Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 5

   5

விடியாத இரவை கொண்டதாகிவிட்டது
எனது இந்த காலை ,
சுருண்டு கிடக்கும் போர்வையாய்
இன்னமும் படுக்கையிலேயே ..
வழக்கமான வாசனை காலை உனக்கு ,
உன் பார்வையோ ,
உன் வார்த்தையோ ,
உன் தீண்டலோ ,
வேண்டாம் …
நேற்றைய மீதி கோபமோ கூட
எனக்கு கிடைக்க போவதில்லை,
இருண்டு கிடக்கும் என் வானை
பற்றிய கவலையின்றி ,
வெளிறிக் கிடக்கும்  ஆகாயத்தை
போனில் படமெடுக்கிறாய் ,
இதழ் குவித்து நெருங்குவதானால்
நெற்றியிலோ ..
கன்னத்திலோ ..
உதட்டிலோ …
வேண்டாம் …
என் ஆன்மாவின் வேர் ஒன்றினை
உனக்கென ஊனிக் கொண்டிருக்கிறேன் ,
வேருக்கான நீரோடு அதனுள் வா .




” ஹெட் ஆபிசிற்கு என்ன ரிப்போர்ட் அனுப்பினீர்கள் …? ” சபரீஷை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் சஹானா .

” உண்மை ரிப்போர்ட்டை அனுப்பினேன் .இங்கே உள்ள நிலைமையை சொன்னேன் …” அசையாமல் பதிலளித்தான் சபரீஷ் .

” நான் இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை ..”

” பொண்ணுங்களை பார்த்ததுமே ஜொள் விடுறான் .இவன் எங்கே ஒழுங்காக வேலை பார்க்க போகிறான்னு நினைத்திருப்பீங்க .நான் கொஞ்சம் பொண்ணுங்க பின்னாடி பார்வையை விட்டாலும் அது என் வேலையை பாதிக்க விட மாட்டேன் மேடம் .என் வேலையை நான் சரியாக செய்துவிட்டேன் ,”

” உங்கள் ரிப்போர்ட் தான் என்ன ..? ” எரிச்சலாக கேட்டாள் .

” இங்கே போட்ட முதலுக்கு சேல்ஸ் கிடையாது .அதுவும் அந்த புதிய ஷோரூமில் ரொம்ப மோசம் .லட்சக்கணக்கில் அந்த ஷோரூமிற்கு கம்பெனி முதலீடு போட்டிருக்கிறார்கள் .போன மாதம் அங்கே விழுந்த சேல்ஸ் பில் மொத்தமே இருபதினாயிரம் .அதுவும் மூன்று பில்களாக …..இதே நிலைமை நீடித்தால் அந்த ஷோரூமோடு சேர்த்து நம் கம்பெனியையும் மூட வேண்டிய நிலை வரலாம் .அதனால் உடனே அந்த ஷோரூமை மூடவேண்டும் …என்று உறுதியாக தெரிவித்திருக்கிறேன் “

” எனக்கு ஒரு மூன்று மாதம் டைம் கொடுங்க .நான் அதற்குள் சேல்ஸ் உயர்த்திக் காட்டுகிறேன் .அது வரை எந்த ரிப்போர்ட்டும் நீங்கள் அனுப்ப வேண்டாம் “

,” இங்கே நான் வேலையில் சேருவதற்கு வேண்டுமானால் உங்கள் ஆட்சேபனைகளை சொல்லலாம் மேடம் .ஆனால் என் ரிப்போர்ட்டுகளில் உங்கள் ஆட்சேபனைகள்  எதுவும் சேர்க்க முடியாது ,”

” கம்பெனி ரிப்போர்ட்டுகளை ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் .இதை வைத்தே இப்போது நீங்கள் இங்கே வேலை பார்க்காமல் செய்ய என்னால் முடியும் …”

” செய்யுங்களேன் .ஆனால் இனி நான் இந்த ஊரை விட்டு போக போவதில்லை .எனது ஊர் இதுதானென்று முடிவு செய்துவிட்டேன் ..”

” வேலையே இல்லாமல் ..இங்கே இருந்து என்ன செய்வீர்கள் ..? “




” இந்த வேலை இல்லாவிட்டால் வேறொன்று .ஆனால் வாழ்க்கை ஒன்றுதான் பாருங்கள் …”

” என்ன கண்றாவி …ஏதோ காதல் வசனம் போல் பேசி  தொலைகிறீர்களே என்ன ..? “

” உங்களுக்கு புரியாது மேடம் …” சபரிஷின் கண்கள் கனவு போல் சொக்குகின்றன.

