Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் -13

13

 

“உங்களுக்கு என்ன வேண்டும்?” உள்ளே ஓடிய பதட்டத்தை மறைத்துக் கொண்டு அதட்டலாய் கேட்டாள்.

திடுக்கிட்டு திரும்பிய சக்திவேலின் கைகளில் அடுக்காய் துணிகள்.பீரோவிலிருந்து எடுத்திருப்பான் போலும்.

“என்ன இது?”

“என் துணிகள்.இவற்றை எடுத்துப் போகவே வந்தேன்.உன் கண்ணில் படக்கூடாதென்று நினைத்தேன்.நீ கீழே இருப்பாயென்று…சாரி…”

குற்றம் செய்தவனாய் முன்னால் குறுகி நின்றிருக்கும் இந்த சக்திவேல் அவளுக்கு புதியவன்.இரவு நேரங்களில் இருளில் அவளை அதிகாரமாக ஆட்சி செய்பவனல்ல.உடல் கூசி தரை பார்த்து தயங்கி நிற்கும் ஆறடி உயர ஆண்மகன் அவளது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தினான்.உன்னால் முடியுமென்ற தைரியத்தை விசிறினான்.

பத்து நாட்களாக என்னை எப்படியெல்லாம் வதைத்தாய்?யவனாவினுள் வன்மம் தலை தூக்கியது.

“முதல் போன் பேச்சிலேயே முத்தம் கொடுத்தவள் மன்னிப்பெல்லாம் கேட்க தகுதியானவள் கிடையாது”வார்த்தைகளில் அம்புகளை சொருகி எறிந்தாள்.

” தப்புதான்.உன்னை அப்படி நினைத்திருக்க கூடாது.நீ அப்படிபட்டவளல்ல.ஒரு கணவனாக உன்னை நான் நம்பியிருக்க வேண்டும்”

சக்திவேல் கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு பார்வையை தரைக்கு கொடுத்து தப்பு செய்த மாணவனாய் குறுகி நின்றான்.




யவனா புருவம் சுருக்கினாள்”நம்பிக்கையா?அந்த அளவு என்ன நடந்தது?”

சக்திவேல் கீழுதட்டை பற்களால் கடித்தபடி அமைதியாக நின்றான்.”கொஞ்ச நாட்கள் போகட்டும் யவனா.பிறகு பேசலாம்”

துணிகளை பேக்கிற்குள் அடுக்கி மூடினான்.யவனாவினுள் மௌன சூறாவளி ஒன்று சுழன்று கொண்டிருந்தது.எதையோ மறைக்கிறான்.அவள் இதனை பாதியில் விட விரும்பவில்லை.அறையை விட்டு வெளியேற நடந்தவனின் முன்னால் போய் நின்றாள்.

“மனைவி மேல் நம்பிக்கை எனுமளவு என்ன நடந்தது? எனக்கு பதில் வேண்டும்”

சக்திவேல் கண்களில் கனிவுடன் அவளைப் பார்த்தான்.”உன் உடம்பு நன்றாக தேறட்டும் யவனா.அப்புறம் பேசலாம்”

விலகி நடக்க முயன்றவனின் முன் கை நீட்டினாள்” என் உடம்பு தேறி விட்டது.இப்போதே சொல்லுங்கள்”

சக்திவேல் பேக்கை தோளில் போட்டுக் கொண்டு நீண்டிருந்த அவள் கையை பற்றி மடக்கி கீழிறக்கினான்.மிக மென்மையாக வலிக்குமோ என்ற கவலையுடன் அவள் கையை பற்றியிருந்தான்.

“உன்னிடம் நிறைய மன்னிப்பு கேட்கவேண்டும்.நிறைய பேச வேண்டும்.அதற்கான நேரம் வரட்டும். அது வரை உனக்கு பிடிக்காத எதுவும் இங்கே நடக்காது.விருப்பமற்ற எந்த பொறுப்பையும் நீ ஏற்க வேண்டியதுமில்லை.ரூபனை கவனிக்க ஆள் போட்டாயிற்று.அவன் உன் பொறுப்பு கிடையாது.நீ உன் எதிர்காலத்தை மட்டும் யோசி.வருகிறேன்”பூவிதழை தொடும் மென்மையுடன் அவள் கை தொட்டு லேசாக அழுத்தி விட்டு கையை விடுவித்தான்.

