Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 13

தேடல் 13

          அந்த மாளிகையின் மேன்  மாடியில் கைப்பிடிச்சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் மதுமதி. வான நீலப்படுதாவில் முழு நிலவு.  அதன் ஒளிக்குளியலில் பூமி  முழுக்க பாலில் திளைத்துக் கொண்டிருந்தது.

            மதுமதியின் முகமும் சருமமும் கூட நிறம் மாறி பார்ப்பவர்களை சுண்டியிழுத்தது.

            மார்பின் குறுக்கே கைகளை கட்டிய வண்ணம் கண் மூடி நின்று கொண்டிருந்தவளை பார்க்க பார்க்கத் திகட்டவில்லை.

            மனதுள்  ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தது.

           இதோ

இங்கே வந்து  நான்கைந்து  மாதம் ஓடி விட்டது. முரண்டு பிடித்து வரமாட்டேன் என்றவளை நிஷாவைக் காட்டி இழுத்து வந்தான் விஷ்ணு.

   நிஷா நீயின்றி இருக்க மாட்டாள் என்று மிரட்டியதோடு சத்ய தேவ்வின் உடல் நிலையையும் முன்னே வைத்தான். கூடவே தனக்கு அலுவலகப் பணியிலும் உதவியாக இருக்கப் பணித்தான்.

           இங்கே வந்ததும் இத்தனை பெரிய மாளிகை  மிரட்டியது. கேட்டிலிருந்து கொஞ்ச தூரம் வண்டி வந்த பின்புதான் வீட்டு வாசற்படியே!

மூன்றடுக்கு விஸ்தாரமான மாளிகை முன்னும் பின்னுமாக விசாலமான தோட்டம். நீச்சல் குளம் வேறு. பக்கவாட்டில்  சின்ன செயற்கை குளம். கூடவே அருகில் மெலிசான நான்கு தூண்களுடன் ஒரு குட்டி மண்டபம். வெறுமனே இருந்தது. சுவாமி சிலையோ எதுவுமில்லை. ஆங்காங்கே இருக்கைகளும் சின்ன மாடர்ன் சோபா ஊஞ்சலும் கூட இருந்தது. நிறைய டூம் மாதிரியான அலங்கார விளக்குகளும் கூட.

            அழகழகான பூச்செடிகள்.மதுமதிக்கு சுபாவத்திலேயே பூவும் இயற்கையும் பிடிக்கும். அந்த விதத்தில் இந்தத் தோட்டத்தின் நேர்த்தி மனதைக் கவர்ந்தது.




            முதல் வாரம் வெறுமனே சுற்றி வந்தவளை அந்தத் தோட்டம் இழுத்துக்கொண்டது. காலையும் மாலையயும் அங்கேயே நேரத்தைக் கழிப்பதோடு பூக்களைக் கொய்து வந்து  பூமாலைகளைக் கட்டி சுவாமி படத்துக்கு போடுவதும். ஆங்காங்கேயிருந்த கண்ணாடி மற்றும் சீன பீங்கான் குடுவைகளில் மலர் அலங்காரமுமாக செய்து வைத்தாள்.

            கூடிய மட்டிலும் ரஞ்சனியை நிஷாவுடன் முன் நிறுத்தினாள்.

            ஆனால் லாவண்யா &கோ வின் குத்தல் மொழிகளிலும் தீப்பார்வையிலும் எள்ளலும் சோர்ந்து தான் போனாள்.

            அதிலும் பக்கத்தில் யாருமில்லா சமயம் எல்லாமே வரம்பு மீறிப்போகும்.

           கட்டிய மாலையை ரஞ்சனி சிலாகிக்க

அன்றும் அப்படித்தான்!

