Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 21(நிறைவு)

  1. தேடல் 21

விமர்சையாகவும் இனிமையாகவும் நடந்து முடிந்தது நந்தினிதேவியின் சடங்கு விழா. மாமன் மகளுக்கான சீர்வரிசை சபையை நிறைத்தது. பட்டோடு வைரநகைகள் இனிப்போடு பழங்களும் மங்கலப் பொருட்களுமாய் சீர் வைத்து மரியாதை செய்தான்.

சிவகாமி தேவியால் பாதிக்கப்பட்ட மனுஷன் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரிந்து கொண்டவன்அவன்.. எதேச்சையாக ஹைதராபாத்திற்கு வியாபார நிமித்தம் வந்தவன் வந்த இடத்தில் அவர் குடும்பத்தையே காண வெகுண்டெழுந்தான். அவனறிந்தவரை சிவகாமி பாவப்பட்ட ஜென்மம். திருமணமாகி குழந்தையைத் தந்துவிட்டு தன் பழைய காதலியைத் தேடி ஓடிப்போய்விட்ட அத்தைப்புருஷன் மீது வன்மம் கொண்டவனாய் நரசிங்க தேவப்பாண்டியனை பின் தொடர்ந்து விசாரித்து தனிமையில் விசாரணை செய்ய அவர் சொன்னவையோ அவனைப் புரட்டிப் போட்டது. அவன் நம்பத்தானில்லை.ஆனாலும் அவர் கண்களில் உண்மையிருந்தது. கள்ளத்தனமில்லை.




“யாரோ ஒருவனுடைய குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்று தினம்தினம் சிவகாமி முன்னே கையாலாகதவனைப்போல நிற்க திராணியில்லை விஷ்ணு. அத்தோடு நானும் இளைஞன்தான். அந்த வயது அனுபவம் இல்லாத வயது.  செல்வக் குடும்பத்தின் வாரிசான. என்னை ஏமாற்றியதில் என் மனம் உடைந்தே போச்சு. கல்யாணத்துக்கு முன்னே அல்லது பின்னே சிவகாமி தன்மையாக விஷயத்தை  சொல்லியிருந்தால் கூட என் மனம் ஏற்றிருக்குமோ என்னவோ …அவள் துரோகம் என்னை வாள் கொண்டு அறுத்தது. அவள் அதை பெரிதாகக் கூட நினைக்கலை. என்னையும் பொருட்டாக மதிக்கலை. எங்கே அங்கேயேயிருந்தால் நான் கொலைகாரனாகி விடுவேனோன்னு தப்பித்து ஓடி வந்தேன்.

பிறகு இங்கே என் வாழ்க்கையை மிகமிகச் சாதாரணமாக அமைத்துக்கொண்டேன். என் அடையாளம் இங்கே யாருக்குமே தெரியாது. என் மனைவியிடம் மட்டும்  என் திருமணத்தையும் அதன் அவலத்தையும் கூறிவிட்டேன். அவளின் முழு சம்மதத்துடனே எங்க கல்யாணம் நடந்தது. “

என்றவரின் விருப்பத்தைத் தட்டமாட்டாமல் வீடு வரைவந்து விருந்துண்டு சென்றான். முதன்முதல் கணவனின் பக்கமிருந்து வந்த உறவு என்பதில் ஸ்ரீலக்ஷ்மி கொண்டாடினார்.

அதன் பிறகு

அவர் சொன்னது உண்மைதான் என்பதை மிகமிக கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டபோது சிவகாமியின் மீதான பிம்பம் சரிந்தது. அப்போதுதான் அவருடைய பேரில் வளர்ந்து நிற்கும் சொத்தின் பிரம்மாண்டமே தெரிய வந்தது.விஷ்ணு சுதாரித்தான். கட்டுதிட்டங்களை கொண்டு வந்தான். எல்லாவற்றையுமே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

