Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 12

12

 


 

” உனது நேரம் முடிந்து விட்டது .நீ போகலாம் ” உஷாந்தியின் கை பிடித்து தள்ளியவனை ஆ எனப் பார்த்தாள் சுடரொளி.

” ஆனந்த் …நீ …நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் ? என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லியிருந்தீர்கள் “

சொல்லியிருந்தீர்களா …?அப்படியானால் ….? சுடரொளி விழிகள் மின்ன ஆனந்தபாலனை பார்க்க , அவன் உஷாந்தியை அலட்சியமாக பார்த்திருந்தான் .

” அப்படி எப்போதம்மா வாக்கு கொடுத்தேன் ? “

” அ…அது…சொன்னீர்கள் …இ…இல்லை…செய்கை காட்டினீர்கள் .இப்போதுதான் …இதோ இந்த அரைக்கிழடியை பார்த்ததும்தான் மாறி விட்டீர்கள் .இவள் உங்களை ஏதோ மந்திரம் போட்டு வசியம் செய்துவிட்டாள் . திட்டம் போட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் நேற்று இரவு முழுவதும் உங்களுடன் தங்கி …”

உஷாந்தியின்  அபாண்டத்தை தாங்க முடியாமல் சுடரொளி வாயைத் திறக்க முயல , அவளைக் கையமர்த்தினான் ஆனந்தபாலன் .

” உனது வாதம் அர்த்தமற்றது உஷாந்தி .கணவனுடன் இரவு தங்க , திட்டமிடல் எதற்கு ? வெட்கம்தான் எதற்கு ? “

” எ…என்ன சொன்னீர்கள்  ? ” உஷாந்தி அதிர்ந்து போய் இருவரையும் பார்க்க , ஆனந்தபாலன் சுடரொளியையும் , சுடரொளி வெளியையும் பார்த்திருந்தனர் .

” இவள் என் மனைவி என்றேன் .என்னுடன் தனியே வருவதற்கோ , இரவு தங்குவதற்கோ இவளுக்கு தயக்கம் வந்திருக்காது என்கிறேன் ” ஆனந்தபாலன் சுடரொளி அருகே நகர்ந்து அவள் தோளில் கை போட்டுக் கொண்டான் .

” இல்லை …பொய் …நான் நம்பமாட்டேன் ” வீறிட்டாள் உஷாந்தி .

” இப்போது நம்புகிறாயா ? ” ஆனந்தபாலன் இயல்பாக சுடரொளியின் கழுத்தில் கை வைத்து அவள் உடைக்குள் மறைத்து போட்டிருந்த மெல்லிய பொன் சங்கிலியை வெளியே எடுத்துக் காட்டினான் .பொட்டாய் மின்னியது தாலி.

” அப்போதெல்லாம் எனக்கு இந்த சொத்துக்கள்  கிடையாது. பார்ட் டைம் வேலையும் பார்த்துக் கொண்டு படித்தும் கொண்டிருந்தேன் .என் கையிலிருந்த மிக குறைந்த பணத்தில் இதோ இந்த சிறு தாலி பொட்டுதான் வாங்க முடிந்தது .” ஆனந்தபாலனின் விரல்கள் தாலியை வருட , சுடரொளியின் உடல் சிலிர்த்தது.




” அநாதை போல் என்னை உணர்கிறேன் சுடர் . எனக்கென்று ஒரு குடும்பம் , மனைவி , குழந்தையென்று மிக உடனே வேண்டும் போல் இருக்கிறது .நாம் இருவரும் இப்போதே திருமணம் செய்து கொள்ளலாமா ? ” கலங்கிய கண்களுடன் அன்று கேட்ட ஆனந்தபாலனை  மறுக்க வேண்டுமென துளிக் கூட தோன்றவில்லை சுடரொளிக்கு .

தாய் ,தந்தை ,சொந்த பந்தமென்ற எந்த நினைவும் அப்போது அவளுக்கு வரவில்லை. அவளது பாலாவின் கலக்கத்தை போக்க வேண்டும் …இது ஒன்றுதான் அவள் மனம் முழுவதும் சுழன்று கொண்டிருந்தது .

” நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களென்ற நம்பிக்கையில்தான் என் அப்பா என்னை உங்களுடன் தங்க அனுப்பி வைத்தார் .இத்தனை நாட்கள் என்னை உங்களுடன் வைத்துக் கொண்டிருந்து விட்டு இப்போது போ என விரட்டுகிறீர்களா ? இது நியாயமா ? இனி என்னை வேறு யார் திருமணம் செய்து கொள்வார்கள் ? ” உஷாந்தியின் கேள்விகள் கருவேலம் முள்ளாய் சுடரொளிக்குள் இறங்கியது .

நியாயம்தானே ? இதோ அவள் கூட உஷாந்தியை ஆனந்தபாலனின் மனைவியாகத்தானே நினைத்திருந்தாள் ? அவர்கள் இருவரின் நடவடிக்கையும் கூட அப்படித்தானே இருந்தது ?

” ப்ச் …நிறுத்து உஷா .நீ எந்தக் காலத்தில் இருக்கிறாய் ? ஆணும் , பெண்ணும் தனியாக ஒரே வீட்டில் தங்கினாலே அவர்கள் கணவன் மனைவியா ? அல்லது உறவு வைத்திருப்பவர்களா ? காலம் மாறி விட்டதும்மா .இப்படியெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை .நீ மேற்படிப்பிற்காக தனிமை தேடி வந்து என் வீட்டில் தங்கியிருக்கும் பேயிங் கெஸ்ட் .அப்படித்தான் இங்கிருப்பவர்களுக்கு உன்னைத் தெரியும் “

” உனக்கு படிக்க காசில்லாமல் அதற்கெல்லாம் அண்ணாதான் செலவழிக்கிறார்னும் எங்களுக்குத் தெரியும்” பத்மினி இப்போது பேசினாள் .

சுடரொளி அவளை ஆச்சரியமாக பார்த்தாள் .ஆக …இவர்கள் எல்லோருக்கும் உஷாந்தியை பற்றித் தெரியும் .அவளுக்கு மட்டும்தான் விபரங்கள் மறைக்கப் பட்டிருக்கின்றன .இல்லை…இதோ இவன்தான் திட்டமிட்டு மறைத்திருக்கிறான் .சுடரொளி ஆனந்தபாலனை முறைக்க , அவனோ உஷாந்தியை வெளியேற்றுவதில் முனைப்பாக இருந்தான் .




” என் வீட்டில் தங்கிக் கொண்டு , என் பணத்தில் படித்துக் கொண்டு என் மனைவியையே தவறாக பேச முடியாதும்மா .உனக்கு நீ ஆசைப்பட்ட யுனிவர்சிடியிலேயே இடம் வாங்கி விட்டேன். உன் அப்பாவிடமும் பேசி விட்டேன் .படித்து முடித்து வேலை பார்த்து பணம் சம்பாதிக்க பார் .எளிதாக யாராவது பணக்காரனை மணம் முடித்துவிடலாமே என்று குறுக்கு வழியில் போகாதே . கிளம்பு “

உஷாந்தி குனிந்த தலையுடன் போக ,பத்மினி கைகளை தட்டினாள் .” சூப்பர் அண்ணா .இந்த பொண்ணுதான் எனக்கு அண்டை வீட்டுக்காரியாக வந்து விடுவாளோ  என்று பயந்து கொண்டிருந்தேன் .இனி அந்த பயம் இல்லை .இதோ இந்த அழகான பெண்தான் எனது பக்கத்து வீட்டுக்காரி .தோழி எல்லாம் …” சுடரொளியின் கையை பாசமாக பற்றிக் கொண்டாள் .

பத்மினிக்கு ஆதரவாக மலர்ந்த சுடரொளியின் புன்னகை ஆனந்தபாலனுக்கு கசப்பாக மாறியது .

” இத்தனை நாட்களாக எங்களிடம் இதையெல்லாம் மறைத்துவிட்டீர்களே அண்ணா ? “

” எங்களுக்குள் கொஞ்சம் பிரச்சனைம்மா .இனி எல்லாம் சரியாகி விடும் .நீ கிளம்பும்மா .”

