Serial Stories thanga thamarai malare

தங்க தாமரை மலரே-1

1

ஓங்கிஉயர்ந்து கம்பீரமாக நின்றிருந்தது மலைக்கோட்டை.பார்த்த அடுத்த கணமே தளர்ந்திருந்த மனதில் தைரியம் ஊற்றெடுத்து பெருகியது. இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா?

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கலாம் என்ற நெஞ்சுரம் உண்டானது. அமைதியாகி விட்ட மனதுடன் ஆட்டோவிலிருந்து இறங்கிய கமலினி ஆட்டோவுக்கான பணத்தை தனது பர்சிலிருந்து தேடி எடுத்து கொடுத்தாள்.

சின்னதாய் ஒரு மாலை …வேண்டாம் இரண்டு முழ கதம்பம், பூக்கடைகளை கடக்கும் போது மனதில் நினைத்து விட்டு ஒட்டி உலர்ந்திருந்த தனது பர்சை வருடியபடி, இரண்டு ரூபாய் கற்பூரம் மட்டும் வாங்கிக் கொண்டு படபடவென படிகளில் ஏற தொடங்கினாள் .

மணிகண்டன் வந்திருப்பாரா …? கை திருப்பி மணி பார்த்துக் கொண்டாள்.அவருக்கு ஆபிஸ் முடிய ஏழு மணியாகும். அவர் வரும் போது இருட்டி விடும். கண் மங்கலாகி கொண்டு வந்த சுற்றுப்புறத்தை பார்த்தபடி வேகமாக ஏறினாள். தாயுமானவர் சந்நிதியில் நின்று கற்பூரமேற்றி வணங்கி விட்டு , பிள்ளையாரை நோக்கி ஏறினாள் .

எட்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு போய் விட வேண்டும். இல்லையென்றால் சித்தி கத்துவாள். அதற்குள் மணிகண்டன் வர வேண்டும் …பலவித எண்ணங்களோடு விரைவு கொடுத்த கால்களுக்கு சிறு இடையூறு வந்தது. பூப்பந்து ஒன்று வந்து திடுமென மேலே மோதியது. தடுமாறி நின்று கீழே விழப் போன குழந்தையையும் பிடித்து பத்திரமாக நிறுத்தினாள் .

” ஏய் …பாப்பா … பார்த்து …மெதுவாக …இப்படி பாதையில் இடையில் ஓடி வரலாமா …? வேகமாக மலையேறிக் கொண்டிருப்பவர்கள் மேல் இடித்து விட்டால் …நீ சின்னக் குழந்தை. நீதானே கீழே விழுந்து விடுவாய் …? “

அந்தக் குழந்தை முகத்தை சுருக்கிக் கொண்டாள். “நான் ஒண்ணும் விழ மாட்டேன்.  நான் ஸ்ட்ராங் பேபி “.

” ஓ.கே. பாப்பா நீ ஸ்ட்ராங்தான். ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .சரியா …? “




” பாப்பான்னு சொல்லாதீங்க. என் பெயர் சௌபர்ணிகா. பெயர் சொல்லி கூப்பிடுங்க “.

குழந்தையின் பெயரை மனதிற்குள் மெச்சியபடி”அழகான பெயர் சௌபர்ணிகா. கோவிலுக்கு யார் கூட வந்தீங்க? உங்க அம்மா எங்கே …?”

” அங்கே …” பாதையை விட்டு தள்ளியிருந்த ஒரு பாறைப் பகுதியை காட்டினாள் சௌபர்ணிகா. அரை இருளில் இருந்த அந்த இடத்தில் ஒரு பெண்ணும், ஆணும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது .

குழந்தையை பத்திரமாக அவர்கள் இடம் வரை கொண்டு சென்று விட நினைத்தவள், அவர்கள் பேசிக் கொண்டிருந்த  தோரணையில் ஏதோ அதி முக்கிய விசயம் என உணர்ந்து, அவர்களுக்கு இடையூறு வேண்டாமென நினைத்து சௌபர்ணிகாவின் கை பிடித்து படிகளின் ஓர பாறையில் அமர வைத்தாள்.