மாமனின் மீது மரியாதை வந்தது. அவ்வப்போது பேசி நட்பையும் உறவையும் வளர்த்துக் கொண்டான். அவரிடம் தான் மதுமதி இருக்கிறாள் என்பது தெரியவந்த போது ஆசுவாசமானான் . செய்யவேண்டிய வேலைகளை முடித்து விட்டு மதுமதியை அழைத்து வருவதோடு பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்பித் திட்டமிட …அதையெல்லாம் தகர்ப்பது போல சிவகாமியைப் பற்றிய மொத்த விஷயங்களுமே அவருடைய வாக்குமூலமாகவே வர ஆடிப் போய் விட்டான். ஒரு பாரம்பரிய கௌரவமான குடும்பப் பெண்ணால் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா?




இடையில் நரசிங்க தேவனிடமிருந்து விழாவுக்கான அழைப்பு வர மதுமதியைக் காணும் ஆவலும் மீதூர வந்தான்.

மதுமதியை தம்பதிகள் மகள் என்று கொண்டாடத் தன்  மனதிற்கிசைந்தவள் அந்த அன்பில் கட்டுண்டு இருப்பதும் கவிதையாக இருக்க அதை ஆழ்ந்து அனுபவித்து ரசித்தான்.

பிறகு விளையாட்டான உண்மையாயும் கேளிக்கையுமாகவே

“உங்க பெரிய பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு.  எனக்குக் கட்டித் தர மாட்டீங்களா மாமா?”

 என்ற கேள்வியை வைக்க கணவன் மனைவி இருவருமே திகைத்துப்பின்பே சுதாரித்து மீண்டனர். பின்னர் கெத்தாக

“ஏன் தரமாட்டோம்? என் பொண்ணுக்கு இஷ்டம்னா எனக்கும் இஷ்டமே! “

என்றதும் மதுமதியின் முகம் செந்தாமரைப் போலானது.

“ஆனால் ஒக கண்டிஷன் உந்தே! “

“என்னன்னு சொல்லுங்க அத்தே”!

“மீரு மாவூரு அல்லுடுகா ராகலுகுத்தாரா “

“அப்படின்னா? “

“அதாவது மாப்பிள்ளே எங்கஊரு மருமகனாகவே வந்துட முடியுமான்னு கேட்கறா? “

“வந்திட்டாப் போச்சு. சீதையிருக்குமிடமே ஈ ராமுடுக்கு அயோத்தி “என்றதும் கொல்லென்று சிரிப்பலை எழுந்தது.

“அத்தே! என்ன செய்யனும் உங்க மகளைக் கட்டிக் கனும்னா …மாவாட்டனுமா? சமையல் பண்ணனுமா? உங்க பொண்ணுக்கு  துணி துவைக்கனூமா? கை கால் பிடிக்கனுமா? சொல்லுங்க அத்தை! பொண்ணை மட்டும் குடுத்துடுங்க இல்லைன்னா பொண்ணை உங்க கண்ணு முன்னே தூக்கிடுவேன் “

மதுமதி முகத்தைப் பொத்திக் கொண்டு ஓடியே போய்விட்டாள்.




“தம்பி! சீரியஸாத் தான் பேசுறீங்களா? மதுமதி நல்ல பொண்ணு. ஏதோ கஷ்டம் மனசைவிட்டு எதையும் சொல்ல மாட்டா.  இங்கே வந்த கொஞ்ச நாளிலேயே எங்க மனயெல்லாம் கொள்ளையடிச்சுட்டா எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம். அவ மனசுலே ஆசையை வளர்த்திட்டு பெரிய கஷ்டத்தை கொடுத்திடாதீங்க. “

“இல்லை அத்தை! அவள் என் மன சாம்ராஜ்யத்தின்  ராணி.  இங்க வருவதற்கு முன்பே தெரியும் அவளை!  எங்கம்மாவும் ஒத்துக்கிட்ட மருமகள் “என்றவன் சுருக்கமாக அவள் குறித்த விஷயங்களைச் சொன்னான்.

