Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-17

17

“பிறந்த நாளாயிற்றே திவ்யாவுடைய நகைகளை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் போட்டுக் கொள்வாளே அத்தை ?”மகிதா சொல்ல, திலகவதியும் ஆவலுடன் தலையசைத்தார் .மகளுக்கு செய்த நகைகளை திருமணத்தின் போது கூட போட்டுப் பார்த்திராதவராயிற்றே!

ஆதித்யனுடன் போய் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வந்தவர் திவ்யாவிடம் கொடுத்தாள். “போட்டுக் கொண்டு வாம்மா. பார்க்க ஆசையாக இருக்கிறது”

திவ்யா அம்மா கொடுத்த பட்டுச்சேலையை கட்டிக்கொண்டு நகைகளையும் போட்டுக்கொண்டு வந்து நின்றபோது திலகவதியின் கண்கள் கலங்கிவிட்டன. “தேவதை போல் இருக்கிறாயம்மா” மகளை அணைத்து உச்சி முகர்ந்தாள்.

 சத்யேந்தர் மகளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி நின்றார்.அவர் கண்களில் லேசான நீர்படலம். கணவனின் தோள்களை மெல்ல இடித்து அதை  காட்டினாள் மகிதா.

” அட இந்த கற்பாறை கூட கலங்குகிறதா?” ஆச்சரியமாய் கிசுகிசுத்தான். “திவு அப்பா கிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கு” தங்கையை தூண்டினான்.

நகரப் போன தந்தையிடம் ஓடிப்போன திவ்யா அவர் கால்களில் விழுந்தாள் “அப்பா பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா”




 

 சத்யேந்திரனின் உடல் நடுங்கியது .கீழே விழுந்து கால்களை பற்றி இருக்கும் மகளை உதற முடியாமல் தவித்திருந்தார். குனிந்து மகளின் தோள் தொட்டு தூக்கியவர் அப்படியே தன் மேல் சாய்த்து கொண்டார். “நல்லா இருடா தங்கம்” தழுதழுத்த குரலில் ஆசீர்வதித்தார்.

ஒரு கதறலோடு அவர் தோளைக் கட்டிக் கொண்டாள் திவ்யா “அப்பா நான் செய்தது தப்புதான்பா .உங்களை தாண்டி போனது பெரிய பிழை .என்னை மன்னிச்சிடுங்கப்பா”

“சரிடாம்மா விடு. பிறந்த நாளும் அதுவுமாக அழ வேண்டாம்” மகளை தலைவருடி சமாதானப்படுத்தியவர் பார்வை மகிதா மேல் படிந்தது. பார்த்தாயா என் மகள் பிழை செய்தேன் என்று ஒத்துக் கொண்டாள் என்று கேட்டது.

மகிதா புன்னகையோடு பேசாமலிருந்து கொண்டாள். அதில் சத்யேந்திரனுக்கு சந்தேகம் வந்தது.இப்படி அமைதியாக இருப்பவள் இல்லையே இவள்? சந்தேகத்துடனேயே கிளம்பிப் போனார்.

பாட்டியை பரிசோதிக்க வந்த சுகவனமும் இவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.”பாட்டிக்கு ஐஸ்கிரீம் கொடுக்கலாமா டாக்டர்?” மகிதா கேட்க அவர் பதறி தலையாட்டினார்.

“அதெல்லாம் கொடுக்கக் கூடாது .அக்கா உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாது”

“கொஞ்சமாக கேக் ,ஒரே ஒரு துண்டு சாக்லேட், அரை கிண்ணம் சிக்கன் பிரியாணி” மகிதா அடுக்கிக் கொண்டே செல்ல திலகவதி அவளை கோபமாக பார்த்தாள்.

” என்ன இது வயதான பெரியவர்கள் படுத்திருக்கும் போது இப்படித்தான் உணவுகளை சொல்வாயா? அவர்களுக்கு எப்படி இருக்கும்?”

“உடனே சாப்பிட வேண்டும் போல் இருக்கும் .ஆனால் பாட்டி பாவம் சாப்பிட முடியாது” மகிதா உச்சுக் கொட்டி விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். 

அவள் பின்னேயே வந்த திலகவதி “மகிதா உனக்கு மண்டையில் எதுவுமே கிடையாதா? அத்தை பாவம் படுக்கையில் இருக்கிறார்கள் .அவர்களிடம் இது மாதிரி சாப்பாட்டு விஷயம் பேசலாமா?”

