Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-16

16

“திவ்யா காரணத்தை தெரிந்து கொண்டு எதுவென்றாலும் பேசு” பின்னாலேயே நின்றிருந்த ஆதித்யன் அதட்டினான்.

” அண்ணா உங்கள் பொண்டாட்டி உங்களுக்கு பெரிதாக இருக்கலாம். ஆனால் எனக்கு…” பேசிக் கொண்டே போன திவ்யாவின் கையை பற்றி குலுக்கினாள் மகிதா. 

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா” மெல்ல அவளை அணைத்தாள்.




 

திவ்யா திக்கித்து நின்றாள். ஆதித்யன் தங்கையின் கைப்பற்றி வாழ்த்துக்களை சொன்னான். இருவருமாக அவளை ஹாலுக்கு அழைத்து வர இருளாக இருந்த ஹால் விளக்குகள் ஒளி பெற, திலகவதி, சத்யேந்திரன்,பாட்டி அனைவரும் அமர்ந்திருந்தனர்.மேஜையின் மீது கேக் ஒன்று தயாராக இருந்தது.

 பாட்டி சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார். கைதட்டி ஒன்று போல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல திவ்யாவின் கண்கள் கலங்கியே விட்டன.

வேகமாக ஓடிப்போய் தந்தையின் அருகே நின்றாள். “அப்பா என்னை மன்னித்து விட்டீர்களா?” 

சத்யேந்திரன் இந்த நிகழ்வுக்கு வரமாட்டேன் என்றுதான் மறுத்திருந்தார். வாழ்த்து சொன்ன கையோடு போய்விடுமாறு ஆதித்யனும் மகிதாவும் வற்புறுத்தி அவரை கூட்டி வந்து அமர வைத்திருந்தனர். திவ்யா நேரடியாக இப்படி வந்து பேசுவாள் என்று எதிர்பார்க்கிராதவர் கண்கள் கலங்கியது.

கதிரவன் வெளியே வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்ள,”கேக்கை கட் பண்ணும்மா”என்று விட்டு அறைக்குள் எழுந்து போய்விட்டார்.

கண் கலங்கிய திவ்யாவை திலகவதி அணைத்துக் கொண்டாள் “அப்பாவை பற்றி உனக்கு தெரியும்தானேம்மா ?விடு… நாளைக்கு சமாதானம் ஆகி விடுவார் “

“திவ்யா இப்போது கேக்கை கட் பண்ண வருகிறாயா இல்லை நானே எடுத்து தின்று விடட்டுமா? எவ்வளவு நேரம் தான் நாக்கு ஊற கேக் பக்கத்திலேயே இருப்பது?” மகிதா குரல் கொடுக்க எல்லோருக்குமே சிரிப்பு வந்தது.

பாட்டி தனது இரட்டை வட சங்கிலியை பரிசாக கொடுக்க திலகவதி தங்கத்தகடாய் மின்னிய பட்டுச்சேலையை பரிசளித்தாள். 

“அப்பா இதை கொடுக்கச் சொன்னார்” திலகவதி கொடுத்த கவரில் திவ்யாவின் பெயரில் பேங்கில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்த பத்திரம் இருந்தது.

“இது எங்கள் பரிசு” என்று மகிதாவையும் இணைத்துக் கொண்டு ஆதித்யன் நகை பெட்டியை கொடுக்க வாங்கி திறந்து பார்த்த திவ்யாவிற்கு மீண்டும் கண்ணீர் வந்தது.

” அண்ணா” என்றவள் திரும்பி மகிதாவை பார்த்து அண்ணி என்று மற்றொரு கையை நீட்டினாள். இருவருமாக அவளை அன்போடு அணைத்து விடுவித்தனர்.

அனைவரும் மன நிறைவுடன் படுக்கச் சென்றனர் அதன் பின் மகிதா பூனை போல் எழுந்து மாடிக்கு ஆதித்யனை நாடி சென்றாள்.

அறைவாசலில் அவளைப் பார்த்ததும் உதடுகளை குவித்து சீழ்கை ஒலி எழுப்பினான் ஆதித்யன். “என்ன இது தரை டிக்கெட்டு போல?” அவன் செய்கையை ஆட்சேபித்தாள்.

“அப்படியென்றால்…?” அப்பாவியாய் விழி விரித்தான். “நான் தியேட்டரில் கூட விசில் அடித்ததில்லை. உன்னை பார்த்தால் தானாகவே வருகிறது” சொன்னபடி வேகமாக எழுந்து வந்து அறைக் கதவை பூட்டிவிட்டு தன் மார்பை தட்டி காண்பித்தான். “வா” கைகளை விரித்தான்.

