Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் – 14

14

ராதிகா குழந்தையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள் மதிய வேளையில் உறக்கம் அத்தனைப் பழக்கம் இல்லை அவளுக்கு,  பக்கத்து தெரு ஸ்வீட் ஸ்டாலில் அம்மா பலகாரம் செய்து தருவதாக சொல்லி சேர்ந்துகொண்டு நாள் ஐந்தாகிப்போனது. நிரம்பப் பேச்சு வார்தையில்லாமல் போயிருந்தாலும் மனம் அம்மாவின் அருகாமையில் சற்றே இதம் காணும்.

இந்த வீட்டில் அவளின் மேல் அக்கறையாய் உள்ள ஒரே ஜீவன் அதைக் கடந்து பொக்கைவாய் காட்டி அழகாய் சிரிக்கும் மடியில் உள்ள குழந்தை ஒன்று அவள் நம்பி வந்தது இன்னொன்று அவளை நம்பி வந்தது. தன் வாழ்க்கை திசைத் திருப்பி விட்டது அவளின் தவறு என்பதே அம்மாவின் மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறிப்போனது. விஜி அலுவலகத்திற்கு கிளம்பியிருந்தாள். வழக்கத்திற்கு மாறாக அவள் இன்று எதையும் பேசவில்லை, வாய் மூடி மெளனியாகவே கிளம்பிப்போனாள். மதிய உணவைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. அவளின் செய்கைக்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளவும் முடியவில்லை. 

இன்று புதிய புடவை உடுத்தியிருந்தாள் ஒருமாதம் கூட முடிந்திராத நிலையில் அவளுக்கு புதிய உடைகள் வாங்கிட எப்படி பணம் கிடைத்திருக்கும் ஆனால் இது எதையும் கேட்க இயலாத நிலையில் அல்லவா அவளின் நிலைமை இருக்கிறது. ஏதும் பேசாத மடந்தையாக இருக்கும் போதே விஜி வார்த்தைகளால் அவளை வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறாள் அம்மாதிரி விஷயங்களை கேட்க முதலில் தனக்கே முதுகெலும்பு இல்லையே, அண்டிப்பிழைக்கும் பிழைப்பு இருக்கும் போது நற்செயல்களைக் கூட கேட்க இயலவில்லையே, தவியாய்த் தவித்தாள் அம்மா இன்று வீட்டிற்கு வந்தபிறகு விஜியின் சில விஷயங்களைப் பற்றி தெரிவிக்கவேண்டும். 

விஜி அவசரத்தில் தன் அலமாரியைப் பூட்டாமல் போய்விட்டாள் போலும், அவளின் அலமாரியைத் திறந்து ஒவ்வொன்றாய் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது குழந்தை மடமடவென்று அதை அடுக்கினாள். போக்கிரி சித்தி வந்தா நீ என்னாவே தெரியுமா என்று மகனை செல்லமாய் கண்டித்தபடியே அடுக்கும்போது சிறிய நகைப்பெட்டி ஒன்று கண்ணில் பட்டது அழகிய தங்கத்தோடு மயிலைபோன்ற முகப்பில் ஒரு ஜமிக்கி, ராதிகாவின் முகத்தில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. அனைத்தையும் எடுத்து அடுக்கிவிட்டு அலமாரியைப் பூட்டி சாமி படத்திற்கு அருகில் சாவியை வைத்தாள். அம்மாவிடம் கட்டாயம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவளின் வரவிற்காய் காத்திருந்தாள் வாசலில் ஏதோ சப்தம் கேட்க கொஞ்சம் சுடுதண்ணீர் வேண்டும் என்று அப்பா சைகை செய்தார். 




சுடுநீர் கொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள். காற்றுக்கு ஜன்னலைத் திறந்து வைத்தவள். அப்பா என்றொரு ஜீவன் இருப்பதே இப்படி ஏதாவது தேவை ஏற்படும் போது கேட்பதை வைத்துதான் தெரியும். 

