Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 14

தேடல் — 14

“சத்யா! பால் குடிப்பா! “

“நிஷா எங்கம்மா? “

“அப்பா கிட்டேயே தூங்கிப் போயிட்டாப்பா! “

நிஷா இப்போதெல்லாம் தாத்தா பாட்டி செல்லம் ஆகி விட்டது.

மது ஆரம்பத்தில் தான் ஒரு மாதம் போல கூடவேயிருக்க. மெதுவே ரஞ்சனியிடமும் செல்வியக்காவிடமும் பழகி விட்டாள்.விஷ்ணுவும் வீட்டிலிருக்கையில் விளையாட்டு காட்டி தன்னுடன் இருத்திக் கொண்டான்.

ரஞ்சனிக்கு இன்னும் கூட சத்யாவை பார்த்தது பிரமை போலிருக்கும். அவன் முகத்தை கையை தலையை என்று வருடிக் கொண்டே தான் பேசுவார்.

விஷ்ணு அழைத்துப்போய் அறையில் படுத்திருந்தவனைக் காட்டியதுமே கருப்பையே அதிர்ந்து  சிதறிவிட்டது போல் உணர்ந்தார் . வயிறு வாய் வழியே வெளியே குதித்து விடுமோ என்று தோன்றியதில் தள்ளாடினார்.

“சத்யா “குரல் எழும்பாமலே தொண்டையிலேயே நின்றது.

வீரேந்திரரும் கண்ணு முழி வெளியே வந்து விடுவது போல பார்த்தவர் தாளமாட்டாமல் சோபாவில் தொப் பென உட்கார்ந்தார்.மனசுக்குள் தொம் தொம் என செண்டைமேளம் அதிர்ந்தது.

‘என் பிள்ளை ‘என் பிள்ளை ‘என்ற உணர்வு மின்னல் போல ஓடியது.

ரஞ்சனி கதறி அழுதார். சத்யாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

“சத்யா! சத்யா! ” இதைத்தவிர வேறு வார்த்தைகளே இல்லை.

“எப்படி? எப்படிடா உன்னைப் போயி மண்ணுக்குள்ளே ன்னு சொல்லி என் வயிற்றில் நெருப்பை வச்சாரு இவரு? என் உள் மனசு சொல்லுச்சே! என் பால் குடித்து வளர்ந்தவன் எங்கியோ இருக்கான்னு. இவரும் இவர் அக்கா பேச்சைக் கேட்டு மாலை போட்டு விளக்கேத்தி ….அய்யோ! நான் பாவி! பாவி! “என்று முகத்திலறைந்து கொண்டு அழ விஷ்ணு தாங்கிப் பிடித்தான்.

“இல்லைம்மா ரஞ்சனி! விசாரிச்ச வரையிலே அப்படித்தாம்மா தகவல் வந்தது. “




“விஷ்ணு! இவன் ஏன் நம்மை கான்டாக்ட் பண்ணலை? உனக்கெப்படி தெரிஞ்சுது. “

“சத்யா அந்த விபத்துக்கப்புறம் கோமாவுக்கு போயிட்டான் பா இப்போ ரெண்டு வாரத்துக்கு முன்னே தான் சுய நினைவுக்கே வந்தான்.”

என்று துவங்கி விவரம் சொல்ல கூடவே அருகிலிருந்த தங்கமும் விட்டுப்போனவற்றை நிரப்பினார்.

நிஷாவுடன் வந்தவர்கள் மதுவைக் கண்டதும் நிஷா அழத் துவங்க காண்டீனுக்கு சென்றிருந்தனர். கிருஷ்ண மூர்த்தி அறைக்கு வெளியே நின்று யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தார்.

தங்கமும் கிருஷ்ண மூர்த்தியும் மொத்தத்தையும் சொல்லி முடித்தபோது  சத்யாவுமே மௌனசாட்சியாய் குமைந்து போயிருந்தான்.

“தினமும் போராட்டமே வாழ்க்கை போச்சுங்க மதுவுக்கு. “

அப்போது தான் உள்ளே நுழைந்தனர் மதுவும் நிஷாவும்.

“அப்பா! சாக்கி ப்பா “

“அம்மாக்கொண்ணு! உனக்கொண்ணு “

ரஞ்சனி குழந்தை முன் கை நீட்ட

அது எல்லோரையும் பார்த்துவிட்டு  தான் வாயில் போடப் போனதை கடித்து சிறு துண்டை நீட்டியது.

