Entertainment Short Stories sirukathai

மிருணா ரவி  (சிறுகதை )




மிருணா ரவி

” இந்த அட்ரஸ்தானே மேடம்?”  டிரைவர் குரல் கேட்கவும் திரும்பி வெளியே பார்த்தாள்.

அவள் வீடுதான்.போர்ட்டிகோவில் போன வாரம் அவள் பார்த்து பார்த்து வாங்கிய பைபர் ஊஞ்சல்.

இத்தனை விலையுயர்ந்த ஊஞ்சல் எதற்கு என்பதே வீட்டினரின் கேள்வியாய் இருந்தது. ஆனால் இவள் பிடிவாதமாக வாங்கினாள்.இதில் அமர்ந்து அவள் எடுத்த போட்டோ முகநூலில் இரண்டாயிரம் லைக்கை தாண்டி போய் கொண்டிருக்கிறது.இன்ஸ்டாகிராமில் பத்தாயிரத்தை நெருங்குகிறது.

“இதே வீடுதான்.அதோ அந்த ஊஞ்சல் இருக்குதே! ” உற்சாக குரல் கொடுத்த டிரைவரை திடுக்கிட்டுப் பார்த்தாள்.

இ…இவனுமா?

உதடுகள் எரிந்தன.உள்மடித்து நாவால் வருடி எரிச்சலை குறைக்க முயன்றாள்.நாவு பட்டதும் அருவருப்பு பெருக வாந்தி வரும் அறிகுறி தோன்றலாயிற்று.

” மேடம்…நான் உங்கள் பாலோயர்.எனக்கு ஒரு ஆட்டோகிராப்…” டிரைவர் தலையை சொறிந்தபடி பாக்கெட் டயரியை நீட்ட அவள் உச்சந்தலை முடிக் கொத்தை வேரோடு பிடுங்கியது போலொரு வலி தோன்றியது.

“நான் உங்க பாலோயர் மிருணா மேடம்.ப்ளீஸ் என்னோடு ஒரு காபி ஆர் கூல்ட்ரிங்க்ஸ்?” உள்ளுக்குள் இரைந்த குரலுக்காக காதுகளுக்குள் ஒற்றை விரல் விட்டுக் கொண்டாள்.

“இந்த டிராபிக் சத்தம் ரொம்பவே டிஸ்டர்ப்தான்.இதைப் பற்றி ஒரு நாள் பேசுங்களேன் மேடம்” டிரைவரும் தன் காதுகளுக்குள் விரல் நுழைத்துக் கொண்டான். டயரியை நீட்டினான்.

மிருணா ரவி…பெயரின் இறுதியில் மூன்று புள்ளிகள் வைத்து ஒரு கோடிழுப்பது அவள் பழக்கம்.

” உங்களைப் போலவே உங்க கையெழுத்தும் அழகு மேடம்.நான் உங்க இன்ஸ்டா போட்டோக்களையெல்லாம் பார்த்து அழகா காட்டுறதுக்கு இப்போ ஆயிரம் ஆப் இருக்குன்னு நினைப்பேன்.இப்போ உங்களை நேரில் பார்த்ததும் …ஐயோ நீங்க அப்படியே பதுமை மாதிரி இருக்கீங்க “

அவன் பேசப் பேச அவளுடலில் தீக்கங்குகள் பரவின.




” இன்ஸ்டாவில்தான் பேசுவீங்களா ? நேரில் பேச மாட்டீங்களா மேடம்? “

தனது இன்ஸ்டாகிராம் லைவ்ஸ் நினைவு வந்தது அவளுக்கு.எத்தனை கமெண்ட்ஸ் ! லைக்ஸ் ! ஹார்ட்ஸ் ! ஒவ்வொரு கை வெற்றிக்குறியும் உள்ளுக்குள் உருட்டும் புளகாங்கிதத்தை மறைத்து அகிலம் காக்க வந்த அன்னையாய் பாவனை காட்டி நிற்பாள்.

