Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 11

11

 


 

 

தோளில் தூங்கிய பிள்ளையை சுமந்தபடி காரிலிருந்து இறங்கியவளிடமிருந்து பிள்ளையை தன் தோளுக்கு மாற்றிக் கொண்டான் ஆனந்தபாலன் .

” கொஞ்ச நேரம் ஓய்வெடு . வா ” அவளை அழைத்துக் கொண்டு அமிர்தனின் அறைக்குள் போனான் .மிக மெல்ல தோளுரச அருகருகே நடந்த சென்ற இருவரையும் குரோதம் பொங்கும் விழிகளுடன் பார்த்தபடி மாடியில் நின்றிருந்தாள் உஷாந்தி .

மகனை கட்டிலில் படுக்க வைத்து விட்டு சுடரொளியையும் கை பற்றி கட்டிலில் அமர்த்தினான் .” நேற்று பகல் முழுவதும் காட்டுப் பயணம் , இரவும் தூக்கமில்லை .ரொம்பவே அசந்து தெரிகிறாய் . படுத்து உறங்குடா ” அவள் தோள் பற்றி அழுத்தி படுக்க வைத்தவன் சுருட்டியிருந்த கூந்தலை அவிழ்த்து விட்டான் .

” இனி இந்த வேடம் தேவையில்லை சுடர். இப்போது நீ மிகவும் பாதுகாப்பாக இருக்கிறாய் .ம் …” ஆதரவாக தலை வருடி விட்டு எழுந்தான் .

சுடரொளி அவன் கை தொட்டு ” உங்களுக்கும் ஓய்வில்லைதானே ? நீங்களும் கொஞ்ச நேரம் படுக்கலாமே ? ” என்றாள் .

” ஒரு முக்கியமான வேலை இருக்கிறதுடா .பக்கத்து வீட்டுக்காரரை போய் பார்க்க வேண்டும் .பார்த்து விட்டு வந்து தூக்கம்தான் .நீ தூங்கு ” தன் உள்ளங்கை கதகதப்பை அவள் விழி மேல் பொத்தி வைத்துவிட்டு வெளியேறினான் .




ஏதோ ஓர் சுகமான மோன நிலையிலிருந்த சுடரொளி விழி மூடிக் கொண்டாள் .இரண்டு மணி நேர ஆழ்ந்த உறக்கத்தின் பின் விழித்தவளின் மனம் பாரமின்றி சிறகசைத்துக் கொண்டிருந்தது .அருகிலிருந்த அமிர்தனை காணாமல் தேடி வெளியே வந்தவள் , அவன் வேணுகோபாலிடம் சமர்த்தாக கதை கேட்டபடி சாத உருண்டைகளை வாயில் வாங்கிக் கொண்டிருப்பதை புன்னகையோடு பார்த்து விட்டு அறைக்குள் வந்தாள் .

இதமான வெந்நீரில் சுகமாக குளித்து விட்டு கண்ணாடி முன் நின்றவளது மனது , ஏனோ பழைய வேடம் பூண விரும்பவில்லை .நீள் கூந்தலை தளர்வாய் பின்னலிட்டு , கண்களுக்கு மிதமாய் மையிட்டு , இதழுக்கு மென்மையாய் வண்ணமிட்டு , கண் கண்ணாடியை தூக்கி எறிந்து விட்டு , நூல் சேலையை தவிர்த்து , மெரூனும் , ஆரஞ்சும் கலந்த காட்டன் சுடிதார் அணிந்து கொண்டு தன்னைக் கண்ணாடியில் பார்த்தவளின் விழிகள் தன்னில் தனையே வியந்தன , பாராட்டின.

உருவ தோற்றமும் , உடையமைப்பும் அடுத்தவர்களுக்காக மட்டுமல்ல .தங்களுக்காகவுமே என உணர்ந்து கொண்டவள் நிறைந்த மனதுடன் அறையை விட்டு வெளியே வந்தாள் .

இன்னமும் பாலா வரவில்லையா …? அப்படி எங்கே போனார் ? யோசனையோடு தோட்டத்துப் பக்கம் வர , அங்கே பக்கத்து வீட்டுப் பெண் பத்மினி அவளுடைய மகனுடன் நின்றிருந்தாள் .மகன் அமிர்தனுடன் விளையாடிக் கொண்டிருந்தான் .

