Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே-13

13

 “இந்த மலர்களை எதற்காக தொடுத்து கொண்டிருக்கிறாய் பாரு?” அருகே வந்து அமர்ந்து கேட்ட உதயனை புன்னகையுடன் பார்த்தாள்.”தலைக்கு வைத்துக் கொள்வதற்காக…இன்னமும் சிறிது நேரத்தில் இந்த சரங்களை வாங்கிச் செல்ல ஆட்கள் வந்து விடுவார்கள்”

“இடையில் ஏஜெண்டுகள் மூலம் நீங்கள் பார்க்கும் இந்த தொழிலில் உங்களுக்கு தேவையான லாபம் கிடைக்கிறதா?”

“நேற்று தான் சொன்னேனே.நாங்கள் லாபத்திற்காக மட்டும் இதனை செய்யவில்லை”

” எந்த தொழில் என்றாலும் லாபத்திற்காகவும் செய்ய வேண்டும். உன்னுடைய உழைப்பை கடந்த ஒரு மாதமாக அருகில் இருந்து பார்த்து வருகிறேன்.உழைப்புக்கேற்ற ஊதியம் நிச்சயம் உனக்கு கிடைக்கவில்லை. நான் சென்னைக்கு போய் அந்த ஜேகே கம்பெனியிடம்  பேசிவிட்டு வருகிறேன்.நிச்சயம் உன்னுடைய உழைப்பை வீண் போக விடமாட்டேன்”

“நீங்கள் சென்று பேசுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை உதயன். ஆனால் அந்த பேச்சு வார்த்தை எங்களுக்கு சாதகமாக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை”

உதயன் மெல்ல அவள் அருகில் சம்மணமிட்டு அமர்ந்தான். வாழைநாரில் பூ தொடுத்துக் கொண்டிருந்த அவள் கையை மெல்ல பற்றினான். “உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது தானே பாரு?” விழி விரித்து அவனை பார்த்தாள்.

” என் நம்பிக்கை நீ …உன் நம்பிக்கை நான்தான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. நம் நம்பிக்கை திரிந்து போகாமல் காப்பாற்றி நான் திரும்ப வருவது உறுதி”




பாரிஜாதத்தின் முகத்தில் பௌர்ணமி. “அப்படி நான் வெற்றியுடன் திரும்ப வரும்போது நீ எனக்காக தலை நிறைய இந்த மல்லிகை பூக்களை வைத்துக் கொண்டு காத்திருப்பாயா பாரு?”

பாரிஜாதம் நெகிழ்வாய் அவனை பார்த்தாள்.உதயன் தலையசைத்தான்.

“எனக்கு தெரியும் பாரு.எத்தனையோ ஆட்களுக்கு விசேஷங்களுக்கு விழாக்களுக்கு உன் கையால் பூக்கட்டி கொடுக்கிறாய். ஆனால் நீ தலையில் பூச்சூடி கொள்வதில்லை. அதனை மாற்ற வேண்டும். எனக்காக…” ஆட்காட்டி விரலால் அவள் நாடி தொட்டு நிமிர்த்தி கண்களுடன் கலந்தான்.

“தலையில் பூ வைத்து மயக்க பார்க்கிறாயா? என்பது போன்ற பேச்சுக்களை அம்மா கேட்டவர்கள்.அது புரிந்த வயதிலே நானும் பூச்சூடுவதை நறுத்தி விட்டேன்” பாரிஜாதத்தின் குரல் கரகரத்தது.

“இங்கே இந்த சொந்தங்களுக்கு இடையே உன் அம்மா அனுபவித்த துன்பங்களுக்கு மாற்றாக உன்னை மிக நன்றாக வைத்துக் கொள்ள நினைக்கிறேன்.நாம் திருமணம் செய்து கொள்ளலாமா பாரு?”

பாரிஜாதம் இன்பமான அதிர்வுடன் அவனை பார்த்தாள்.”யார் நீங்கள்? உங்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே ?நான் எப்படி ஒத்துக்கொள்வேன்?”கிண்டலாய் கேட்டாள்.

” சொல்கிறேன் நான் போய்விட்டு திரும்பி வந்து என்னை பற்றிய எல்லா விபரங்களையும் எல்லோருக்கும் சொல்கிறேன். அதன் பிறகு உனக்கு சம்மதம் தானே?”