” யார் …? யார் அந்த பெண் …? ” அவனை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் சஹானா .

” ஏற்கெனவே அவள் மேல் பொறாமையில் இருக்கிறீர்கள் .சொன்னால் இன்னும். பொறாமை அதிகமாகும் .அதனால் சொல்ல மாட.டேன் ….”

” பொறாமையா …எனக்கா …?…யு மீன் …. சாம்பவி …???”

பதில் சொல்லாமல் சபரிஷ் சிரித்த சிரிப்பு அப்படித்தான் என்க  , டேபிளில் இருந்த டேபிள் வெயிட்டை இறுக பிடித்தபடி , ஒரு நிமிடம் பேசாமலிருந்தாள் சஹானா .

” வேண்டாம் மேடம் .ஏதோ படிக்கிற காலத்தில் உங்களுக்குள் உரசல் இருந்திருக்கலாம் .இப்போது அதையே நினைத்துக்கொண்டு அவளை எதிரியாக பார்க்காதீர்கள் …”

” முட்டாள்….” கததினாள் .சபரிஷ் திகைத்து விழிக்க …

” என்ன தெரியும் அவளை பற்றி உங்களுக்கு …? “

” எல்லாம் தெரியும் ….”




” என்ன ..எல்லாம் ….முதலில் உங்கள் அளவில்லாத காதலை அவளிடம் சொல்லி விட்டீர்களா …? “

” அது …இல்லை ..நான் சந்திரனிடம் தான் சொன்னேன் .அவர.தான் தங்கையிடம் பேசுவதாக சொல்லியிருக்கிறார் ….”

” அது ஒரு லூசு ….” சஹானா முணுமுணுக்க ….

” என்னையா சொன்னீரகள் …? ” சந்தேகமாக கேட்டான் .

” உங்களையும்தான் .எவனாவது காதலை காதலிப்பவளின்  அண்ணனிடம் சொல்லுவானா …? “

அதுதானே நான் ஏன் அப்படி செய்தேன் …தனக்குள் பேசியபடி யோசித்த சபரிஷிற்கு புரிந்த்து .ஏனென்றால் சாம்பவி அவனிடம் இப்படியெல்லாம் ஏன் எப்படியும் பேச தயாரில்லை .அதனாலேயே அவன் சந்திரனிடம் சரணடைய வேண்டியதாயிற்று .

” இவனை மனதில் வைத்துத்தான் புது வாழ்க்கை அது …இதுவென அன்று உளறினானா …? ” தனக்குள் பேசியவள் ,

” இதோ பாருங்கள் சபரிஷ் , சாம்பவியின் முந்தைய வாழக்கையில் ….”

” இல்லை ..நான் உங்கள் பேச்சு எதையும் கேட்க போவதில்லை .சாம்பவியை பற்றிய உங்கள் தகவல்கள் எல்லாம் தவறானதாகவேதான் இருக்கும் . அவற்றை நான் கேட்கமாட்டேன் ் …,,” இரண்டு கைகளால் காதுகளை மூடிக்கொண்டான் .

எதிரே ஒரு சத்தமும் இல்லாமல் போக சந்தேகத்துடன் நிமிர்ந்து பார்த்தவன் ” அட அற்ப பதரே …’ என்ற பார்வையோடு தன்னை பார்த்துக் கொண்டிருந்த சஹானாவை பார்த்ததும் , தொண்டையை சற்று செருமி தன்னை சரி செய்து கொண்டான் .

” கோபித்துக் கொள்ளாதீர்கள் மேடம் .தப்பாக நினைக்காதீர்கள் .என் மனதில் பட்டதை சொல்லிவிடுகிறேன் .சாம்பவி ரோஜாவை போன்றவள் .நீங்கள் முள்ளை போல….” என்றவன் அவள் முறைக்கவும் பேச்சை நிறுத்தினான் .

” முறைக்காதீங்க மேடம் .எதிரெதிர் துருவமான நீங்கள் இரண்டு பேரும் எப்படி தோழிகளாக இருந்தீர்கள் ….எப்பொழுதும் முள்ளாக குத்திக் கொண்டிருக்கும் நீங்கள் எங்கே …? ரோஜாவாக சிரிக்கும் சாம்பவி எங்கே …? ” கனவு கண்டவன் போல் உளறிக்கொண்டிருக்கும் சபரிஷின் முன்னால் தன் விரலை சொடுக்கினாள் .




