Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே -11

11

 “நீங்களும் வரலாமே தாத்தா?” கேட்டவனை படுக்கையில் இருந்தபடியே முறைத்தார் பாட்டையா.

” வெளியே வரும் நிலைமையலா இருக்கிறேன்?” கண்களால் தன்னை காட்டிக் கொண்டார்.

பாட்டையா பெரும்பாலும் குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் சுப அசுப காரியங்களில் கலந்து கொள்வதில்லை.காரணம் அவரது உடல்நிலை.மிகவும் உடல் தளர்ந்து நடுங்க தொடங்கி விட,கூன் விழுந்த முதுகுடன் எங்கும் வரப் பிடிக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவார்.

“பாட்டையாவால் நடக்க முடியாது. அவரை ஏன் தொல்லை செய்கிறீர்கள்?”

“அவர் ஏன் நடக்க வேண்டும்? நாம் அவரை கூட்டி செல்லலாம்?”

” அது எப்படி?”பாரிஜாதம் ஆட்சேபித்துக் கொண்டு இருக்கும் போதே உதயன் குனிந்து பாட்டையாவை இரு கைகளிலும் குழந்தை போல் தூக்கிக் கொண்டான்.

“இதோ இப்படித்தான். நீ தாத்தாவின் ஊன்றுகோலை எடுத்துக்கொள்” நடக்கத் தொடங்கி விட்டான்.

தாத்தாவின் கை தடியுடன் பாரிஜாதம் முதலில் வீட்டிற்குள் நுழைய”அங்கேயே நில்லு. எங்கே உள்ளே வருகிறாய்?” கத்தியபடி வந்தாள் கனகவல்லி.

” அப்பாவின் படையலுக்காக அவரை கும்பிட வந்திருக்கிறேன் அத்தை. தீட்டு தான் முடிந்து விட்டதே”

” அதெல்லாம் முடியவில்லை. எங்கள் அண்ணனுக்கு நாங்கள் படைத்து கும்பிட்டுக்கொள்வோம். நீ வெளியே போ” கட்டளையாய் பேசியவள் உதயனின் கைகளில் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த பாட்டையாவை பார்த்ததும் வாயடைத்தாள்.

பக்குவமாக அவரை அங்கிருந்த சாய்வு நாற்காலியில் இறக்கி விட்டான் “தாத்தா படையலில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்”

” என்ன கனகு ஏழு ஊருக்கு சத்தம் கேட்கிறது?”

” அது ஒன்னும் இல்லை தாத்தா. பாரிஜாதத்தை தீட்டு…”

” அதுதான் பூசாரி சொன்ன தீட்டு முடிந்ததே. இனி அவள் இங்கு வருவதற்கு என்ன தடை?ம்… நடக்கட்டும்”பாட்டையா சொல்லிவிட வேலைகள் நடக்கத் துவங்கின.

பாரிஜாதம் அப்பாவின் படத்திற்கு விளக்கேற்றி வைத்து மாலை அணிவித்து பூஜை பொருட்களை அவர் முன் எடுத்து வைக்க துவங்கினாள். அவள் கண்களுக்குள் தேங்கி கிடந்த கண்ணீர் திரையை பார்த்தபடி அவளுக்கு சிறுசிறு உதவிகள் செய்து கொண்டிருந்தான் உதயன்.




” அப்பா “வாசல் புறம் இருந்து பெரிய சத்தத்துடன் அழுகை கேட்க, எல்லோரும் திடுக்கிட்டு திரும்பினர்.

வாசலில் குமரன் நின்றிருந்தான். தோளில் ஒரு பேக்கை சுமந்திருந்தான். அதிர்ச்சியுடன் அப்பாவின் மாலை அணிந்த படத்தை பார்த்தபடி இருந்தான்.

“அண்ணா” தளுதளுத்த குரலில் பாரிஜாதம் அழைக்க வேகமாக அவளருகில் வந்தான். “பாரி என்னம்மா ? அப்பா எப்போது…? ஐயோ எனக்கு ஒன்றும் தெரியாதே”

“இன்றைக்கு 16 நாட்கள் ஆகிவிட்டது அண்ணா” விம்மினாள்.

” கடவுளே இப்படி சரியான நேரத்தில் இல்லாமல் போனேனே” நெற்றியில் அறைந்து கொண்டான்.

