Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே -8

8

 

” ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை ? ”

 

” எதை ? நான் உன்னைக் காதலிப்பதையா ? ”

கவியாழினி பற்களை நறநறத்தாள் .

 

” என்ன சொல்கிறீர்கள் ? ”

 

” ப்ரபோஸ் செய்கிறேன் ”

 




கடவுளே ! ப்ரபோஸ் செய்யும் இடத்தையும் , சூழலையும் பார் !கவியாழினி தலையிலடித்துக் கொண்டாள் .

 

மேடையின் பின் ஓரம் அலங்காரத்திற்காக சிகப்பு ரோஜாக்கள் சரங்களாக சுற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொய் தூணின் பின் ,பாதி மறைந்து நின்று கொண்டு இருவரும் வாதாடிக் கொண்டிருந்தனர் .

 

” கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் ”

 

” ஓ , நீ என்னைக் காதலித்ததை பற்றி சொன்னாயா ? ”

 

” எனக்கு காதலும் இல்லை கண்றாவியும் இல்லை ”

 

” நீ கண்றாவி இல்லை தெரியும் .ஆனால் காதல் இல்லை என்று சொல்லாதே ”

 

” சொல்லுவேன் .ஏனென்றால் என் மனம் முழுவதும் உங்கள் மேல் வெறுப்பு மட்டுமே இருக்கிறது .கண்டபடி கனவு காண வேண்டாம் ”

 

” வெறுப்பு …அது மாறிவிடும் .இனிமேல் இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பிப்போம் ”

 

” என்னால் முடியாது ”

 




” முடியும் .முடிய வேண்டும் ” மகிநந்தன் அழுத்தி சொல்ல அவளுள் ஒரு வகை வீம்பு தலை தூக்கியது .

 

” உங்கள்  முகத்தை பார்த்தாலே எனக்கு வெறுப்பு வருகிறது .நம் இருவருக்கிடையே காதல் என்பது எந்தக் காலமும் வராது .”

 

” பார்க்கலாமா ? ” மகிநந்தன் சவாலிட , தயங்காமல் சவாலை ஏற்றுக் கொண்டாள் அவள் .

 

சிறுவயதிலிருந்து அவளை ஜெயித்து வருகிறான் .இப்போதாவது தானே அவனை ஜெயிக்க வேண்டும் .நினைத்தவள் அடுத்த கணமே போய் நின்றது செல்வகணேஷ் – சித்ரா முன்பு .

 

மேடையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தவர்களின் அருகே போய் அமர்ந்து கொண்டவள் நலம் விசாரித்து விட்டு தனது படிப்பு விசயம் பேசி , உதவுமாறு கேட்டுக் கொண்டாள் .இறுக்கப்பட்ட இதழ்களின் பின்னே நறநறத்துக் கொண்டிருந்த சித்ராவின் பற்களை அவள் கண்டு கொள்ளவில்லை .

 

பின் அக்காவின் தோழிப் பெண்ணாக மேடையில் ஏறிக் கொண்டவளின் கண்கள் அக்கா மீது வாஞ்சையாக படிந்தன.கீழே எதிர் வரிசையில் அமர்ந்திருந்த அபிநந்தனை பார்த்தாள் .நல்ல கறுப்பு .மேல் வரிசை பற்களில் ஒன்று இடம் தவறி வெளியே லேசாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க ,அதனை மறைக்கவோ என்னவோ அடர்த்தியாக மீசை வளர்த்து வைத்திருந்தான் . படிப்பும் ஒரு டிகிரி மட்டுமே .முழுக்க விவசாயம் மட்டுமே பார்த்து வருகிறான் .

 

இதோ இங்கே இப்போதுதான் மலர்ந்து பனித்துளிகளுடன் தலையாட்டும் பன்னீர் ரோஜா போலிருக்கிறாளே அக்கா .இவர்கள் இருவருக்கும் எப்படி பொருந்தும் ? சற்று முன் இதைத்தான் அமிழ்தினியுடம் கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டாள் .




கறுப்பு ஒரு குறை இல்லையாம் .அவரின் பளபள கறுப்பு இவளுக்கு ரொம்ப பிடிக்குமாம் .அவளைப் பொறுத்த வரை இந்த உலகத்திலேயே அழகான ஆண்மகன் அவளது அபிதானாம் .சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

 

” நாம் இருவரும் தனியாக இருக்கும் போது மட்டும் பெயர் சொல்லிக்கோன்னு அவர் சொல்லியிருக்காரு .இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ” தொடர்ந்து கணவனின் அழைப்பு முறைகளைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்து விட்டாள் .

 

கவியாழினி முட்டாள் , மடச்சி , அறிவு கெட்டவளே என தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் .நிச்சய மாப்பிள்ளை யாரென்று தெரியாமல் இப்படியா பேக்கு மாதிரி இருப்பாய் ?