“எஞ்சாமி”என்று அள்ளி அணைத்தவர்

  அந்தத் துண்டையும் அதனுடைய செப்பு வாயில் வைக்க அதுவோ சாக்லேட் குதப்பிய வாயுடன் முத்தமிட்டு சிரித்தது கவிதையாக இருந்தது.

ரஞ்சனி மதுமதியின்   கையைப் பிடித்துக் கொண்டாள்.

“கண்ணு! இது கையில்லே.  உன் கால் ம்மா! என் வயிற்றில் பாலையே வார்த்திருக்கே தாயே! நீ என் குல தெய்வம் ராஜ ராஜேஸ்வரி தானம்மா. உனக்கு என் பரம்பரையே கடமைப்பட்டிருக்குமா “

மதுமதிக்கு சங்கோஜமாக இருந்தது.

ஆனால் அதன் பிறகான நாட்களில் ரஞ்சனி மதுமதியை  தாங்கினாள் என்றுதான் கூற வேண்டும்.

சிவகாமியோ லாவண்யாவோ வம்புக்கு வரும் போதெல்லாம் அரணாகவே நின்று கொண்டார்.

தன்னுடனேயே ஊருக்கும் அழைத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டார். அந்த

அன்புக்கு முன்னே எதையுமே சொல்ல முடியாமல்  நின்றாள்.

மதுமதியின் மீது அபரிமிதமான ப்ரேமை ரஞ்சனிக்கு.

ஒருமுறை சிவகாமி நிஷா மதுமதியை “அம்மா” என்றழைப்பதைக் கொச்சையாக சொல்லிக்காட்ட வெகுண்டவர் முதன் முறையாக.

“சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவள் தான் என் மருமகள்”

என்று கூறிவிட சிவகாமி பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார். தம்பியிடம் முறையிட அவரும் முதன் முறையாக

அக்காவின் பேச்சை ஒதுக்கினார். “ரஞ்சனி இஷ்டம் தான்! “

என்று கூறிவிட்டு நகர்ந்து விட

சிவகாமியின் மூளை குயுக்தியாக யோசிக்க ஆரம்பித்தது.

வீட்டிலிருந்தே ஆபிஸ் வேலைகளை செய்து முடிக்கும் மதுவை  பிடிக்கத்தான் செய்தது பெரியவருக்கும்.

ரஞ்சனி மகனை படுக்கச் சொல்லிவிட்டு தன் அறைக்குப் போனார்.




சத்ய தேவ்வுக்குத்தான் உறக்கமே வரவில்லை. அவனுடைய போன் கேலரியிலிருந்த போட்டோக்களும்  வீடியோக்களும் தயா மலருடனான வாழ்க்கையை கண் முன்னே நிறுத்தியது.

“மலர்! மலர்! ” என்று மனம் அவளின் அருகாமைக்குத் தவித்தது.

அந்தமான் தீவுகளில் புதுமணத் தம்பதிகளாய் போனதும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் கழித்ததும்.

ராதாப்பூர் கடற்கரைக்கு வந்து சூரிய அஸ்தமனம் பார்த்ததும் கடைவீதிகளில் அலைந்ததும்.

போர்ட் ப்ளேரிலிருந்து அரைமணி நேர படகு பயணத்தில்  வந்தது. ஸ்கூபா டைவிங் போகப் பயந்தவளை தைரியம் சொல்லி அழைத்துப்போனது.

இன்னொரு முறை மதுமதியையும் அழைத்து வரவேண்டுமென பேசிக் கொண்டது எல்லாமும் அவனை அலைக்கழித்தது.

செல்லுலார் ஜெயிலும் காந்தி பூங்காவும்.

சுண்ணாம்பு பாறைத்தீவும்.

எல்லா இடங்களிலும் புது மணத் தம்பதிகளுக்கேயுரிய சேட்டைகளை செய்ய அவள் கன்னம் சிவந்து திருதிருத்ததும்.

சத்யதேவ் பெருமூச்சுடன் படுக்கையில் வீழ்ந்தான்.

தேநிலவு வேண்டாம் என்று தானும் மலரும் யோசிக்க மதுமதிதான் பிடிவாதம் பிடித்து அனுப்பினாள்.

வாழ்க்கை அப்புறம் முழுசாய் இழுத்துக் கொண்டு விடும் மாம்ஸ். போய்ட்டு வந்திடுங்க என்று விரட்டினாள்.

உடல்நிலை சரியில்லாத அப்பாவை தான் பக்கத்திலிருந்து கவனித்து. கொள்வதாகக் கூறினாள்.கல்லூரிக்கு லீவெடுத்துக் கொண்டு செய்யவும் செய்தாள்.