யு ட்யூப் சானல் ஆரம்பியுங்கள் , ஸ்பான்சர் பிடியுங்கள் …சம்பாதியுங்கள் ஆலோசனைகளை புறம் தள்ளுவாள்.யாருக்கு வேண்டும் சம்பாத்தியம் ? இந்த லைக்குகள் , ஷேர்கள் , புகழ் வார்த்தைகள் …ஆஹா…கண்கள் சொருகி போதையேறி நிற்பாள்.

“மேடம் …”

இந்த எழவெடுத்தவன் ஏன் பின்னேயே நொய் நொய்யென்கிறான் ? உள்ளுக்குள் குமுறி வெளிக்கு புன்னகைத்தாள்.

” ஒரு அவசர வேலை ” நகர முயன்றவளின் முன் செல்போனை நீட்டினான்.

” ஒரே ஒரு செல்பி மேடம் “

அவள் நாக்கு உலர்ந்து தொண்டை காய்ந்தது.வேண்டாம்…உள்ளம் அலறியது.

” நானும் போட்டோக்கள் போடத்தான் செய்கிறேன் மேடம்.ஐம்பது லைக்கை எட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. ஆனா நீங்க அசால்டா ஐயாயிரத்தை தொடுறீங்க.உங்களோடு ஒரு செல்பி எடுத்து அதை என் பக்கத்தில் போட்டு அட்லீஸ்ட் நூறு லைக்காவது வாங்கனும்.ப்ளீஸ் மேடம் …”

முகஸ்துதி.வேண்டாம் மிருணா…தலையாட்டாதே…புத்தி இடிக்க ,மறுத்து தலையசைத்து திதும் திதுமென ஓடி வீட்டிற்குள் மறைந்து கொண்டாள்.

குதிரை என்பது போல் அவன் ஏதோ சொல்வது அரைகுறையாக காதில் கேட்டது.அக்குதிரை நடையையும் கூட  பயின்றுதான் வைத்திருக்கிறாள்.தேவையான நேரலைகளில் கேமெராவிற்கு எட்ட நின்று கொண்டு உபயோகமும் படுத்துவாள்.ஆளுமை,கம்பீரம் ,கெத்து  போன்ற புகழுரைகளை வாங்கிக் கொள்வாள்.ஆனால் இப்போது அவன் அந்த வகைகளில் இந்த குதிரையை சேர்க்கவில்லை.

ஐந்தாண்டுகளாக கடினப்பட்டு எழுப்பி வைத்திருந்த கோபுரம் சரிந்தாற் போல் உணர்ந்தாள்.இந்நிலையிலும் அது மனதோரம் வலிப்பதை ஏலாமையுடன் நொந்தாள்.

இறுக மூடிய கண்களுக்குள் காட்சிகள்.திடுமென எழுந்து ஓடி வாஷ்பேசினில் வாய் கொப்பளித்தாள்.பல் தேய்த்தாள்..முதலில் வெறும் ப்ரஷால்…பிறகு பேஷ்ட் பிதுக்கிக் கொண்டு.காறித் துப்பினாள்.

தூ…தூ…தூ…

எச்சிலின் சில துளிகள் கண்ணாடியில் தெரிந்த அவள் மீதும் தெறித்தன.




போன் ஒலித்தது.கை நடுங்க எடுத்தாள்.ரவீந்திரன்.

வீடு திரும்பி விட்டாளா …? விசாரித்தான். அக்கறையான கணவன்.

மாலை வரும் போது வீட்டிற்கு எதுவும் வாங்கி வர வேண்டுமா ?பொறுப்பான அப்பா.

ம்…ம்ஹூம்களை பதிலாக்கி போனை அணைத்தவளின் கை தானாகவே இன்ஸ்டாகிராமை தொட்டு விட்டது வழமை போல்.படபடவென

வரிசை கட்டின போட்டோக்கள்.அவளுடையவை…

விதம் விதமாய் ,வகை வகையாய் ,வண்ணம் வண்ணமாய்.

