Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 6

    6

ப்ரிய நதிகள் குலைத்தாடும்
என் மனவெளிகளில் ,
காலடி பதிக்காது
பார்வையிட்டு மட்டும் போகிறாய் ,
பொழிவதற்கான மனதோடு
சுமையேறிய நீருண்ட மேகமாய்
கனவென்ற நம்புதலுடன்
கருத்துக் கொண்டிருக்கிறேன் நான் .




சிக்னல் சரியாக கிடைக்காமல் தனது போனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான் சந்திரன் .தன் வீட்டு வாசலில் இவனை எதிர்பார்தாற் போல் நின்றிருந்தான் சபரிஷ் .போனில் பேசியபடியே அவனுக்கு கையசைத்தான் சந்திரன் .உன்னுடன் பேச வேண்டும் என சைகை சொன்னான் அவன் .தனது போன் பேச்சை முடித்தவன் , சபரிஷை நோக்கி வந்தான் .

” பேசினாயா …? “

” உங்கள் தங்கை ஒன்றும் சொல்லவில்லையா …? “

” ம்ஹூம் …அவள் எப்போதும் போல் குழந்தையை கவனித்துக் கொண்டிருக்கிறாள் …”

” குழந்தை ….அது யாருடைய குழந்தை …? “

” சாம்பவி சொல்லவில்லை …? “

” சொன்னாள் …அது அவளுடைய சொந்த குழந்தையென்றாள் .”

சந்திரன் மௌனமானான் .

” நான் இதுநாள் வரை குழந்தை உங்களுடையது என்று நினைத்தேன் …”

” ம் …கொஞ்சம் அறிமுகமில்லாதவர்களெல்லாம் அப்படித்தான் நினைக்கின்றனர் .”

” என்ன நடந்த்து …? ” சபரிஷ் அமைதியாகத்தான் கேட்டான் .

” நீ அவளை தவறாகத்தானே நினைக்கிறாய் ….? குழந்தையை சொன்னதும் கழுத்தை பார்த்திருப்பாயே ..? “

” ஆமாம் பார்த்தேன்தான் .ஆனால் தவறாக நினைக்கவில்லை .நினைக்க தோணவும் இல்லை .சாம்பவியை பார்க்கும் யாருக்கும் அந்த மாதிரி தவறாக எண்ண தோன்றாது …”

சந்திரன் வேகமாக சபரிஷின் கைகளை பற்றிக்கொண்டான் . ” நன்றி சபரிஷ் .என் தங்கையை புரிந்து கொண்டதற்கு .மிகவும் நன்றி “

” ஆனால் நான் விபரங்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறேன் .”

” நிச்சயம் சொல்கிறேன் சபரிஷ்  , சூழ்நிலைக்கு அவள் எப்படி பலியாக்கப் பட்டாளென்பதை நீயும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் .நீ திருமண பேச்சை எடுத்ததும் சாம்பவி குழந்தையை காட்டியிருப்பாளென்று எனக்கு தெரியும் .இந்த விசயம் உனக்கும் தெரிய வேண்டுமென்றுதான் , உன்னையே அவளிடம் பேச சொன்னேன் .”




” நாம் எப்போது பேசலாம் …? “

” நிறைய பேச வேண்டியதிருக்கிறது சபரிஷ் .இடையூறின்றி பேச நமக்கு தனிமை வேண்டும் .நேரம் வேண்டும் . இவற்றை ஏற்படுத்தக்கொண்டு நானே உன்னிடம் வருகிறேன். “

” நான் காத்திருக்கறேன் …” நேரான பார்வையோடு சொன்ன சபரிஷை அணைத்துக் கொண்டான் சந்திரன் .

” நன்றி …நன்றி சபரிஷ் ” அவன் குரல் கரகரத்தது .

” அண்ணா …” உள்ளேயிருந்து சாம்பவியின் எரிச்சலான குரல் கேட்டது .

சந்திரன் உள்ளே போனான் .