“நான் ஒன்றும் அதற்காக வரவில்லை”

“எதற்காக? சும்மா இப்படி மேலே சாய்ந்து கொண்டிரு. பேசிக் கொண்டிருக்கலாம் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் நீ வேறு ஏதோ எண்ணத்தோடு இருக்கிறாய் போலவே. சரிதான் அதிலும் ஒன்றும் தப்பில்லை. அப்படியும் இருக்கலாம்” ராகம்போல் இழுத்து பேசியபடி அவளை நெருங்கி தோள் தொட்டு தன் பக்கம் இழுத்தவனது கேலி சரசத்திற்கு அவளிடம் பதிலின்றி போகவே விளையாட்டுத்தனத்தை விடுத்தான்.

“மகி என்ன விஷயம்?”

“நம் வீட்டில் என்ன நடக்கிறது ஆதி? எனக்கு நிறைய குழப்பங்கள் இருக்கிறது?”

உங்கள் வீடு என்றே இதுவரை பேசி வந்தவள் இப்போது நம் வீடு என்று குறிப்பிட்டதிலேயே முகம் மலர்ந்த ஆதித்யன்,” நம் வீட்டில் என்ன நடந்தாலும் அதற்கு நாம் தானே பொறுப்பு மகி.சொல்லு, எல்லாவற்றையும் சரி செய்து விடலாம்” என்றான்.

“என்னை வீட்டை விட்டு விரட்டிய பிறகு இங்கே என்ன நடந்தது?” விவரம் கேட்க வசதியாக கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள் மகிதா.




 அவளது வீட்டை விட்டு விரட்டிய தொடரில் முகம் வாடிய ஆதித்யன் “அன்று திவ்யா சொன்னதை நம்பி உன்னை அடித்தது என் தவறுதான்”வருத்தத்தோடு சொன்னான்.

“திவ்யாவும் கதிரவனும் காதலித்து உங்கள் அப்பா சம்மதிக்க மாட்டார் என்று தெளிவாகத் தெரிந்ததால் வீட்டை விட்டு போய் திருமணம் செய்து கொள்ள எண்ணி கிளம்பி விட்டார்கள். ஆனால் காதலுக்கு ஆதரவு அளிக்கும் நான்தான்  திவ்யாவிற்கு உதவி செய்ததாக உங்கள் அப்பா நினைத்தார்.என்னை திட்டினார்.  நீங்களும் அவருடன் சேர்ந்து கொண்டீர்கள். உங்கள் புருஷன் திமிரை காட்டினீர்கள்” தன் கன்னத்தை தடவி விட்டுக் கொண்டாள்.

ஆதித்யன் முகம் கன்ற நின்றான் “அன்று நாளுமே அப்படித்தான் நினைத்தேன் மகி. அப்பாவுடன் உள்ள போட்டியின் காரணமாகவே காதல்தான் பெரிது என்று நிரூபிக்க திவ்யாவை அவள் காதலனுடன் நீதான் அனுப்பி விட்டதாக நானுமே நினைத்தேன்”

“மாமாவிற்கும் எனக்குமிடையே இந்த பனிப்போர் நம் திருமணத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. இதை மிக நன்றாக அறிந்தவர் நீங்கள்.அதனால் உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். அத்தோடு ஆண் பிள்ளை,புருஷன் போன்ற தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றனவே. எளிதாக கைநீட்டி விட்டீர்கள்… கூடவே வீட்டை விட்டு வெளியே போ என்ற விரட்டல் வேறு. மீண்டும் இந்தப் பக்கமே வரக்கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தவள்தான். பாட்டிக்காகவே வந்தேன். ஆனால் இங்கே நிறைய விஷயங்கள் எனக்கு நெருடலாக இருக்கின்றன”

அவளது குத்தல்களையும் குற்றச்சாட்டுகளையும் கைகட்டி தலை குனிந்து நின்று ஏற்றுக்கொண்ட ஆதித்யன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் “என்ன நெருடல்கள்? யார் மீது?”

“திவ்யா மீது… பாட்டி மீது” மகிதா தெளிவாக கூற ஆதித்யன் குழம்பினான்.




What’s your Reaction?
+1
55
+1
24
+1
1
+1
1
+1
1
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!