” சௌபர்ணிகா அங்குமிங்கும் ஓடாமல் அம்மா வரும் வரை சமர்த்தாக இங்கே உட்கார்ந்திருக்க வேண்டும்” மீண்டும் மலையேற ஆரம்பித்தாள்.

” ஆன்ட்டி உங்க பெயர் என்ன …?” குழந்தையின் கேள்விக்கு திரும்பி பார்த்து புன்னகைத்து ” கமலினி ” என்று சொல்லிவிட்டு தன் பாதையை தொடர்ந்தாள்.

உச்சியை அடைந்து பிள்ளையாரை வணங்கியதும் இன்னமும் மன பாரம் இறங்கியது. அத்தனை உயரமும் அள்ளி செல்லும் காற்றும் அவளது மனக்குழப்பத்தை பெருமளவு சமனம் செய்தன .கோவிலை விட்டு வெளியேறி, ஓரமாக இருந்த  ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டாள். கண்களை இறுக மூடி பத்து நிமிடம் அமர்ந்து சுற்றுப்புறம் துறந்து தனக்குள் மூழ்கினாள். திரும்ப கண் விழித்த போது இந்த உலகமே அவள் காலடியில் இருப்பது போலொரு உணர்வு உண்டானது.

மகாராணி நான் ….மனதிற்குள் தன்னை தானே கூறிக் கொண்டாள். தலை நிமிர்த்தி அமர்ந்தாள். அவள் போன் ஒலித்தது. மணிகண்டன் …” எங்கே இருக்கிறாய் கமலினி …? “

தான் இருக்குமிடத்தை சொல்ல இரண்டே நிமிடங்களில் அவளருகே வந்து அமர்ந்தான் மணிகண்டன்.




“என்ன ஆயிற்று கமலினி? “

உதட்டை பிதுக்கினாள்.” ப்ச். ஒன்றும் நடக்கவில்லை மணிகண்டன்.என்னை எம்.டி வீட்டிற்குள்ளேயே விடவில்லை. வெளியில் தோட்டத்திலேயே இரண்டு மணி நேரத்திறகும் மேல் காக்க வைத்து  விட்டு , இரண்டு நாட்கள் கழித்து வா என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்”.

” சை என்ன மனித ஜென்மங்கள் “

“அவர்கள் மனிதர்களோடு சேர்த்தி இல்லையென்றுதான் நமக்கு தெரியுமே.பிறகும் அவர்களிடமே போய் நின்றால் …இது போன்ற அவமானங்களை தாங்கத்தான் செய்ய வேண்டும்.” கமலினியின் குரலில் தன்னிரக்கம். அது மணிகண்டனை மிகவும் பாதித்தது .

மிகவும் தலை குனிந்திருந்ததால்  அவளது உச்சந்தலை மட்டுமே தெரிய, பரிதாபமாக அவளை பார்த்தான். இது போல் இருளில் அவள் பார்க்காத நேரத்தில்தான் அவனால் இப்படி ஒரு பரிதாப பார்வையை அவளுக்கு கொடுக்க முடியும்.

அவள் பார்க்க இப்படி பார்த்து விட்டானானால் அவளது பார்வை தானாக உயர்ந்து விடும். என்னையா அப்படி பார்த்தாய் …? எனக் கேள்வி கேட்கும்.மணிகண்டனுக்கு திருத்திக் கொள்ள முடியாதோர் பிழை செய்த உணர்வு உண்டாகிவிடும். அவன் பெருமூச்சொன்று விட்டான் .

” அப்பாவிற்கு இன்று வேலை எப்போது கமலினி …? “

” இந்த வாரம் அவருக்கு நைட் ட்யூட்டி. ஏழு மணிக்கு கிளம்பியிருப்பார். நாளை காலையில்தான் திரும்பி வருவார் “.

