Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-19

19

” அம்மா நான் என்ன செய்தேன்?”

“முத்துப் போல் பிள்ளைகள் இரண்டு, அவர்கள் மனம்போல் வாழ்வை அமைத்துக் கொடுத்து வீட்டிற்குள் வைத்து பக்குவமாய் வாழத் தெரியாமல் அவர்களை வீட்டை விட்டு விரட்டினாயே, ஒரு வருடமாக நீ மனம் மாறுவாய் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீ அசையவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களை மீண்டும் வீட்டிற்குள் வரவழைக்க இந்த உடம்பு சரியில்லாத நாடகம் போட்டேன். சுகவனம் எனக்கு ஒத்துழைத்தான்.”

“அம்மா உங்களுக்கு என்னுடைய கொள்கை தெரியும் .அதற்குப் பிறகும் நீங்களே இப்படி பேசினால் எப்படி?”

“என்னடா பெரிய கொள்கை? காதல் என்றால் உனக்கு பிடிக்காதா? காதல் செய்தவர்களை ஒதுக்கி வைத்து விடுவாயா? அப்படியானால் நீ முதலில் என்னைத்தான் ஒதுக்கி வைக்க வேண்டும். என்ன முழுக்கிறாய் ? நானும் உன் அப்பாவும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வேறு வேறு ஜாதி தெரியுமா? அதனால்தான் சொந்தங்கள் எல்லாம் எங்களை ஒதுக்கி விட சொந்த ஊரில் இருக்க முடியாமல் பிழைப்பிற்காக சென்னைக்கு வந்தோம். இங்கேதான் நீ பிறந்தாய். இப்போது சொல் என்னையும் ஒதுக்கி வைத்து விடுகிறாயா?”

சத்யேந்திரன் மட்டுமல்ல பாட்டி சொன்ன தகவல் குடும்பத்தினர் அனைவருக்கும் புதிதென்பதால் எல்லோருமே மித மிஞ்சிய அதிர்ச்சியுடன் நின்றிருந்தனர்.

“எதற்காக எல்லோரும் இப்படி விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்? செய்யத்தகாத செயல் எதையும் நான் செய்யவில்லை. இப்போதும் தலைநிமிர்ந்து சொல்கிறேன். என் கணவருடன் 40 வருடங்கள் நிறைவான மணவாழ்க்கை நடத்தி இருக்கிறேன். அந்த திமிரில் சொல்கிறேன் .காதல் தவறில்லை. காதல் மணம் நியாயமானது “மகனின் முகம் பார்த்து சத்தமாக சொன்னார்.




“ஆஹா அதோ பாருங்களம்மா உங்கள் பேத்தியை… காதல் திருமணம் செய்து கொண்டவள், கண்ணீர் வடித்து நிற்கிறாளே காரணம் கேளுங்கள்”

“அது பெற்றவனான உன் தவறு. குழந்தை ஆசைப்படுகிறாள் என்றால் உடன் நின்று அவர்கள் பக்கத்து பெரியவர்களுடன் பேசி முறையாக நீ திருமணம் முடித்துக் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை அவளுக்கு வந்திருக்காது. மனைவிக்கு பிறந்த வீட்டில் பெரிய ஆதரவு இருக்கிறது என்ற எண்ணம் இருக்கும் வரை எந்த ஆணும் அவளை கேவலமாக பேசவோ படுத்தவோ மாட்டான்”

“காதலென்ற பெயரில் குடும்பத்தை விட்டு ஒதுக்கப்படும் ஆண் பெண் இருவர் மனதிலும் ஒரு விரிசல் விழுந்து விடுகிறது. பரஸ்பரம் ஒருவருடைய குறைகள் மற்றவருக்கு பூதாகரமாகி தெரிய சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கை மாறி விடுகிறது.

தங்கள் காதல் தோற்கக் கூடாது என்ற எண்ணத்துடன் பற்களைக் கடித்துக் கொண்டு குறைபாடுகளை பொறுத்துப் போகும் தம்பதிகள்தான் வாழ்வில் ஜெயிக்கின்றனர். அவர்கள் காதலுக்கு கொடுக்கும் மரியாதை அது”

“அல்லாமல் என் சுய கௌரவம் ,தற்சார்பு, தன் இயல்பு என பேசுபவர்கள் வாழ்வை தொலைத்து விட்டு நிற்கிறார்கள் .இப்போது கதிரவனும் திவ்யாவும் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள்” பாட்டி விவரித்து முடிக்க சத்யேந்திரன் அன்னையை வெறுப்பாய் பார்த்தார்.