“பூக்கடை வச்சு பொழைச்சவ தானே! அதான் மாலை கட்ட நல்லாவே வருது! இது ஒரு பெரிய விசயமா? “

சிவகாமி நொடிக்க,

“பூக்கடையா?  அவள் எம் பிஏ முடிச்சுட்டு ஆபிஸ் அட்மின் பார்க்கிறவ”

       “ஹாங் தெரியும் தெரியும். இவங்கம்மாவோட பூக்கடையிலே தானே மாப்பிள்ளை போஸ்ட்டைக்குடுத்து நம்ம சத்யா வை எடுபிடியா வச்சுக்கிட்டாங்க! அதான் அன்னிக்கு விஷ்ணு கதைகதையா சொன்னானே! உன் சின்ன மகன் போய் சாக்கடையிலே விழுந்த கதையை! “

         மதுமதி திகைத்தாள். ஃப்ளவர் பொக்கே ஷாப்பை சிவகாமி பூக்கடை என்று விவரித்த. அழகில் சிரிப்பு வர, அடுத்து அவர் தன் குடும்பத்தை சாக்கடை என்றதில் கடுகடுப்பானாள்.லாவண்யா ஜோக்கை கேட்டது போல விழுந்து விழுந்து சிரித்தாள்.

          அவர்களுக்கு பதிலடி தர வாய் திறக்குமுன்னே பின்னாலிலிருந்து கம்பீரமான அழுத்தமான குரல் முன்னே வந்தது.

            “லாவண்யா! என்ன சிரிப்பா சிரிக்கிறே! என்ன ஜோக்குன்னு சொன்னா நானும் சிரிப்பேனே!”

“ஹ்ம் அ….அஅது ஒன்னு இல்லை அத்தான்! அம்மா என்னவோ சொன்னாங்க. கேட்டதும் சிரிச்சுட்டேன். “

          “ஆமாம் ஆமாம்! உங்கம்மா ப்ளவர் பொக்கே ஷாப்பை போய் பூக்கடைன்னு சொன்னாங்களே…அதைக்கேட்டு எனக்கும் சிரிப்பு பொத்துக்கிட்டு வந்தது. “

           “ஹ்ம்! லாவண்யா! உனக்கு பூக்கட்டத் தெரியுமா? “

“அவளுக்கு எதுக்குடா தெரியனும். அவ இந்த வீட்டோட இளவரசி. ஜமீன் வாரிசு. கையை சொடுக்கினா பூந்தோட்டமே வந்து நிக்கும். “

      “அஹான்….பூந்தோட்டத்தை தலையிலே வச்சுக்க முடியாதே அத்தை. பூவைக் கூட பறிச்சு கட்டித்தானே வச்சுக்கிடனும். இவ இந்த வீட்டு இளவரசியா….?யார் வீட்டுக்கு யார் இளவரசி! அது நீங்க. கட்டிக்கிட்டு போன வீட்டுலே.  இங்கே வாலாட்டினா ஒட்ட நறுக்கிடுவான் இந்த விஷ்ணு. என் தம்பி எடுபிடி வேலை செஞ்சான். நீங்க பார்த்தீங்க…ஹஹ்ம் இருக்கட்டும்! என் தம்பி உழைச்சு சாப்பிட்டான். எங்கம்மா அதைத்தான் கத்துக் கொடுத்திருக்கிறாங்க. உங்கப் பொண்ணுக்கு நீங்க எதையுமே கத்துத் தரலையோ? .அது சரி! உழைப்புன்னா அது என்ன கலர்னு எந்த கடையிலே கிடைக்கும்னு கேட்கிற ஜாதியாச்சே நீங்க”

“அப்புறம் லாவண்யா! மதுமதி எம்பிஏ. டிஸ்டிங்ஷன். நம்ம கம்பெனி வரவு செலவு மொத்தமும் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருப்பா. டீச்சிங் பண்ணுவா. இன்னும்  கார்டனிங் மாதிரி நிறைய விஷயம் தெரியும். முக்யமா சூப்பரா விதவிதமா சமைப்பா.  தெரியுமா? “

“அதான் உங்களுக்கு ஏ ட்டூ இஜட் தெரிஞ்சுருக்கே அத்தான். எனக்கெதுக்கு வெட்டி வேலையெல்லாம். “

“பின்னே என்னோட ஒவ்வொரு எம்ப்ளாயியையயுமே தெரிஞ்சு வச்சிருப்பேன்.  இவள் நம்ம நெருங்குன ரிலேட்டிவ்வாச்சே! …பாரு! இப்ப நீ கூட நம்ம நெ….நெ…..ருங்கின ரிலேட்டிவ் தான் உன்னைப்பத்தியும் தெரிஞ்சு வச்சிருக்கேனே! எடுத்து சொல்லட்டா? “




“தேவையில்லை அத்தான்! “

“ஏண்டா விஷ்ணு! என் பொண்ணு லாவண்யாவும் எகிருந்தோ வந்து இங்கே அண்டிக்க வந்திருக்க இவளும்  ஒன்னா…?”