“ஏண்டா வீட்டை விட்டு கிளம்பிய பய எங்கெங்க போறேன் என்ன என்ன செய்றேன்னு வீட்ல தகவல் தந்துட்டு போறதில்லையா?போனையும் அமத்தி வச்சுக்கிட்டா நாங்க உன்ன எங்கன்னு தேடுறது?” பெரியப்பா பூதலிங்கம் சத்தம் போட்டார்.

“ஐயோ பெரியப்பா, இப்படி ஆகும்னு நான் நினைக்கலையே!அன்னைக்கு அப்பாவை ஆஸ்பத்திரியில காட்டிட்டுதானே போனேன்! நல்லா தானே இருந்தார்! நினைக்காம போயிட்டேனே” குமரன் மீண்டும் நெற்றியில் அறைந்து கொள்ள, பாரிஜாதம் அவன் கையை தடுத்தாள்.

” விடுங்க அண்ணா எல்லாம் முடிஞ்சிடுச்சு இனிமே நடப்பதை பார்க்கலாம்”

“ஆமா குமரு நீ முகத்தை தொடச்சிட்டு கை கால் கழுவிட்டு வா. நீதானே உங்க அப்பாவுக்கு தேங்காய் உடைக்கணும்” பாசமாய் பேசியபடி வந்தாள் கனகவல்லி.”அத்தானுக்கு துண்டு எடுத்துட்டு வந்த கொடு பாப்பா” உள்ளே திரும்பி மகளையும் ஏவினாள்.

கையில் துண்டு ஒன்றுடன் தலை குனிந்தபடி வந்த அந்த பாவாடை தாவணி பெண்ணை உதயன் இப்போதுதான் பார்க்கிறான். தரைக்குள் புதையல் தேடுபவள் போல் தலை கவிழ்ந்து கிடந்தவளை அவன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே குமரன் தனது பேக்கில் இருந்து துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு பின்பக்க கிணற்றடிக்கு போய் விட்டான்.

கை கால் கழுவி வேட்டி சட்டை மாற்றிக் கொண்டு பூஜைக்கு வந்தவனின் முகம் மிகவும் சோர்ந்து இருந்தது.கண்கள் கலங்கி சிவந்திருந்தன.மிகப் பெரிய குற்ற உணர்வுடன் இருந்தான்.தேங்காய் உடைத்தவனின் கைகள் நடுங்கியது. உடைபட்ட தேங்காயை பிரிக்க முடியாமல் அவன் தடுமாற உதயன் முன்வந்து அவன் கை தேங்காயை வாங்கி பிரித்து பூஜையில் வைத்தான்.

நன்றி சொன்னபடி நிமிர்ந்து பார்த்த குமரன் அதிர்ச்சி அடைந்தான். “முதலில் அப்பாவிற்கு பூஜையை முடிக்கலாம் குமரன். பிறகு மற்றவற்றை பேசலாம்” உதயன் சொல்ல பூஜை தொடர்ந்தது.




பாரிஜாதம் படையல் இலையில் ஒன்றை எடுத்து காக்காவிற்கு வைக்க போக குமரன் பாட்டையாவை நெருங்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். “பாட்டையா அப்பா இப்படி எங்களை விட்டு போவார் என்று எதிர்பார்க்கவில்லை” அவர் அவன் தலையை தடவினார்.

” விடுவிடு உன் அப்பனுக்கு ரொம்ப வருடம் கழித்து இப்போதுதான் விடுதலை கிடைத்திருக்கிறது. இதற்கு நீ சந்தோசம்தான் பட வேண்டும்.போய் சாப்பிடு”

அனைவரும் சாப்பிட அமர பாரிஜாதம் பரிமாறுபவர்களுடன் இணைந்து கொண்டாள்.நீங்கள் இங்கே எப்படி சார்?” தன் அருகே அமர்ந்த உதயனிடம் குமரன் கேட்க, “என்னை உதயன் என்று சொல்லுங்கள் அல்லது மாமா என்று கூப்பிடுங்கள்” என்றான் அவன்.

” என்ன ஏன் இப்படி சொல்கிறீர்கள்? ஏனென்றால் நான் உங்கள் தாய்மாமா.அப்படித்தான் இங்கே உங்கள் உறவினர்களிடம் அறிமுகமாகி இருக்கிறேன்”

குமரனின் முகத்தில் குழப்பத்தோடு கோபமும் தெரிந்தது.அந்நேரத்தில் அவர்கள் அருகே பரிமாற வந்த பாரிஜாதத்தை பார்க்க அவள் பிறகு பேசலாம் என அண்ணனிடம் ஜாடை காட்டினாள் கோபத்தை அடக்கியபடி இலையில் குனிந்து கொண்டான் குமரன்.