எங்கே போகிறான்?யவனா திகைப்பாய் செல்பவனை பார்த்து நின்ற போது வாசலருகே நின்று திரும்பி” சாரிம்மா.” இறைஞ்சலாய் கேட்டுவிட்டு படபடவென படியிறங்கிப் போய்விட்டான்.யவனா ஒன்றும் புரியாமல் நெடுநேரம் அங்கேயே நின்றிருந்தாள்.

அன்று மாலை கீழிருந்து கலகலப்பான பேச்சுக்குரல் கேட்க மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள். தாரா வந்திருந்தாள்.

“எங்கள் தோட்டத்து கொய்யாப்பழம்.உங்களுக்கு பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்மா.” கிளிக் குரலில் கொஞ்சலாய் பேசிக் கொண்டிருந்தாள்.

“உன் தோட்டத்து கொய்யாப்பழம் விதையில்லாமல் இனிப்பாக இருக்கும்…”சொன்னபடி சண்முகசுந்தரி கத்தி வைத்து ஒரு பழத்தை வெட்டி வாயில் போட்டுக் கொண்டிருந்தாள்.

தாரா யவனாவை பார்த்து விட்டாள்.” வாங்க அண்ணி.இதோ எங்க தோட்டத்து கொய்யாப்பழம்.வந்து சாப்பிட்டு பாருங்க” அண்ணாந்து பார்த்து அழைத்தவளை தவிர்க்க முடியாமல் லேசான புன்னகையோடு இறங்கி வந்தாள் யவனா.

“ஏம்மா இப்போ அந்த மாதிரி லூசுத்தனம் எதுவும் செய்யலைதானே?” பாதி படியில் இருக்கும் போது தாரா கிசுகிசுப்பாக தாயிடம் கேட்பது அவள் காதில் விழுந்தது.அப்படியே நின்று விட்டாள்.

தாரா கேட்பது தன்னைத்தான் என உணர்ந்தாள்.சுறுசுறுவென கோபம் வந்தது.உனக்கென்னம்மா…அம்மா அப்பா அண்ணன்கள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் வசதியாக சொகுசாக வளர்ந்தவள்.என்னைப் போல் பத்து வருடங்களாக கூடவே எதிரியை வைத்திருந்து ஏமாற்றப்பட்டிருந்தாயானால் தெரியும் சேதி! சட்டையைக் கிழித்துக் கொண்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்திருப்பாய்.




பத்து விநாடிகளில் இப்படி மனதிற்குள் வார்த்தைகள் ஓட,மீண்டும் அறைக்குள் முடங்கிக் கொள்ள திரும்பியவள்,இப்போது சண்முகசுந்தரி அழைக்க,மாமியாருக்கான மரியாதைக்காக கீழே இறங்கி வந்தாள்.

“எனக்கு கொய்யாப்பழம் பிடிக்காது” நறுக்கு தெறித்த அவள் வார்த்தைகளில் தாராவின் முகம் சுருங்கியது.

“இந்த பழத்தை சாப்பிட்டு பாரும்மா.அப்புறம் சொல்லுவாய்…கொய்யாப்பழம்னா என்னன்னு …” சண்முகசுந்தரி நீட்ட…” வேண்டாம் ” என முகம் திருப்பினாள்.

“விடுங்கம்மா.அண்ணிக்கு சப்போர்ட்டா பழம்தான் பிடிக்கும்.இல்லையாண்ணி ?” என்றபடி உள்ளே நுழைந்தாள் சுகந்தி.

இந்தப் பெண்ணிற்கும் நான் அண்ணிதானா?தன்னை விட பதினைந்து வயதேனும் மூத்தவளாய் இருந்த நாத்தனாரை எரிச்சலாக பார்த்தாள்.இந்த மனுசன் எல்லோருக்கும் மூத்தவரா? இந்த சுகந்திக்கு காதோரம் நரைக்கவே ஆரம்பித்து விட்டதே!இவர்களுக்கெல்லாம் அண்ணியாக இருக்க வேண்டுமென்று என் தலையெழுத்து.

இதழ்களை இறுக்கி கடித்தபடி தலை குனிந்திருந்தவளின் கோபத்தை இறுக கடித்திருந்த தாடை சொல்லியது.

“சுகந்தி வாம்மா!என்ன இன்னைக்கு இரண்டு பேரும் ஒண்ணாவே வந்துட்டீங்க!” சண்முகசுந்தரி ஆச்சரியப்பட…

“இவுங்க இரண்டு பேரும் எப்பவுமே போட்டி போட்டுட்டு ஒண்ணாத்தான் வந்து நிற்பாங்க.இதுதான் முதல் தடவை மாதிரி நம்ம மாமியாரோட ரியாக்சன் பார்த்தாயா?” இவளருகில் அமர்ந்திருந்த நிர்மலா கிசுகிசுத்தாள்.