” இன்று பேங்குக்கு போக வேண்டுமே .நான் கிளம்பி விட்டேன. நீங்கள்  அங்கே நின்று என்ன வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கறீர்கள்…? ” கேட்ட சாம்பவி பளிச்சென கிளம்பியிருந்தாள் .

” போகலாம்டா .இதோ ஐந்தே நிமிடங்களில் வந்துவிடுகிறேன….” வேகமாக கிளம்பினான்

இன்று வேறு பேங்க் ….ஆனால் அதே பதில் .சந்திரன் சோர்வுடன் வர ,சாம்பவி அவனை சமாதானப்படுத்தினாள் .

” விடுங்கண்ணா .இது இல்லையென்றால் நாளை வேறொன்று …”

” அன்று நாம்  பேசிய பின் அவள் கொஞ்சம் உணரந்து பேசாமல் இருப்பாளென நினைத்தேன் …” சந்திரன் பற்களை கடித்தான் .

” நான் அப்படி நினைக்கவில்லை அண்ணா .உங்களுக்கு அவளை தெரியாது …”

” எனக்கு தெரியும்மா .புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை .இப்போதில்லை ஆரம்பத்திலிருந்தே …”

” தெரிதலுக்கும் , புரிதலுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறதண்ணா .நீங்கள் அவளை தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் .நான் அவளை புரிந்து கொண்டிருக்கிறேன் “

” ஆமாம் நீ புரிந்து கொண்ட லட்சணத்தை பார்த்து விட்டாலும் ….அப்படி அவளை முழுவதுமாக புரிந்து கொண்டிருந்தால் ..இப்போது இது போன்றதொரு வாழ்க்கை வாழந்து கொண்டிருப்பாயா …? ,”




” ஏன் அண்ணா , என் வாழ்க்கைக்கு என்ன …? அப்பா , அம்மா , அண்ணன் , குழந்தையென பாதுகாப்பான ஒரு பாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் .கையில் தொழில் வேறு வைத்திருக்கிறேன் .ஆனால் சஹியை பாருங்கள் .முட்டாள்தனமாக ஏதேதோ யோசனை செய்து தேவையில்லாத பல முடிவுகள் எடுத்துவிட்டு , இப்போது தனி மரமாக ஒரு வறண்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள் …”

” நீ என்னவோ உயர்ந்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பது போல் எண்ணிக்கொண்டு , அவளுக்கு பரிதாபப்படுகிறாயே பாப்பு …”

” அவளுடன் ஒத்து பார்க்கும் போது , நான் வாழ்ந்து கொண்டிருப்பது நிச்சயம் உயர்ந்த வாழக்கைதான் அண்ணா …இப்படி கலைந்து நிற்கும் அவளது வாழ்க்கைக்கு நாமும் ஒரு காரணமென்பதை நினைத்தால்தான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது “

சந்திரன் மௌனமானான் .சிறிது நேரம் காரின் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த்து .பிறகு …

” அவளே செய்த முடிவுதானே பாப்பு .இதில் நாம் எங்கே வருகிறோம் …? ” சமாளித்து பதில் கூறினாலும் அவனது குரலில் சிறிது குற்றவுணர்வு இருந்த்து .

” ஆமாம் அண்ணா .எனக்கு விபரம் குறைவு .அவள் மிக விவரமானவள் என ஒரு காலத்தில் நாம் அனைவருமே நினைத்தோம் .ஆனால் தனது வாழ்வை தானே அழித்துக் கொண்டிருப்பதே தெரியாமல் , இப்போது கிடைக்கும் அற்ப சந்தோசத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கிறாளே …அவள் பாவம் இல்லையா அண்ணா …? “

” இப்போது என்னம்மா செய்ய சொல்கிறாய் …? ” ஆற்றாமையோடு சிறு அலுப்பும் இருந்த்து சந்திரனின் குரலில் .