இல்லையென்றால் இந்த இனிய ஞாபகங்கள் கூட பஞ்சமாகியிருக்கும்.

கல்லூரி முடித்து வந்த அந்தப் பெண் மீதுதான் எத்தனை பாரங்களை சுமத்தியாகி  கிட்டது.

மலரின் அப்பா உடல்நிலை சீரியஸாகிவிட அவர் விருப்பப் படி திருமணம் அவசியம் என்ற நிலை. பெண்ணை மாலையும் கழுத்துமாக பார்க்க ஆசைப்பட்டார் அந்தத் தந்தை.

வீரேந்தரோ காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. வேறுசாதி அந்தஸ்து பேதம் என்று சிவகாமி வேப்பிலையடிக்க முடிவு சத்ய தேவ் வீட்டை விட்டே வெளியேறிவிட்டான்.

அவசரகதியில் கல்யாணம்.. ஆனாலும் மனசுக்குப் பிடித்தவளுடன் என்பதில் சந்தோஷம் தான்.அதே சந்தோஷத்தோடு ஹனிமூன்.

பேக் வாட்டர் ஏரியாவுக்கு போக படகில் உயிர்க் கவச உடை கொடுத்து அணிவிக்கச் சொல்ல. இருவரும் அணிந்து கொண்டதும். அந்த ஆடையின் கனப்பரிமாணத்தில் அருகிலிருப்பவள் தொலைவிலிருப்பது போல் தோன்ற….

இவன்

“ஏண்டி! என்னென்னமோ கண்டு பிடிக்கிறாங்களே! புதுக் கல்யாணமானவங்களுக்குன்னு ஸ்பெஷலா ஒரே டிரஸ்ஸுக்குள். ரெண்டு பேரும் புகுந்து கொள்கிறார் போல கண்டுபிடிச்சு ஐடியாவாத் தைக்கலாம் தானே! “என்றதும். அவள் கிளுக்கிச் சிரித்ததும்.

யாருமறியாமல் அத்தனைக் கூட்டத்திலும் கன்னத்தில் முத்தமிட்டதும்

ராஸ் தீவூக்கு போய் எதையுமே சுற்றிப் பார்க்காமல் தனியே ஒதுங்கிப் போய் மயங்கிக் களித்ததும்.

அதிலும்

யாருமற்ற ஏகாந்தம் இயற்கையின் வனப்பு

நாளையென்ற எண்ணமில்லை

கையணைவில் அழகுச் சிலை

பெண்மையின் மென்மையை த் தேடித் தவிக்கும் ஆண்மையின் வன்மை..

தேடத் தேட போய்க்கொண்டேயிருக்கும் பாதையில்… அள்ளஅள்ளப் புதையலாய்…

மணித்துளியும் நொடியாய் கடக்க இதழ் இணைப்பில் துவங்கி ஆழம் அதிகரித்து அவளுக்குள்ளே தன்னை முழுதும் புதைத்துவிடும் ஆழத்தில் அவன் அமிழ….அமிழ…

அவனுக்குள்ளே தன்னை அடையாளமின்றியே கரைத்துவிடும் ஆழமாய் இவள் அமிழ… நாளெல்லாம் அறையை விட்டே வெளியேறாது ….மறுநாள் முகம் பார்க்க வெட்கப்பட்டு….கேலியும் நாணமுமாய்அந்த நாட்கள்!




சத்ய தேவ் படுக்கையில் புரண்டான்.

முதன் முதலாய் வீட்டிலேயே ப்ரக்னென்ஸி கிட் மூலம் நிஷாவின் வரவை கன்பாஃர்ம் செய்தது. ஆனாலும் மருத்துவரிடம் போய்விட்டு பிறகே பெரியவர்களிடம் சொல்ல முடி வெடுத்தது.

டாக்டரும் நிச்சயப்படுத்தியப்பின்பு இனிப்போடு பகிர்ந்தது இப்படி எல்லாமே நினைவிலூறியது.

அதன் பின்பு மகளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மனைவியினுடையதையும் சேர்த்தே தான்  போட்டோக்களை ஆவணப் படுத்தினான்.

குழந்தைக்கு தங்களிருவரின் பேரையும் சேர்த்தே தேவ மலர் என்று வைக்க மதுமதி தான் எப்படியாம் கூப்பிடுவது என்று தேவலோகத்துப் பூவின் பெயரென  நிஷாகந்தி என்ற பெயரை வைத்தாள்.