” நான் தேவையில்லை மிஸ்டர் .நீங்கள் நேரடியாக சாம்பவியிடமே பேசுங்கள்.இதோ இது போன்றே இப்படியே பேசுங்கள் .அவளே உங்களை ஒரு வழி பண்ணுவாள் .போங்கள் ….,அப்புறம் தெரியும் ரோஜாவா …முள்ளான்னு …!!” கையை வெளியே காட்டினாள் .

” எப்படியும் அந்த ஷோரூமை மூடத்தான் போகிறார்கள் .” முணுமுணுத்தபடி எழுந்தான் .

” அதையும் பார்ப்போம் ….” எரிச்சலாக கூறினாள் .

சபரிஷ் வெளியே போகவும் , தனது போனை எடுத்து நம்பரை அழுத்தியவள் ”  நீ என்ன செய்வாயோ , எனக்கு தெரியாது .இன்னும் ஒரு வாரத்தில் நீ இங்கே இருக்க வேண்டும் .எனக்கு அந்த ஷோரூமை காப்பாற்றி தர வேண்டும் .இது என் மானப்பிரச்சினை …” என்று மேலும் சிறிதுநேரம் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள் .

கொந்தளிக்கும் மனதுடன் எழுந்து அங்குமிங்கும் நடக்க துவங்கினாள் .

” நீ எப்படியடி இப்படி இங்கிலீஸ் பேசுகிறாய் …? ” ஆச்சரியமாக கேட்ட சாம்பவி நினைவு வந்தாள்.

” இது எல்லாம் பழக்கம்தான்டி .நீயும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தால் தானாக வந்துவிடும் .”

” ம்ஹூம் …தப்பு தப்பாக பேசிவிடுவேன் .கேட்பவர்கள் கேலி பண்ணுவார்கள் .எனக்கு பயமாக இருக்கிறது “

” தப்பாக இருந்தால் இருக்கட்டுமே .அதனால் என்ன …? மற்றவர்கள் நினைப்புக்கு நாம் வாழக்கூடாதுடி .நம் நினைப்பிற்கேற்ப மற்றவர்களை வாழ வைக்கனும் …முதலில் உனது இந்த கட்டுப்பட்டி உடைகளை மாற்று .முடியை என்னைப் போல வெட்டிக்கொள் .ஜீன்ஸ் , லெக்கின்ஸ் போட பழகு ….இந்த தோற்றமே உனக்கு ஒரு நிமிர்வை , தைரியத்தை கொடுக்கும் ….”

சஹானா எவ்வளவோ முயற்சித்தும் இந்த விஷயங்களில் சாம்பவியை மாற்ற முடியவே இல்லை .தனது சுடிதாரையும் , நீளக்கூந்தலையும் அவள் விட மறுத்தாள் .எல்லோரும் கிண்டல் பண்ணுவார்களென பயந்துதான்  இந்த சுடிதார் .இல்லையெனல் தனது விருப்ப உடை பாவாடை , தாவணி , சேலைதான் …என்றாள் .

ஆங்கிலம் பேச மட்டும் முயன்றாள் .அதுவும் தவறாக வந்த ஒரு வார்த்தைக்கு பயந்து பிறகு ஒரு வாரம் வாயை திறக்க மறுத்தாள் .கார் ஓட்ட கூட்டிப் போய்விட்டால் ,முதல் நாளிலேயே தலைதெறிக்க ஓடிவந்தாள் .




அதெப்படி ஒரு ஆணின் அருகே அமர்ந்து கார் பயில முடியுமென்றாள் .சஹானா தலையிலடித்துக் கொண்டாள் .

” முப்பது வருடத்தற்கு முன் பிறந்திருக்க வேண்டியவளடி நீ .தவறி இந்தக்காலத்தில் பிறந்து தொலைத்துவிட்டாய் ….”

அவர்கள் காலேஜில் சேர்ந்து படித்த மூன்று வருடங்களும் , ஹாஸ்டலிலும் சாம்பவியை கொஞ்சமாவது கற்காலத்திலிருந்து , நற்காலத்திற்கு இழுத்து வந்துவிட வேண்டுமென்ற சஹானாவின் ஆசை விழலுக்கு இறைத்த நீரானது .