— அத்தை ஆங்காரமாக வெடித்தாள்.

“ச்சேச்சே! ஒன்னாகவே முடியாது அத்தை! மதுமதி வேற லெவல். உங்க பாஷையிலே சொல்லணும்னா மதுமதி பூக்கடை ! லாவண்யா…”நக்கலாய் சிரித்தான்.

மதுமதிக்கு ஆயாசமாகவும் இதெல்லாம் புதிசாகவும் இருந்தது.

அவர்கள் வீட்டிலும் சிரிப்பும் கலாய்ப்பதும் கேலியும் கும்மாளமுமாய் இருக்கும் தான். ஆனால் யாரையுமே கஷ்டப்படுத்துவது போன்ற பேச்சு இருக்காது.

         இங்கோ

தினமும் மனசு குத்துப்பட்டு ரத்தம் வடிக்கிறது. எதற்கு இப்படி.?

இப்போதெல்லாம் நிஷா ரஞ்சனியிடம் நன்றாகவே ஒட்டிக் கொண்டு விட்டாள். இன்னும் ஏனிங்கே இருக்கனும் என்ன தேவைக்கென்று இருப்பது?

சொன்னால் விட மாட்டார்கள்.  சொல்லாமலே கிளம்பி விட வேண்டியது தான்.!

சரி!

எங்கே போவது?

வேலை வேண்டாமா? தங்க நிழல் வேண்டாமா?

கழிவிரக்கத்தில் கண்ணீர் வந்தது.

அன்றைக்கு லாவண்யா சொன்னதும் உண்மை தானே?

‘அடிச்சுப் போட்டாக்கூட ஏன் என்று கேட்க ஆளில்லாத அனாதை தானே நீ ‘என்றாளே!

அப்படியே சரிந்து தரையிலமர்ந்து முதுகு குலுங்க அழுதவளை

இரு வலிமையான கரங்கள் வளைத்துப் பிடித்து திண்மையான நெஞ்சின் மீது சரித்து தழுவின.

அந்த வாசனை….

மதுவின் நாசி உணர்ந்தது. நுரையீரல் வரை போய் கிறங்கடித்தது.

அவனின் ப்ரத்யேக வாசனை..!

அவள் திமிர அவன் கைவளையம் இறுகியது. சின்னஞ்சிறுசிசுவைப்போல அவனுடைய பரந்த நெஞ்சில் ஒன்றி ஒண்டிக் கொண்டாள். தாயின் பாதுகாப்பான கதகதப்பை உணர்ந்தாள் மதுமதி.

“தேனம்மா! ஏன் அழறீங்க? “

நிமிர்ந்து பார்த்தவள்

“தேனம்மாவா..?”

“ஆமாந் தேனுக்குட்டி..நீங்கதான் தேனு . “

“என் பேரு தேனுவுமில்லே தேனம்மாவுமில்லே மதுமதி.”

“அப்படியா! உன் பேருல முதல் பாதிக்கு தமிழிலே என்ன. சொல்வாங்க? “

“என்ன சொல்வாங்க? “

“மதுன்னா தேன் அப்படின்னு அர்த்தமிருக்காயில்லையா? அதான் கூப்பிட்டேன். “

“ஒன்னும் வேண்டாம்! மதுன்னே கூப்பிடுங்க !”

“நீ என்ன எனக்கு ஆர்டர் போடுறே! எனக்குப்பிடிச்சவளை எனக்குப்பிடிச்ச மாதிரித்தான் கூப்பிடுவேன். “

“……”

‘பிடிச்சவளா? நானா? ‘




“என்ன பார்வையிது? “

“வேண்டாம் விஷ்ணு! இது சரிப்பட்டு வராது. திரும்ப ஒரு பிரிவு உங்க குடும்பத்திலே வேண்டாம். “

“இங்க பாரு தேனு! நான் அந்த சமயம்  இங்கே யில்லாமப் போனது தான் எல்லாத்துக்குமே ஆரம்பம் நான் இருந்திருந்தா ஒழுங்கா ஹாண்டில் பண்ணியிருப்பேன். நானில்லைன்னதும் எங்கத்தை அடிச்ச வேப்பிலையிலே அப்பா ஆட்டமான ஆட்டம் ஆடிட்டார். “

“வேண்டாம்! எனக்கு இது பிடிக்கலை. நான் ஒத்துக்க மாட்டேன்! “

” என்ன பிடிக்கலை? என்னைப் பிடிக்கலையா? என் கண்ணைப்பார்த்து சொல்லு”

அவள் வேகமாய் நிமிர்ந்து அவன் விழிகளைச் சந்தித்தாள்.

