Serial Stories தேவ மல்லிகை பூவே தோட்டக் கலை

தேவ மல்லிகை பூவே-15 (நிறைவு )

15

 “என்னிடம் கேட்டால் எனக்கெப்படி தெரியும்?” கனகவல்லி அலட்சியமாக கையசைத்தாள்.

“பாரியிடம் என்னைப் பற்றி சொன்னது யார்?” குமரன் கேட்க,அவனை எரிப்பது போல் பார்த்தாள்.

“எங்களை ஏமாற்றி விட்டாயில்ல ? முத்துகாளை வந்து சொன்ன போது என் வயிறு எரிந்தது.உன் அப்பன் புத்திதானே உனக்கும் இருக்கும்? அந்த எவளோ ஒருத்தி எப்படி இங்கே வந்து வாழுகிறாளென பார்க்கிறேன்”

“ம்…அந்த வெண்ணிலா வந்து உங்கள் எல்லோருக்கும் ஆப்பு வைப்பாள்.பாரிஜாதத்தை என்ன செய்தீர்கள்?” உதயன் கேட்க குமரன் அவனிடம்..

“மன்னிச்சுடுங்க உதயன்.உங்களை தவறாக நினைத்து விட்டேன்”

“ப்ச் அதை விடுங்க…இப்போது பாரு…”




முத்துக்காளை உள்ளே நுழைந்தான்.உதயன் அவனை நெருங்கி தோள்களை பற்றினான்.”பாரிஜாதத்தை எங்கேடா?”

“எனக்கென்ன தெரியும்? நான் வேறு வேலையாக இங்கே…”குமரன் பட்டென அவன் கன்னத்தில் அறைந்து விட்டான்.

“என்னை பற்றி தப்பு தப்பாக சொன்னவன் நீதானேடா,என்ன பேசி அவளை தூண்டிவிட்டாய்?”

கன்னத்தை பிடித்துக் கொண்டவன்,”உன்னை பற்றி தெரிய வந்தது சொன்னேன்.மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது.நான் இங்கே ஒரு பெரிய பாம்பு சுற்றிக் கொண்டிருக்கிறது.அதை தேடிக் கொண்டு…”

இப்போது உதயன் அறைந்தான்.”என்னடா கதை சொல்கிறாய்? என் பாரிஜாதத்தை எங்கே?”

“நிஜமாகவே எனக்கு தெரியாது.சுந்தரவேணி விசயத்தை பாட்டையாவிடம் சொல்லிவிட்டு இப்போதுதான்….”

“டேய் வாயை மூடுடா” கனகவல்லி அலற,”ஒண்ணுமில்லை…ஒண்ணுமில்லை”வாயை மூடிக் கொண்டான்.

“குமரன் வா பாட்டையாவை போய் பார்க்கலாம்” உதயன் அவன் கை பிடித்து இழுத்துப் போனான்.

“நீ எதுக்குப்பா என் பேத்திய தேடுற?”பாட்டையா கேட்க உதயன் ஆச்சரியப்பட்டான்.

“அட உங்க பேத்தியா தாத்தா ?எப்போதிருந்து ?”

“என் வீட்டில் வந்து எப்போது பிறந்தாளோ அப்போதிருந்து அவள்

என் பேத்திதான்”

“ஆனால் இதனை ஒரு நாள் கூட நீங்கள் காட்டிக்கொண்டதில்லையே?”




” இல்லை தான் ஏதோ கோபத்தில் இருந்தேன்.அதற்காக என் பேத்தி இல்லையென்றாகி விடுமா ?”

“உங்கள் பேத்தி தான் தாத்தா. இப்போது காணவில்லை. எங்கே இருக்கிறாள் தெரியுமா ?”குமரன் கேட்க பாட்டையா உதயனை பார்த்தார் .

“ஊர் முழுவதும் தேடி விட்டோம். ஒருவேளை… இங்கே உள்ளேதான் இருக்கிறாளா தாத்தா?” உதயன் வீட்டிற்குள் நகரப் போக…

” நில்” கையை உயர்த்தி அதட்டலாக சொன்னார் பாட்டையா .”அவளுக்க உன்னை சந்திக்க விருப்பம் இல்லை. போய்விடு”

இப்போது இரு ஆண்களுக்கும் ஆசுவாசம் வந்தது.பத்திரமாகத்தான் இருக்கிறாள்.

