Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-11

11

பெரிதும் மனக்குழப்பத்தில் இருந்தது மூவருமேதான் சிவாவிற்கு அபிராமியின் செய்கைகள் புதிதாக இருந்தாலும் அவள் சற்று நெருக்கமாக வந்து பேசுவதற்கு காரணம் புரியவில்லை அன்றைய நிகழ்வின் பிறகு தன்னைப் பற்றி தவறான கணிப்பில் இருந்த அவளின் திடீர் நெருக்கம் தித்திப்பைத் தந்தாலும் இது எப்போது மாறுமோ என்று அவன் அறியவில்லை ? அறிய முற்படவும் இல்லை, வாழ்க்கையினை இதுவரையில் அதன் போக்கிலேயே தான் வாழப் பழகியிருக்கிறான் இனிமேலும் அப்படியே போகட்டுமே எதற்கு அதுயெப்படி இதுயெப்படி என்று யோசித்துக்கொண்டே இருந்தால் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய் வாழ்வு முழுமையும் இப்படி யோசிப்பதிலேயே கழிந்துவிடும் என்பது அவன் குட்டி மூளையில் எட்டிய சித்தாந்தம். 

எனவே அபிராமியின் இந்த மனமாற்றம் அவனுக்கு இனிக்கத்தான் செய்தது அதை ரசித்துக்கொண்டே அன்றைய வேலைகளில் மூழ்கினான். 

இதற்கெல்லாம் நேர்மாறாய் இருந்தது விஜியின் மனநிலை சிவாவிற்கும் அபிராமிக்கும் இதற்கு முன்பாகவே ஏதாவது இருக்குமோ என்று அப்படியிருந்தால் ? அட இவன் ஒருவன் தான் ஆண்மகனா ஊரில் மாப்பிள்ளைகளுக்கா பஞ்சம் விட்டுத்தள்ளு என்று இடித்துரைத்த மனதை குட்டினாள். ஆமா அப்படியே விஜிக்குன்னு மாப்பிள்ளை என்ன வரிசை கட்டியா நிக்குது. எனக்கென்னன்னு எல்லாத்திலும் ஒதுங்கி நிக்குற அப்பாவும், தேவையில்லாம அக்காவின் வாழ்க்கையை தப்பாக அமைத்துக் கொடுத்த அம்மாவுமா அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைத் தேடித் தரப்போகிறார்கள். 

நாமாகத் தேடிக்கொண்டால் தான் உண்டு, விஜி ஒரு தீர்மானத்தோடு சிவாவிடம் எப்படி பேசலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியின் வளாகத்தில் அவள் நுழையும் போது எதிர்ப்பட்ட பெண்மணியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தாள். தான் இதே நிறுவனத்தின் மற்றொரு கிளையில் இருந்ததாகவும் தற்போது இந்த ஊருக்கு வந்திருப்பதால் அதே வேலையினை இங்கே தொடர மேலாளரின் கடிதம் கொண்டு வந்து இருப்பதாகவும் தெரிவித்தாள் 

சற்று நேரத்திற்குள் உரிமையாளரின் அறைக்குள் அழைக்கப்பட அவள் தெரிவித்த வணக்கத்தை அலட்சியப்படுத்திய வணக்கத்தை முதலில் அலட்சியப்படுத்தியவனின் கண்களில் விஜியின் இளமை கொக்கிப் போட்டு இழுத்தது. வசீகரச்சிரிப்புடன் சற்று முன்பு மேலாளர் மூலமாக கிடைத்த கடிதத்தில் அவளின் பெயரைக் குறித்துக் கொண்டு வெல்கம் மிஸ்.விஜி என்று கையை நீட்டினான்.

நீட்டிய அந்தக் கரங்களைப் பற்றலாமா வேண்டாமா என்று முதலில் விஜிக்கு ஒரே குழப்பம் இத்தனை இளமையான முதலாளியை முதலில் அவள் எதிர்பார்க்கவில்லை அதிலும் சாதாரண கிளார்க்குக்கு கைநீட்டி வரவேற்பா அதிசயமாக இருக்க அவளின் முன் விரல்களை சொடுக்கியவன் அவளருகில் வந்து நின்றான்.

