Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-10

10

உள்ளூரிலேயே ஒரு மரக் கடையில், லோடு ஏற்றி இறக்கும் வேலையில் சேர்ந்து கொண்டான் ராஜய்யன்.  கை நிறையச் சம்பளம்.  ஊருக்குள்ளும் நல்ல பெயர்.  ஊரார் அவனைப் பற்றி நல்லவிதமாய்ப் பேசத் துவங்கினர்

 “பரவாயில்லப்பா… குடுகுடுப்பைக்காரன்… ஜக்கம்மா பக்தன்…. அதுஇதுன்னு சொல்லி ஊர் விட்டு ஊர் போய் ஏமாத்து வேலை பண்ணிட்டிருந்த ராசய்யன் இப்ப ஒழுக்கமா கூலி வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டான்”

 “இனி என்ன?… ஒரு கண்ணாலத்தைக் கட்டிக்கிட்டு குடியும் குடித்தனமா மாற வேண்டியதுதான்”

 “இவன் கண்ணாலம் கட்டிக்கிட்டு பொண்டாட்டியோட போயிட்டான்னா அவன் இட்டுட்டு வந்த பொடியன் எங்க போவான்?… அதுவும் தெய்வக் குழந்தைன்னு வேற சொல்றாங்க!… அதனால அக்காவையும் கூட சேர்த்துக்கிட்டான் ராசய்யன்…!… இப்ப ராசய்யன், பூமணி அப்புறம் அந்தப் பையன் எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டுல ஒரே குடும்பமா இருக்காங்க!”

 “எது எப்படியோ… ராசய்யனும் செரி… அவனோட அக்காக்காரி பூமணியும் சரி…. இனி குறி சொல்ற வேலை… மை போடுற வேலை எல்லாத்தையும் விட்டுட்டாங்கல்ல!… அது போதும் ஊர் திருந்திடும்”

அவர்களின் அமைதியான… நிம்மதியான வாழ்க்கையைக் குலைப்பதற்கென்றே அந்த ஊரைத் தேடி வந்தனர் காயாக்குருதி மந்திரவாதியும், தாஸும்.

இருவரும் ஊருக்கு வெளியேயிருந்த ஒரு பாழடைந்த வீட்டில் தங்கியிருந்தனர். காயாக்குருதி அங்கேயே தன் மண்டையோட்டுச் சமாச்சாரங்களை எடுத்து தரையில் பரப்பி, சிவந்த குங்குமத்தால் நட்சத்திரக் கோடுகள் வரைந்து, அதன் மத்தியில் ஒரு மண்டையோட்டை வைத்து, ஒரு யாக பீடம் அமைத்து, நெருப்பை எரிய விட்டு, அங்கேயே தன் மந்திர தந்திர வேலைகளை ஆரம்பித்தான்.

 “ஏன் சாமீ… ஊரிலே இந்த வேலைகளையெல்லாம் செஞ்சுதான் அந்தக் குடுகுடுப்பைக்காரனும் அவனோட நல்ல குட்டிச் சாத்தானும் இந்த ஊர்ல இருக்குன்னு கண்டுபிடிச்சீங்க!… அப்புறம் மறுபடியும் இங்க வந்து எதுக்கு அதையே செய்யறீங்க?” தன் சந்தேகத்தைக் கேட்டான் தாஸ்.

 “அடேய் மூடா!… இந்த ஊர்ல அது எந்தத் தெருவுல எந்த வீட்டுல இருக்கு?ன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?… அதுக்குத்தான்” என்ற காயாக்குருதி, “அடேய் தாஸ்… நீ ஊருக்குள்ளார போயி  அந்த ராசய்யன் இந்த ஊர்லதான் இருக்கானா?… இல்லை வேற எங்காச்சும் போயிருக்கானா?ன்னு தெரிஞ்சுக்கிட்டு வா” என்றான்.

ஊருக்குள் டீக்கடை, டிபன் கடை, பெட்டிக்கடை, மக்கள் கூடும் இன்னபிற இடங்களுக்கெல்லாம் சென்று, கொஞ்சம் கொஞ்சமாய் ராஜய்யன் பற்றிய தகவலைச் சேகரித்துக் கொண்டு அந்த பாழடைந்த வீட்டிற்கு இரவு வாக்கில் வந்து சேர்ந்தான் தாஸ்.

 “சாமி… காதுல விழுந்த எல்லாத் தகவலுமே நமக்கு நல்ல தகவல்கள்தான் சாமி” எடுத்த எடுப்பில் சொன்னான் தாஸ்.

 “ம்ம்… ஒவ்வொண்ணாச் சொல்லு”

 “அந்த ராஜய்யன் குடுகுடுப்பைத் தொழிலை விட்டுட்டானாம்!… அப்புறம்… இப்ப ஏதோவொரு மரக்கடைல கூலி வேலை பார்க்கிறானாம்!… அவனும் அவன் அக்காவும்  கூட யாரோ ஒரு சின்னப் பையனும் ஒரே வீட்டுல ஒரே குடும்பமா இருக்காங்களாம்”

தன் நீண்ட தாடியை உருவிய வண்ணம் யோசித்த காயாக்குருதி, “அப்ப…  நம்பூதிரியோட குட்டிச்சாத்தானை என்ன பண்ணி வெச்சிருக்கான்?னு தெரியலையே!… இந்த ஊருக்குக் கொண்டு வந்தானா இல்லை… கோயமுத்தூரிலேயே விட்டுட்டு வந்திட்டானா தெரியலையே?” என்றான்.