பத்மினியை இங்கே வந்த சில நாட்களில் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்திருக்கிறாள் .அவளும் , அவள் கணவனும் ஆனந்தபாலனை ஏதோ விழாவிற்கு அழைக்கவென வந்திருந்தனர் .அதன் பின் தோட்டத்து வேலியருகே ஓரிரு முறை பார்த்து தலையாட்டி நகர்ந்ததோடு சரி .

சுடரொளியை திகைப்பாய் பார்த்து அருகே வந்தாள் பத்மினி .

” நீ…நீங்க…அமிர்தனோட …வ…வந்து பேபி சிட்டர்தானே ? “

சுடரொளி புன்னகைத்தாள் .” நானேதான் “

” ஆனால் இவ்வளவு நாட்களாக ஏன் அப்படி டிரஸ் பண்ணியிருந்தீங்க ? “

” ம்…அதற்கொரு காரணம் இருக்கிறது .அதை பிறகு ஒரு நாள் பேசலாம் .நீங்கள் எப்போது வந்தீர்கள் ? “




” நான் இப்போதுதான் வந்தேன் .ஆனந்தன் அண்ணா எங்கள் வீட்டிற்கு வந்தார் .என் கணவரும் , மாமனாரும் அமிர்தனோடு என் மகன் விநாயக்கை விளையாட விடுமாறு என்னை அனுப்பி விட்டனர் . அவர்கள் மூவரும் ஏதோ ரகசிய தொழில் விசயம் பேசுகிறார்களென நினைக்கிறேன் ” பத்மினியின் குரலில் ஏதோ பெரிய விசயத்தை துப்பறிந்து விட்ட பெருமை .

பாவம் …கிராமத்து வெகுளித்தனம் …என்று பத்மினியை நினைத்த சுடரொளி தொடர்ந்து அவளுடன் பேசத் தொடங்கினாள் .பிள்ளைகள் இருவரும் தோட்டத்து ஓரமாக போய் பந்து விளையாண்டு கொண்டிருந்தனர் .

” ஏய் …ஏய் …இந்தா …யாரும்மா நீ ? ஆளில்லாத வீட்டுக்குள்ள நாய் மாதிரி வந்து உரிமையோடு உட்கார்ந்து வேறு இருக்கிறாய்  ? ஏய்…பத்மினி கண்டவர்களோடு உனக்கென்ன பேச்சு ? அதுவும் என் வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு …? ” கத்தலோடு மாடியிறங்கி வந்த உஷாந்தியை திரும்பி கோபமாக பார்த்தாள் சுடரொளி .

ஒரு நிமிடம் அடையாளம் தெரியாமல் திகைத்து , அடுத்த நிமிடம் தெரிந்து ” ஏய் ….நீயா …? இது என்னடி வேடம் ? யாரை மயக்க இப்படி மோகினி மாதிரி வந்து நிற்கிறாய் ? சீச்சி உனக்கு வெட்கமாக இல்லை ? ” கொதித்துப் போய் கத்தினாள் .

” வெட்கமடைவதற்கு என் உடையில் என்ன அலங்கோலம் இருக்கிறது மேடம் ? ” கிண்டலாக கேட்டவளின் கண்கள் ஒரு புறம் தோளின்றி , மறுபுறம் கையற்றதாக இருந்த ஒரு ரவிக்கையும் , ஆங்காங்கே கிழிந்து தொங்கிய ஜீன்சுமாக இருந்தவளின் உடையில் படிந்து மீண்டது .

அந்தப் பார்வையை கவனித்தவள் மேலும் குதித்தாள் ” என்ன தைரியமடி ? கை நீட்டி சம்பளம் வாங்கும் நாய் நீ ! என்னை குத்தலாகப் பேசுகிறாயா ? முடிந்தது ..இனி இங்கே எல்லாம் உனக்கு முடிந்தது .உன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு உன் ஊரைப் பார்த்து ஓடு ” விரல்களை சொடுக்கினாள் .

” ஏன் போகவேண்டும் ? ” சுடரொளி நிதானமாக கேட்டாள் .

” ஏன்டி உனக்கு அறிவில்லையா ? இங்கே இனி உனக்கு வேலை இல்லை .உன் வேலை போய்விட்டது .புரிகிறதா ? ” கத்தினாள் .