“இங்கே வந்த கொஞ்ச நாளிலேயே உங்களையும் அன்பாலே கட்டிப்போட்டுட்டா பாருங்க “

அவளை அழைத்துப்போக அனுமதி கேட்டான்.ஸ்ரீலஷ்மி அதிலேயே உருகிப்போனார்.

கல்யாணத்திற்கு கண்டிப்பாக அழைக்க வேண்டுமென  சொல்லி கண்கலங்க அவனோ….

“நீங்கதானே பொண்ணுக்கு அப்பா அம்மா! நீங்கதானே  முன்னே நின்னு செய்யனும்.”

“நிஜமாகவே செப்புத்துன்னாரா தம்பி! எங்களுக்கு கன்னிகா தானம் செய்ற கொடுப்பினை உந்தா? “

என்று கேட்டவளின் கையைப்பிடித்து

“உங்களுக்கு மட்டும் தானிருக்கு நீங்க சொல்லுங்க… உங்க இஷ்டப்படித்தான் எல்லாமே! “

ஸ்ரீலஷ்மி கணவன் முகம் பார்க்க அவரும் சம்மதமாய் புன்னகைத்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்து பேசிய சமயம் விஷ்ணுவின் அலைபேசியிலிருந்த ஸ்க்ரின் சேவரில் இருந்த அந்த ஐஸ்க்ரிம் பெண் போட்டோவிலிருந்த முகம் தான் மதுமதி என்பது இப்போது ஞாபகம் வந்தது நரசிங்க தேவப் பாண்டியனுக்கு.

‘எங்கோ பார்த்திருக்கிறோம்’ ‘என்று குழம்பியவரை விஷ்ணுவின் பேச்சு தெளிவித்தது. ஆகமொத்தம் கடவுளுடைய அருளால் சேரவேண்டிய இடத்துக்கே வந்திருக்கிறாள்.நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.




விஷ்ணுவின் ஏற்பாட்டில் ரஞ்சனியோடு எல்லோருமே அடுத்த ப்ளைட்டில் வந்திறங்க அடுத்த கட்டமாக ஸ்ரீலக்ஷ்மி வீட்டில் வைத்து பெண்பார்க்கும் படலமும் சிறிய அளவில் ஒப்புத்தாம்பூலமும் நடந்தது.

நிஷா மதுவைக் கட்டிக்கொண்டாள்.ரஞ்சனி கண்கலங்கினாள். “மாம்ஸ்” என்று ஓடிவந்தவளை உச்சி முகர்ந்தான் சத்ய தேவ். வீரேந்தர் தலையை வருடினார். நரசிங்கதேவனின் தயக்கத்தை ரஞ்சனியும் வீரேந்தரும்  போக்கினர்.   இங்கு வருவதற்கு முன்பே விஷ்ணு உண்மையை உடைத்து விட்டிருந்தான்.

இத்தனைநாளும் கொண்டிருந்த கோபத்தை விஷ்ணு சொன்ன உண்மை துடைத்தெறிய வீரேந்தரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமலே பேசினார். நரசிங்க தேவனுக்கும் பெரும் பாரம் அகன்றது போலிருந்தது. எத்தனை வருடச் சுமை! அதை இறக்கி வைக்க வழி வகுத்த மதுமதி மீது இன்னுமே பாசம் வளர்ந்தது. வீண்பழி சுமந்து தவித்துக் கிடந்த மனது நிம்மதி பெருமூச்சு விட்டது.

நரசிங்கதேவனுக்கு மட்டும் லேசாக மனக்கிலேசமிருந்தது. அங்கே வந்தால் சிவகாமி முகத்தில் விழிக்க வேண்டுமேயென்று…

அவர் தயக்கத்தைப் புரிந்தவனாய் விஷ்ணு தனியே அழைத்துப் போய் பேசினான்.