“எதற்கம்மா இந்த கதாகாலட்சேபம்? உங்கள் மேல் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தேன். என்னையே சீக்கிரமே இறக்கப் போவதாக சொல்லி பயமுறுத்தி இருக்கிறீர்கள். அத்தோடு உங்கள் முன் வாழ்க்கை கதையையும் மறைத்து விட்டீர்கள் .இப்போது இதையெல்லாம் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?”

“காதலைப் பற்றியும் காதலுக்கு பின்னான திருமண வாழ்வு பற்றியும் பேசுவதற்கு என்னை விட தகுதியானவர் யாரும் கிடையாது .ஏனென்றால் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக நிறைவாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவள்” பாட்டி பெருமிதமாக தலை நிமிர்த்தினார்.

சத்யேந்திரன் முகத்தை திருப்பிக் கொண்டார் “நீங்கள் எத்தனை சொன்னாலும் இந்த காதலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”

அப்பாவின் உறுதியில் குலைந்த திவ்யா சிறு விம்மலுடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

“பிள்ளைகள் விஷயத்தில் ,உன் பிடிவாதத்தை காட்டாதே சத்யா. கதிரவனுக்கும் திவ்யாவிற்கும் வாழ்க்கையின் அருமை பெருமைகளை காட்ட வேண்டிய நிலையில் பெரியவர்களாகிய நாம் இருக்கின்றோம். ஒரு ஆண் பிள்ளையின் ஆதாரமான சம்பாத்தியத்தில் குறை இருப்பதை திவ்யா சுட்டிக்காட்டி குத்த கதிரவன் அவளது உடல் அழகை குறை கூற தொடங்கி இருக்கிறான். இருவரின் குற்றஞ்சாட்டலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது பிரிந்து விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது”

சத்யேந்திரன் கண்களை இறுக மூடிக் கொண்டு தாய் சொன்னதை ஜீரணிக்க முயன்றார் .அவர் முகம் சுருங்கி கருத்து பத்து வயது அதிகரித்தது போல் தென்பட்டார்.

“இது நான் எதிர்பார்த்ததுதானே? காதலல்லாம் வாழ்விற்கு உதவாது.பரஸ்பரம் தாய் தந்தை உடன்பிறந்தவர்களை கவனித்து குடும்பப் பின்னணியை ஆராய்ந்து தொழில் செல்வ வளம் தெரிந்து கொண்டு மேலே சாஸ்திரம் சம்பிரதாயம் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள் தான் நிலைக்கும் ,மற்றபடி இதுபோல செய்யப்படும் திருமணங்கள் இப்படித்தான் வந்து நிற்கும் .இதில் நான் செய்வதற்கு எதுவும் இல்லை”

பொங்கிய ஆத்திரத்துடன் மகிதா சத்யேந்திரன் முன் வந்து நின்றாள்” அப்படியே வைத்துக் கொள்வோம் மாமா. இப்படி நீங்கள் சொன்ன இத்தனை விவரங்களையும் அலசி ஆராய்ந்துதானே எங்கள் திருமணத்தை முடித்து வைத்தீர்கள். இதோ நாங்களும் பிரிந்து தானே வாழ்கிறோம்? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“நீங்கள் பிரியமாட்டீர்கள். அன்று திவ்யாவை காணோம் என்றதும் அவள் திருமணம் முடித்து விட்டாள் என்று கேள்விப்படவும் ,இதற்கு நீதான் காரணமாக இருப்பாயென்று தவறாக நினைத்து விட்டேன். அந்த கோபத்தில் தான் வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். இந்த ஒரு வருடத்தில் நன்றாக அலசி ஆராய்ந்து உண்மையை புரிந்து கொண்டேன். பிறகுதான் உன்னை வீட்டிற்குள் அனுமதித்திருக்கிறேன். நீங்கள் இருவரும் இனி சேர்ந்து தான் வாழ போகிறீர்கள்”

“அதனை நீங்கள் சொல்ல முடியாது மாமா .வாழப் போகிற நான்தான் முடிவு செய்ய வேண்டும்.”

சத்யேந்திரன் மகிதாவை அதிர்ச்சியாக பார்த்தார. “வேண்டாம் மகிதா என்னுடன் போட்டிக்காக உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே”

“அனைவரின் முன்பாக என் கன்னத்தில் அறைந்து வெளியே தள்ளியவருடன் மீண்டும் குடும்பம் நடத்துவேன் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் மாமா ?அன்றும் சரி இன்றும் சரி உங்கள் மகனை நான் காதலிக்கவே இல்லை. காதலின்றி திருமணம் என்பது என் வரையில் சாத்தியம் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். அதனால் நான் கிளம்புகிறேன்”

அனைவரும் அதிர்ந்து பார்க்க பார்க்கவே மகிதா வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.




What’s your Reaction?
+1
59
+1
34
+1
1
+1
3
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!