“தாத்தா நான் அவளுடன் பேச வேண்டும்.பேசத்தான் போகிறேன்” வெளியே தாழ் கொண்டிருந்த அறையை  நெருங்கி தாழை திறந்தான்.

” நீ மட்டும் பேச நினைத்தால் போதாது .அவளும் நினைக்க வேண்டும் “பாட்டையா சொன்ன அதே நேரம் அறைக்குள் இருந்து பாரிஜாதம் குரல் கொடுத்தாள்.

” உங்களுடன் பேச விரும்பவில்லை போய்விடுங்கள்”

” பாரு ஒரு நிமிடம் கதவை திற.  என்னுடைய விளக்கங்களை சொல்லி விடுகிறேன் “

“இல்லை  நான் உங்களை மிகவும் நம்பினேன். ஆனால் என் நம்பிக்கையை நீங்கள் சிதைத்து விட்டீர்கள் . அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் கொடுக்கப்பட்ட மரியாதை கூட பெரிய இடத்துப்  பிள்ளையான உங்களுக்காக தான் இல்லையா? இதைக் கூட உணர முடியாத மட்டியாக நான் இருந்திருக்கிறேன்.எனக்கு ரொம்பவே கேவலமாக இருக்கிறது.

உங்களைப் பார்க்க விரும்பவில்லை. போய்விடுங்கள்”

” பாரு என் பக்க விளக்கங்களை நான் சொல்லி விடுகிறேன்.பிறகு நீ சொல்லும் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். உன் தந்தை அண்ணனை சந்தித்து பேசி உங்கள் பங்கு நிலத்தையும் எங்கள் கம்பெனிக்கு ஒத்திகைக்கோ, விலைக்கோ வாங்கி விடத்தான் நான் வந்தேன். எதிர்பாராத விதமாக குமரனை வழியில் சந்தித்தேன். அவன் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்களோடு உங்கள் வீட்டிற்கு வந்தபோது நான் தேடி வந்த குடும்பம்தான் என நிச்சயம் எனக்கு தெரியாது.உன்னை முதல் பார்வையிலேயே விரும்பத் தொடங்கி விட்டேன். உன் அப்பாவின் மரணம் அதன் பிறகு உன் தனிமை இவற்றையெல்லாம் கண்ட பிறகு நான் வந்த வேலையை மறந்து விட்டேன். உன் துயர் தீர்ப்பது ஒன்றே என் வேலை என்றாகிப்போனது.

அதை மட்டும் தான் செய்து கொண்டிருந்தேன்.குமரன் வந்த பிறகுதான் என் வேலை நினைவிற்கு வந்தது.இப்போதும் உன்னுடைய எதிர்பார்ப்புகளை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போன்ற வசதிகளை உங்கள் தொழிலுக்கு கொடுக்கும் உறுதியுடன்தான் என் அப்பா அண்ணனிடம் வாதாடி நல்ல முடிவையே வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். இதனை செய்து விட்டுத்தான் உன் முகம் பார்த்து என்னை பற்றி சொல்ல வேண்டும் என்ற உறுதியுடனேயே போனேன். இதைத் தவிர வேறு எந்த கள்ளமும் என் மனதில் கிடையாது.ப்ளீஸ் பாரிஜாதம் வெளியே வா” சுற்றிலும் நின்றவர்களை பற்றிய கவலை இன்றி தன் மனக்கிடக்கை வெளியிலிருந்தே கொட்டி முடித்தான் உதயன்.




“நான் நிறைய யோசிக்க வேண்டும். ப்ளீஸ் இப்போது நீங்க போங்க” பாரிஜாதம் குரல் கொடுக்க முகம் வாடினான்.