“நீங்கள் யாரென்று எனக்கு தெரிய வரும்போது என் சம்மதத்தை சொல்வேனாக்கும்” பாரிஜாதம் விளையாட்டாகவே பேசினாள். ஆனால் உதயனின் முகம் கறுத்தது.

தலை குனிந்தவனின் கண்களில் சேலையைத் தாண்டி தெரிந்த பாரிஜாதத்தில் பாதங்கள் பட்டன. கைநீட்டி அவள் பாதங்களை பற்றினான்.” என்ன இது விடுங்க” பாரிஜாதம் பதறினாள்.

” ப்ளீஸ் பாரிஜாதம்,இது என்னுடைய நெடுநாள் ஆசை. நிறைய முறை இப்படி உன் பாதங்களை தொட்டுப் பார்க்க எண்ணியிருக்கிறேன். இப்போது…”என்றவன் குனிந்து அவள் பாதங்களில் மென்மையாய் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான்.

அவசரமாக சேலைக்குள் பாதங்களை மறைத்துக் கொண்டவள் கூசி சிலிர்த்து அமர்ந்திருக்க,எழுந்து நின்ற உதயன் அவள் உச்சந்தலை மேல் தன் கையை வைத்தான்.” சீக்கிரமே வருகிறேன்” போய்விட்டான்.

பாரி பாரிஜாதம்” பரபரப்பான அழைப்போடு வீட்டிற்குள் நுழைந்த குமரன் உள்ளிருந்து வெளியேறிய முத்துக்காளையுடன் மோதிக்கொண்டான்.” முழு உருவமாக எதிரே வருகிறேன், இப்படி வந்து மோதுகிறாயே” எரிச்சலுடன் கேட்டவனை ஒரு இகழ்வான புன்னகையோடு பார்த்தபடி கடந்து போனான்.




இத்தனை கேள்விகளுக்கு இப்படி பேசாமல் செல்பவன் இவன் இல்லையே…சென்றவனை திரும்பி பார்த்தபடி வீட்டிற்குள் வந்த குமரன் பரபரப்புடன் தங்கையின் எதிரில் நின்றான்.”பாரி உனக்கு விஷயம் தெரியுமா?”

” நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமலேயேதான் அண்ணா போய்விட்டது.”அவள் விரக்தியாய் பேச  குமரன் தங்கையை கவனித்தான். அவள் சோர்வாய் இருக்கையில் சரிந்திருந்தாள். துவண்டு போய் கிடந்தாள். எந்த விஷயத்திற்கும் இப்படி துவண்டு கிடப்பவள் அல்ல.

“என்னம்மா என்ன ஆயிற்று? உடம்பு சரி இல்லையா?” ஆதுரத்துடன் தங்கையின் தலையை வருடினான்.

“எவ்வளவோ மன கஷ்டங்கள், காயங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்னமும் இந்த உடம்பு கல் மாதிரி இருக்கத்தான் அண்ணா செய்கிறது. உங்கள் விஷயத்தை சொல்லுங்கள்”

” என்னம்மா ஏன் இப்படி பேசுகிறாய்?”தங்கையின் அருகே அமர்ந்து ஆதரவுடன் அவள் கையை பற்றினான்.சட்டென அவள் கண்கள் கலங்க கண்டு பதறினான்.

பாரிஜாதம் மிகவும் மென்மையான பெண்.பார்ப்பதற்கு சுற்றிலும் பூத்து கிடக்கும் மல்லிகை மலர்களைப் போன்றே இருப்பாள். ஆனால் அவளது மன உறுதியோ வைரத்தை காட்டிலும் கடினமானது.அதனால் தான் சுற்றிலும் இத்தனை எதிர்ப்புகளை வைத்துக்கொண்டு ஏன் வீட்டிற்குள்ளேயே அவர்கள் தந்தையின் எதிர்ப்போடும்  இத்தனை வருடங்கள் இங்கே தொழில் பார்க்க முடிந்தது. அவ்வளவு தைரியமான தங்கையின் கண்கள் கலங்கக் கண்ட  குமரனும் கலங்கினான்.

” பாரி எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசும்மா”

” நான் என்றாவது உங்கள் ஆசைக்கு தடை சொல்லி இருக்கிறேனா அண்ணா? பிறகு ஏன் இப்படி செய்தீர்கள்?” கரகரத்த குரலில் தங்கை கேட்க குமரனுக்கு புரிந்து விட்டது.அந்த உதயன் எல்லாவற்றையும் இவளிடம் சொல்லி விட்டான்.

