Short Stories காதல் என்பது எது வரை

காதல் என்பது எது வரை !!!!!(சிறுகதை)

இன்று பக்தி சுற்று முடிந்து நாளை காதல் பாடல்கள் சுற்று….. தொலைக்காட்சியில் தொகுப்பாளர் அறிவிப்பு தொடர்ந்து கொண்டு இருந்தது.

“காதல் பற்றிய உங்கள் கணிப்பு என்னம்மா ”? கேள்வி கேட்டது டீன் ஏஜ் மகள் தான்.

“காதல் மேல் நம்பிக்கை உண்டு ஆனால் காதலர்கள் மீது நம்பிக்கை கிடையாது” …….முடிக்கும் முன்பு எனது எண்ணங்கள் எனது கல்லூரி நாட்களுக்கு சென்றன.

கல்லூரி இரண்டாம் வருடம். ஒரு நாள் இடைவேளை நேரம். வழக்கம் போல் டே-ஸ்காலர் மாணவிகளும் ஹாஸ்டல் மாணவிகளும் சேர்ந்து டிபன் பாக்ஸ்-களை காலி செய்து கொண்டு இருந்தோம். “உன் அம்மா கை பக்குவம் தனி சுவைதான். இவ்வளவு ருசியாகசமைக்கும் உன் அம்மா கைக்கு தங்க வளையல் செய்து போட வேண்டும்.” என்றேன்
நான்.

“நீயே அதை செய். தங்கம் வேண்டாம் ஆர்டிபிஷியல் போதும்” என்று கல கலத்தாள் உஷா.

அந்நாட்களில் நாங்கள் நால்வர் ஒரு அணியாக இருப்போம். உஷா, அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக அவர்கள் முன்பு இருந்த மதுரையை விட்டு இங்கு வந்து கல்லூரியில் சேர்ந்து இருந்தாள். மதுரையில் இருக்கும்போது உஷா ராஜன் என்பவரை காதலிக்க தொடங்கி இருந்தாள். வார இறுதி நாட்களில் மதுரையில் இருந்து இவளை பார்க்க வரும்
ராஜனை சந்திப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள்.

இவ்விஷயம் நெருங்கிய தோழிகளான எங்களுக்கும் ஒரு நாள் தெரிய வந்தது. நாங்கள் அவ்வப்போது சொல்வோம். ஒன்று காதலிப்பதை வீட்டில் சொல்லி விடு ; அல்லது படிப்பு முடிந்து, அக்காவின் கல்யாணம் முடியும் வரை அவரை காத்திருக்க சொல்.இப்படி வாரா வாரம் அவரை இங்கு வர சொல்லாதே. எப்படியாவது தெரிய வந்தால்
பிரச்சனைதான் ஆகும்”

கொஞ்சம் கண்டிப்பான பெற்றோர்தான். இருந்தாலும் இளைய மகளும் செல்லப்பெண்ணுமாகிய இவள் அக்காவின் திருமணம் முடிந்ததும் எப்படியும் சம்மதம் பெற்று விடலாம் என்று நம்பிக்கொண்டு இருந்தாள்.கல்லூரி இறுதி ஆண்டில் ஒரு திங்கள் கிழமை கல்லூரிக்கு வரும்போது வலது உள்ளங்கையை சுற்றி கட்டு போட்டபடி, சோர்ந்த முகத்துடன் வந்தாள்.

“என்ன ஆச்சு” விரிவுரையாளர் கேட்கும்போது….. கிட்சன்-ல அம்மாக்கு ஹெல்ப்பண்ணினேன். எண்ணெய் தெறித்து விட்டது “. பாவமாய் நின்றாள்.




தனிமையில் “உண்மையை சொல்லுடி” நாங்கள் உலுக்கி எடுத்ததும், “வெள்ளிக்கிழமை மாலை ராஜன் வந்திருந்தார். கல்லூரியில் இருந்து நேராக கோவிலுக்கு போனேன் ;அப்பாவை பார்த்து சம்மதம் கேட்க வருகிறேன் என்றார். நான் இப்போது வேண்டாம் என்றேன். கொஞ்சம் வாக்குவாதம் ஆகி விட்டது. என்னை மறந்து விடுவாய் என்று
நினைக்கிறேன் என்றதும் எனக்கும் கோபம் வந்து கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்துக்கொண்டு நின்றேன். புண்ணாகி விட்டது. டாக்டரிடம் காண்பித்துவிட்டு தெருமுனை வரை கொண்டு வந்து விட்டு விட்டு ராஜன் ஊருக்கு போய் விட்டார். கெமிஸ்ட்ரி லேப் –ல ஆசிட் கையில் பட்டு விட்டது என்று வீட்டில் சொல்லி விட்டேன் ” என்றாள்.

“நீ செய்தது தப்பு. பைத்தியக்காரத்தனம். கல்லூரியில் வந்து விசாரித்தால் என்ன ஆகும்.

உண்மையான காதலுக்கு சந்தேகமும் வரக்கூடாது ; தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமும் வரக்கூடாது. உன்னுடைய நிலைப்பாட்டை உணர்த்தி இருக்கவேண்டும்”என்று அவளுக்கு நாங்கள் புத்தி சொன்னோம். பரஸ்பர சமாதானங்களுக்கு பிறகு சந்திப்புகளும், காத்திருப்புகளும் தொடர்ந்தன.