” ம் …வாட்ச்மேன் வேலை. அப்பா சமாளித்து கொண்டார்தானே கமலினி ..? “

” சமாளித்துத்தானே ஆக வேண்டும் மணிகண்டன். மாதம் எட்டாயிரம் ருபாய் வருமானமென்பது இப்போது எங்களுக்கு எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா ..? இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததற்காக நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் “.

” நன்றியா …? தவறு செய்தது போல் என் மனம் தவிக்கிறது கமலினி. உன் அப்பா பார்க்க வேண்டிய வேலையா இது …? “

“அதனால் ஒன்றுமில்லை மணிகண்டன். ஒரு காலத்தில் அப்பா முதலாளியாக இருந்திருக்கலாம்.இப்போது தொழில் நொடித்து போய் சாதாரணமானவராகத்தானே இருக்கிறார். எங்கள் வயிற்றுப்பாட்டையும் நாங்கள் பார்க்க வேண்டுமே. நியாயமான எந்த வேலையும் செய்வதில் தவறில்லை “.

” ஹாய் ஆன்ட்டி” மூச்சிரைக்க ஓடி வந்து அவர்கள் அருகே நின்றாள் சௌபாரணிக்கா.

” ஹாய் பாப்பா. இங்கே என்ன செய்கிறாய் ? “

” ஓடி …ஓடி விளையாடுகிறேன் …” சொல்லிவிட்டு …” அம்மா …” எனக் கத்தியபடி தன் தாய் அமர்ந்திருந்த பாறைக்கு ஓடினாள் குழந்தை.

” யார் கமலினி..? “

” யாரோ கோவிலுக்கு வந்த குழந்தை. அவளை விடுங்க மணிகண்டன். எனக்கு ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்க …”

” அது …வந்து, நீ படித்தவள். உன் வேலையையே எப்படியாவது வாங்க முயற்சி செய்யேன் கமலினி “

“இல்லை மணிகண்டன். இனி அந்த வேலைக்கு நான் டிரை பண்ண போவதில்லை. ஆபிசில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவன் எம்.டி யோட மகன். அதனை எல்லோர் முன்னாலும் தெரியப்படுத்தியதற்காக என் மேல் தவறான பழியை போட்டு வேலை நீக்கம் செய்திருக்கின்றனர் .அவர்களிடம் போய் நான் கெஞ்சி நின்று திரும்ப வேலையை வாங்க வேண்டுமென்பது அவர்கள் எண்ணம் .என் வீட்டு நிலைமையை நினைத்து நானும் அவர்களிடம் போய் நின்றும் விட்டேன். ஆனால் என்னை சந்திக்க கூட செய்யாமல் விரட்டுகின்றனர்.  இனியும் அங்கே போய் நிற்க மாட்டேன். வேறு வேலை தேடிக் கொண்டே இருக்கிறேன். உங்களால் முடிந்தால் …அப்பாவை போல் எனக்கும் ஒரு வேலை வாங்கி கொடுங்க …”

” ஆன்ட்டி …”சௌபர்ணிகா கத்தியபடி இப்போது அங்கிருந்து இங்கே ஓடி வந்தாள்.  அவளுக்கு கை யசைத்தாள்

” அம்மா …”எனக் கத்தியபடி மீண்டும் இங்கிருந்து அங்கே ஓடினாள். அவளுக்கு இது ஒரு விளையாட்டாகி விட்டது போலும் .இரு இடத்திற்கும் மாறி மாறி ஓடினாள்.

இங்கிருந்து பார்க்கும் போது  அவளது அம்மா சிக்கனமான நிலவு ஒளியில் வெள்ளி சிலை போல் கோட்டுருவமாக தென்பட்டாள். அம்மாவிற்கு பின்னால் அமர்ந்திருந்த அப்பாவின் உருவம் சரிவர தென்படவில்லை.




” எப்படி இருந்த குடும்பம் கமலினி உங்களுடையது …?என்னை படிக்க வைத்ததே உன் அப்பாதான். இப்போது அவரே …” மணிகண்டன் குரல் மாற பேச்சை நிறுத்திக் கொண்டான். கமலினி வானில் ஆங்காங்கு சிதறிக் கிடந்த வெள்ளிகளை வெறித்தாள்.