“எங்கள் தாய் மாமாவா? இது என்ன கதை ?எந்த எண்ணத்தில் எங்கள் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறீர்கள்?” பின்னால் கிணற்றடியில் வைத்து குமரன் வார்த்தைகளால் உதயனை உலுக்கினான்.

“குமரன் நான் சொல்வதை கேளுங்கள்.நான் இங்கே வரும்போது உங்கள் அப்பா உயிரோடு இல்லை.உங்கள் தங்கை ஆதரவுக்கு யாரும் இன்றி தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.அதனால்தான்….”

“நிறுத்து.முதலில் இதைச் சொல். நீ ஏன் இங்கே வந்தாய்?” உதயன் உதடுகளை கடித்துக் கொண்டான்.

” அது வந்து…” குமரன் இப்போது உதயனின் சட்டையை பிடித்து விட்டான்.”காரில் என் வாயை பிடுங்கி எங்கள் குடும்ப விவரம் தெரிந்து கொண்டு இங்கே சொந்தம் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறாயா?உன்னுடைய நோக்கம் என்ன?”

“குமரன் என்னிடம் எந்த தவறான நோக்கமும் கிடையாது. என் சட்டையை விடுங்கள்…”

“வயதுப் பெண் இருக்கும் வீட்டிற்குள் சொந்தம் என்று பதினாறு நாட்களாக தங்கி இருந்திருக்கிறாய்.இதை உயர்ந்த நோக்கம் என்று நான் நம்ப வேண்டுமா?” குமரன் உலுக்க ஆரம்பித்தான்.

“உங்கள் மனைவியை எங்கே குமரன்?” அவன் உலுக்கலுக்கு குலுங்கியபடி கேட்டான் உதயன்.

குமரனின் வேகம் குறைந்தது அவன் சட்டையை விட்டு விட்டான்.




” அது…வந்து…எங்களுக்கு இன்னமும் கல்யாணம் நடக்கவில்லை”

“அட அப்படியா! இது என்ன குமரன்?” உதயன் அவனுடைய ஃபோனை காட்ட,  அதில் குமரனுடைய திருமணம் மிக அழகாக போட்டோவாக இருந்தது.

” யார் நீ ?”குமரனின் குரலில் இப்போது ஒரு வகை பயம் வந்து விட்டிருந்தது.

“அடடா அதற்குள் துடித்தால் எப்படி? கொஞ்சம் பொறுங்க குமரன். நானே சொல்வேன்”

“நீ…நீ என்னை மிரட்டுகிறாய்.சரியான வில்லன் நீ”

உதயன் கீழ்க்கண்ணால் அவனை முறைப்பாய் பார்த்துவிட்டு பின் புன்னகைத்தான் “பாரு உன் அண்ணா பெரிய ஹீரோ தெரியுமா?”

சாப்பிட்ட இலைகளை போட வந்தவளிடம் சொன்னான்.

“நிச்சயம்” அவள் புன்னகைத்து போக,குமரன் தொய்ந்த நடையுடன் வீட்டிற்குள் போனான்.

“யார் என்னவென்று தெரியாதவரை தாய்மாமன் என்று சொல்லி வீட்டிற்குள் உட்கார வைத்திருப்பாயா?”

“அப்போது எனக்கு வேறு வழி தெரியவில்லை அண்ணா. உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.நம் சொந்தக்காரர்களிடம் என்ன சொல்லி போய் நிற்பது?என்னை கண்டாலே இங்கே யாருக்கும் பிடிக்காதே.ரொம்பவே விழித்துக் கொண்டு நின்றிருந்தேன். அப்போது இவர் தான் உதவிக்கு வந்தார். உங்கள் நண்பர்தானே அண்ணா? எதுவும் பிரச்சனையா?”

” ஓஹோ உன்னிடம் இப்படி சொல்லி வைத்திருக்கிறானா?”

“என்ன குமரன் நாம் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று உங்கள் தங்கையிடம் சொல்லுவது தானே? எத்தனை முறை எவ்வளவு விஷயங்களுக்கு உங்களை என் காரில் ட்ராப் செய்து இருக்கிறேன்? மறந்து விட்டீர்களோ?” கேட்டபடி வந்தவனை வெறித்தான் குமரன்.




What’s your Reaction?
+1
34
+1
33
+1
3
+1
7
+1
3
+1
5
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!