“நீ யோசித்து விட்டு வா பாரு. ஆனால் நான் எங்கேயும் போகப் போவதில்லை. உன்னுடைய நல்ல முடிவை சொல்லும் வரை இங்கேதான் உன்னுடைய மல்லிகை தோட்டத்திற்குள்தான் சுற்றிக் கொண்டிருப்பேன்” சொல்லிவிட்டு வெளியேறினான் உதயன்.

பாட்டையா என்றபடி பரபரப்பாக உள்ளே வந்த முத்துக்காளை கையில் கம்புடன் இருந்தான்.அவன் பார்வை இங்கே சூழ்நிலையை அலசி ஆராய்ந்தது.

“என்னடா?” பாட்டையா அதட்ட…

“ஒரு பாம்பு…” இழுத்தான்.

” ஏண்டா வீட்டுக்குள்ளேயா பாம்பை வைத்துக் கொண்டிருக்கிறேனா?  வேவு பார்க்க வந்தாயா? போடா வெளியே”




“அவன்முகம் சுளித்து வெளியே போக,குமரன் “சுந்தரவேணி விசயம் என்ன பாட்டையா? கனகவல்லி அத்தை எதையோ மறைக்கிறார்கள்” எனக் கேட்டான்.

” நான் சொல்கிறேன் அண்ணா” அறையை விட்டு வெளியே வந்திருந்தாள் பாரிஜாதம்.” வேணி அவளுக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.கனகு அத்தையின் பேச்சை தூக்கி எறிந்து விட்டாள்.அவளுக்கு சப்போர்ட் செய்தது யார் தெரியுமா? நமது பாட்டையாதான்” பாசத்துடன்

பாட்டையாவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“உங்களுக்கு காதல் பிடிக்காதுதானே பாட்டையா?” குமரன் கேட்க, “இப்போதெல்லாம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறதுடா பேராண்டி. இல்லாவிட்டால் உன்னை வீட்டிற்குள் நுழைய விட்டிருப்பேனா ?இதோ இவளையும்தான் உள்ளே இருக்க விட்டிருப்பேனா?” பாட்டையா சொல்ல அண்ணனும் தங்கையும் மனம் விட்டு சிரித்தனர்.

“உதயன் விஷயத்தில் என்ன முடிவெடுக்க போகிறாய் பாரி?” குமரன் கேட்க,”அவரை நிறைய நம்பினேன் அண்ணா.அவர்… எனக்கு இதையெல்லாம் ஜீரணிக்க சிறிது நாட்கள் வேண்டும்”

“அதுதான் நாட்கள் கேட்கிறாளே,பார்க்கலாம் எத்தனை நாட்களென்று…” பாட்டையா குறுஞ்சிரிப்புடபாரிஜாதம் தலையசைத்து விட்டு பாட்டையா வீட்டை விட்டு வெளியே வந்தாள்.சுற்றிலும் இருள் கவிழ்ந்திருக்க தூரத்தில் தெரிந்த தன் வீட்டை நோக்கி நடக்க துவங்கினாள். அடுத்த எட்டை எடுத்து வைக்க காலை தூக்கியவள் அதிர்ந்தாள். நீளமும் தடிமனுமாக அவள் முன்னால் ஓடியது ஒரு பெரிய பாம்பு.ஒரு நிமிடம் உடலெல்லாம் வெலவெலத்து வியர்த்து விட அப்படியே நின்று விட்டாள்.

கண் இமைப்பதற்குள் பாம்பு செடிகளுக்குள் புகுந்து மறைந்து போய்விட்டது. இரண்டு நிமிடம் கழித்தே தன்னிலைக்கு திரும்ப முடிந்தது அவளால். கையில் விறகு கட்டை ஒன்றுடன் கவனமாக நடையை தொடர்ந்தவளுள்  இங்கேதான் இருப்பேன் என உதயன் சொல்லிச் சென்ற திடுக் நினைவு.