” தயவுசெய்து பழம்பெருமை பேசாதீர்கள் மணிகண்டன் “.

“என் அம்மாவின் ஆபரேசனுக்கு பணம் கொடுத்தார். என்னையும், என் தம்பியையும் படிக்க வைத்தார். அவரிடம் வேலை செய்த என் அப்பாவிற்காக எத்தனையோ உதவிகள் செய்தார். உங்கள் குடும்பத்திற்கு எங்கள் குடும்பமே நன்றிக்கடன் பட்டிருக்கறது . உங்களுக்கு நாங்கள் எவ்வளவோ செய்ய வேண்டும். ஆனால் கேவலமாக ஒரு வாட்ச்மேன் வேலையை ….”

” ஸ்டாப் …ஸ்டாப். மணிகண்டன் வாட்ச்மேன் வேலை சாதாரணமா..? இன்றைக்கு எங்கள் மரியாதையை ஓரளவு உயர்த்தி வைத்திருப்பதே அந்த வேலைதான். அதனை பழிக்காதீர்கள் ” சௌபரணிகாவிற்கு கை ஆட்டியபடி மணிகண்டனுக்கு புன்னகைத்தாள் கமலினி. அவன் மௌனமாக அமர்ந்திருந்தான் .

” என்ன வேலை பார்த்து வைத்திருக்கிறீர்கள் மணிகண்டன் …? ” மெல்ல கேட்டாள். அவன் திடுக்கிட்டு திரும்பினான் .

” ஏதாவது காரணம் இல்லாமல் இங்கே வரச் சொல்லியிருக்க மாட்டீர்கள்.  போனில் சொல்ல யோசித்து நேரிலேயே பேசலாமென்றுதானே இங்கே வர வைத்தீர்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்கள் “.

“அ …அது …வ…வந்து …கமலினி உனக்கு வேறு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை மட்டும் இந்த வேலையை பார். இல்லை இது பிடிக்கவில்லையென்றாலும் சொல்லிவிடு …கட்டாயம் எதுவும் இல்லை …”

” நேர்மையான எந்த வேலையும் எனக்கு ஓ.கே.  தான் மணிகண்டன். தயங்காமல் சொல்லுங்கள் “.

” ஒரு நகைக்கடையில் வரவேற்பு பெண் வேலை. பெரிய கடை என்பதால் சம்பளம் பத்தாயிரம் சொல்கிறார்கள். நல்ல அழகான பெண் வேண்டுமென கேட்டதால் எனக்கு உடனே உன் ஞாபகம் வந்தது …அதனால்தான். இந்த வேலை உன் மனதிற்கு கஷ்டமாக இருக்குமென்று தெரியும் . இதை விட நல்ல வேலை என்னால் வாங்கித் தர முடியவில்லைம்மா …” மணிகண்டனின் கலங்கல் குரல் கமலினியின் மனதில் படவில்லை .

அவன் சொன்ன நகைக்கடை வேலை அவள் மனதில் ஊவாவாக தைத்து நின்றது. ” சம்பளம் எவ்வளவு சொன்னீர்கள் …? பத்தாயிரமா …?  இந்த தொகை எனக்கு இப்போது எந்த அளவு உதவுமென்று உங்களுக்கு தெரியுமா ….? எந்த நகை கடை …? எப்போது வேலையில் சேர வேண்டும் …? “

மணிகண்டனின் பார்வையில் இருந்த வேதனையை இருள் மறைத்தது .” இ..இந்த வேலை …இதனால் உனக்கு ஒன்றும் மனக் கஷ்டமில்லையே கமலினி …? “




கமலினி புன்னகைத்தாள் . எழுந்து கொண்டாள் .” நேரமாகிவிட்டது மணிகண்டன் . இறங்கிக் கொண்டே மீத விபரங்கள் பேசலாம் …” படிகளை அடைந்து கீழே இறங்கத் தொடங்கினாள் .