இதழ் பிரிய மறுத்தது. அந்த. ஆளுமையான விழிகளுக்குள் தொலைந்து போக ஆரம்பித்தாள்.இதழ்களும் கண்ணிமைகளும் துடிதுடித்தன.

தன் ஒற்றை விரலால் அவளின் உதடுகளை வருடினான்.

நிலவூறித் ததும்பும் இதழ்களின் மென்மையும் லேசான ஈரமும் அவனை  மேலும் கிளர்ந்தெழ வைத்தது.

விரல் நுனி கன்னத்தில் கோலம் போட்டபடியே இதழ் நோக்கி நகர்ந்தது.

குனிந்து அவற்றின் வடிவத்தைப் பார்க்க செர்ரிபழ நிறமும் ஆரஞ்சுளை வடிவமுமாய் சுண்டியிழுக்க. அவளின் பின்னந்தலையை அழுத்தி தன்பால் இழுத்து  தன் இதழ்களால் அழுந்த முத்தமிட்டான்.

மதுமதியின் உடல் சிலிர்த்து அடங்கியது.

ஆடவன் ஒருவனின் முதல் இதழ் ஸ்பரிசம்.

மின்னல் கொஞ்சும் தாழம்பூ மடலாய் வெடவெடத்தது. ஆழ் மனதில் கோடிகோடி  பூக்கள் பூத்துச் சிதறின.

இமைக்குடைகள் கவிழ்ந்து கொண்டன.

மெதுமெதுவே அவன் தந்த அழுத்தத்தில்  மீசை குறுகுறுப்பும் தாடை சொரசொரப்பும் இம்சித்தன. ஆனாலும் அவளால் விலக முடியவில்லை.  அவனும் விடுவதாயில்லை.

புதுவிதமான மாயா லோகத்துள் இருவருமே சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

எங்கோ மிக அருகில் பூனையொன்று கத்திய சப்தத்தில் இருவருமே சட்டென்று  கனவு கலைந்தாற் போல் விலகினர்.

அவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே அத்தனை சங்கோஜமாயிருந்தது.

தலை நிமிரவேயில்லை. அவனோ சிரித்துக்கொண்டே அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான். அவளும் வாகாய் ஒண்டிக் கொண்டாள்.

“தேனு”

“ம்”

“என்னைப்பாரேன் “

“ம்ஹும்”

அவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

மனசு “ஹா” வென்றிருந்தது. தன்னவளின் மனதை வென்ற கர்வம் நிறைந்திருந்தது. லேசாய் சரிந்து அவளைத்  தன் நெஞ்சின் மீதே வாகாய் சரித்துக் கொண்டான்.

இவளைக்கண்ட நாளாய் முகிழ்த்தக் காதல் டிடெக்டிவ்வின் தவறான தகவல்களால் தள்ளவும்  முடியாமல் காதலை கொல்லவும் முடியாமல் இவள் மீதான கோபத்தை தணித்துக் கொள்ளவும் முடியாமல் பழி வாங்குகிறேன் பேர்வழியென தானும் தவித்து இவளையும் படுத்தி வைத்து  கடவுளே!

எத்தனை அவஸ்தை! தம்பி மனைவி என்று அறிவு சொன்னாலும் உள்ளுணர்வு ஏற்க மறுத்து முரண்டியதை நினைக்கையில் வியப்புதான் எழுந்தது.

இறுதியில்

அவள் என்னுடையவள் தான் என்று முழுமையாய் உணர்ந்ததும்  காட்டுத்தீப்போல பற்றிக் கொண்டு எரிந்ததே மனது? அதை என்ன சொல்ல? எப்படி சொல்ல?

பெருத்த நிம்மதி நிழற்குடையாய் கவிந்தது.

