Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் -14

14

 

“இதோ இதுதான்மா நம்ம கம்பெனி”சேர்மராஜ் சுட்ட கார் சன்னல் வழியே திரும்பிப் பார்த்தாள் யவனா.

வரிசையாக கட்டிடங்கள் ஓடின.என்ன கம்பெனி? முயன்று யோசித்து சித்தி சொன்னதை நினைவில் கொணர்ந்தாள்.கூடவே கடந்து போன பெயர் பலகையையும் படித்து செராமிக் கம்பெனி என கண்டுபிடித்தாள்.

” இங்கு அகல் விளக்குகள், டீ கப், வாட்டர் பில்ட்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சுவாமி சிலைகள், பறவைகள், செடிகள், மரங்கள், பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகள், வாஷ்பேசின், சானிட்டரி பொருட்கள், பியூஸ் கேரியர் இவை எல்லாவற்றையும் நாம் தயாரிக்கிறோம்”

சேர்மராஜ் சொல்ல யவனாவிற்கு கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது.  கம்பெனிக்குள் அழைத்துப் போய் சுற்றிக் காட்டினார்.நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்கள் தயாராகும் இடங்களை,அவை உருவாகும் விதங்களை கண் முன் பார்க்க,யவனாவின் மனம் பரவசித்து இலகுவானது.அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.

“வாங்க அண்ணி” மாதவன் வரவேற்று குளிர்பான பாட்டிலை நீட்டினான்.

அவனது அண்ணி அழைத்தல் ஏற்படுத்திய உறுத்தலை அந்த மாம்பழசாறு சற்றுக் குறைத்தது.

“மலேசிய ஆர்டர் முடிந்ததுப்பா.பேக்கிங் நடக்குது.பேரிவேர் கம்பெனி வெஸ்டர்ன் கோப்பை,வாஷ்பேஷின் ஆர்டர் பத்தாயிரம் பீஸ் கூட்டிக் கேட்டிருக்காங்க”

மாதவன் தந்தையிடம் தொழில் விபரங்கள் பேசினான்.

“நல்லது.இந்தோனேசியா ஆர்டர் என்னாச்சு ?”

” அது அண்ணன் பொறுப்புப்பா.அவர்கிட்டத்தான் கேட்கனும்”

யவனா சற்று தள்ளி நின்று கண்களை சுழற்றி சுற்றிலும் பார்வையால் அலசினாள்.




“மலேசியா,சிங்கப்பூருக்கு நம்ம டீ கப்,தட்டுகளெல்லாம் போகுதும்மா.இந்தோனேசியாவிற்கு களிமண் வட்டுக்கள் செய்து அனுப்புகிறோம்.இதோ இருக்குது பாரு”

சேர்மராஜ் காட்டிய வட்டுக்களை ஆச்சரியமாக பார்த்தாள்.” இவை எதுக்கு மாமா?”

“துப்பாக்கி சுட பயிற்சி எடுப்பாங்கள்ல.அவுங்க இந்த வட்டுக்களைத்தான் குறியாக உபயோகிப்பாங்க”

“ஓ…ரொம்ப நல்லாயிருக்கு மாமா.”

“உற்பத்திகள் எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சியைத்தான்மா தரும்.இந்த தொழிலை என் அப்பா சிறியதாக ஆரம்பித்தார்.என் காலத்தில் ஓரளவு வளர்ந்தது. இப்போது என் பிள்ளைகள் நவீன உத்திகளை புகுத்தி மிக நல்ல முறையிலேயே தொழிலை நடத்தி வருகின்றனர்.” பேசியபடியே தொழிற்சாலையின் இறுதி இடத்தை அடைந்திருந்தனர்.

“இத்தனை கம்பெனிகளுக்கும் முதுகெலும்பு இந்த இடம்தான்மா.பேக்டரியின் முக்கிய இடம் இது.இதன் பெயர் கில்லன்”

ராட்சசத்தனமாய் உயர்ந்திருந்த அந்தக் கட்டிடம் தலைப்பகுதியில் புகையை வெளித் தள்ளிக் கொண்டிருந்தது.அந்த இடமே அதிக வெப்பநிலையில் சூடாக இருந்தது.

” இது எந்த இடம் மாமா?”

“நாம் தயாரிக்கிறோமே அத்தனை செராமிக் பொருட்களையும் சுடும் இடம் இது.இங்கே சுட்ட பிறகுதான் தயாரித்த பொருட்கள் முழுமையடைகின்றன”

“ஓ…வீட்டிற்கு அடுப்படி போல” யவனா சொன்னதை ரசித்து தலையசைத்தார்.

“இங்கே அதிக நேரம் நிற்க முடியாது.வாம்மா போகலாம்” குளுகுளு ஏசி பொருத்தியிருந்த அலுவலக அறைக்குள் அவளை அழைத்துப் போய் அமர்த்தினார்

“சொல்லும்மா.நீ் எப்போது வருகிறாய்?”

“எங்கே மாமா? “

“இங்கே.நம் கம்பெனியில் வேலைக்கு”

யவனா ஆச்சரியத்தில் விழித்தாள்.இங்கே வேலையா?