நினைவு தெரிந்த வரையில் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அம்மா படுக்கையில் இருந்தே தேள் போல் கொட்டும் பாட்டி, எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாத அப்பா இளமையில் வறுமை எத்தனை கொடுமையோ அத்தனை கொடுமை தனிமையும். ஏதேதோ நினைவுகள் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருந்த நிம்மதியினையும் கொலை செய்து கொண்டு இருந்தது. யாரை நொந்து என்ன புண்ணியம் யாராலும் அவளடைய வேதனையைத் தீர்க்க முடியாது மாறாக குவிக்க முடியும். ஒவ்வொரு இடங்களிலும் அவள் மேல் வீசும் பார்வைகளைப் பார்த்துக் கொண்டே நகர்கிறாள் வேறயென்ன செய்ய முடியும்.

கடவுள் சட்டென்று கடக்க கூடிய ஒரு இக்கட்டையா அவளுக்குக் கொடுத்திருக்கிறான் இல்லையே ? நாம் எதிர்பார்ப்பதைப் போல் நடந்து விட்டால் மனிதனைக் கைகளைப் பிடிக்க முடியாது என்று நினைத்துதான் பொம்மலாட்ட கயிற்றை அவனே வைத்திருக்கிறான். சில நேரங்களில் இப்படியே தன் வாழ்வு முடிந்துவிடுமோ என்று கூட பயம் வந்தது. ஆனால் என்ன செய்ய முடியும் விதவைத் திருமணம் எல்லாம் நமக்கு சாத்தியமா ? அம்மட்டில் ஒன்றை மூளியா பார்க்கிற ஒவ்வொரு நிமிடமும் எனக்கு தப்புப்பண்ணிட்டேன்னு ஒரு வலி உயிரைத் திருகுது ராதிகா. நீ அப்படியிருக்க வேண்டாம். அம்மாவின் இரைஞ்சலான வார்த்தைகள் விஜியும் கூட அதைத்தான் ஆமோத்திதாள் ஆனால் வேறு விதமான வார்த்தைகளால்.

நாம வாழுறது ஒன்னும் கற்காலம் இல்லை, நீ பிறந்ததில் இருந்தே பூவும் பொட்டோடத்தானே இருக்கே. புருஷன் செத்திட்டா எல்லாத்தையும் இழந்துடனுமா என்ன ?  நீ பூவும் பொட்டும் வைச்சிக்கிறதாலே இந்த உலகம் ஒண்ணும் அழிஞ்சிப் போகப்போறது இல்லை புரியுதா ?! அப்படியே அவர்கூட வாழ்ந்த இரண்டு மூணு வருஷ வாழ்க்கையிலே என்னத்தை நீ சாதிச்சே பிள்ளையைத் தவிர ? அவனொன்னும் அத்தனை சந்தோஷமா உன்னை வைச்சிக்கலையே ?! அப்பாவை மாதிரி அவனும் அம்மா கோண்டு விட்டுத்தள்ளு ராதிகா. இனிமே உனக்கு வாழ்க்கையிலே முதல் பிடிப்பு உன் குழந்தை ஏதாவது கத்துக்கோ அதுக்கும் சேர்த்து வைக்கணுமில்லை இன்னும் எத்தனை நாள் என்னோட சம்பாத்தியிலேயே குப்பை கொட்ட முடியும் எனக்குன்னு ஒரு நல்லது நடக்க வேண்டாமா ?!

தேள் கொடுக்காய் வந்த வார்த்தைகள் தான் அதில் இருந்த நிஜம் சுடத்தான் செய்தது. அம்மாவின் அத்தனை மன வருத்தங்களையும் உணர்ந்து கொண்ட ஒரு பெண்ணாகத்தான் ராதிகா வளர்ந்தாள். நெருக்கடியான அந்த நிமிடத்தில் தன் பெண்ணின் திருமணத்தை தன் சக்திக்கு மீறி அவள் நடத்தியும் மறுவார்த்தைப் பேசாமல் ஒப்புக்கொண்டாளே ?! அந்த நெருக்கடியான நிலைக்கு தந்தையும் ஒரு காரணம் தானே!