” சௌபர்ணிகா பை. நீ அம்மாகிட்ட போ …” தன்னை நோக்கி ஓடி வந்த குழந்தையை திருப்பி  அனுப்பினாள் .

” கடை பெயர் என்ன..? இன்டர்வியூ மாதிரி எதுவும் உண்டா …? “

“ஸ்வர்ணகமலம் ஜுவல்லர்ஸ். இன்டர்வியூ உண்டு .ஆனால் அந்த கடை மேனேஜர் சதாசிவம் எனக்கு தெரிந்தவர். அவரிடம் உன்னை பற்றி சொல்லிவிட்டேன் . உன்னை செலக்ட் செய்து விடுவதாக சொல்லியிருக்கிறார் …”

“ஓ …ஸ்வர்ணகமலம். பெரிய நகைக்கடைதான் . தமிழ்நாடு முழுவதும் அதன் கிளைகள் இருக்கிறதே .இங்கே நம் திருச்சியில் இப்போதுதானே அதனை பிரம்மாண்டமாக ஏழு மாடிகளோடு மாற்றி கட்டினார்கள் ..? “

“அதேதான். அந்த புதிய கடைக்காகத்தான் நிறைய புது பணியாளர்களை அமர்த்துகிறார்கள். அங்கேதான் இந்த வேலை. நாளை காலை ஒன்பது மணிக்கு இன்டர்வியூ .அந்த கடைக்கே நேராக போய்விடு …”

” ம். ஏனோ இந்த வேலை என் மனதிற்கு பிடித்ததாகவே இருக்குமென்று தோன்றுகிறது மணிகண்டன் …” என்றவளை சிறு வேதனையோடு பார்த்தான் .

” ஹேய் நிஜமாகத்தான்பா …சும்மா சொல்லவில்லை …” என்றவளின் பின்னால் மீண்டும் வந்து மோதினாள் சௌபர்ணிகா

” ஏய் குட்டி திரும்பவும் நீயா …? ஏய் …நில்லு …படி …பார்த்து …மெல்ல …போ …எங்கே ஓடுகிறாய் …? “




” நான் குட்டி இல்லை …சௌபர்ணிகா …”கத்தியபடி படியிறங்கி ஒடிய சௌபர்ணிகா சிறு திருப்பம் ஒன்றில் திரும்பி பார்த்த போது உயரமாய் நின்றிருந்த ஒரு ஆணின் தோளில் சுகமாக ஏறியிருந்தாள். இவனை பார்த்து விட்டுத்தான் அப்படி ஓடி வந்தாள் போலும் .

” இப்படி ஓடி வரலாமா பேபி …? ” என அவளை கடிந்தபடி தூக்கிக் கொண்டு படியேறி வந்து கொண்டிருந்தான் அவன்.

யார் இவன் …?குழந்தை உரிமையோடு சாய்ந்து அமர்ந்திருப்பதை பார்த்தால் அவளது தந்தை போல் தெரிகிறது. அப்போது அங்கே இவளது தாய் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள் …?

வேண்டாம் கமலினி தவறாக நினைக்காதே …தன் மனதை தானே அவள் கடிந்து கொண்டிருந்த போது ” அம்மாவை எங்கே …? ” எனக் கேட்டபடி அவன் இவர்களைக் கடந்தான்.

” அதோ …அங்கே …” அவனுக்கு அம்மாவின் இடத்தை காட்டியபடி இவளுக்கு கையசைத்தாள் சௌபர்ணிகா.

குழந்தைக்கு கையசைத்தபடி இயல்பாக, கமலினியும் திரும்பி சௌபர்ணிகாவின் அம்மாவை பார்த்த போது , அங்கே அவள் மட்டுமே இருந்தாள்.  அவளுடன் இருந்த ஆண் மாயமாகியிருந்தான்.இங்கே சௌபர்ணிகாவை தோளில் சுமந்தபடி இவன் அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தான் .




What’s your Reaction?
+1
28
+1
29
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!