கைகளைக் குலுக்கியவளிடம் ஐம் மதன் முதல் நாள்ன்னு பதட்டமா இருக்கீங்களா ? பாண்டிச்சேரின்னு உங்க புரோபைல்ல இருக்கு இங்கே தங்க வேண்டிய இடமெல்லாம் எப்படி ஏதாவது உதவி தேவைன்னா சொல்லுங்க கம்பெனி ஆட்கைள வைச்சு செய்திடலாம் என்று அவள் அலட்டலாய் சொல்ல,

இல்லை ஸார் அம்மா எல்லாவேலையும் செய்துட்டாங்க அலுவலகத்தில் இருந்து அதிக தூரமில்லைன்னாலும் பஸ் வசதியிருக்கு தான் தங்கியிருந்த இடத்தை விஜி கூறவும் இது அபிராமியின் முகவரியாயிற்றே அப்படியெனில் இவளும் அங்கேதான் இருக்கிறாளா அபிராமியின்  வீட்டுக்குள் என்று மனதில் அடிக்கோடிட்டுக் கொண்டு நான் தினமும் அந்தப் பக்கமாகத்தான் போவேன். வாழ்த்துக்கள் உங்கள் வேலையைத் தொடருங்கள் என்று அனுப்பிவைத்தான். 

அவளின் மனதிற்குள் ஆனந்த ஆச்சரியம் வழிந்தது. இத்தனை இளமையான முதலாளியா ? அதுவும் கனிவான பார்வையுடன் நம் நிலைமைக்கு இவன் சற்று அதிகம் வந்த முதல் நாளே எதைப்பற்றியும் நினைக்க வேண்டாம் வேலையில் கவனம் செலுத்துவோம் இப்போதைய நிரந்தரம் இதுதானே? கண்ணாடித்தடுப்பின் முன்னால் விஜியின் செய்கையையே பார்த்துக்கொண்டு இருந்தான் மதன். 

இவளிடம் சந்தேகம் வராத அளவிற்கு காய்களை நகர்த்த வேண்டும். உலகிலேயே அவன் அதிகம் நேசிப்பது அவனின் அன்னையைத்தான் எந்த பிள்ளைதான் பெண்கள் விஷயத்தின் பலகீனத்தை அன்னை அறிவதில் சந்தோஷப்படுவான். இன்றுவரை அவர்கள் அவனிடம் முகம் கொடுத்து பேசாதது வதைத்தது ? முட்டாள்தனமாக அபிராமி செய்த காரியம் இதோ ஒன்றுக்கும் உதவாத இந்த எக்ஸ்போர்ட் அலுவலகத்தில் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டது என்ன செய்வது ? இங்கு பெண்களுக்கு பஞ்சம் இல்லையென்றாலும் முக்கால்வாசி அம்மாவின் வயதையொத்தவர்களே அப்படியிருக்கும் போது அவனின் தேவைகள் எங்கே தீரப்போகிறது அதிலும் பொருளாதாரத்திலும் கையை வைத்துவிட்டார் ரஞ்சனாவின் உடல்நிலைதேறியதும் அவளுடன் திருமணம் வேறு மறுத்தால் சொத்து கிடையாது என்று மிரட்டுகிறார்கள். 




மதனின் சுதந்திர வாழ்க்கைக்கு தடையாய் அமைந்தது அபிராமியின் செயல்கள்தான் எனவே அவளை கொல்லும் அளவிற்கு உத்வேகம் எழுந்தது ஆனால் தனக்கும் தன் இமேஜ்க்கும் ஆபத்தாக விளையும் எனவே அந்த நினைப்பினை மூட்டை கட்டிவிட்டு, யாராவது ஒரு நபர் மூலம் அதை செய்ய தீர்மானித்தான் அதற்கு தகுந்த ஆளைத் தேடிக்கொண்டு இருந்த போதுதான் விஜி அவன் கண்களில் பட்டிருக்கிறாள் அவள் முன்பு வேலைபார்த்த தங்கள் அலுவலகத்தில் அவளைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுவிட்டது. கொஞ்சம் பேராசைக்காரி, வறுமையை மட்டுமே கண்டிருந்த கண்கள் திருமணத்திற்கு பிறகாவது வாழ்க்கையை அனுபவிக்கத் துடித்தது சில திட்டங்களை அவளுக்காக வகுக்கத் தொடங்கினான் மதன். 

இவர்கள் மூன்று பேரின் மனங்களில் வெவ்வேறு நினைவுகளில் சிக்கிக்கொண்ட அபிராமிக்கு தன் செய்கை வியப்பையே தந்தது. நியாயப்படி சிவா அன்று செய்ய வந்த காரியத்திற்கு கோபித்து கொண்டு இருந்திருக்கவேண்டும், மதனின் கையாளைப் போல அவன் செயல்பட்டதும், இதுதான் அவனின் தொழிலோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டாள்.