, சாம்பவியை மாற்ற முடியாத தோல்வி தந்த வேகத்தில் பல நேரங்களில், அவளை அவள் தோற்றத்தை கேலியும் , கிண்டலுமாக பேசிவிடுவாள் .முகம் கறுக்க மௌனமாகிவிடும் தோழியின் தோற்றம் உறுத்த பிறகு அவளை சமாதானமும் செய்வாள் .

சஹானா பேசிய வார்த்தைகளுக்கு வேறொரு பெண்ணாக இருந்தால் , உன் உறவே வேண்டாம் என முறித்துக்கொண்டு போயிருப்பாள் .ஆனால் சாம்பவி ….வித்தியாசமான பெண்ணாயிருந்தாள் .சஹானாவின் சமாதானங்களை எளிதில் ஏற்று உடனே அவளை மன்னித்தாள் .

” பரவாயில்லடி நீ எனக்காகத்தானே சொன்னாய் ” என அவளையே சமாதானம் செய்வாள் .

அந்த கணங்களில் சஹானாவிற்கு இவள் அற்புதமான பெண் என தோன்றிவிடும் .படிப்பு முடிந்து அவரவர் வீடு திரும்பிய பின் சாம்பவியை மிகவும் மிஸ் பண்ணினாள் சஹானா .அடிக்கடி தோழியை பார்க்கவென சென்னையிலிருந்து , மதுரைக்கு ஓடி வந்துவிடுவாள் .ஒரு வாரமாவது சாம்பவி வீட்டில் தங்கி , அந்த வீட்டினரை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் தன் வீடு வருவாள் .

தோழிகள் இருவரும் படித்தது பெங்களூரில் பெரிய கல்லூரியில் .அவர்களது படிப்பிற்கேற்ற வேலை பெங்களூர் , சென்னை உட்பட இந்தியாவின் நிறைய இடங்களில் இருக்க , எங்குமே வேலைக்கென அப்ளை பண்ணக்கூட மறுத்தாள் சாம்பவி .

” அங்கெல்லாம் போய் தங்கி வேலை பார்க்க மாட்டேன் .எங்கள் ஊரிலேயே வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.,’

” என்ன அந்த பட்டிக்காட்டிலா …? “




” மதுரை பட்டிக்காடென்று உனக்கு யாரடி சொன்னது ….? “

” ம் …அதோ மரத்தில் கூடு கட்டியிருக்குதே அந்த தூக்கணாங்குருவி சொன்னது  .ஏன்டி உனக்கு அறிவிருக்குதா …? நீ வைத்திருக்கிற சர்ட்டிபிகேட்டுக்கு மும்பை வரை வேலை கிடைக்கும் .தைரியமாக அப்ளை பண்ணலாம் .நீ என்னவென்றால் ….,,”

” அது எதற்கடி …? மதுரையில் இல்லாத வேலையா …?நான் என் அம்மா , அப்பா , அண்ணனை விட்டு எங்கும் வர மாட்டேன் .”

” ஓ…அப்போது கல்யாணம் என்ற ஒன்று பண்ணிக்கொள்ளாமலேயே , கடைசி வரை பெற்றோர் சேவை செய்யப்போகிறாயா …? “

” ஏன் ..மதுரையில் மாப்பிள்ளையே கிடையாதா …? இங்கேயிருந்து ஒருவனை கல்யாணம் பண்ணிக்கொள்வேன் …”

பதிலுக்கு பதில் தயாராக வைத்திருந்த சாம்பவியின் பேச்சுக்கள் சஹானாவுக்கு எரிச்சல் மூட்டின .உடனடியாக அவளது திட்டங்களையெல்லாம் கலைக்க வேண்டுமென்ற வேகம் வந்த்து அவளுக்கு .

சஹானா வசதியான வீட்டுபெண் .பிறந்த்திலிருந்து அவள் வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டமாக இருந்த்து .தாய் , தந்தையிலிருந்து …உடன் பிறந்தவன் வரை அவளை செல்லமாகவே வைத்திருந்து , அவள் பேச்சிற்கு கட்டுப்பட்டே வாழ்ந்தனர் .எனவே தான் பாசம் வைக்கும் யாராக இருந்தாலும்  ,, தனது பேச்சை தலை மேல் ஏற்றிக்கொண்டு உடனே நிறைவேற்ற வேண்டுமென்றே சஹானா நினைத்தாள் .

அவளது வீட்டில் அது எளிதாக நடந்த்து .ஆனால் சாம்பவி விசயத்தில் ….