” ப்ளீஸ் அண்ணா .அன்று போல் இனி அவளிடம் கடுமையாக பேசாதீர்கள் .அவள் ஏற்கெனவே வாழ்வில் நொந்து போனவள் …”

” அவள் சரி ..நீ எப்படி …மிக ..மிக உயர்ந்த்தொரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாயா …? “

” நிச்சயம் அண்ணா .என் மனதுக்கு திருப்தியான ஒரு வாழ்வுதான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் …”

” உன் வாழ்க்கைக்கு உனக்கென ஒரு துணை வேண்டாமா …? சாஹிக்குட்டி இருக்கிறாளென சொல்லாதே .அவள் குழந்தை . நம் நாடு இப்போதிருக்கும் நிலையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு ஆணின் துணை நிச்சயம் தேவை ..”




” அதுதான் அப்பா இருக்கிறாரே ….அப்பா காலம் எவ்வளவு என கேட்டால் , நான் உங்கள் பக்கம் கை நீட்டுவேன் .ஏண்ணா என்னையும் என் குழந்தையையும் நீங்கள் காலம் முழுவதும் பார்த்து கொள்ள மாட்டீர்களா ..? ஏன் அண்ணி ஏதாவது சொல்வாளா …? அப்படி வாய் திறந்து பேசும் அளவு நம் வீட்டில் அவளது நிலைமை இல்லையென நினைக்கிறேன் …” கேலி போல் பேசி பேச்சின் திசையை மாற்றி விட முயன்றாள் .

,” யார் காலம் முழுவதும் பார்த்துக்கொள்ள வேண்டும் …? “

” அண்ணா ….”

” என் காலம் முழுவதும் என்றால் அதற்கு நான் தயாராகத்தான் இருக்கிறேன் .எந்த அண்ணியோ …வெந்நியோ ஒன்றும் சொல்லமுடியாது .உன் காலம் வரையென்றால் ….என்னால் அதற்கு பதில் சொல்ல முடியாது பாரு …,”

” என்னண்ணா சொல்கிறீர்கள் …? “

” என் காலக் கணக்கு எவ்வளவு என்று எனக்கு தெரியாதே ..அதற்கு பின் என் தங்கை …”

” போதும் அண்ணா .ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் .. ? “

அழ ஆரம்பித்து விட்ட தங்கையை  சமாதானப்படுத்த இந்த பேச்சை உடனே நிறுத்தி விடத் துடித்த மனதை கல்லாக்கிக் கொண்டு , ” கேடக கடினமாக இருந்தாலும் , இதுதானே நிதர்சனம் பாப்பு . கடைசி வரை உனக்கு துணை வரும் ஒரு ஆணை நான் உன்னுடன் இணைக்க நினைப்பதில் தவறென்ன இருக்கிறது …? ” என்றான் சந்திரன் .

” அவனது வாழநாள் மட்டும் எவ்வளவு காலமென்று நானும் இப்போது கேட்கலாம் அண்ணா .ஆனால் அப்படி என்னுடன் இணைத்து பேசப்படுபவரின் …” என்றவள் சற்று நிறுத்தி தொண்டையை செருமி தன் குரலை சரி செய்துகொண்டு …

” அவர் …அவருடைய .. வாழ்நாளை பற்றியெல்லாம் … அபசகுனமாக …பேசக் கூட ….நான் தயாரில்லை …” வெறுமையாக இருந்த தனது கழுத்தை தடவியபடி , உலர்ந்த குரலில் கூறிவிட்டு வீட்டுக்கு வந்திருந்த காரிலிருந்து இறங்கி வீட்டினுள் சென்றாள் சாம்பவி .

தங்கையின் மனது துல்லியமாக தெரிந்து விட , செய்வதறியாது திகைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தான் சந்திரன் .

” என்னங்க …ஏங்க …” மூன்றாவது முறையாக கணவனை அழைத்தாள் மாலினி .அவன் தோள்களை தொட்டு உலுக்கின பின் கனவிலிருந்து மீண்டவன் போல் விழித்தவன் , காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தான்.

” இருங்க காபி கொண்டு வர்றேன் …” அடுப்படிக்குள் சென்று காபி கலந்த மாலினி , திரும்பிய போது உள்ளேயே வந்த சந்திரன் ஒரு தவிப்போடு அடுப்படி மேடை மேல் சாய்ந்து நிற்பதைக் கண்டு திகைத்தாள் .