“எனக்கும் அதே யோசனைதான் அத்தை .ஒரு நிமிடம் வாங்களேன்” மாமியாரின் கையைப் பிடித்து வீட்டிற்கு பின்புறம் கூட்டிப் போய் சுற்றி பாட்டி இருந்த அறை ஜன்னல் பக்கம் வந்தாள். 

உள்ளே எட்டிப் பார்த்தவள் தலையை மெல்ல அசைத்தாள். “பூனைக்குட்டி சிக்கிடுச்சு”

“என்ன?” திலகவதி எட்டிப் பார்க்க கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து போட்டு மாமியார் பார்க்க வசதி செய்தாள்.உள்ளே பார்த்த திலகவதி “அச்சோ டாக்டர் சார் எதற்கு தலை குனிந்து கொண்டு சோகமாக இருக்கிறார்? அத்தைக்கு ஏதாவது…? நான் உள்ளே போய் பார்க்கட்டுமா?”பரபரக்க மகிதா பற்களை கடித்தாள்.

“அத்தை சரியாக கவனியுங்கள். டாக்டர் எதற்கு தலை குனிந்து கொண்டிருக்கிறார்?”

இப்போது நன்றாக எட்டிப் பார்த்துவிட்டு விழித்தாள். பாட்டி தைரியமாக நிமிர்ந்து உட்கார்ந்து சுகவனத்தின் தலையில் பட் பட்டென்று கொட்டிக் கொண்டிருந்தார். அவர் தலையை குனிந்து கொண்டு வாங்கிக் கொண்டிருந்தார்.

” வெறும் கஞ்சி தான் குடிக்கணுமா நான்? இன்னைக்கு பிரியாணி சாப்பிட போகிறேன். உன்னால் என்னடா செய்ய முடியும்? கிடைத்தது வாய்ப்பென்று பழி வாங்குகிறாயா?”

“ஆமாம். சின்னப்பிள்ளையில் 

மரமேறி மாங்காய் பறிக்கும் போது எத்தனை தடவை என் பங்கையும் சேர்த்து நீங்களே பிடுங்கி தின்றிருக்கிறீர்கள்?அதற்கெல்லாம் பதில் செய்ய அப்போதுதான் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கறது.விடமாட்டேன் உங்களை…”

 “என்னம்மா இது ?”திலகவதி அதிர்வுடன் கேட்டாள்.

“உங்க ஃபிராடு மாமியார் கிட்ட போய் கேளுங்க, என்னிடம் கேட்டால் எனக்கென்ன தெரியும்?”

திலகவதி மீண்டும் உள்ளே பார்க்க சுகவனம் “அக்கா எப்படியானாலும் வயதான பிறகு இதெல்லாம் சாப்பிடக்கூடாது தானே?” கேட்டுக் கொண்டிருந்தார்

“இது வைரம் வாய்ந்த கட்டைடா.என் கட்ட கீழ விழுகிற வரைக்கும் வகையா சாப்பிட்டுட்டுதான் போவேன். ஓடிப் போயிடு” சொல்ல சுகவனம் நிஜமாகவே ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டு வெளியே ஓடினார்.

“சை என்ன வீடு இது ?தெரியாத்தனமா இப்படி ஒரு வேஷம் போட்டுட்டேனே” பாட்டி வாய்விட்டு சலித்துக் கொண்டிருக்கும் போதே திவ்யா அறைக்குள் நுழைந்தாள். பாட்டி படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டார்.

“பாட்டி” அவர் அருகே அமர்ந்தாள். மெல்ல கண்களைத் திறந்த பாட்டி என்ன என்பது போல் பார்க்க, படுக்கையில் கிடந்த அவர் கைமேல் தலை சாய்த்து கொண்டாள் திவ்யா.

” எனக்கு மனது விட்டு பேசணும் பாட்டி .இங்கே வேறு யாரிடமும் பேச முடியுமென்று தோன்றவில்லை. உங்களால் எனக்கு ஒன்றும் செய்ய முடியாது.பதிலுக்கு பேசக்கூட முடியாது என்று தெரியும் .ஆனாலும் என் மனபாரத்தை இறக்கி வைக்க உங்களை தேடி வந்திருக்கிறேன்”

பாட்டி மற்றொரு கையால் அவள் தலையை வருடியபடி பேசு என தலையசைத்தார்.

” நான் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டேன் பாட்டி. நான் சந்தோசமாக இல்லை. என் கணவர் என்னை ரொம்பவே படுத்துகிறார்” விம்மினாள் திவ்யா.




What’s your Reaction?
+1
67
+1
24
+1
1
+1
7
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!