அதே நேரம், வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த ராஜய்யனை உசுப்பினான் சரவணன்.




 

 “என்னப்பா?… என்ன வேணும்?… பசிக்குதா?”

தலையை இட, வலமாய் ஆடிய சரவணன், “என்னமோ வித்தியாசமான ஒரு வாசம் வருது” என்றான்.

 “அட… எதாச்சும் எலி கிலி செத்துக் கெடக்கும்… நீ போய் படுத்துத் தூங்கப்பா” என்றான் ராஜய்யன்.

 “இல்லை… வேற வாசம்… யாரோ எதையோ நெருப்பில் போட்டு வாட்டுற வாடை” 

அதைக் கேட்டதும் ‘விருட்’டென எழுந்து அமர்ந்தான் ராஜய்யன்.  அவன் பார்வை சுற்றும்முற்றும் எதையோ தேடியது.

 “அந்த வாசம் இங்கிருந்து வரலை… எங்கியோ தூரத்திலிருந்து வருது!… “ சொன்ன சரவணனின் கண்களில் ஒரு அச்சம் தெரிய.

கட்டிலிலிருந்து எழுந்து, தலைமாட்டில் வைத்திருந்த சட்டையை அணிந்து கொண்டு, “எந்த திசையிலிருந்து வருது?”ன்னு சொல்லு… அங்கேயே போய்ப் பார்த்திடுவோம்” என்றான்.

வீட்டிற்குள் சென்று டி.வி.எஸ்-50 வண்டியின் சாவியை ராஜய்யன் எடுக்க, அவன் அக்கா பூமணி கண் விழித்தாள்.  “என்ன ராஜய்யா என்ன தேடுற?”

 “ஒண்ணுமில்லைக்கா… பயல் ஏதோ மோசமான வாடை வருதுங்கறான்!… அதுவும் எங்கியோ தூரத்திலிருந்து வருதுங்கறான்… அதான் போய்ப் பார்த்திட்டு வரலாம்!னு கிளம்பறேன்”

 “நானும் கூட வரவா?”

 “வேண்டாம்… வேண்டாம்”

 எதற்கும் ஒரு பாதுகாப்பாய் இருக்கட்டும், என்றெண்ணி தன் குடுகுடுப்பை பையையும் எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டான் ராஜய்யன்.

அடுத்த பத்தாவது நிமிடம் டி.வி.எஸ்-50 ராஜய்யனையும், சரவணனையும் சுமந்து கொண்டு ஊருக்கு வெளியே, இடுட்டு அப்பிய சாலையில் பறந்து கொண்டிருந்தது.

 “என்னப்பா இன்னும் போகணுமா?”

 “ஆமாம்”

சிறிது நேரத்திற்குப் பிறகு, “அதோ அங்க பாருங்க… நெருப்பு எரியுதல்ல?… அங்க போங்க” என்று சரவணன் ஒரு திசையைக் காட்ட, அந்தப் பாழடைந்த வீட்டிற்குள் நெருப்பு எரிவதும், புகை காற்றில் பரவுவதும் ராஜய்யனின் கண்களுக்கும் தெரிந்தது.

 “யாராயிருக்கும்… இந்த நேரத்துல அங்க போய் நெருப்பு வெச்சுக் குளிர் காயறது?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டு, டி.வி.எஸ்-50ஐ சற்றுத் தள்ளியே ஆஃப் செய்து ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, பூனை போல அந்தக் கட்டிடத்தை நோக்கி நடந்தனர் இருவரும்.

 அந்த இடத்தை அடைந்து,  உள்ளே எட்டிப் பார்த்த ராஜய்யன் ஆடிப் போனான்.  “அடக் கடவுளே…. இவன் காயாக்குருதி… பயங்கரமான மந்திரவாதி ஆச்சே!… இவன் எதுக்கு நம்ம ஊருக்கு வந்திருக்கான்?… இவன் போற எடத்திலெல்லாம் தீமைகள்தானே நடக்கும்?”

ஒரு நெடிய யோசனைக்குப் பின், “செர்த்தான்… என்கிட்ட இருக்கற நம்பூதிரியோட குட்டிச் சாத்தானை அபகரிச்சிட்டுப் போக வந்திருக்கான்… ரொம்ப நாளா அவனுக்கு அது மேல ஒரு கண்ணு!… அதை எங்கிட்டேயிருந்து பிடுங்கிட்டுப் போயி… அந்த நல்ல குட்டிச் சாத்தானை கெட்ட வழிகளுக்கு பயன் படுத்தப் போறான்… அதுக்குத்தான் என் இருப்பிடத்தைக் கண்டு பிடிச்சு இங்க வந்திருக்கான்!… விட மாட்டேன்… இன்னிக்கு இவனுக்கொரு பாடம் கற்பிக்காம விட மாட்டேன்!” என்றான் தனக்குள்.