 விரல்கள் தன்னிச்சையாய்  சுதந்திரமாக இயங்கியது.தள்ளத் தள்ள புதிது புதிதாய் கீழிருந்து புறப்பட்டு வந்தன.அவள் மனது அங்கில்லை.ஆனால் விரல்கள் தாங்கள் பழகிய பழக்கத்தை விடுவதாயில்லை.திடுமென போனை தூக்கி எறிந்தாள்.இனி இதை தொடப் போவதில்லை.

உஷ்…இப்போது மனம் சற்று ஆசுவாசப்பட்டாற் போலிருந்தது.டிவியை ஆன் செய்தாள்.நெட்ப்ளிக்ஸ் போய் ஒரு அமெரிக்கன்  சீரிஸை தேர்ந்தெடுத்தாள்.பார்க்க ஆரம்பித்தாள்.பத்தாவது நிமிடமே இதழ்கள் பிய்த்து விழுங்கப்படுவது போலொரு முத்தக்காட்சி.

அடிவயிறு புரட்டி வாந்தி வந்தது அவளுக்கு.நிஜமாகவே வாஷ்பேஷினுக்கு ஓடி மஞ்சளாய் வாந்தி எடுத்தாள்.இது அந்த அன்னாசிசாறாய் இருக்குமோ? மீண்டும் குமட்டி வாந்தி வந்தது. குடல் சுருட்டி இழுக்க சோர்வுடன் படுக்கையில் விழுந்தாள்.

“ஹல்லோ மேடம்.மிருணாதானே நீங்க?”கேட்டபடி எதிரில் நின்ற அந்த இளைஞனின் வயதை மகனை விட ஒன்றிரண்டு கூடுதல் என கணக்கிட்டபடி மென் புன்னகை புரிந்தாள்.

இவ்வகை புன்னகைகள் அவளது பாலோயர்ஸை அதிகப்படுத்துமென அறிந்து வைத்திருந்தாள்.வழியில் சந்தித்த பாலோயர் என ஒரு பதிவு அவளுள் ஓடியது.இவனைப் போல் இளவயதினரும் அவளது பாலோயர் எனும் மறைமுக தற்பெருமை.




” ப்ளீஸ் மேடம்.ஐந்து நிமிடங்கள் உங்களுடன் இருந்தாலும் அது என் ஆகப் பெரும் பாக்கியம்”

வயிற்றுக்குள் சீறிய உற்சாக புஸ்வாணத்தை முகத்தில் காட்டாமல் யோகினி முகபாவம் காட்டினாள். ” நான் சாதாரண மனுசி.வாங்க அந்த ஜூஸ் ஸ்டால்ல ஜூஸ் சாப்பிடலாம்”

உற்சாகமாக உடன் நடந்தான் “உங்களுக்கு அன்னாசி சாறுதானே மேடம் பிடிக்கும்?”

“பரவாயில்லை உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி” நளினமாக ஸ்ட்ரா வழியாக பழச்சாற்றை உறிஞ்சினாள்.

“உங்க வீடு எங்கே மேடம் இருக்கிறது?”

“அது எதற்கு உங்களுக்கு?”

“சாரி தப்பா எடுத்துக்காதீங்க.இது  அவுட்டர் ஏரியா.சிட்டிக்குள் எத்தனையோ ஷாப்பிங் மால்ஸ் இருக்கும் போது,இங்கே வந்திருக்கிறீர்களே! பக்கத்தில்தான் இருக்கிறீர்களோ என்று கேட்டேன்”

“இல்லை.இந்த ஷாப்பிங்மால் பற்றி என் ப்ரெண்ட் சொன்னாள்.ஜஸ்ட் பார்த்து விட்டு போகலாமேயென்று வந்தேன்”

“ஓ…சரிங்க மேடம்” அவன் ஜூஸை குடிக்காமல் கையிலிருந்த ஸ்ட்ராவால் கலக்கிக் கொண்டிருந்தான்.