யவனாவிற்கு எதிலும் ஈடுபாடில்லை.பெரிதாய் கனிந்து வாசத்தோடு சுகந்தி நீட்டிய சப்போர்ட்டா பழங்களை தொடவும் அவள் விரும்பவில்லை.

“ரொம்ப நல்லாயிருக்கு அண்ணி” நிர்மலா புகழாரம் சூட்டிக் கொண்டிருந்தாள்.

“பிடிக்கலைன்னாலும் சூப்பர் சொல்லிடு.பிறகு குப்பை தொட்டியில் போட்டுக் கொள்ளலாம்” நிர்மலா ரகசியமாய் இவள் காதைக் கடிக்க,யவனாவிற்கு எரிச்சல் வந்தது.டக்கென எழுந்தாள்.

“கொஞ்சம் படுக்கிறேன்” மாடியேறி விட்டாள்.

“இன்னமும் சரியாகலையா?” இப்போது சுகந்தி அம்மாவிடம் விசாரித்தாள்.யவனா கால்களுக்கு விரைவு கொடுத்து மாடி வந்து அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அரைமணி கழித்து அவள் அறைக் கதவை தட்டி உள்ளே நுழைந்தாள் நிர்மலா.”பார்த்தாயா யவி?இந்தப் பொண்ணுங்க எப்படி வந்து காக்கா பிடிச்சுட்டு நிக்குதுங்கன்னு?”

“காக்காவா? யாரை ?எதுக்கு?”

“நம்ம மாமியாரைத்தான்.சும்மாவா ஐநூறு பவுன் நகையாச்சே!அதை விட்டுக் கொடுப்பார்களா?அத்தை வாய்க்கு வாய் என் நகை என் மகள்களுக்குன்னு சொல்லிட்டிருக்காங்க.ஆனால் நாம் விடக் கூடாது.நமக்கும் அதில் பங்கு இருக்கிறது.ஆளுக்கு நூறு பவுனாவது வாங்கிடனும்”

“எனக்கு தூக்கம் வருது.பிறகு பேசுவோமே” யவனா பேச்சை கத்தரிக்க சிறு முறைப்புடன் போனாள் நிர்மலா.

அடுத்த ஐந்து நிமிடங்களில் உள்ளே நுழைந்தவள் சுகந்தி.” எப்படி இருக்கிறீர்கள் அண்ணி?”உபச்சாரமான கேள்வியுடன் வந்து தன்னருகே கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தவளை திகைப்பாய் பார்த்தாள் யவனா.




“உடம்பு நல்லாயிருக்கா?மருந்து சாப்பிட்டீங்களா?” என்று பேசிக் கொண்டிருந்தவள்,திடுமென குரலை ரகசியமாக்கி “நிம்மி என்ன சொன்னாள் ?” என்றாள்.

“எதைப் பற்றி?”

“எங்களைப் பற்றித்தான்.இரண்டு மகள்களும் அம்மா நகைகளுக்காக சுற்றி சுற்றி வருகிறார்கள்னு சொல்லியிருப்பாளே?”

“கொஞ்சம் விட்டால் சொத்துக்களிலும் பங்கு கேட்போம்னு சொல்லுவாங்க” என்றபடி அறைக்குள் வந்தாள் தாரா.

யவனாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. “நான் மாத்திரை போட்டிருக்கிறேன்.தூக்கம் வருகிறது.பிறகு பேசலாமே”

அவர்கள் முகம் மாற எழுந்து போனார்கள்.”இனி மொட்டைமாடிப் பக்கம் போகாதீங்க” அறை வாசலில் நின்று நக்கல் குரலில் தாரா சொல்லிப் போக யவனாவிற்கு கொதித்து வந்தது. அறைக் கதவை அடித்து சாத்தினாள்.

பத்தாவது நிமிடம் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட ” யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை.என்னைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுகிறீர்களா?” கத்தியபடி கதவைத் திறந்தவள் எதிரே நின்றிருந்த சேர்மராஜை கண்டதும் திகைத்தாள்.

“என்னம்மா எதுவும் பிரச்சனையா?”




What’s your Reaction?
+1
40
+1
22
+1
2
+1
2
+1
1
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!