 “அவங்க யாரு?… உங்களுக்குத் தெரியுமா?” சரவணன் சன்னக் குரலில் கேட்க,




 “தம்பி… நீ வெளிய வராதே இங்கியே இரு!… நான் போய் அவனுகளை ஒரு கை பார்த்திட்டு வர்றேன்” 

துளியும் பயமில்லாமல் சென்று அந்தக் காயாக்குருதியின் எதிரில் நின்றான் ராஜய்யன்.  அவனைக் கண்டதும் ஒரு கணம் ஆடிப் போன அந்தக் காயாக்குருதி, “ஏய் கோடங்கி… உன் கிட்ட இருக்கற அந்த குட்டிச்சாத்தானை மரியாதையா என் கிட்டக் குடுத்திட்டு அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிடு… இல்லே… உன்னைய இந்த இடத்திலேயே ரத்தம் கக்கிச் சாக வெச்சிடுவேன்”

 “அது உன்னால முடியாது காயாக்குருதி… ஏன்னா… இப்ப அந்த குட்டிச்சாத்தான் என்கிட்டேயே இல்லை!… அதைக் கொடுத்த நம்பூதிரியிடமே அதைத் திருப்பிக் கொடுத்திட்டேன்!..”

“தவறு செய்து விட்டாய் கோடங்கி… தவறு செய்து விட்டாய்!… நீமட்டும் அதை என் வசம் கொடுத்து… என்னுடைய கூட்டாளியா மாறியிருந்தா… நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த நாட்டையே ஒரு கலக்கு கலக்கியிருக்கலாம்!… வாய்ப்பைத் தொலைத்து விட்டாயே…” கோபமாய்ச் சொன்னான் காயாக்குருதி.

 “நீ அதை என் கிட்டேயிருந்து அபகரிக்க நெனச்சதே… மோசமான காரியங்களில் ஈடுபடத்தான் என்பது எனக்கு நல்லாவே தெரியும்!… எப்ப நானும்… என் அக்காவும் இந்த மந்திர தந்திர வேலைகளை விட்டுடலாம்!னு நெனச்சோமோ அப்பவே அதை நம்பூதிரிக்கு அனுப்பிட்டேன்!… நீ வேணா ஒண்ணு செய் காயாக்குருதி… என்னைத் துரத்திட்டு இங்க வந்த மாதிரி… நம்பூதிரியைத் துரத்திட்டு அப்படியே கேரளா பக்கம் போ”

அப்போது காயாக்குருதியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தாஸ், அவர் காதில் எதையோ ரகசியமாய்ச் சொல்ல,

கண்களை மூடி ஏதோ மந்திரத்தை உச்சரித்த காயாக்குருதி, அருகிலிருந்த குடுவையை எடுத்து அதனுள்ளிருந்த தண்ணீரை உற்றுப் பார்த்தார்.  பிறகு மெலிதாய்ச் சிரித்து விட்டு, “ஏமாற்றுக்காரா அந்தக் குட்டிச்சாத்தனை உன்னிடமே வைத்துக் கொண்டு பொய்யா சொல்லுகிறாய்?” கேட்டார்.

தன் குட்டு வெளிப்பட்டு விட்டதும், இனி அங்கே இருந்தால் அவர்கள் தன்னை எது வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்பதையுணர்ந்த ராஜய்யன், அங்கிருந்து தப்பியோட முயற்சிக்க தாஸ் பாய்ந்து வந்து ராஜய்யனின் தோளிலிருந்த துணிப்பையைக் கைப்பற்றினான். அது அவன் கைக்குப் போகும் முன், அதனுள்ளிருந்த சிறிய குட்டிச்சாத்தான் பொம்மையை தானே எடுத்துக் கொண்டான் ராஜய்யன்.

தாஸ் அதைப் பிடுங்கும் முயற்சியில் ராஜய்யனோட மல்லுக்கட்ட, அவனுக்கு உதவியாய் காயாக்குருதியும் வந்து விட, இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறினான் ராஜய்யன்.

மறைவிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த சரவணன், ராஜய்யனைக் காப்பாற்றும் விதமாய் வெளியே வந்து அவர்களருகில் செல்ல, தன் கையிலிருந்த குட்டிச்சாத்தான் பொம்மையை சரவணனை நோக்கி வீசினான் ராஜய்யன்.

 “சரவணா அதை எடுத்துக்கிட்டு இங்கிருந்து ஓடிப் போயிடு” கத்தினான்.

 இப்போது காயாக்குருதியும், தாஸும் சரவணனை நோக்கி வர, சற்றும் பயமில்லாமல் சிரித்துக் கொண்டே தன் கையிலிருந்த அந்த குட்டிச்சாத்தான் பொம்மையை எரியும் யாகத் தீயினுள் வீசினான் சரவணன்.

அதிர்ந்து போனான் ராஜய்யன்.




What’s your Reaction?
+1
8
+1
11
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!