விஜி தன் பள்ளிப்படிப்போடு தட்டச்சும் கற்றுக்கொண்டாள். நல்ல கல்லூரியில் இடமும் கிடைத்தது. ராதிகாவின் படிப்பு பாதியிலே நின்று தையல் எந்திரமே துணையாகிப் போனது. அம்மா தங்கை அவள் என்று தனியொரு உலகம், ஆனால் அதற்கும் பங்கம் வந்தது தந்தையின் சகோதரியான பாமினி வடிவில். 

அவளின் மார்க்குக்கு நல்ல கல்லூரியில் மேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது ஆனால், ராதிகாவின் படிப்பு பாதியிலேயே நின்று போனது அம்மாவின் கஷ்டங்களில் பங்களிப்பு செய்திருந்தாள். அம்மா தங்கை அவள் என்று ஒரு சிறு உலகம் அதற்கும் பங்கம் வந்தது தந்தையின் சகோதரியின் வடிவில் !

கட்டினவன் குடிச்சே அழிஞ்சான் இனிமே எனக்குன்னு யார் இருக்காங்க, பெத்த பிள்ளையைத்தவிர அவனும் அங்கேயே இருக்கலாம்மா நான் கை நிறைய சம்பாதிக்கிறேன் உன்னை ராணி மாதிரி பார்த்துக்கறேன்னு எத்தனையோ சொன்னான். நான் சாகப்போற காலத்திலே பெத்த அம்மாவும் கல்குண்டுமாதிரி வடப்பிறந்தவனும் இருக்கும் போது ஏன் கண்காணாத இடத்திலே அநாதையா இருக்கணுன்னு இங்கே ஓடிவந்தேன். ஆனா தினமும் உம்மருமக கையால இடிசோறு வாங்கித் திங்கணுன்னு எனக்குத் தலையெழுத்து.

பாமியின் குரல் அடுக்களை வரையில் கேட்டது. 




நேற்று ஜட்ஜ் வீட்டில் நடந்த விழாவிற்கு ராஜம்தான் சமையல் என்ன உன் நாத்தி வந்திருக்காளாம்மே, ரொம்ப நாளைக்கு அப்பறம். ஆனா அவகிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இரு ராஜம். என்றார் அவர் 

கைவேலையை நிறுத்தி என்னாச்சும்மா புருஷன் செத்துப்போனதால கொஞ்சநாள் தங்கிட்டு போக வந்திருக்கிறதா என் புருஷன் சொன்னாரு ?! நீங்க சொல்றதைப் பார்த்தா

தப்புகாரியம்தான் ! அவரு ஊரு முழுக்க கடனை வாங்கிவைச்சிட்டு செத்துப் போயிருக்காரு. பையனுடைய சேர்க்கையும் சரியில்லை போன வாரம்தான் அவன் திருட்டுகேசுலே உள்ளே போயிட்டு வெளியே வந்திருக்கான் இதுக்கு மேல அங்கேயிருந்தா பிரச்சனைன்னு இங்கே கூட்டிட்டு வந்திருக்கா வயசுக்கு வந்த இரண்டு பொண்ணை வைச்சிகிட்டு தடிமாடுமாதிரி அவனை ஏன் வீட்டுக்குள்ளே விட்டே, எச்சரிக்கையா இரு ராஜம் என்று அவர் சொல்லும் போதே நெஞ்சில் கணம் கூடிவிட்டது ராஜத்திற்கு. யாரும் அறியாமல் மகளை எச்சரித்தாள். ராதிகாவின் மேல் அவன் பார்வை படிவதை அவள் உணர்ந்து இந்தா அவன் முன்னாடி எங்கேயும் நிற்காதே துஷ்டனைக் கண்டால் நாமதான் தூர ஒதுங்கணும் எனக்கு சின்னவளை நினைச்சி பழக்கம் இல்லை ஆனா நீ அப்படியில்லையே ?!