“குடிக்கவில்லை?”

அவன் அதிகம் பேசாமல் இப்படி அமர்ந்திருப்பது அவளுக்கு எரிச்சலை கொடுத்தது.அந்த லைவ்…இந்த ஸ்பீச்…எத்தனை விபரம்…எத்தனை விசயம்! என்று வரிசையாக பிரமிப்பாய் பேசாமல்…

ப்ச்.அவள் கிளம்பி விட முடிவெடுத்தாள்.

“நான் கிளம்புகிறேன்”

“சாரி மேடம்.உங்களுடன் நிறைய பேச நினைத்திருந்தேன்.எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை”

இப்போது அவளுக்குள் மெல்லிய உற்சாகம் வந்துவிட்டது.

” தயக்கம் வேண்டாம்.எதுவானாலும் கேளுங்கள்.எதுவும் பிரச்சனையா ? யாருக்கு? யாருடன் ?பயப்படாதீர்கள் எனக்கு ஐஜியின் மனைவி வரை பழக்கம் உண்டு.தைரியமாக சொல்லுங்கள்”

“அது ஏன் மேடம் எப்போதும் பெண்கள் பக்கமே பேசுகிறீர்கள்?” அவன் சட்டென கேட்க திகைத்தாள்.

” இது என்ன கேள்வி. பெண்களுக்கு இந்த சமூகத்தில் நிறைய அநீதி இழைக்கப்படுகிறது.என்னைப் போல் ஒரு செலிபிரட்டி அதைப் பேசாவிட்டால் எப்படி? “

“ஓ…” அவன் கைகள் மெனுகார்டின் ஓரத்தை மடக்கி பிரித்தபடி இருந்தன.

“செலிபிரட்டி…செலிபிரட்டி ” முணுமுணுத்தான்.” அப்படி என்ன பெரிய செலிபிரட்டி நீங்க?” குத்தூசி போலிருந்தது கேள்வி.

அவள் எழுந்துவிட்டாள்.” ஹலோ என்னை பேஸ்புக்கில் ஒரு லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள்.இன்ஸ்ட்டாகிராமில் மூன்று லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள்.நான் அங்கே பதிவாக வைக்கும் சிறுபுள்ளிக்கு கூட என்ன அர்த்தமென்று பெரிய கூட்டமே விவாதித்துக் கொண்டிருக்கிறது. நான் செலிபிரட்டி இல்லையா?”

அவன் இரு கை உயர்த்திக் கொண்டு எழுந்தான்.” ஒத்துக்கிறேன்.நீங்க பெரிய ஆள்தான்.உட்காருங்க “

அவள் உட்காரவில்லை.அவளது தகுதியறியாத ஒருவனுடன் தொடர்ந்து பேசும் அவசியம் அவளுக்கில்லை.

“நான் கிளம்புகிறேன்”

“மேடம்…மேடம் ” அவன் அழைக்க அழைக்க நடந்துவிட்டாள்.

வெளியில் அவளிருந்த இடத்தை ஒரு கூட்டம் கடந்தது… இல்லையில்லை ஓடியது.ஏதோ ஓர் பதட்டம் அங்கிருந்தோரிடம் உருவானது.

இப்போது மற்றுமொரு கும்பல் அசாத்திய விரைவுடன் ஓடியது.இவர்களின் கைகளில் சில ஆயுதங்கள் உருட்டுக்கட்டைகள்,சைக்கிள் செயின்.அ…அதோ அந்த கடைசியில் போகிறவனிடம் அரிவாள்.அவளுக்கு வியர்க்க தொடங்கியது.

சொடுக்கு போடும் நேரத்தில் அந்த ரோட்டிலிருந்த ப்ளாட்பார கடைகளனைத்தும் காணாமல் போயின.




அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.

அவசரமாக பக்கவாட்டு சந்திற்குள் நுழைந்து மறைந்து நின்றாள்.