     “பார்த்தியா மலர்! என் பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் படமா எடுத்து அவளுடைய கல்யாணத்துக்கு பரிசாத் தருவேன்னு சொன்னேன். ஆனா நான் …நான்ன்ன்….நானே அசைவேயில்லாமல் நாலு வருஷம். வெறும் ஜடமாயிட்டேனே! “

“என்னால் முடியலைடீ! நானும் உன்னிடமே வந்திடுறேனே. நம்மை  விட நம்ம பொண்ணை மதுவும் விஷ்ணுவும் பார்த்துக்கிடுவாங்க. என்னை விட்டு ஏண்டி போனே? இதுக்காகத்தான் ஒருதடவை கூட முகம் சுளிக்காமல் காதலாலே என்னை முழுகடிச்சியா?  என்னை விட்டு எப்படி போகலாம் நீ. உன்னை விட்டு இஞ்ச் கூட நகரமாட்டேன் னு வாக்கு கொடுத்தியே.  காத்துலே பறக்கடிச்சுட்டு போயிட்டியே ஏண்டீ…ஏன்? நான் கோமாவுலே இருந்ததே மேலுன்னு தோணுது. செத்தவன் போல் கிடந்தேன். இப்போ உணர்வும் உடலும் மனசும் உன்னைத் தேடுதே மலர்! மலர்” ‘அவன் கதறல் அறையைச் சுற்றி சுற்றி அலைந்தது.

தாங்க மாட்டாதவனாய் இரண்டு தூக்க மாத்திரை தேடி எடுத்துப் போட்டவன் கண்களை மூடிக் கொண்டு படுத்தான்.

“தேவா… வேக் அப் தேவா ”

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுடி”

“ராத்திரியெல்லாம் தூங்க விடாம செஞ்சுட்டு இப்போ…. ஆபிஸ் போகவேணாமா …”

“வேணாம் லீவ் போடு” …

“கெட்ட பையனாயிட்டேடா…”

 என்று நெற்றியில் முத்தமிட்டவள்

“எழுந்திருடா கேடி… !”

என்றவளை இழுத்துப் பிடித்த வலிய கைகள் இடையை அழுத்திப் பிடிக்க. மங்கையவளும் குழைந்தாள்.

சதிபதிகளின் முத்த ஊர்வலத்தில் யுத்தமொன்று சத்தமின்றி நடந்து  முடிய ….

“மலர் “

“மலர்! ஐ லவ் யூ டா .  தேவ் உன் கிட்டே ஒரு விஷயம் பேசனுமே! “

“பேசும்மா “

“சேட்டை பண்ணிகிட்டே இருந்தா எப்படி பேசுவதாம் “

“கையைக் கட்டிக்கிட்டு உட்காருங்க! “

“தேவ்! நான் யாரு? “

“என் உயிருடி”

நம்ம நிஷா யாரு? “

“அந்த உயிரின் துடிப்பு “

“அப்போ துடிப்பை அம்போன்னு விட்டுட்டு வரலாமா? என் உயிர் உங்களிடம். நம்ம உயிர்த்துடிப்பு நிஷா! நம்மளுடைய காதலுக்கு சின்னம். அவளை விட்டுட்டு வந்திடுறேன்னு சொல்றீங்களே நியாயமா? “

“……..”

“அம்மா தான் இல்லாமப் போயிட்டேன். அவளுக்கு அப்பா வேண்டாமா? அவளுக்கு பெரியப்பா சித்தி பாட்டி தாத்தா இருந்தாலும் அப்பா தானே ஒரு பெண்ணுக்கு ஹீரோ! சொல்லுங்க! “

” மலர்! மலர் “

“நீங்க அவள் கூட இருக்கனும் தேவ்! இதுதான் என் கடைசி ஆசை! “




தேவ் உளறிக் கொண்டே எழ

தூக்கம் கலைந்து போய் விட்டிருந்தது.

‘இதெல்லாம் கனவா? ‘

தேவ் வெறுமனே விழித்துக் கொண்டே  அமர்ந்திருந்தான்.

அந்த மிச்சமீதியான இரவில் அவன் யாரைத் தேடினானோ…. பொலபொலவென பொழுது மட்டும் சிவந்தபடியே விடிந்தது.

கனவில் வந்த தயாமலரின் வாசனை இன்னும் அங்கேயே

சுழல்வது போலிருந்தது.

சில நினைவுகள் கொல்லும்! சில ஞாபகங்கள் உயிர் மீட்டும்.

சத்யதேவ்வுக்கோ இரண்டும் கலந்து மிரட்டியது.

(தேடல் தொடரும்)




What’s your Reaction?
+1
18
+1
13
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!