சாம்பவியும் …சஹானா மேல் பாசம் உள்ளவளாக , அவள் சுடு பேச்சுகளை தாங்கியும் , உடனே மறந்துவிடுபவளுமாக அவளது ஆருயிர்த் தோழியாகத்தான்  இருந்தாள் .ஆனாலும் அவள் அவளுக்கென சில கொள்கைகள் வைத்திருந்தாள் .அந.த கொள்கைகளை எந்த காரணத்திற்காகவும் அவள் யாருக்காகவும் …சஹானாவிற்காகவுமே விட்டுக்கொடுக்க தயாரில்லை .

என் நிலை இது …இதிலிருந்து நான் பிறழமாட்டேன் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள் .அவளது உறுதி கூடக்கூட அதனை உடைத்தே ஆக வேண்டுமென்ற சஹானாவின் உறுதியும் கூடியது .அதற்கான வழியை தீவிரமாக ஆராய்ந்து அவள் ஒரு முடிவுக்கு வந்தாள் .

இருவருக்குமே நன்மை தருமென எண்ணித்தான் அவள் அந்த யோசனையை சொன்னாள் .ஆனால் அது அவர்கள் இருவரின் வாழ்வையுமே சூறாவளியாக புரட்டிப் போட்டது .இது சஹானா எதிர்பாராத்து




” ன் நிற்கிறீர்கள் …? உட்காருங்கள் …,” சபரீஷை உபசரித்தாள் சாம்பவி .

அவன் அமர்ந்த்தும் ” சொல்லுங்க என்ன விசயம் ….? “

” வீட்டில் யாரும் இல்லையா …? “

” அம்மா , அப்பா , அண்ணன் மூவரும் கோவிலுக்கு போயிருக்கிறார்கள் .அண்ணி உள்ளேதான் இருக்கிறாள் .நீங்கள் என்னிடம் எதுவோ பேசப் போவதாக சொன்னீர்களாம் .அண்ணன் உங்களிடம் பேச சொன்னார் .சொல்லுங்க….”

” அது …வந்து …நான் …வந்து ..”

சாம்பவி பதிலின்றி அவனை பார்த்தபடி இருக்க , மூன்று மாதங்களாக சாம்பவி மேல் தீராத காதலை கொண்டிருந்த்தாலும் , தங்கையிடம் பேசி அனுமதி வாங்கிக் கொள்ளுமாறு சந்திரன் கூறிவிட்டதாலும் ,  சஹானாவின் சீண்டலாலும் , இதோ யாருமற்ற இந்த தனிமையுமாக …தனது காதலை சொல்ல தயாரானான் சபரிஷ் .

உள்ளிருந்த அறையிலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது .

” அண்ணி பாப்பா முழிச்சிட்டா போல .போய் சமாதானம் பண்ணுண்ணி …” சாம்பவி இங்கிருந்தே கூற , மாலினி சபரிஷை ஒரு மாதிரி பார்த்தபடி அவர்களை கடந்து படுக்கையறைக்குள் நுழைந்தாள் .

” சாம்பவி …ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ ….” கண்ணை மூடிக்கொண்டு கூறி விட்டான் சபரிஷ் .

பதில் சொல்ல முடியாமலோ …சொல்ல பிடிக்காமலோ …அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாம்பவி .

வீல் …வீலென கத்தும் குழந்தையுடன் உள்ளிருந்து வந்த மாலினி , ” இந்தா …உன் புள்ளையை நீயே சமாதானம் பண்ணு .எனக்கு அடங்க மாட்டேங்குது …” குழந்தையை சாம்பவியின் மடியில் வைத்துவிட்டு சபரிஷை கேலியாக பார்த்தபடி நகர்ந்தாள் .

தன் மடியிலிருந்த குழந்தையை அணைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சாம்பவியை அதிர்ச்சியாக பாரத்தான் சபரிஷ் .

” சாம்பவி இந்த குழந்தை …,”

” என்னோட குழந்தைதான் .ஐ மீன் ..நானே பத்து மாதம் சுமந்து பெற்ற என்னுடைய குழந்தை …”

தலை சுற்றுவது போல் இருந்த்து சபரிஷிற்கு .அவனது கண்கள் தானாக சாம்பவியின் கழுத்தை ஆராய்ந்தன.

ஒரு மெல்லிய செயினை தவிர் , அங்கே தாலி …கண்டிப்பாக இல்லை .




What’s your Reaction?
+1
35
+1
23
+1
3
+1
4
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!