ஒரு கை அவளின் கேசத்துள் கோதி விளையாட மற்றொரு கை  அவளின் இடையை பற்றிக் கிடந்தது.

“தேனுக்குட்டீ!  சத்யா  இன்னும் கொஞ்சம் ரெக்கவர் ஆனதுமே அம்மாகிட்டே பேசிடுவேன். இன்னும் ஒரு மூணு மாதம்தான். பிறகு நம்ம கல்யாணம் சரிதானே? அதுவரைக்கும் எதையும் போட்டு குழப்பிக்கக் கூடாது. ஓகே வா! “

“எனக்கு ப…பபயமாருக்கு. உங்கத்தை, லாவண்யா, மாமா எல்லோரையுமே எப்படி சமாளிக்கிறது? அத்தைக்குமே ஆசையிருக்கும். தன்னோட மூத்த பையன் கல்யாணத்தைப் பத்தி. திரும்ப அவங்க மனசை உடைச்சிடக் கூடாது . எனக்குமே உங்க தகுதிக்கு நான் சரியானவள் இல்லைன்னு தோணுது   “

“என்னடி தகுதி? உனக்கென்ன குறைச்சல்? மனசு தாண்டி முக்யம். அன்னிக்கே எங்கம்மா என்ன சொன்னாங்க..?ஞாபகமிருக்கா? “




              அன்று..

எல்லோருமே சாப்பாட்டு மேஜையில் கூடிய நேரம். செல்வியக்காவும் ரஞ்சனியும் உணவுகளை மேஜைக்கு மாற்றியபடியிருக்க. மதுமதி  நிஷாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

           நிஷா தானாகவே சாப்பிடுபவள் தான். ஆனால் இங்கு வந்ததிலிருந்து ஒரு தயக்கமோ என்னவோ சரியாகவே உண்ணுவதில்லை. எனவே ரஞ்சனி தான் மதுவிடம் ஊட்டிவிடும்படி பணித்திருந்தார்.

              கழுவித்துடைத்த முகம். சின்ன ஸ்டிக்கர் பொட்டு மட்டுமே! கூந்தலை மேலே தூக்கி மடித்து ஒரு பெரிய க்ளிப்பில் அலட்சியமாக அடக்கியிருந்தாள்.இருபுறமும் கிளிப்பில் அடங்காத சிறு கற்றை முடி வழிந்து கன்னத்தைத் தொட்டு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

           விஷ்ணுவின் கண்கள் அவளையே த் தொட்டு தொட்டு மீள அவளோ அது பற்றிய ப்ரக்ஞையே இல்லாதிருந்தாள். விஷ்ணுவுக்கு கை பரபரத்தது. அந்த கேசக் குழலின் ஊசலாட்டத்தை நிறுத்திவிட வேண்டுமாய்…கட்டுப்படுத்திக் கொண்டு கைகளை பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டான்.

“டேய் அண்ணா! என் பெரிய பொண்ணை சைட்டடிக்கிறியா? “

திடுக்கிட்டு அருகிலிருந்த தம்பியைப்பார்த்தவன் பின் அசட்டுச்சிரிப்போடு கலைந்து விழும் முன் முடியை இடது கையால் வழக்கம் போலவே கலைத்து விட்டு அழுத்திக் கோதி கொள்கையில் முகம் சிவந்து விட்டது.

“டேய் அண்ணா! வெட்கப்படறப்போ அழகாயிருக்கேடா! ஆனா என் பொண்ணு மிஸ் பண்ணிட்டாளே”!

விஷ்ணு அவன் தோளில் பட்டென்று வைத்தான்.

அந்த மதுரமான நேரத்தின் நேர்த்தியையே கலைப்பது போல்

சிவகாமியின் குரல்

“ச்சீச்சீ! வீட்டுல ஆம்பளை பசங்க இருக்காங்களேன்னு ஒரு எண்ணமிருக்கா? என்னைப்பாரு என் அழகைப்பாருன்னு நட்டநடு வீட்டுலே இப்படியா பப்பரப்பா உட்கார்ந்திருக்கிறது? அது சரி! நல்ல வளர்ப்பு இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்காது. மூத்தது ஓடிப் போய் கட்டிக்கிட்டு அற்பாயுசுலே போச்சு அடுத்தது எவன் கிடைப்பான்னு இப்படி டிரஸ் போட்டு அலையுது. “

மதுமதி திடுக்கிட்டவளாய் தன்னை பார்த்துக் கொண்டாள்.