” சரி .சீக்கிரமே இங்கே எல்லோருக்கும் உங்கள் மனைவியை அறிமுகப் படுத்துங்கள் . விநாயக் வா போகலாம் ” பத்மினி தன் மகனை அழைக்க போக , சுடரொளி ஆனந்தபாலன் பக்கம் திரும்பினாள் .

“உஷாந்தி உங்கள் மனைவி இல்லையென்றால் … அப்போ …அமிர்தன் …? “

ஆனந்தபாலன் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு சுடரொளியின் கண்களை உறுத்தான் .” நீயே சொல்லேன் …அமிர்தன் யாராயிருக்கலாம் ? “

சுடரொளியின் கண்கள் மின்னியது .வாய் குழறியது .உடல் நடுங்கியது .” அ…அவன் …எ…நம்….”

” அம்மா ” அமிர்தனின் குரல் அமிர்தமாய் அவள் செவிகளில் இறங்கியது .குனிந்து பார்த்தாள் .அவள் கால்களை கட்டிக் கொண்டு அண்ணார்ந்து அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் அமிர்தன் .

இவ்வளவு நேரமாக தன் விளையாட்டுத் தோழனுடன் விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தவன் ,இப்போதுதான் தோற்றம் மாறி இருந்தவளை கவனித்தான் போலும் .




” அம்மா ” ஆசையாய் இரு கைகளையும் தூக்கிய குழந்தையை வாரி எடுத்துக் கொண்டாள் .முகம் முழுவதும் முத்தமிட்டு உச்சி முகர்ந்தாள் .

” கண்ணா …உனக்கு அம்மாவை தெரியுமா ? “

” தெரியுமே ! அப்பா சொல்லி தந்திருக்கிறார் .அவர் போனில் உங்க போட்டோதான் நிறைய இருக்கும் .அதைக் காட்டி அம்மா சொல்லி தந்திருக்கார் “

சுடரொளி விழி மூடி நிகழ்வுகளை ஜீரணித்து நிற்க , அவள் மன அதிர்ச்சி புரிந்து ஆனந்தபாலன மெல்ல அவள் தலை வருடினான் .” என்னை அப்பா என்று அறிமுகப் படுத்துவதை விட உன்னை அம்மா என்று சொல்லித் தருவதுதான் எனக்கு முக்கியமாகப் பட்டது சுடர் “

சுடரொளி மகனை அணைத்துக் கொண்டு விம்மினாள் .” இ…இவன் பிறந்ததுமே இ…இறந்து விட்டதாக …” முழுவதும் சொல்ல மனமின்றி விழுங்கினாள் .

” ம் …இறந்து விட்டதாக உன் வீட்டினரால் தூக்கி  எறியப்பட்ட குழந்தையை நான் வாங்கிக் கொண்டு வந்து வளர்த்துக் கொண்டிருக்கிறேன் “




” எனக்கு குழப்பமாக இருக்கிறது .” சுடரொளி அயர்வுடன் அங்கிருந்த பெஞ்சில் மகனுடன் அமர்ந்து விட்டாள் .

” எல்லாவற்றிற்கும் காரணம் …உன் சித்தியும் , சித்தப்பாவும்தான் சுடர் ” ஆனந்தபாலன் அவளருகே அமர்ந்து மெல்ல அவள் தோளை ஆதரவாக வருடினான் .

” யாருக்கும் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் செய்து்கொண்டு வயிற்றில் பிள்ளையோடு இருந்த மகளை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருந்த என் பெற்றோருக்கு அன்று கை கொடுத்தது என் சித்திதான் .அவர்களது அம்மாவின் கிராமத்திற்கு என்னை அழைத்துப் போய் அங்கே யாருக்கும் தெரியாமல் பிரசவம் பார்த்து , இந்தக் கல்யாணம் , குழந்தை விசயம் இங்கே எங்கள் காம்பவுண்ட்வாசிகளுக்குத் தெரியாமல் மறைத்து …இப்படி அவர்கள் எங்களுக்கு நிறைய செய்திருக்கிறார்கள் .அவர்களை சந்தேகப்பட முடியாது “

சுடரொளியின் உறுதியான பேச்சின் பின் ஆனந்தபாலன் யோசிக்கலானான் .




What’s your Reaction?
+1
65
+1
30
+1
1
+1
1
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!