” இந்தாங்க காபி …” கணவனிடம் நீட்டினாள் .

அதை வாங்கி கீழே வைத்தவன் ,” பாப்பு இப்படியே குழந்தையோடு தனித்து நின்று விடுவாளா மாலு …” தவிப்புடன் கேட்டான் .




கணவனின் கவலையின்  காரணம் புரிய ” ஏன் அப்படி நிற்க வேண்டும் .அப்படி நிற்கத்தான் நீங்கள் விட்டு விடுவீர்களா என்ன …? ” கணவனை தைரியப்படுத்த புன்னகை ஒன்றை கொடுத்தாள் .

” இல்லை இன்று பேசிப் பார்த்தேன் .அவள் மனதில் புது வாழ்வுக்கான எந்த எண்ணமும் இருப்பது போல் இல்லை …”

புது வாழ்வா …? அது எப்படி …என மனதினுள் எண்ணியவள் , அதனையே வெளியேயும் சொல்லி கணவனின் மனதினை நோகடிக்க விழும்பாமல் ” இன்றில்லாவிட்டால் நாளை .கடவுள் துணையிருக்கிறார் பாருங்கள் . அத்தை வணங்கும் தெய்வமும் , இருக்கின்ற விரதமும் அவளை கைவிட்டு விடுமா …? நம் சாம்பவி நிச்சயம் துணையோடு ஒரு நல்ல வாழ்வு வாழப் போகிறாள் பாருங்கள் “

தன்னருகே நெருங்கி நின்று தன் கைகளை பற்றி ஆறுதல் சொன்ன மனைவியை ஏறிட்டு பார்த்தான் சந்திரன் .மெல்ல அவள் கைகளை இழுத்து தன் மேல் சாய்த்து அணைத்துக்கொண்டான் .

” நன்றிம்மா .நீ சொன்னதும் எனக்கு இப்போதே என் தங்கையின் நிறைந்த வாழ்வு மனதினுள் தோன்றுகிறது .”

கணவனின் அணைப்பில் மாலினி நெகிழ தொடங்கிய போது , ” ஏய் மாலினி …எங்கே போய் தொலைஞ்ச …? மழை வருவது போல் தெரிகிறதே .காயப்போட்ட துணிகளை எடுத்தாயா …? ” தனல் குரல் முன்வாசலிலிருந்து வந்த்து .வெளியே போய்விட்டு வருபவள் உள்ளே நுழையும் போதே மருமகளை விரட்டிக் கொண்டே வந்தாள்  .

சந்திரன் அவளை மெல்ல விலக்கி நிறுத்தி விட்டு அவள் கன்னங்களில் செல்லமாக தட்டியவன்  ” போ …போய் துணியை எடு …,” என்றுவிட்டு சென்றான் .

கணவனின் அணைப்பின் இளஞ்சூட்டில் உள்ளம் நெகிழ ….மாமியாரின் விரட்டும் குரல் மறந்து விட , துணிகளை எடுத்துக் கொண்டிருந்த மாலினியின் மனம் , சந்திரனை பற்றிய முன் ஞாபகங்களுக்கு போனது .

” தோ இப்படி செங்கல்களை அடுக்கி தூக்க வேண்டும் .அதோ அங்கே கொண்டு போய் சேர்க்க வேண்டும் … “

சுட்டு முடித்து தயாராக இருந்த செங்கறகளை எடுத்து கொண்டு போய் குடோனில் அடுக்கும் முறையை காட்டினாள் சுசீலா .

அது போன்றே அடுக்கி தூக்கிய மாலினியால் தூக்க முடியவில்லை . மனதின் பலத்தை உடலில் கொண்டு வந்தவள் பற்களை கடித்தபடி பாதங்களை அழுத்தி மூச்சைபிடித்து தூக்கினாள் .பாரத்தை தலையில் ஏற்றி பாதி தூரம் நடப்பதற்குள் கண்களை இருட்டிக் கொண்டு வந்த்து .வீம்பு பிடிக்காமல் காலையில் சாப்பிட்டு விட்டாவதுவந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள் .