அடர்நீல நிறத்தில்  ஸ்கர்ட் அதுவும் லாங் ஸ்கர்ட். அடர்நீலத்தில் பேபி பிங்க்கில் சின்னஞ்சிறு பூக்கள் போட்ட முக்கால் கை வைத்த டாப்பும். திருப்தியோடு நிஷாவுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். சகோதரர்கள் இருவரும் கூட ஒரு முறை ஏறிட்டனர்.  மதுவின் உடை ஆபாசமாக இல்லையே. மதுவும் எப்போதுமே மற்றவர் கண்களை உறுத்துவது போல உடுத்த மாட்டாள்.

“என்னடீ! உன்னைத்தான் சொல்றேன்! ரெண்டு ஆண் பிள்ளைகள் முன்னே இப்படித்தான் மேலே பட்டன் போடாம உட்கார்ந்திருப்பியா? வெக்கம் மானம் எதுவுமில்லையா? “

அனிச்சையாக எல்லோருமே மதுவின் டாப்பைப் பார்க்கை மது குன்றிப்போனாள்.

வட்டக் கழுத்து கொண்ட டாப்பின் பட்டன் துவங்குமிடத்தில் வலது பக்கம் முக்கோண வடிவில் மடங்கியேயிருக்குமாறு தைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே மூன்று அழகுக்கான ஷோ பட்டன்கள் தைக்கப்பட்டு பேபி பிங்க் பட்டு நூலில் மூன்றையும் இணைத்து குஞ்சலமாய் தொங்கிக் கொண்டிருந்தது.

மதுவின் இடது கை அனிச்சையாக கழுத்து பக்க டாப்பை பிடித்துக் கொண்டது.

ரஞ்சனி பின்புறமாய் வந்தவள் மதுவின் கையை விலக்கி விட்டு

சட்டையை நீவியவள்

ஊட்டும்படி கண்ணசைத்தாள்.

நிஷா சாப்பிட்டு முடித்திருக்க அவளைத்தூக்கிக் கொண்டு நகரப் போனவளை அழுத்தி அமரவைத்து கையை அதே பாத்திரத்தில் கழுவிக் கொள்ள பணித்தவள் செல்வியிடம் குழந்தையை தூக்கி செல்லும் படி விழிகளாலேயே ஆணையிட்டாள்.

குழந்தை நகர்ந்ததும்

” நாம் மற்றவர்களை சுட்டிக் காட்றதுக்கு முன்னே நாம் சரியாயிருக்கோமான்னு பார்த்துக்கிடனும்.”

லாவண்யாவின் பக்கம் ஆண்கள் திரும்ப ஏளனச் சிரிப்பு வந்தது. விஷ்ணுவிடம்.

ஸ்லீவ் லெஸ் இறுக்கிப்பிடித்த டாப்பும் லெக்கின்சுமாய் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு மேக்கப்போடு டைனிங் டேபிளை நெருங்கினாள் லாவண்யா.

சிவகாமி எரிச்சலோடு மகளைப் பார்த்தாலும் விட்டுத்தராமல்

“இவ இந்த வீட்டுப்பொண்ணு! அதை ஞாபகத்துலே வச்சுப் பேசு ரஞ்சனி! “”

“போட்டுருக்கிற டிரஸ் பத்தி தான் பேச்சு. எந்த வீட்டு பொண்ணுங்கறதுலேயில்லே.

சரி! உங்களுக்கு என்னதான் ப்ரச்னை?

தெளிவாவே சொல்றேன் கேளுங்க. மது இந்த வீட்டுப் பொண்ணு தான். சத்யாவோட மனைவியின் தங்கைங்கிற உரிமை யில மட்டும்இல்லை. அவதான் இந்த வீட்டு மருமகள். “

இருக்கையை விட்டு எழ  எத்தனித்தவளை ரஞ்சனியின் கை அழுத்தி அமர வைத்தது.

