விபீசன் எண்ணியிருந்தான். ஆனால் அப்படி அவனுடைய எண்ணத்திற்கு கட்டுப்பட்டவளாக அவளில்லை. அன்று மாலையே எதிர் வீட்டு வாசலில் நின்றாள்.

லேசாக சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போனவள் ஒருவித இறுக்கமும் புழுக்கமுமாக இருந்த வீட்டை பார்வையிட்டபடி உள்ளறை கதவை தள்ளினாள்.

 அங்கே கட்டிலில் படுத்திருந்த தெய்வானை இவளை கண்டதும் முகம் ஒளிர எழுந்தாள்.

“வாணிம்மா வாடா அம்மாவை தேடி வந்து விட்டாயா?” இரு கை நீட்டி அணைத்துக் கொண்டாள்.

வெளியே போய்விட்டு வீட்டிற்கு திரும்பிய விபீசன் முன் வரண்டாவில் கவலையான முகத்துடன் நின்றிருந்த மகேஸ்வரியை பார்த்ததும் புருவம் சுருக்கினான்.

“அம்முவை எங்கே?”

மகேஸ்வரி மௌனமாய் இருக்க அருகில் இருந்த பார்வதி கைகளை பிசைந்தாள்.

“அங்கே ” என பார்வதி எதிரே கை காட்ட விபீசனின் முகம் சிவந்தது. மக்கு மன்னாந்தை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மண்டையில் ஏறாது, வேகத்துடன் எதிர் வீட்டுக்கு போக போனவனின் கையை பற்றி தடுத்தாள் மகேஸ்வரி.

“வேண்டாம் விவா அவள் சின்னப்பிள்ளை இல்லை. அவளாகவே ஒரு முடிவிற்கு வரட்டும்”

அடக்கிய ஆத்திரத்துடன் விபீசனும் அங்கேயே அமர்ந்து விட்டான்.ஒரு மணி நேரம் கடந்த பிறகு எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்தாள் அமுதவாணி. 

“அங்கே உனக்கென்ன வேலை?” விபீசன் உறுமினான்.

“கையை விடுங்க. அ ஆடு, இ இலை சொல்லிக் கொடுக்க பால்வாடி பிள்ளை இல்லை நான்” நிதானமாக சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

வீட்டினர் அனைவருமே ஒருவகை திகில் கலந்த பயத்துடன் நடமாடிக் கொண்டிருக்க,அமுதவாணியோ மிகவும் சாதாரணமாக இருந்தாள். யாரிடமும் அனாவசியமான பேச்சு பேசுவதில்லை.அடிக்கடி எதிர் வீட்டிற்குச் சென்று தெய்வானையையும் பார்த்து வந்தாள்.

“உன் மனதில் என்ன தாண்டி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” விபீசன் ஆத்திரத்துடன் கேட்க நிமிர் பார்வையுடன் சொன்னாள். “அதிகாரத்திற்கு அடிபணிவதில்லையென்று”

“இங்கே எந்த அதிகாரத்தை பார்த்தாய்?” கேட்டவனுக்கு பதிலாக தன் தோள் பற்றி இறுக்கிக் கொண்டிருந்த அவன் கைகளுக்கு பார்வையை நகர்த்தினாள்.

வேகமாக கைகளை விலக்கிக் கொண்ட விபீசன் “இது மகி அத்தைக்கு நேர்ந்த கொடுமைக்கான 

வேகம்தான் அம்மு. இதனை நீயும் புரிந்து கொண்டால்…”

“எப்போதுமே புரியாத மக்கு மன்னாந்தையாகவே நினைக்க வேண்டாம்”

தன்னை விட்டு விலகி நடந்தவளை பார்த்தபடி இருந்தவன் “உன் அம்மா பாவம் தெரியுமா?” என்றான்.

“நான் எப்போதும் அன்பை தேடிப் போகிறவள்” என்றுவிட்டு அமுதவாணி போன இடம் எதிர் வீடு.




What’s your Reaction?
+1
24
+1
29
+1
2
+1
2
+1
2
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!