அரவிந்தன் மூலமாகக் கடத்தப்பட்டு உண்மையை வரவழைக்க சிவகாமியிடம் பட்டினி போட்டு இருட்டறையில் வைத்து என்று கொஞ்சம் கடுமையாக நடக்க உண்மைகளையெல்லாம் மனம் திறந்து கொட்டியவளின் மனம் ஏதோ ஒரு புள்ளியில் தன்னிலை பிறழ்ந்து போய் விட்டது. துரோகச் சிந்தனையும் துர்நோக்கும் சதி நிறைந்த மனதும் எங்கோ பிசகி தன் சுயமிழந்து போக அவளின் மனப் பிறழ்வு இவர்களை கவலைக்குள்ளாக்கினாலும் சிவகாமிக்கேற்ற தண்டனை என்றே சமாதானமும் செய்தது.

சிவகாமி காணாமல் போனதாகவே யாரும் நினைக்க வில்லை எங்கோ பணி நிமித்தம் வெளியே போயிருக்கிறாள் என்றே வீடு நம்பியது. சிவகாமியும் அவ்வப்போது இப்படி செல்லும் வழக்கமுடையவள் தான் என்பதால் யாருக்கும் பெரிதாகத் தோற்றறவில்லை.

அதையே பயன்படுத்திக்கொண்டு யாருமறியா ரகசியமாய் சிவகாமியை அவள் அறையிலேயே விட்டுவிட்டனர்.

மறுநாள்…..

சிவகாமியின் நடத்தை கண்டு அப்போதுதான் அறிந்தாற் போல மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். லாவண்யா தான் துடித்துப்போனாள்.

ரஞ்சனி அவளைத் தேற்றினாள். யாரும் எதிர்பாராததொரு முடிவை விதி அழுத்தமாய் எழுதிவிட்டது.

தெய்வம் நின்று கொல்லும் என்பது சரிதானோ என்று தோன்றியது.

நரசிங்க தேவப்பாண்டியன் பெருமூச்சு விட்டார்.




ரஞ்சனி பவனம் இன்னும் தன் கல்யாண மெருகை குறைத்துக் கொள்ளாமல் அழகாக மிளிர்ந்தது. விடியற்கால சுப முகூர்த்தத்தில் விஷ்ணுப்ரியன் பூபதி மதுமதியை நரசிங்க தேவனும் ஸ்ரீலக்ஷ்மியும் தாரை வார்த்துத் தர மாங்கல்ய தாரணம் கனஜோராக நடந்தது. இத்தனை வருடங்கள் கழித்து மகனைப்பார்த்த நரசிங்கதேவப்பாண்டியனின் குடும்பமும் மகனை அரவணைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்து மருமகளையும் பேத்தியையும் வரவேற்றது. லாவண்யா மட்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்தான். ஆனாலும் குடும்பப் பெரியவர்கள் அவளையும்  விட்டுத்தராமல் தங்களுக்குள்ளே பொதிந்து கொண்டனர்.லாவண்யா தனக்குப் பிறந்தவள் இல்லை என்ற உண்மையை நரசிங்கதேவப் பாண்டியன் தன் வீட்டார் யாரிடமும் பகிரவேயில்லை.  உறவுகள் இணைந்தன. இது எதுவுமே தெரியாமல் சிவகாமி மருத்துவமனையில் மருந்துகளின் துணையோடு உறங்கிக் கொண்டிருந்தாள்.

பெண்மையின் சிறப்பையிழந்து சூதுவாதுடன் வாழ்க்கையை நடத்தும் எல்லோருக்குமே சிவகாமி ஒரு பாடத்தைக் கொடுத்திருந்தாள். புரிந்து நடந்தால் நலமே! புரியாமல் அலட்சியம் செய்தால் கொடுமையே!

இதை லாவண்யாவும் உணரும் நேரம் வரும் . காலம் கண்டிப்பு நிறைந்த ஆசான். அது சரியாகவே தீர்ப்பை வழங்கிச் செல்லும்.