 ஆனால் அவனைப் பற்றிய தப்பான அபிப்ராயம் எல்லாம் அவனின் டைரியைப் படிக்கும் வரையில்தான் ! மதனின் தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரிந்திருக்க இதை தவிர்க்க மற்ற பெண்களை அவனிடம் இருந்து காப்பாற்ற அவளெடுத்த ஒரு முயற்சிதான் மதனின் தாயிடம் அவனைப் பற்றி சொன்னது, அப்போதே அவரின் தாய் மகனின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொள்ள ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டார் அவர் மூலமாகத்தான் சிவாவின் மேல் எந்த தவறும் இல்லை என்று அவள் முதல் அறிந்ததே ஆனால் அப்படியொரு சந்தர்ப்பத்தில் சிவாவைப் பார்க்கும்போது மனம் முழுவதும் அவன் மேல் வெறுப்பு மண்டிக்கிடந்தது அபிராமிக்கு !

அதற்கு மறுநாள் வீட்டுக்கார ஆச்சிக்கு மூட்டுவலி மருந்தையெடுக்க ஆச்சியின் வற்புறுத்தலில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த போதுதான் சிவாவின் டைரி கண்களில் பட. காற்று அந்த தாள்களைத் தழுவி நடமாடியபோதுதான் அவள் தன் புகைப்படத்தை அந்த டைரியில் பார்த்தாள். ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே எப்போதும் பயணிக்கும் அபிராமிக்கு சிவாவின் டைரியைப் படிக்கும் ஆர்வம் மேலிட நிமிடங்களை செலவு செய்து படிக்கும் போதுதான் அவனின் குணமும் உண்மை நிலைமையும் முதல்நாள் நடந்த குளறுபடிகளும் தெரியவந்தது சிவாவின் குணம் அவளுக்கு ஏமாற்றத்தை தரவில்லை என்பதை உணர்த்தியது. 

திருமண பந்தம் பல வேறு கட்டமைப்புகளில் நிகழ்கிறது. அதில் நம்பிக்கை, காதல், பாதுகாப்பு இவைதான் முதலிடம் அப்படியொரு பாதுகாப்பை சிவாவின் மேல் வெறுப்பிருந்த அந்த நாளிலும் கூட அபிராமி உணர்ந்தாள். அவளை எந்த விதத்திலும் காயப்படுத்திடக் கூடாது என்று அவன் வார்ததைகளில் காட்டிய அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் மதனை விரும்புகிறேன் என்று அவனிடமே சொல்லியாகிவிட்டபோது இப்போது உன்னால் ஈர்க்கப்படுகிறேன் என்று சொன்னால் சிவாவிற்கு தன்னைப் பற்றிய கணிப்பு தவறாகிப்போகுமே என்றே அவனை எட்ட வைத்து கொண்டிருந்தாள். 

இன்று விரும்பியது கிடைத்தால் போது என்று அவளை ஏற்றுக்கொண்டாலும் ஆசையும், மோகமும் தீர்ந்த என்றாவது நாளின் கொடுமையான நேரத்தில் அவனின் நாக்கு நீ அவனோடு பழகியவள் தானே என்ற வார்த்தையை வீசாது என்பது எந்த வகையில் நிச்சயம். அதனால் சில காலம் பொறுத்திருந்து சிவாவின் மனதிடத்தை அறிந்தபிறகு தன் விருப்பத்தை வெளிப்படுவதுதான் சிறந்தது என்பதில் உறுதியான முடிவெடுத்த அன்று காலையே அந்த உறுதியைக் குலைக்கும் வகையில் விஜியின் செயல்பாடுகள்.

அதென்ன அப்படியொரு ஒட்டுதல் என்று தன்னையும் அறியாமல் பொறாமைக்குணம் தலையெடுத்தது அபிராமிக்கு தன் வாழ்வு எங்கே தொடங்குகிறது என்பது புரிந்துபோனது. கூட்டுக்குள் பறவைகளின் சலசலப்பு அதிகரிக்கத் தொடங்கியது அபிராமியை இணைப்பறவையாய் பார்க்க மீண்டும் ஒரு புதிய பறவை வரப்போவதை அறியவில்லை அவள்.




 

What’s your Reaction?
+1
6
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!