” அதை எனக்கு இந்த வேலையைக் கொடுத்தவர் வந்து சொல்லட்டும் “

” ஓஹோ அவரை வலை வீசிப் பிடித்து விட்ட தைரியத்தில் பேசுகிறாயா ? சீச்சி இதெல்லாம் ஒரு பிழைப்பா ? ஒரே ஒரு நாள் இரவுதான் .வேறு வழி இல்லாமல் உன்னுடன் தங்கினார் .அதற்குள் அவரை வளைத்துப் போட்டுவிட்டாயே ? எவ்வளவு  தேர்ந்த சாகசக்காரியடி நீ …? “

” உஷா…மரியாதையாக பேசுங்கள் “

” அடிங் …எவ்வளவு தைரியமிருந்தால் பெயரை சொல்லுவாய் ..? உன்னை …” ஆத்திரத்தோடு கையை ஓங்கினாள் .ஓங்கிய கையை இறுக்கிப் பிடித்தாள் சுடரொளி .

” உங்களை அடிக்க ஒரு நொடி ஆகாது எனக்கு .ஆனால் மனித நாகரீகம் என்னைத் தடுக்கிறது .” பிடித்த கையை தள்ள , உஷாந்தி கீழே விழப் போய் தடுமாறி நின்றாள் .

” என்னை அடிப்பாயா ? ” கொலை செய்யும் வேகத்துடன் உஷாந்தி அவளை நெருங்க , பத்மினி அச்சத்தோடு பின்னால் நகர்ந்து கொண்டு …

” அண்ணா …பார்த்துக் கொண்டே நிற்கிறீர்களே ? வாங்க ” என்று கத்தினாள் .

இரு பெண்களும் திரும்பிப் பார்க்க ஆனந்தபாலன் நின்றிருந்தான் .சும்மா அல்ல ..கைகளை மார்பில் கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் இறுதி இரண்டு ஓவர்களை பார்க்கும் கேலரி பார்வையாளனை போன்றதோர் பரபர முக பாவத்துடன் .

” டார்லிங் …இவளைப் பாருங்கள் ” செல்லச் சிணுங்கலுடன் கைகளை விரித்தபடி அவனை நோக்கிப் போய் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டாள் உஷாந்தி .சுடரொளி இருவரையும் கோபமாக பார்த்தபடி நின்றாள் .

ஆனந்தபாலன் தன் மேல் அப்பிக் கிடந்தவளின் தோளை ஆதரவாக தட்ட ,அவள் இன்னமும் அவனோடு ஒட்டிக் கொண்டு , சுடரொளி பக்கம் கைகளை வீசினாள் .

” அவளை வெளியே அனுப்புங்க டார்லிங் .எனக்கு அவளைப் பிடிக்கவில்லை .இனி அவளுக்கு நம் வீட்டில் இடம் கிடையாது .இங்கே இருக்க அவளுக்கு உரிமை கிடையாது ” கத்தினாள் .

கீச்மூச்சென்று கத்திக் கொண்டிருக்கும் உஷாந்தியை விட , அவளுக்கு ஆதரவு போல் அருகே நின்ற ஆனந்தபாலன் மேல் சுடரொளிக்கு அளவு கடந்த ஆத்திரம் பொங்க , இவனென்ன பெரிய சத்யசந்திரன் போல் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் ….




சுடரொளி வெகுண்டு வேகமாக இருவரின் அருகே சென்று , உஷாந்தியின் தோள் பற்றியிழுத்து இருவரையும் பிரித்தாள் .

” இதைச் சொல்ல உனக்கு என்ன உரிமையம்மா ? எனது உரிமையின் அளவைப் பார்க்கிறாயா ? ” கேட்டவள் ஆனந்தபாலனின் தோளணைத்து எக்கி , அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள் .

ஆனந்தபாலன் கண்களை இறுக மூடித் திறக்க ” உங்கள் மேல் எனக்கு உரிமையில்லையா ? ” கரகரத்த குரலில் அவன் கண்களை பார்த்து கேட்டுவிட்டு மறு கன்னத்திலும் இதழ் பதித்தாள் .

உஷாந்தி ஆத்திரத்துடன் அவளைப் பற்றி தள்ள வர , இந்த முறை அவள் கை பற்றி தடுத்தது ஆனந்தபாலன் .

” உன் எல்லையை தாண்டுகிறாய் உஷாந்தி ” விரலாட்டி எச்சரித்தான் .




What’s your Reaction?
+1
64
+1
33
+1
6
+1
1
+1
2
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!