“சும்மா கிண்டல் செய்யாதீர்கள் மாமா.இங்கே எனக்கென்ன தெரியும்?”

“நீ என்னம்மா படித்திருக்கிறாய்?பைன் ஆர்ட்ஸ் தானே?உன் கலைகளை இங்கே நாம் தயாரிக்கும் பொருட்களில் காட்டலாமே?”




யவனா எழுந்து விட்டாள்.”ரூமுக்குள் அழுது கொண்டு முடங்கிக் கிடந்தவளை சமாதானம் செய்ய இங்கே அழைத்து வந்தீர்கள் சரி.அதற்காக இவ்வளவு பெரிய லாலிபாப் வேண்டாம் மாமா.என்னால் முடியாது”

வீட்டிற்கு வந்த பிறகும் யவனாவிற்கு இதே எண்ணம்தான்.எல்லோருமாக சேர்ந்து மனதை நோகடிக்க வேண்டியது.பிறகு சரி…சரி அழாதேயென்று பெரிய பெரிய சாக்லேட் உருண்டைகளை தலையில் போட வேண்டியது…அந்த பாரம் தாங்காமல் நான் அதற்கென தனியாக அழ வேண்டியிருக்கிறது.பொறுமியபடி அறைக்குள்ளேயே நடந்தாள்.

அறைக்குள்தான்.இப்போதெல்லாம் வீட்டிற்குள்ளேயே ஆள் மாற்றி மாற்றி கண்காணிக்கப்படுவதை உணர்ந்திருந்தாள்.இரண்டு நாட்கள். முன்பு பால்கனியில் சிறு வாக் போன போது,சுப்புலட்சுமி ரொம்ப நேரமாக மாடிப் படிக்கட்டுகளை துடைத்தபடியே இருப்பதை தாமதமாக உணர்ந்து தன் அறைக்குள் போனாள்.உடனே சுப்புலட்சுமியும் கீழிறங்கிப் போய்விட்டாள்.

மொட்டைமாடி கனமான பூட்டுப் போட்டு பூட்டப்பட்டு விட்டது.சைடு டெரஸ்ஸும் பூட்டப்பட்டு சாவி சண்முகசுந்தரி வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தனக்கான பாதுகாப்பு என உணர்ந்தாலும்,நானென்ன இவர்கள் உட்கார சொல்லும் இடத்தில் உட்கார்ந்தே கிடக்கும் அடிமையா?என அவள் மனம் புரட்சி செய்து கொண்டுதான் இருந்தது.

இதையெல்லாம் பேசி,கூடவே இந்த வீட்டுப் பெண்களின் புறணி பேசும் குணத்தையும் சொல்லி,சக்திவேலிடம் ஒரு மூச்சு சண்டை போட வேண்டும் போலிருந்தது. இவன் வீட்டு பெண்களை இந்த லட்சணத்தில் வைத்துக் கொண்டு,அன்று என்னை புறணி பேசாதே என்க இவனுக்கென்ன யோக்யதை?

இப்படியெல்லாம் கேட்டு விடுவேனோ எனப் பயந்துதான் வீட்டுப் பக்கமே ஆளைக் காணோம் போல,எங்கே தங்குகிறான் ,சாப்பிடுகிறான் ஒன்றும் தெரியவில்லை.இன்று கம்பெனியில் கூட ஆள் தட்டுப்படவில்லை.

ரொம்பவே போர் அடிக்க வைஷ்ணவிக்கு போன் செய்தாள்.தோழியின் கலகல பேச்சுக்கள்தான் இப்போதெல்லாம் யவனாவின் மனதை புத்துணர்வாக்குகிறது.

“நான் வேலையை விட்டுட்டேன்டி” வைஷ்ணவி சோகமாக பேசினாள்.

” ஐயோ ஏன்டி.ரொம்பு பிடித்துதானே போனாய்?”

“அடப் போடி.நான்பாட்டுக்கு டைப் பண்ணிட்டிருக்கும் போதே,திடீர்னு அந்த மேனேஜர் இதுக்கு கோடிங் போடனும்மா.போடேங்கிறான் ஈசியா.எனக்கு கோடிங் வராது சார் ங்கிறேன்.பைத்தான் தெரியாதான்னு எரிஞ்சு வுழுறான்.இந்த கய்யாபுய்யா கம்யூட்டர் லேங்குவேஜ்கு பயநதுதானே நாம கலைகள் பக்கம் ஒதுங்குனோம்.அடப் போய்யான்னு வேலையை விட்டுட்டு வந்துட்டேன்”

தோழியின் இலகுவான கேலிப் பேச்சில் மனம் மலர்ந்து சிரித்தாள்.

“சிரிக்கிறியா…சிரிப்படி.உனக்கென்ன பெரிய முதலாளியம்மா…என்னைப் போல் வேலை பார்க்கும் அவசியம் இருக்கிறதா என்ன?”