காலம் ஓடியது. படிப்பும் பரிட்சைகளும் முடிந்து எல்லோரும் பிரிந்தோம்.“உன்னை நினைக்கவே மாட்டேன் ;
ஏனென்றால் மறப்பதில்லை …….புதிதாய் நினைப்பதற்கு”என்று கடைசி நாளில் கலங்கிய படியே, ஒரு வருடம் கழித்து கான்வொகேஷனில் மீண்டும் சந்திப்போம் என்ற உறுதியுடன் ஒருவருக்கொருவர் விடை கொடுத்துக்கொண்டோம். அலை பேசி புழக்கம் இல்லாத காலம் அது. கடித தொடர்புமட்டுமே. அதுவும் நாளடைவில் குறைந்து விட்டது. எனக்கு ஹைதெராபாத் -ல வேலை கிடைத்து விட்டது அடுத்த வருடம் கான்வொகேஷன் போது எனக்கு லீவு கிடைக்காத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை. நேரில் வந்து செர்டிபிகேட் வாங்கி கொள்கிறேன் என்று HOD- க்கு
கடிதம் எழுதிவிட்டென். கான்வொகேஷன் முடிந்து நான்கு மாதங்களுக்கு பிறகு கல்லூரிக்கு சென்று HOD – யை
பார்த்து வாழ்த்துக்களுடன் செர்டிபிகேட் பெற்றுக்கொண்டு திரும்பினேன். பழகியவகுப்பறை, லேப் என்று கொஞ்சம் அமர்ந்து இருந்தேன். மனதில் ஒரு திட்டம் போகும்போது உஷா வீட்டிற்கு சென்று விட்டுதான் போக வேண்டும். கொண்டு வந்திருந்த ஹைதெராபாத் வளையல்களை Surpise-ஆக உஷா அம்மாவிடம்
கொடுக்க வேண்டும் .

அப்போதுதான் லேப் அசிஸ்டன்ட் அக்கா அங்கு வந்தார். “ஹாய்…. எப்ப வந்த, எப்படி இருக்க” பரிவுடன் அணைத்துக்கொண்டார். “இப்பதான் செர்டிபிகேட் வாங்க வந்தேன். நீங்க எப்படி இருக்கீங்க” இப்படியே ஒவ்வொருவரை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.“உனக்கு ஒன்று தெரியுமா. உஷாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதுப்பா. ஒரு பெண் குழந்தை நான்கு மாதம் ஆகிறது. அவளும் கான்வொகேஷன் வரவில்லை.”துள்ளி எழுந்தேன் நான். “சூப்பர் நியூஸ். ரொம்ப சந்தோஷமா இருக்கு. உஷாவும் ராஜனும் எங்கே இருக்காங்க ?” (அக்காவிற்கு இவர்கள் காதல் பற்றி தெரியும்).“இல்லப்பா …… மாப்பிள்ளை ராஜன் இல்லை. உஷாவின் அப்பா சம்மதிக்கவில்லை.போன வருடம் படிப்பு முடிந்தவுடன் அக்கா கல்யாணம். உடனே இவளுக்கும்
சொந்தத்திலே முடித்து விட்டார்கள்.”

“எப்படிக்கா இவள் ஒத்துக்கொண்டாள் ? காதலிக்கும்போது இந்த சொந்தம் எங்கு போய் இருந்தது”

“ஆமாம்பா.எனக்கு கூட ரொம்ப கஷ்டமாக இருந்தது. பாவம் அந்த ராஜன்.”

எனக்கு கண்கள் கரித்தன. தொண்டையை அடைத்தது. அது துக்கமா ? வருத்தமா ?

விரக்தியா ? கோபமா ? வெறுப்பா ? என்னால் இனம் பிரித்து உணர முடியவில்லை.படிப்பு முடிந்தவுடன் கல்யாணம். உடனே குழந்தை . அப்படியானால் ராஜனுக்கு கொடுத்த வாக்கு பொய்யா ? அன்று கையில் கற்பூரம் ஏற்றியது எல்லாம் ஏன் ?அன்று காற்றில் கரைந்து கலந்தது கற்பூரத்தின் புகையா; உஷாவின் காதலா ? ஒன்று மட்டும் நிச்சயம்; கற்பூரமாய் எரிந்து போனது உண்மை காதல் கொண்ட ராஜனின் இதயம்தான் இரண்டு நிமிடம் அமைதியாக அமர்ந்து இருந்தோம். “சரிக்கா நான் கிளம்புகிறேன்”.

“பார்த்தீங்களா, பேசிக்கொண்டே இருந்ததில் மறந்து விட்டேன். இந்தாங்க …..“ஹைதெராபாத் டிசைன் வளையல்கள்” என்று கொண்டு வந்திருந்த வளையல்களை அவரிடம் கொடுத்து விட்டு கிளம்பினேன்.

“சந்தோஷம்மா. நினைவு வைத்து வாங்கி வந்து இருக்கிறாய்”.

“அவ்வளவு சுலபமாக எதையும் மறக்க முடியுமா” என்றேன்.இது அக்காவிற்கான பதிலா ? உஷாவின் காதலை நினைத்து என் மனதில் எழுந்த கேள்வியா ?

*******




What’s your Reaction?
+1
18
+1
16
+1
1
+1
2
+1
1
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!