Serial Stories

மாற்றங்கள் தந்தவள் நீதானே -4

அத்தியாயம் -4

 

ரேவதியின்  திருமணத்திற்காக முதல் நாளே மதுரைக்கு சென்று விட்டாள் மோகனா. அன்று தங்கை பாரதிக்கு எக்ஸாம் இருந்ததால் அடுத்த நாள் காலை பிளைட்டில் வருவதாக பெற்றோர்கள் கூறிவிட்டார்கள். சென்னை டூ மதுரை இரண்டு மணி நேர பயணம் என்பதால் ப்ளைட்டில் அனுப்பி வைத்தார் கோதண்டம்.

மதுரையில் மோகனாவின் அத்தை வீடு இருந்ததால் அவள் நேராக அங்கு சென்று தங்கிவிட்டு காலையில் பெற்றோர்களுடன் சேர்ந்து திருமணத்திற்கு செல்வதாக திட்டமிட்டிருந்தனர். அதன்படி அவள் மதுரைக்கு சென்ற உடனே அப்பா அம்மாவுக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னாள். இவளை அழைத்துச் செல்வதற்காக ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தார்கள்  பவானி அத்தையும்  அத்தை மகள் தேவியும்.




“வாடி என் அண்ணன் மகளே ஊர்ல இருக்கிறவ கல்யாணத்துக்கு எல்லாம் வரிஞ்சு கட்டிக்கிட்டு வரியே உனக்கு எப்ப..டீ கல்யாணம்?” அத்தை எப்பவுமே இப்படித்தான் எதுவா இருந்தாலும் பட்டுன்னு கேட்பாள்.

“நல்ல மாப்பிள்ளையா இருந்தா சொல்லுங்களேன் அடுத்த முகூர்த்தத்திலேயே தாலி கட்டிக்கிறேன்.”

அத்தைக்கு நான் ஒன்னும் இளக்காரம் இல்ல என்பது போல பதில் கேள்வி ஒன்றைக் கேட்டு அத்தையின் வாயை அடைத்தாள் மோகனா.

“அடியே வெளியில போய் நான் எதுக்கு உனக்கு மாப்பிள்ளை பாக்கணும் என் பையனை கட்டிக்க வேண்டியதுதானே நீ ஊன்னு  ஒரு வார்த்தை சொல்லு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை ரெடி பண்ணிடுறேன்.”

மோகனாவுக்கு  சிரிப்பை அடக்கமுடியவில்லை வாய்விட்டு கலகலவென்று சிரித்தாள்.

“போதும் போதும் ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா வாங்க… காதுல ரத்தம் வந்திடும்போல இருக்கு எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ரெண்டு பேரும் ஓவரா போறீங்க…அம்மா நீங்க ரொம்ப மோசம்மா…கலாய்க்கிறது ஒரு அளவு இருக்கு இல்லையா ஒரேடியா அவளை கலாய்க்கிறீங்க அவளும் உங்களுக்கு ஈடு கொடுத்து பேசிட்டு இருக்கா பாருங்க! வீட்டுக்கு போலாம் வாங்க டைம் ஆகுது”

என்று அம்மாவின் கையைப்பற்றி இழுத்தாள் தேவி.

“தா பாரு தேவி உங்கம்மா பேசுறது கொஞ்சமாவது நல்லா இருக்கா? அஞ்சாவது படிக்கிற பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களே இது எந்த விதத்துல நியாயம்…சொல்லு..?”

“சரி சரி வீட்டுக்கு போகலாம் வா மோகனா…உனக்காக உனக்கு பிடித்த ஒரு பொருள் வைத்திருக்கிறே சீக்கிரம் வா…”

சிறுவயதிலிருந்தே அத்தை பவானி என்றால் மோகனாவுக்கு கொள்ளைப் பிரியம். இவளை குழந்தையிலிருந்து வளர்த்தவளாயிற்றே!  திருமணமாகி போய் அடுத்த வருடமே தேவி பிறந்துவிட்டாள். தேவிக்கு 20 வயது ஆகிறது. தேவி பிறந்து பத்து வருடம் கழித்து தான் சுகன் பிறந்தான். அவன் பிறந்தவுடன் மிகவும் பலவீனமானாள் பவானி. வெளி ஊர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டதால் சென்னைக்கு அண்ணன் வீட்டுக்கு வருவது குறைந்து போனது. ஆனால் பொங்கல் தீபாவளி என்று சில வருடங்கள் இவர்கள் எல்லாரும் அத்தையை தேடி வந்து விடுவார்கள். அப்பாவும் பொண்ணும் பிசினச்சில் இறங்கிவிட இப்போதெல்லாம் அடிக்கடி வர முடியாத சூழ்நிலையாகி விட்டது. ஆனாலும் அப்பா தன் தங்கையை பற்றி பேசாத நாட்களே இல்லை என்று தான் சொல்லணும். இருவருக்குமிடையே அவ்வளவு அன்யோன்யம்.




அத்தை வீட்டில் இருந்து ரேவதி வீட்டிற்கு 10 கிலோமீட்டர் தொலைவு இருந்ததால் மோகனா கால் பண்ணி ரேவதியிடம் தான் வந்துவிட்டதாகவும் அத்தை வீட்டில்  தங்கியிருப்பதாகவும்  இரவு ரிசப்ஷனுக்கு வந்துவிடுகிறேன் என்று கூறினாள்.

“ஏய்…மோகனா மேக்கப் போடும்போது நீ என்கூட இருந்தா நல்லா இருக்கும்மடி கொஞ்சம் சீக்கிரமா வர்றியா..?” என்று ரேவதி கெஞ்சவும், மோகனா இந்த விஷயத்தை அத்தையிடம் சொன்னாள். நம்ம கார்ல போ..மோகனா, டிரைவருக்கு கால் பண்ணி வரச்சொல்லுறேன் சரியா?

“சரி அத்தை” சீக்கிரமாகவே கிளம்பி ரேவதி வீட்டிற்கு சென்றாள் மோகனா.

மோகனா ரேவதி வீட்டு வாசலில் வந்து இறங்கவும் அவளை உரசியபடி வந்து நின்றது மற்றொரு கார். காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கியவனை பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைந்துப்போனாள் மோகனா. காரிலிருந்து இறங்கியவன் வேறு யாருமில்லை சாட்சாத் தேவானந்தன்தான். தன்னையுமறியாமல் இரண்டடி பின்னடைந்தாள். இவன்தான் கல்யாண மாப்பிள்ளையோ?

இவன் எப்படி இங்கே வந்தான்.? இவனுக்கும் ரேவதியின் இந்த கல்யாணத்துக்கு என்ன சம்பந்தம் ஒருவேளை ரேவதியின் உறவுக்காரனாக இருப்பானோ? இவள் தட்டுத்தடுமாறி கொண்டிருக்க…

“ஹலோ நீங்க…! சென்னையில கோதண்டம் சார்…அவரோட டாட்டர் தானே?  பேரு கூட ஏதோ சொன்னாரு எஸ் ஞாபகம் வந்துருச்சு மோகனா…மோகனாப்பிரியா தானே? எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது மோகனா… மோகனா என்று உங்க அப்பாக்கூட அழைத்தாரே? என்னங்க நான் சொல்லுறது  சரிதானே…?”

அவனோ இயல்பாக வந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தான். இவளுக்குத்தான் அவனிடம் இயல்பாக பேச முடியவில்லை.




What’s your Reaction?
+1
20
+1
20
+1
0
+1
3
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!