விஷ்ணுவின் அறைக்கதவு திறக்கப்படும் சப்தமும் யார்யாரோ நகைக்கும் ஒலியும் தேய்ந்து மறைந்தது. மாந்துளிர்ப் பச்சைநிற மென்பட்டில் கண்ணை உறுத்தாத ஒப்பனையில் கைகளும் கால்களும் நடுங்க நின்றவளை அருகில் வந்து கையிலிருந்த பால்செம்பை வாங்கி அருகில் வைத்து விட்டு கைப்பிடித்து அழைத்துப் போய் அமர வைத்தான்.

“ஹேய்! தேனூ எதற்கு இத்தனை நெர்வஸாயிருக்கே! “

“இங்கே வா ” என்று கைப்பிடித்து எழுப்பி பால்கனியோரம் போனான். கீழே தோட்டம் விளக்கொளியிலும் நிலவொளியிலும் ரம்யமாயிருந்தது. கல்யாணக் களை எங்கெங்குமே ததும்பிக் கொண்டிருந்தது.

“தேனூ…”

விஷ்ணுவின் ஆழ்ந்த குரல் அவைளைச் சிலிர்க்க வைத்தது. லேசாக அணைத்து அவள் முகத்தை நிமிர்த்தியவனின் முகம் பார்க்கவொட்டாமல் இமை தழைந்தது.

“தேனூ! “

“ம்ம்”

“பேசேண்டீ ஏதாவது “

“ம்ம்”

“ஏய்! “என்றவனின் குரல் மாற்றத்தில் விதிர்த்துப் போய்  நிமிர்ந்தவள் அவனுடைய முகத்தில் குறும்பைக் கண்டதும் சினுங்கியபடியே அவன் நெஞ்சில் கைகளால் அடித்தாள்.

அசால்ட்டாக அதை ஏற்றவன்




“தேனம்மா…தேனுக்குட்டி! எவ்ளோ நாளாச்சு? இதுக்காக இந்த நிமிஷத்துக்காக…. காத்திருந்து.. உன்னைத்தேடிதேடியே  அலுத்துப் போயிட்டேனடி! “

“இப்பவே அலுத்துப்போயிட்டேனா? “

என்று விலக்க முயன்ற கைகளை இழுத்து இறுக்கியவன்

“ஆமாண்டி இப்படியெல்லாம் பார்த்து அலுத்துப்போச்சு “என்று சொன்னவன் காதருகில் முணுமுணுக்க

“ச்சீய்!ரொம்ப பேட் பாய் ஆகிட்டீங்க ” என்று முரண்டவளை கைகளில் ஏந்தியவன் காலாலேயே பால்கனிக் கதவை அடைத்து மஞ்சத்தில் விட்டான். காலை எத்தி மடக்கிய வேட்டி முனையை இடுப்பிலேற்றி மடித்துக் கட்டிக்கொண்டு பட்டுச்சட்டையின் கையை முழங்கை வரை ஏற்றிக் கொண்டுவிட்ட முஸ்தீபைப் பார்த்து சிரித்தாள் அவள்.

“என்ன கோதாவுலே இறங்குகிறார் போல “

“ஆமாம் டீ!  உன்னைத் தேடவச்சு என்னைச் சுத்தல்லே விட்டேயில்லை…”

“அய்யே! என்னைத்தான் ஸ்கூலில் வச்சு பார்த்தது முதல் உங்கக் கண்ணெதிரில் தானே இருந்தேன் இதென்ன போங்காட்டம்! க்கூம்”

 என்றவளின் நொடிப்பில் மயங்கியவன்

 “சொல்லுவடி! ஏன் சொல்லமாட்டே! ஒரு ஆறேழு வருஷத்துக்கு முன்னே  ஐஸ்க்ரிமை சவைச்சிக் கிட்டே வந்து மோதி எதிர்ல வந்தவன் சட்டையை பாழாக்கிட்டு அதைத் துடைக்கிறேன் பேர்வழின்னு இன்னும் ஈஷிவச்சுட்டு ப் போயிட்டா …அவளைத்தேடி அலைஞ்ச அலைச்சல் எனக்குத்தானே தெரியும். “

அவள் வியப்போடு அது நானா என்பது போல பார்க்க

“நீயேதான் இந்த முட்டைக்கண்ணும் இதோ இந்த உதடும் என்னை எப்படி இம்சை பண்ணுச்சு தெரியுமா? “

என்று அவள் இதழை விரலால் நிமிண்டினான்.