இப்போ என்ன நடந்துடுச்சின்னு இப்படி கத்துறே பாமினி, அவ ஏதாவது சொன்னாளா ? இன்னும் சம்பாத்தியம் உங்க அண்ணன் கையை விட்டுப் போயிடல ? அவளுக்கு நாலு காசு பாக்குறோன்னு திமிரு

அண்ணனா அவனெங்க கட்டின பொண்டாட்டிய அடக்கவும் தெரியலை, படுக்கையைத் தட்டி தனியா போடுறா வெட்கம் இல்லாம இவனும் அவ போடுற சோத்தைத் தின்னுட்டு இருக்கான். இங்கே நிலைமை தெரியாம நான் வந்திருக்கக் கூடாது.

நாத்தனாரின் பேச்சை கேட்டும் கேட்காமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ராஜம். வெற்றப்பேச்சுக்கு பதில் சொல்ல அவளுக்கு நேரம் இல்லை, ராதிகா தையல் இயந்திரத்திற்கு எண்ணெய் இட்டு யாரோ கொடுத்திருந்த ஜாக்கெட்டுகளை வெட்டுவதற்காக கத்திரிக்கோலை தயார் செய்து கொண்டு இருந்தாள். பாவம் பிள்ளை ராத்திரி ரொம்ப நேரம் தைச்சா இதோ இப்போ காலையிலே எழுந்து பாத்திரம் விளக்கி ஒருவாய் காப்பித்தண்ணிய குடிச்சிட்டு மறுபடியும் தைக்க உட்கார்ந்திட்டா என்று நினைப்பில் டம்ளர்களில் அந்த பிரவுன் நிற காப்பியை ஊற்றி வாசலுக்கு வந்தாள். கத்திக் கொண்டு இருந்த பாமினியின் முன்னால் காபி டம்ளரை ணங்கென்று வைத்தாள். மாமியாருக்கு கஞ்சியும் கரண்டியும் வைத்துவிட்டு உப்புமாவிற்கு வறுத்திருந்த ரவையை கொதிக்கும் நீர்கலவையில் போட்டு தாளித்த போது ரவை உப்புமாவின் வாசம் மூச்சை நிறைத்தது. 




இன்னைக்கும் உப்புமாவா தாளித்த தேங்காய் சட்னியின் துணையில் தட்டில் விழுந்திருந்த டிபனை பார்த்து எல்லாம் என் தலையெழுத்து, புலம்பியபடியே மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தவள்

ராஜத்திற்கு கணவனின் மேல் கோபம் வந்தது. பெண்பிள்ளைகள் இருவரும் குதிராய் வளர்ந்திருக்கும் போது  தடியாய் ஒரு ஆண்பிள்ளையும் வந்து டேரா போட்டிருக்கும் நாத்தனாரின் அடாவடித்தனத்தை வீட்டு தலைவன் என்ற முறையில் கணவன் கண்டிக்க வேண்டாமா ? அதற்கு பதில் அவளுக்கு சப்போர்ட் செய்வதைப் போல் பேசமால் வாய் அடைத்துக் கொண்டு ஏன் உட்கார வேண்டும் என்று கோபம் வந்தது.

ராதிகாவும் அதை உணர்ந்தே இருந்தாள். அவனின் கண்கள் தன்னையே மொய்ப்பதை அவள் அறிந்து சற்று தள்ளியே இருந்தாலும் பெரும்பாலும் அம்மா இல்லாத நேரங்களில் பாட்டியோ அத்தையோ அவன் முன்னால் ஏதாவது ஒரு காரணத்திற்காக தன்னை நிறுத்தி வைப்பதைக் குறியாக கொண்டு இருப்பதை அவள் உணர்ந்தே இருந்தார்கள்.  