 “மேடம் இந்தப் பக்கம் வாங்க ” என்ற குரலுக்கு திரும்பி பார்த்தாள். ஆசுவாசமடைந்தாள்.

அவன்தான்….யாரென்று தெரியாதவன் தான்.ஆனாலும் இந்த நிலையில் கொஞ்சம் தெரிந்த முகம் சிறு நிம்மதியை கொடுத்தது.

வேகமாக அவனை நோக்கி நடந்தாள்.

“இ…இங்கே என்ன நடக்கிறது ?”

” இந்த ஏரியாவே இப்படித்தான் மேடம்.சாதிப் பிரச்சனை.இரண்டு பெரிய அரசியல் தலைகள் .அடிக்கடி இப்படித்தான் தகராறு நடக்கும்.இரண்டு மூணு தலை உருளாம பிரச்சனை முடியாது “

“என்ன இப்படி சாதாரணமா சொல்றீங்க?” அவளுக்கு உதடுகள் உலர்ந்தன.

அவன் அவளை உற்றுப் பார்த்தான்.” மேடம் பயப்படுறீங்களா? பெண்களின் ஜான்சிராணி ,மங்கையரின் இந்திரா காந்தி.பயப்படலாங்களா?”

“நக்கல் பண்றீங்களா?”

“ஐயோ!சத்தியமா இல்லீங்க மேடம்.வலைதளங்களில் முழங்கும் பேச்சு இங்கே நடுங்குகிறதே…அந்தக் காரணத்தைத்தான் கேட்டேன்”

 மௌனமானாள்.

“சாதிகளை எதிர்த்து எத்தனை கருத்துக்கள் பதிவாக போட்டிருக்கிறீர்கள் மேடம்? சந்தர்ப்பம் கிடைத்தால் சாதி தலைவர்களை செருப்பை கழட்டி அடிப்பேனென்று சொன்னீர்களே?”

அவளுள் அவஸ்தை பூரான். திடுமென அந்த சந்தின் ஆரம்பத்தில் இருவர் ஆக்ரோசமாக நுழைந்து சுற்று முற்றும் தேட,அவளுக்குள் அருவிப் பாய்ச்சலாய் பதட்டம் நிரம்பியது.

” இதோ இதற்கு பின்னால் வாங்க மேடம்”

படுதாவாக தொங்கிக் கொண்டிருந்த ப்ளாஸ்டிக் தார்பாயின் பின் அவன் நின்று கொண்டு அவளையும் அழைத்தான்.ஓடி பதுங்கிக் கொண்டாள்.

தார்பாயின் அடியில் சிறு இருள் பரவ, மின்னும் அவன் கண்களை கலவரத்துடன் பார்த்தாள்.

“ஆக சமூக சிந்தனை கிடையாது,பொது அறிவு கிடையாது,அரசியல் தெரியாது.ஆனாலும் பொதுவெளியில் நீங்கள் ஓரு செலிபிரேட்டி.அது எப்படி? இதோ இப்படி கலர் கலரா கவர்ச்சியா உடையணிந்து விதம் விதமா நின்னு,நெளிச்சு போஸ் கொடுத்து…”

“ராஸ்கல் .மரியாதையாக பேசு”விரலாட்டி சீறினாள்.

வேட்டை நாயின் மூச்சிரைப்புடன் அவளை பற்றியவன் சுவரோடு அவளை நசுக்கி வாய் மீது வாய் வைத்தான்.பேச்சோ, மூச்சோ வர விடாமல் வேட்டை மிருகத்தின் வெறியுடன் செயல்பட்டான்.