“ஸ்ஸ்…ஆ….வலிக்குது …நா….நா… நம்ப மாட்டேன் “

“அப்படியா…”என்றவன் தன் போனை எடுத்து ஸ்க்ரின் ஸேபோட்டோவைக்காட்ட அவள் விழிகள் பெரிதாக விரிந்தன. கையில் கோன் ஐசும் வாயில் சின்னத் தீற்றலும் வளையத்தில் கோர்த்த ஜிமிக்கியுமாய்…..

“ஹையோ!  ஆமாம்! டிகிரி எக்ஸாம்ஸ் முடிச்சுட்டு லாஸ்ட் டே! ப்ரெண்ட்ஸ் எல்லோரும் மாலுக்குப் போனோம். ஆமாம்…. ஒருத்தர் மேல மோதி… அச்சச்சோ! அது நீங்களா…? ….ஸாரி..ஸாரி ..எனக்கு ஞாபகமேயில்லை…ஆமாம் அதெப்படி? நீங்க எனக்குத் தெரியாமல் என்னை போட்டோ எடுக்கலாம் “அடுத்த சண்டைக்குத் தயாரானவளை அவன் ஒரு விதமாகப் பார்த்து வைக்க …

“எதுக்கு இப்போ இப்படி ….பார்த்”

முடிக்க விடாமல் பாய …அவள் திகைத்து நகர …. யாருடைய கை பட்டதோ ரிமோட் அழுந்தியதில் டிவி திடிரென வெளிச்சப்பூ பூத்து அலறியது




“நாளும் வாழும் தோகை பூங்கன்னம்

எங்கே நானென்று தேடட்டும் என்னை….

சிந்தாத முத்தங்கள் சிந்த….

….எங்கே நானென்று  தேடட்டும் என்னை ……. சிந்தாத முத்தாத முத்தங்கள் சிந்த…..

அவள் எந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை

காலம் கொண்டாடும் கவிதைமகள்….

கவிதை மகள்…”

என்று உச்சஸ்தாயியில் அலற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்

 விஷ்ணு அசடு வழிய…திருதிருக்க….

 “நான்தான் நீ வரும் வரை டிவி பார்க்கலாம்ன்னு…. நீ வந்திடவே ரிமோட்டை படுக்கையில் போட்டுட்டேன் போல “

என்றதும் அவள் பூவிதழ்களை கையில் அள்ளி அவன் மீது விசிறி கலகலவென சிரித்தாள். அவனும் தலைக்கேசத்தைக் கோதியபடியே வாய் விட்டு சிரித்தான்.

அப்போது முதலே அவளை தேடித் தேடித் தவித்திருக்கிறானே அவள் விஷ்ணு…முகம் சிவந்து மனதில் காதலின் கர்வம் கொப்பளித்தது.

“சிந்தாத முத்தங்கள் சிந்த “

என்ற வரி மனதில் வர…..

கணவனின் கன்ன.தில் ஆசையும் நேசமுமாய் இதழ் புதைத்தாள் அந்த மனைவி.

காதல் மனைவியின் முதல் இதழ் முத்திரையில் சொக்கியவன் இப்போது தன்னுடைய வேறு தேடல்களை ஆரம்பிக்கும் முக்ய வேலையிலிறங்க முதல்காரியமாக

டிவியோடு விளக்கையும் அணைத்து விட்டான் குறும்புக்காரன். ….!

அங்கே வேறு யுத்தம் துவங்க ஆரம்பித்தது.

                                                                                   தேடல்முடிந்தது.

  சுபம்




What’s your Reaction?
+1
13
+1
12
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!