பரபரப்புடன் கண்களை சுற்றி தேடினாள். இருளாக தெரிந்த தோட்டத்திற்குள் வேகமாக நடந்தாள். தோட்டத்தின் மையத்தில் இருந்த கிணற்றடியில் உதயன் அமர்ந்திருப்பது நிழல் உருவாக தெரிந்தது.  இதென்ன இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறான்? அந்த பாம்பு கிணற்றடி ஈரத்தை தேடி வந்தால்…? மனதிற்குள் நினைத்தபடி வேகமாக அங்கே போனவள் அதிர்ந்தாள்

உதயன் அமர்ந்திருந்த இடத்தருகே அவனைப் பார்த்தபடி படம் எடுத்து நின்றிருந்தது அந்த நாகம். படம் எடுத்த நிலையிலேயே அதன் உயரம் கிட்டத்தட்ட அவன் தோள் வரை இருந்தது. உதயனோ அதனை கவனிக்காமல் தூரமாய் வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

” உதய் அசையாதீர்கள் அப்படியே இருங்கள்” குரலை மிக உயர்த்தாமல் ஆனால் அழுத்தி சொன்ன பாரிஜாதம், பாதங்களை மெல்ல எடுத்து வைத்து அருகே போனாள்.

அவள் குரலுக்கு கட்டுப்பட்டு திரும்பாமல் உதயன் அமர்ந்திருக்க அசைந்து விடாதீர்கள்… ப்ளீஸ்… மனதிற்குள் புலம்பியபடி அவன் அருகே சென்றவள் தன் கையில் வைத்திருந்த விறகு கட்டையால் ஓங்கி அந்த பாம்பின் தலையில் போட்டாள். சட்டென கீழே விழுந்த நாகம் மீண்டும் தலையை உயர்த்தி சீறியது .கோபம் மின்னும் கண்களுடன் உதயன் பக்கம் நகர, பாரிஜாதம் உன்மத்தம் பிடித்தவளை போல் மேலும் மேலும் கட்டையால் அந்த பாம்பினை தாக்கினாள்.

தொடர்ந்து விழுந்த அடிகளில் பாம்பு தலை நைந்து நிலத்தில் புரள, இதற்குள் முத்துக்காளை அவனுடன் நான்கைந்து பேருமாக அந்த இடத்தில் கூடி அவர்களும் பாம்பை அடித்து துவைத்தனர். ஆனால் அவர்களுக்கு வேலையின்றி முழுவதுமாக பாம்பை கொன்றிருந்தாள் பாரிஜாதம்.

” எப்பா எவ்வளவு பெருசு!” பேசியபடி முத்துகாளை திரும்பி பார்க்க பாரிஜாதம் உதயனை இறுக்கி அணைத்து நின்றிருந்தாள்.

“ஒரு நிமிடம் என் மூச்சு நின்று போய்விட்டது தெரியுமா?” மிளற்றியபடி இருந்தாள்.

அவள் கன்னத்தை வருடிய உதயன் “உன் கோபம் போய்விட்டதா?” என்றான். ஆமாம் என்பதாக அவள் தலையசைக்க




” அந்த பாம்புக்கு நன்றி”என்றான்.செல்லமாக அவன் மார்பில் குத்தியவள் அவன் கை பிடித்துக் கொண்டு பாட்டையாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“பாட்டையா இவரை நான் விரும்புகிறேன்.இவர் மிகவும் நல்லவர்.இவரை எனக்கு திருமணம் முடித்து வையுங்கள்” தலை நிமிர்த்தி கேட்டாள்.

பாட்டையா பொக்கை வாய் தெரிய சிரித்தார் “என் வீட்டு பெண்கள் எல்லோருக்கும் தைரியம் வந்துவிட்டது. சற்று முன்னால் என் இன்னொரு பேத்தி சுந்தரவேணி இப்படித்தான் நிமிர்வாக வந்து கேட்டுவிட்டு போனாள். அவளுக்கு சொன்ன அதே சம்மதத்தை தான் உனக்கும் சொல்கிறேன். மனதிற்கு பிடித்தவனை மணம் முடித்துக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள்”

பாட்டையா கை உயர்த்தி ஆசீர்வதிக்க உதயன் உரிமையுடன் பாரிஜாதத்தின் தோள் பற்றி அணைத்து கொண்டான்.

-நிறைவு-




What’s your Reaction?
+1
36
+1
19
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!