“உன்னை போன்ற ஒன்றுக்கும் உதவாத மேனாமினுக்கி பொம்பளைகளாலதான் என்னைப் போன்ற ஆம்பளைகளுக்கு இந்த சமுதாயத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.நீங்களெல்லாம் பொத்திக்கிட்டு வீட்டுக்குள் கிடந்தீர்களானால், எங்களுக்கெல்லாம் எங்கள் இடம் கிடைச்சுடும்.போடி போய் பதிவும் , வீடியோவும் போடு.இந்த மாதிரி ஒருத்தன் என்னை கிஸ் பண்ணிட்டான்னு உன் பாலோயர்ஸ்கிட்ட சொல்லு .போ…”

கழுத்தை பிடித்து அவன் தள்ளிய வேகத்தில் மறைவிடத்திலிருந்து துள்ளி வந்து தரையில் சொத்தென விழுந்தாள்.

 சந்தின் முனையில் நின்றிருந்த அந்த இரண்டு பேரும் தப தபவென இவளை நோக்கி ஓடி வரத் துவங்கினர்.

மிருணாளினி படக்கென விழித்துக் கொண்டாள். காதிற்குள் காலிங்பெல் சத்தம் கேட்க அவசரமாக எழுந்து போய் கதவை திறந்தாள்.




“பத்து நிமிசமா பெல் அடிக்கிறேன்” சலித்தபடி உள்ளே வந்தான் மகன்.கல்லூரி முதல் வருடம் படிப்பவன்.

“என்ன டிபன்மா?” அவன் கேட்க, விழித்தாள்.

“பசிக்குதும்மா” என்றபடி வந்து சேர்ந்த மகள் பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள்.

“சாரிம்மா.கொஞ்சம் உடம்பு சரியில்லை.அம்மா தூங்கிட்டேன்.ப்ரட்ல ஜாம் தடவி தரவா? “

ஏதோ முணுமுணுத்தபடி உள்ளே போனான் மகன்.

“அம்மா எனக்கு மயோனிஸ் வச்சு சான்ட்விச் செய்து தர்றீங்களா? ” மகள் கேட்டாள்.

அவள் பரபரப்பாக செயல்பட்டாள்.சாஷும், சீஷுமாக பொன்னிறத்தில் அவள் செய்து வைத்த சாண்ட்விச் பிள்ளைகள் முகத்தில் திருப்தி உண்டாக்குவதை பார்த்தவள் மனம் லேசானது.

ஆனால் “அம்மா டெய்லி பிரட்டுதான்பா தர்றாங்க” தகப்பனிடம் மகனின் புகாரில் உள்ளம் சுருங்கியது.

” ஏன்பா ?”

” எப்பவுமே போன் பார்த்துட்டே இருக்காங்கப்பா.பேஸ்புக்,

இன்ஸ்டாகிராம்.எங்களை கவனிக்கிறதேயில்லை”

ரவீந்தர் ஏதோ சொல்வது காதில் மசமசப்பாக விழுந்தது. சுருங்கிய மனதுடன் இரவு சமையலை ஆரம்பித்தாள்.

சப்பாத்தி,நவரத்ன குருமா,வெங்காய பச்சடி. வீட்டினருக்காக வியர்வை வழிய வேலை செய்வது ஏதோ ஒரு திருப்தியை அவளுள் விதைத்தது.

“மாவு இருக்குமே.தோசை ஊத்தியிருக்கலாமே மிருணா?”

“சப்பாத்தி தேய்க்க என்னை கூப்பிட்டிருக்கலாமேம்மா?” கணவன்,மகளை புன்னகையுடன் பார்த்தபடி தட்டில் சப்பாத்தி வைத்தாள்.

” சாப்பிடுங்க “




“நிறைய வேலையா ? சாரிம்மா ” தட்டை சிங்கில் கொண்டு வந்து போட்டு விட்டு தயங்கி நின்ற மகனின் தலையை கோதினாள்.

இரவு கணவனின் அருகாமை ஏனோ அவளை உறுத்த,எழுந்து வந்து லைட் போடாமலேயே விடிவிளக்கு வெளிச்சத்தில்  ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.இ…இதை எப்படி கடந்து வரப் போகிறேன் ? நண்டுக் கால்கள் மூளையை குடைந்து எடுப்பதாய் உணர்ந்து தலையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

” என்ன பிரச்சனை மிருணா ?”  திடுக்கிட்டு எழுந்தவளை கை பிடித்து தன்னருகே அமர்த்தினான் ரவீந்தர்.” எந்த விசயம் உன் மண்டையை உருட்டிக் கொண்டிருக்கிறதும்மா?”