அன்று காலையில் மீண்டும் அதேநிலைதான் விடிஞ்சி நாலுமணி நேரம் ஆச்சு, எப்போதாம்மா உம்பொண்ணு காப்பித்தண்ணிய கண்ணுலே காட்டுவா அட நீ படுத்த படுக்கையாயிட்டே, நான் தண்டச்சோறுன்னு நினைக்கிறா நாளைக்கு சம்பந்தியாகப் போறவன்னு மட்டு மரியாதையில்லையே ?! டி சின்ன குட்டி வந்து 

உனக்கும் எங்களைப் பார்த்தா எளக்காரமா போச்சா உன் அத்தான் கிளம்பணும் போய் காப்பித்தண்ணியாவது வைச்சிகொடு.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் வெடுக்கென்று அடுக்களையில் இருந்து வெளிவாசப்படி வந்தாள் ராஜம் இங்கே பாருங்க அண்ணி வாயைக் கொஞ்சம் அடக்கிப் பேசுங்க, விடிஞ்சிதில இருந்து அடைஞ்ச வரைக்கும் உழைச்சிட்டுகிட்டு இருக்கோம் அத்தனை பேரும் நீங்க வந்ததுலே யாருக்கும் எந்த நட்டமும் இல்லை என் ன உலைலே இன்னும் ஒரு டம்ளர் அரிசி போடப்போறேன். இன்னும் எத்தனை நாளைக்கு இது என் அம்மாவோட வீடுன்னு வந்து ஆட்டம் போடப்போறீங்க. ஏற்கனவே இருக்கிற எல்லாத்தையும் வழிச்சி துடைச்சது போதாதா இப்போ எதை வழிச்சி கொண்டு போக வந்தீங்க இங்கே அப்படியெந்த சொத்தும் கொட்டிக் கிடக்கலை எம்பிள்ளைகளைத் தவிர, வீட்டுக்கு விருந்தாளி வந்தோமோ போனோமான்னு இருக்கணும் எப்பப்பாரு காட்டுக்கத்தல் கத்திட்டே இருந்தா என்ன அர்த்தம். ஏன் நீ குடும்பத்திலே இருந்தவங்க தானே வீட்டுவேலை பார்க்கத் தெரியாதா என்ன ?

ஒரு காப்பித்தண்ணி வைச்சி வெட்டிமுறிக்கிற உங்கபையனுக்கும் படுத்து கிடக்கிற அம்மாவுக்கும் கொடுக்க வேண்டியதுதானே உட்கார்ந்த எடத்திலே இருந்து எல்லாத்தையும் வாங்கணுன்னா கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகணும். 

அமைதியாய் அடக்கமாய் இருந்த ராஜத்திடம் இருந்து இத்தனை பேச்சை அவள் எதிர்பார்க்கவில்லை, முன்பைக் காட்டிலும் ஆக்ரோஷமாய் கத்தினாள் பாமினி

பாத்தியாம்மா உம் மருமக பேச்சை அவளுக்கு சம்பாதிக்கிற திமிரு, இதாபாருடி நீ வாழ வந்தவதான் இந்த வீட்டுக்கு அதை முதல்ல புரிஞ்சிக்கோ அதிலே§யும் பாவம் அண்ணன் கஷ்டப்படறனே அவன் புள்ளைக்கட்டிகிட்டு கொஞ்சம்அவன் குடும்பத்தைக் கைதூக்கிவிடுவோன்னு பார்த்தா,  இப்படி பேசுறீயே ?

ஊருலே என்ன தகிடுதத்தம் பண்ணீங்கன்னு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா. கிட்டத்தட்ட தலைமறைவா இருக்கிறாமாதிரி ஓடிவந்திருக்கிற உங்கபிள்ளைக்கு என் பொண்ணைக் கொடுக்கணுமா ? ஏன் நான் ஒருத்தி வந்து அல்லாடறதுப் பத்தாதா ? உங்களுக்கு சாப்பாடு போடறதினாலே நாங்க ஒண்ணும் குறைஞ்சி போயிடமாட்டோம்.ஆனா இன்னொரு என் பொண்ணைப் பத்தி பேசற வேலையெல்லாம் வேண்டாம் விரல் நீட்டி எச்சரித்து விட்டு நகர்ந்த ராஜத்தை மனதுக்குள் கருவினாள் பாமினி.




 

What’s your Reaction?
+1
6
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!