” இல்லைம்மா… நான் வந்து…”

” வேண்டாம் அண்ணா. எந்த சமாதானமும் வேண்டாம். நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்களானாலே போதும்.”

“இல்லைம்மா எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. வெண்ணிலா மிகவும் திருமணத்திற்கு தொல்லை செய்ததால் …திருமணம் செய்து விட்டு கொஞ்சம் நாட்கள் கழித்து மெல்ல மெல்ல அவளை இங்கே கூட்டி வரலாம் என்று நினைத்தேன். இங்கே வந்து பார்த்தால் அப்பா இறந்திருக்க என்னால் திருமண விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை”

பாரிஜாதம் கண்களை இறுக மூடி தன்னை அடக்கி கொண்டாள்.” சரிதான் போகட்டும் விடுங்க. எப்போது உங்கள் மனைவியை இங்கே அழைத்து வர போகிறீர்கள்?”

” கொஞ்ச நாட்கள் போகட்டும்மா. பாட்டையாவிடம் பேசிவிட்டு அழைத்து வருகிறேன்”

“சரிதான்”எழுந்து கொள்ள போனவளை மீண்டும் அமர்த்தினான்.”உன்னிடம் ஒரு விஷயம் பேச வந்தேன்”

” இதைவிட முக்கியமான விஷயம் வேறு என்ன அண்ணா?”

“அந்த உதயன் இருக்கிறானே, அவன் நம்முடைய எதிரி குடும்பத்து ஆள். இப்போதுதான் அவனைப் பற்றி விசாரித்துவிட்டு வருகிறேன்”




” புரியவில்லை அண்ணா”

” நம்முடன் தொழில் தகராறில் இருக்கிறார்களே ஜேகே பெர்ஃப்யூம்ஸ். அவர்கள் வீட்டு பையன் இவன்”

“என்ன?”

“ஆமாம்மா”

“ஆனால் இங்கே அவர் வந்ததே இல்லையே”

“இல்லை தான் நம்மிடம் தொழில் விபரங்கள் பேச வந்தது உதயனுடைய அண்ணன்.  நம்முடைய சொந்தங்கள் எல்லோரும் சம்மதிக்க,நாம் மட்டும் மறுக்க நம்மை நேரில் பார்த்து பேசி சம்மதம் வாங்குவதற்காகவே இங்கே வந்திருக்கிறான் உதயன். வந்த இடத்தில் நமது தந்தை இறந்து போக அதனையே சாதகமாக்கிக் கொண்டு நம் வீட்டிற்குள்ளேயே நுழைந்து, உன்னை நம்ப வைத்து நேரம் வாய்க்கும் போது நம்மிடம் பேசி அவன் கம்பெனிக்கு தேவையான தகவல்களோடு சென்று விட்டான்”

“இதெல்லாம் உங்களுக்கு முன்பே தெரியாதா?அவர்  உங்கள் நண்பர் தானே அண்ணா ?”

“அவன் என் நண்பனே இல்லையே” குமரன் கைகளை விரிக்க பாரிஜாதம் அதிர்ந்தாள்.

” நான் என் திருமணத்திற்காக ஒளிந்து மறைந்து இந்த ஊரை விட்டு போனபோது இவன் எதிரே வந்தான். இவனுடைய காரில் லிப்ட் கேட்டு ஏறினேன்.அப்போது என் வாயை பிடுங்கி நம் குடும்ப விவரங்கள் சிலவற்றை தெரிந்து கொண்டான். அதை வைத்து ஊருக்குள் வந்து உன்னை ஏமாற்றி நம் வீட்டோடு தங்கி விட்டான்” விளக்கங்கள் கொடுத்தபடி தங்கையை பார்த்த குமரன் திடுக்கிட்டான்.

பாரிஜாதத்தின் கண்கள் பொல பொலவென நீரை உதிர்த்துக் கொண்டிருந்தது.”பாரி எவ்வளவு தைரியமான பெண் நீ! இப்படி கலங்கலாமா?”

” பெரிய கற் பாறையாக இருந்தாலும் அதனை பிளப்பதற்கு சிறு விதை போதும் போல அண்ணா.எ… எனக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கிறது. சிறிது நேரம் காற்றாட வெளியே நடந்து விட்டு வருகிறேன்” பாரிஜாதம் வெளியேறினாள்.




What’s your Reaction?
+1
36
+1
25
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!