அவளின் கை விரல்கள் நடுங்கத் துவங்கின.ரவீந்தர் சட்டென மனைவியை இழுத்து தோள் சார்த்திக் கொண்டான்

” பிரச்சனை உன் பேஸ்புக்கிலா?இன்ஸ்டாவிலா ? மிருண் ? “

மிருணாளினி உடைந்தாள். கதறியபடி கணவனைக் கட்டிக் கொண்டாள்.

“என்னை மன்னிச்சிடுங்க.இனி நான் எல்லா சோசியல் மீடியாவையும் விட்டுடுறேன்”

” ப்ச்.அது அப்புறம்.முதல்ல உன் பிரச்சனையை சொல் “

நிறைய தயக்கமிருந்தாலும் கணவனிடம் எதையும் மறைக்க எண்ணவில்லை அவள்.

“என் உதட்டை பாருங்க.மிருகம் ” இவ்வளவு நேரமாக தலை குனிந்து முகம் திருப்பி இருந்ததை விட்டு  கணவன் கண்களுக்கு முகமுயர்த்தி காட்டினாள்.

ரவீந்தர் கண்கள் மூடி யோசனையில் ஆழ்ந்தான்.பளிச்சென விளக்கெரிய திடுக்கிட்டு நிமிர்ந்தவள் மகளும்,மகனும் அவரவர் அறை வாசலில் நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தாள்.

“ச்சீ ” சத்தமாக கத்தி பட்டென அறைக்கதவை மூடி உள்ளே போனான் மகன்.

மகள் ” அ…அம்மா எ…என்னம்மா செய்றது?” கேவினாள்.

ரவீந்தர் ” சரண்…சரண் என்ன பண்ற ? வெளியே வா ” அதட்டி அழைத்தான்.

“சாரு இப்போ எதுக்கு அழுகை? நிறுத்து ” மகளையும் அதட்டினான்.” இரண்டு பேரும் இங்கே உட்காருங்க “

“அப்பா எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லுங்க.இனி இது எதுவுமே அம்மாவுக்கு வேண்டாம்.வெளியே எங்கேயும் போக வேண்டாம்.பேசாமல் வீட்டிற்குள் சமையல் பண்ணிட்டு ,டிவி பார்த்துட்டு இருக்கட்டும் ” சரண் பொறிந்தான்.

” ஆமாம்பா.அம்மா எனக்கு பயமா இருக்கும்மா. எல்லாத்தையும் லாக் அவுட் பண்ணிடுங்கம்மா.யார்கிட்டயும் எதுவும் பேச வேண்டாம் “

மிருணாளினியும் தலையசைத்தாள்.” ம்.நானும் அதையேதான் நினைக்கிறேன்”

” பார் வாட் ?” அழுத்தமாக மூவர் முன்னும் வந்து விழுந்தது ரவீந்தரின் கேள்வி.மூவருமே விழித்தனர்.

” சரண் நாளையிலிருந்து உன்னோட கிரிக்கெட் கோச்சிங்கை விட்டுடுறியா ?”




” நோப்பா “

” சாரு உன்னோட வெஸ்டர்ன் டான்ஸ் கிளாசை விட்டுடு “

“அப்பா “

“உங்க இரண்டு பேருக்குமே தெரியும்.இது எனக்கு பிடிக்கலை”

“ஆனால் எங்களுக்கு பிடிச்சிருக்கேப்பா”

“உங்களுக்கு பிடித்ததை நீங்க செய்யும் போது அம்மாவை மட்டும் ஏன் தடுக்குறீங்க? “

“அதனால் ஒரு மாதிரி பிரச்சனை வருதேப்பா ?”