இல்லை அவளால் முடியவில்லை …கட்டுப்பாடிழந்து கண்கள் இழந்து சரிய தொடங்கினாள் அவள் .தலையிலிருந்த பாரம் என்னவாகுமோ …? அப்படியே மேலேவிழுந்தால் என்னவாகுமென்ற அச்சத்துடன் விழுந்தவளின் தலை பாரம் சட்டென வாங்கி கீழே வைக்கப்பட்டு மாலினி தரையில் மோதாமல் தாங்கி , கீழே படுக்கவைக்கப்பட்டாள் .




முகத்தில் சுளீரென அடிக்கப்பட்ட தண்ணீரினால் விழிகளை விழித்தவளுக்கு முதலில் தென்பட்டது சந்திரனின் முகம் .

” என்ன ஆச்சு …? காலையில் சாப்பிடலையா …? ” எனக் கேட்டபடி இருந்தான் அவன் .

ந்த நூறு ருபாய்க்காகவா அப்படி சிலுப்பிக்கிட்டு போன …? ” ருபாய் நோட்டை விரலால் சுண்டியபடி மாலினியின் தலையை குட்டினாள் பூமணி .

உனக்கு தேவையில்லையென்றால் அதை என்னிடமே கொடுத்து விடேன் …மாலினி மனதிற்குள் நினைத்தபடி தலை குனிந்து சித்தியின் கொட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தாள் .பத்திரமாக அந்த ருபாய் நோட்டினை மடித்து தனது ஜாக்கெட்டினுள் சொருகி கொண்டாள் .

வெளியே போயிட்டு வர்றேன் .நல்லா காரசாரமா சமைச்சி வை …” உத்தரவிட்டு விட்டு வெளியேறினாள் .

அவள் எங்கே போவாளென மாலினிக்கு தெரியும் .ஆனால் அவளால் ஒன்றும் செய்ய முடியாது .மிளகாயை நிறைய போட்டு காரக்குழம்பு வைத்தவள் , சித்தி வருமுன் அவசரமாக இரண்டு வாய் அள்ளி போட்டுக் கொண்டு இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள் .பழக்கமில்லாமல் பாரம் சுமந்த உடம்பு புண்ணாக வலித்தது .கண்களை மூடியதும் அவளது பாரம் தாங்கி கீழே வைத்து அவளை தாங்கிக்கொண்ட சந்திரன் நினைவு வந்தான் .

குபீரென மலரத் துடித்த மனதின் நினைவுகளை தனது நிலையை எண்ணி அழுத்தி அடக்கி வைத்தாள் .இல்லை அவன் வானத்து சந்திரன் .நான் குளத்தில் மலரும் அல்லி கூட இல்லை .அந்த குளத்தினுள் குளம்பிக் கிடக்கும் சகதி .இந்த நினைப்பு எனக்கு தகாது .அவளின் துயர நினைவை உறுதிப்படுத்துவது போல் குளறலுடன் உள்ளே வந்தாள் பூமணி.

” ஏய் சோத்தை எங்கடி …? ” போதையில் கத்திய அவளது குரல் காதில் கேளாத்து போல் தூங்குவது போல் கிடந்தாள் மாலினி .அவளது இடுப்பில் இரண்டு மிதி விட்டு விட்டு தானே சோற்றை எடுத்து மேலேயும் , கீழேயும் சிந்தியபடி சாப்பிட்டு விட்டு , கையை கூட கழுவாமல் அங்கேயே சரிந்தாள் .

தெறிக்கும் விம்மல்க்கள் வெளித்தெரியாமல் இருக்க , போர்.வையை தலைக்கு மேல் மூடியபடி குலுங்கினாளமாலினி .




What’s your Reaction?
+1
34
+1
16
+1
1
+1
1
+1
0
+1
1
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!