யவனா இன்று தனக்கு வந்த வேலை ஆபரை புன்னகையோடு தோழியிடம் பகிர்ந்து கொள்ள வாய் திறந்த போது,அவள் போனில் மற்றொரு அழைப்பு வருவதற்கான ஒலி.காதிலிருந்து எடுத்துப் பார்த்தவள் சக்திவேல் பெயரைப் பார்த்ததும் பரபரப்படைந்தாள்.

“ஏய் போனை வைடி.அவர் கூப்பிடுறார்” கட் செய்துவிட்டு கணவனின் அழைப்பை ஏற்றாள்.

அவள் ஹலோ சொன்னதுமே “ஏன்?” என்றான் சக்திவேல்.

” என்ன ஏன்?”

“ஏன் கம்பெனி வேலைக்கு வர மறுத்தாய்?”.

ஓ…இதெல்லாம் இவன் ஏற்பாடுதானா?எங்கேயோ ஒளிந்து இருந்து கொண்டு இங்கே என்னிடம் ஆதிக்கமா?

” எனக்கு பிடிக்கவில்லை.”

“வேலை பிடிக்கவில்லையா?’

” இங்கே இருக்கவே பிடிக்கவில்லை.”

எதிர்முனையில் கனத்த மௌனம் நிலவ,யவனாவிற்கு உற்சாகமாக இருந்தது.

“புறணி பேசும் பெண்கள் வசிக்கும் வீட்டிற்குள் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை”தானே தொடர்ந்தாள்.

” சுகந்தி,தாரா,நிர்மலா அப்படித்தான்.கொஞ்சம் வளவளவென்று பேசுவார்கள”அவன் பேச்சில் வெள்ளைக்கொடி பறந்தது.

“ஓ…அந்த பாதிப்புதான் அன்று என்னைக் குற்றம் சொல்ல வைத்ததோ?”

“இல்லை அது உன் சித்தி…ப்ச்.பழையதை மறக்க முடியாதா யவா?”

“மறக்ககூடியதா எனக்கு நடந்தவை?நான் எவ்வளவு தூரம் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்…” குரல் தழுதழுக்க ஆரம்பிக்க போனை கட் செய்தாள்.

இவன் முன்னால் தன்னிலை இழக்கக் கூடாது…தன்னைத் தானே அவள் சமாளித்துக் கொண்டிருந்த போது,மீண்டும் அவன் போன்.

“அந்தப் புறணி பேசும் பெண்களோடு சேர்ந்து கூட்டணி அமைக்கும் எண்ணம்தானே உனக்கும்?” சீண்டினான்.

“சீச்சி அந்த மாதிரி புத்தி எனக்கு கிடையாது”

“அப்போ அதை நிரூபி”

போனை வைத்துவிட்டான்.இவனுக்கு நான் ஏன் நிரூபிக்க வேண்டுமென்ற வீம்பு எழுந்தாலும்,அன்று இவன் குற்றம்சாட்டியதை இல்லையென்றாக்கும் எண்ணமே மேலோங்க மீண்டும் போன் செய்தாள்.

“எப்படி நிரூபிக்க?”

“உன் வாட்ஸ்அப் பார்” வைத்து விட்டான்.

வாட்ஸ்அப்பில் அவர்கள் கம்பெனியின் வொர்க்கிங் லிங்க்.லாக் இன் செய்து உள்ளே நுழைய,செராமிக் கப்புகள்,தட்டுகள் டிசைனிங் செய்ய வருமாறு விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இதற்கு லேப்டாப் வேண்டும்.அவளுக்கென்று தனி லேப்டாப் கிடையாது.அருந்ததி வேலை பார்க்க வந்த புதிதில் நல்லசிவம் ஒரு செகன்ட் ஹேன்ட் டெஸ்க்டாப்தான் வாங்கி வைத்திருந்தார்.அவர்கள் கல்யாணம் முடிந்த நான்கு வருடங்கள் கழித்துதான் அருந்ததி தனக்கு வேலை பார்க்க வசதியாக இல்லையென லேப்டாப் வாங்கினாள்.அதற்கான இ.எம்.ஐ யே யவனா கல்லூரி முடிக்கும் வரை கட்டிக் கொண்டிருக்க,தனக்கென தனி லேப்டாப் எண்ணத்தையே யவனா விட்டிருந்தாள்.

இப்போது யோசித்தால் அருந்ததி இவளுக்கென லேப்டாப் செலவு செய்ய தயாராக இல்லையென தோன்றியது.இப்போது லேப்டாப் கூட இல்லையென இங்கே சொல்ல கொஞ்சம் அவமானமாக உணர்ந்தாள்.

இரவு உணவிற்காக கீழே இறங்கி வந்த போது,மாதவன் அவள் முன் வந்தான்.” இந்தாங்கண்ணி.வேலையை ஆரம்பிங்க” ஒரு லேப்டாப்பை கொடுத்தான்.

புத்தம் புது லேப்டாப்.அவள் வேகமாக பிரித்து பார்க்க அவளது வேலைக்கு தேவையான சாப்ட்வேர்கள் எல்லாம் டவுன்லோட் செய்யப்பட்டு அவளது உழைப்பிற்கு தயாராக இருந்தது அந்த லேப்டாப்.




What’s your Reaction?
+1
56
+1
28
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!