” ஏன் அந்த மாதிரி பிரச்சனை நாளையே உங்களுக்கு வராதா?”

“இந்த போட்டோ , வீடியோ இதனால் வர்றது இந்த தொல்லைகளெல்லாம்.இதையெல்லாம் நிறுத்…”

” கொஞ்சமிரு.நாம் இன்னமும் முழு விபரம் கேட்கவில்லை.மிருணா அப்புறம்  நடந்ததை சொல்லு.”

மிருணாளினி மலங்க விழித்தாள்.அவள் மனம் அந்த தார்பாயின் அடியிலேயே சொதசொதத்துக் கிடந்தது. அதை தாண்டி…?

மூளையை சுரண்டி யோசித்தாள்.

கீழே விழுந்தவளை நோக்கி ஓடி வந்தவர்களில் ஒருவன் அவள் கை தொட்டு தூக்க,அவனை உதற முயன்றபடி எழுந்தவள் மிக பலவீனமாக இருந்தாள்.அருகில் நின்றவன் அவள் முகம் பார்த்ததும் சூரியனித்தான்.

“அட..மிருணா ரவி “

இப்போது அடுத்தவனும் பிரகாசமானான்.” மேடம் நீங்களா?”

” இந்தப் பக்கம் எங்கே வந்தீங்க?”

“சு..சும்மா…ஷாப்பிங் “

“டேய் மேடம் ரொம்ப பயந்து போயிருக்காங்க.அவுங்களை பத்திரமா அனுப்பி வைக்கனும் “

அடுத்தவன் போனை எடுத்து பேசினான்.” டேய் அருள் உன் டாக்சியை எடுத்திட்டு உடனே நம்ம ஏரியாவுக்கு வாடா.ஒரு முக்கியமான விஐபியை வீட்டுக்கு கூட்டிட்டு போகனும் “

இருவருமாக அவளை மறைத்தாற் போல் நடத்தி சந்தின் மறு முனை வரை அழைத்து வந்து “இதெல்லாம் மோசமான ஏரியாங்க மேடம்.எங்களுக்கு இங்கேயே கிடந்து பழகிடுச்சு. நீங்கள்ளெல்லாம் இங்கே வரக் கூடாது.கிளம்புங்க ” டாக்சியில் அனுப்பி வைத்தனர்.

இதோ இப்போது சொல்லும் போதுதான் இந்த சம்பவத்தையே மிருணாளினி உணர்ந்தாள்.

ரவீந்தர் புன்னகையோடு தன் பிள்ளைகளை பார்த்தான்.

” அம்மாவிற்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் அவர்களுடன் நிற்க வேண்டும்.அதை விட்டு அவர்களை வீட்டிற்குள் சிறை வைப்பது நியாயமா?”

” அப்பா…பெண்களை பாதுகாப்பது ஆம்பளைங்க வேலையில்லையா ?” சரண் இழுத்தான்.




” பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து வாசலில் நின்று காவல் காப்பதா ஆம்பளைத்தனம் ? அவர்களை சுதந்திரமாக விட்டு அவர்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதுதான் ஆம்பளைத்தனம்.நீங்க எப்பவும் போல கலக்குங்கம்மா.நாங்க இருக்கோம் உங்க பின்னாடின்னு சொல்லுடா என் ஆம்பளை சிங்கமே “

சரண் திகைப்பாய் அப்பாவை பார்க்க, சாரு,” அடுத்த லைவ் எப்போம்மா ?”

சரண் ” ஐ ஆம் ப்ரௌடு போத் ஆப் யூ “

மிருணாளினி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்து திடமாய் நிமிர்ந்தாள்.

மறுநாள் மிருணா ரவியின் இன்ஸ்ட்க்ராம் லைவ்வில் அவள் காதுகளில் மட்டுமின்றி கண்களிலும் ,உதடுகளிலும் கூட வைரங்களின் மின்னல் மின்னியது.

                                                                               -நிறைவு –




What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!