“ஹேஹ்ஹே..எனக்குதான் தெரியுமே! எப்போ அந்த நிஷாக்குட்டி இவளை அம்மான்னும் சத்யாவை அப்பான்னும் கூப்பிடும் போதே தெரியுமே! அக்கா புருஷனை கைக்குள்ளே போட்டுக்கிட்டான்னு. “

“ச்சீ! வாய மூடுங்க! விஷ்ணு உங்களை எப்போதோ வெளியே போ ன்னு சொல்லிட்டான். நானும் வாயைத் திறந்திட்டேன்னா நீங்க இந்த ஊர் எல்லையிலே கூட காலை வைக்க முடியாது. வாயை மூடிக்கிட்டு இருக்கிறதானா இருங்க. இல்லைன்னா ……

மதுமதி இந்த ஸ்ரீரஞ்சனியின் மூத்த மருமகள்.

இந்த முடிவுலே யாருமே உங்க தம்பி கூட எதையும் செய்ய முடியாது. போதும் ஒருமுறை என்னை உயிரோடு வதைத்தது.”

“ம்மா”




சகோதரர்கள் இருவருமே எழுந்து வந்து இரு பக்கமும் அணைத்துக் கொள்ள ரஞ்சனி விசும்பினாள். இரு கைகளும் புதல்வர்களின் கன்னங்களைத் தடவின.

“ம்மா! எப் …எப்படிம்மா..!”

‘”என் மகனுடைய மனசு எனக்குத் தெரியாதா? “

வார்த்தைகளின்றி மௌனமே பேசியது அங்கே.

சிலநிமிடங்களிலேயே சுதாரித்தவள்

தன் கழுத்திலிருந்த கெம்புக்கல் வைத்த கழுத்தணியை கழற்றியவள் அதை மதுமதியின் கழுத்தில் அணிவித்தாள்.

அது அவர்களின் பரம்பரை நகை. வழிவழியாக குடும்பத்தின் மூத்த மருமகளுக்கு சேரும்..

சிவகாமியும் லாவண்யாவும் வாயடைத்துப்போய் நிற்க

மதுமதி திகைத்து ஏதோ பேசத் துவங்க

“என் மீது உனக்கு உண்மையான மரியாதையோ அன்போ இருக்குமானால் எதுவுமே பேசாதே! “

என்று அடக்கி விட்டாள்.

விஷ்ணு அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டான். “தேங்க் யூ மா “காதோரமாய் கிசுகிசுத்தான்.

“கங்கிராட்ஸ் டா அண்ணா! என் பொண்ணை கண்கலங்காம பார்த்துக்கடா “

வீரேந்திர பூபதி எழுந்தார். சிவகாமிக்கு உயிர் வந்தது. இதோ தம்பி ரஞ்சனியை விளாசப் போகிறான் என்று ஆவலாய் காத்திருக்க அவரோ

“ரஞ்சனி இப்படி வந்து கிழக்குப்பார்க்க நில்லு. விஷ்ணு நீயும் மதுவுமா வந்து ஆசிர்வாதம் வாங்கிக்குங்க “

எனவும் செல்வி ஓடிப்போய் பூஜை ரூமிலிருந்த தட்டை தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.

விஷ்ணு மதுவின் கைப்பிடித்து இழுத்தபடியே பெற்றோரின் காலில் விழுந்து எழ திருநீறு வைத்தார் அவர்.

பழைய நினைவுகளில் நீந்திக் கொண்டிருந்தவர்களை ஆசிர்வதிப்பதே போல மழைத்தூறல் விழ இருவருமே சிரித்த படியே பார்வையால் விழுங்கிக் கொண்டனர்.

“கண்டதை யோசிக்காம எப்பவும் இந்த விஷ்ணுவை மட்டுமே நினைச்சிட்டு இருக்கனும் புரியுதா “

“ம்…ம்…”

அவன் மீண்டும் குனிந்து அவளிடம் எதையோ தேடுவதற்கு ஆயத்தமாக …”வேண்டாம் வினு! ப்ளிஸ் “என்ற கொஞ்சலில் அவன் ப்ரீஸ் ஸாகி நின்றான் விஷ்ணுப்ரியன்.

ததாஸ்து தேவதைகள் ஆசிர்வதித்து சென்றன.

ஒரு ஜோடி விழிகள் மட்டும் இவர்களின் ஏகாந்த நிலை கண்டு நெருப்பைக் கக்கின.

(தேடல் தொடரும்)




What’s your Reaction?
+1
17
+1
12
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!