 

அப்படி அவள் இருந்ததற்கான காரணங்களை மனம் நியாயமாக வெளியே எடுத்து வைக்க தன்னையே தான் ஆராய்ந்தாள் .

 

முதல் காரணம் சிறு வயதில் , அந்த இரண்டுங் கெட்டான் பருவத்தில் மகிநந்தன் , அமிழ்தினி தோழமையை காதலென்று தவறாக நினைத்தது. அக்காவிற்கு நிச்சயதார்த்தம் என்றதுமே மணமகன் மகிநந்தனே என கண் மூடி நம்பியது , நந்தன் குடும்பத்துடன் சம்பந்தம் என தாய் , தந்தை சொன்னதை ஆராயாமல் விட்டது , அவள் அதிகம் சந்தித்திராத அபிநந்தனை மறந்தே போனது .

 

எனக்குத்தான் ஏகப்பட்ட மனக் குழப்பம் .அதனால் தவறாக நினைத்து விட்டேன் .இந்த மகிநந்தன் எல்லாம் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே என்னை ஏமாற்றியிருக்கிறான் .எந்நாளும் மகிநந்தனை மன்னிக்க கவியாழினி தயாரில்லை.

 

சூடாக அவனை இரண்டு கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்ற , கண்களை சுழற்றி அவனைத் தேடினாள் .மகிநந்தனை காணவில்லை .பயந்து போய் மண்டபத்தை விட்டு ஓடி விட்டானோ ? அல்ப சந்தோசத்துடன் அலசியவளின் விழிகளில் ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த மகிநந்தனும் , சதுரகிரியும் தென்பட்டனர் .

 

தந்தையின் நடையில் சிறு தடுமாற்றத்தைக் கண்டவள் , மெல்ல மேடையிறங்கி அந்த அறையை நோக்கிப் போனாள் .சன்னல் கண்ணாடிக் கதவுகள் பூட்டப்பட்டிருக்க ,சத்தம் எதுவும் வெளியே வரவில்லையென்றாலும் , இருவருக்கும் ஏதோ வாக்குவாதமென கண்ணாடி பிம்பம் சொல்லியது .

 

இவன் எதற்கு அப்பாவை மிரட்டுகிறான் ? கவியாழினி கதவை திறந்து உள்ளே போக முயல , அதே நேரம் மகிநந்தனும் வெளியே வந்தான் .தனது தோளை கதவு மேல் வைத்து அழுத்தி தள்ளி திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தவள் , திடுமென கதவு திறக்கவும் , திறந்த மகிநந்தனின் மார்பில் போய் விழுந்தாள் .

 




” கூல் பாப்பு .நான்தான் காதலிக்கலாமென்றுதானே சொல்லிக் கொண்டிருந்தேன் .அதற்குள் என்ன அவசரம் உனக்கு ? ”

 

மேலே விழுந்தவளை பற்றி விலக்காமல் தன்னோடு இழுத்துக் கொண்டு கொஞ்சல் குரலில் குலாவினான் அவன் .திடுமென பட்ட ஆண் ஸ்பரிசத்தில் தடுமாறி நின்றவளின் தலையை வருடியவன்…

 

” ஆர் யு ஓ.கே பாப்பி ? ” என்றான் .குரல் இன்னமும் குழைந்தது.

 

சிறு வயதில் லேசாக தொட்ட அவனது சிகையின் வாசமே இன்னமும் அவளை விரட்டிக் கொண்டிருக்க , இப்போது முகம் பதித்த மார்பின் வாசம் அவளை ஏதோ கிறக்கத்தில் ஆழ்த்தியது .கால்கள் துவள தடுமாறியவளின் தோளணைத்து நிறுத்தினான் .

 

” சரிதானே மாமா ? ” பின்னால் நின்றிருந்த சதுரகிரியிடம் கேட்க , அப்போதுதான் தந்தையின் நினைவு வந்து வேகமாக அவனிடமிருந்து கவியாழினி விலக , சதுரகிரி இளகலான முகத்துடன் அவர்களை கடந்து வெளியே போனார் .

 

கவியாழினி நன்றாக  நகர்ந்து தள்ளி நின்று கொண்டு மகிநந்தனை முறைத்தாள்.

” என்ன நடக்கிறது இங்கே ? ”

 

” எங்கள் இருவருக்குமிடையே ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ”

 

” உங்களுக்கு பணம் தர வேண்டுமா என் அப்பா ? நம்ப மாட்டேன் ”

 

” நான் அப்படி சொல்லவில்லையே . வாயேன் அங்கே போய் பிரச்சனை முடிகிறதாவென்று பார்க்கலாம் ” இயல்பாய் தன் கை கோர்க்க வந்தவனை உதறி மேடைக்கு நகர்ந்தாள் .

 

சதுரகிரி நவரத்தினத்திடம் பேசியபடி நின்றிருந்தார் .சுந்தரியும் ,தங்கபுஷ்பமும் அவர்களுடன் இணைந்து கொள்ள , இதென்ன நிச்சய நேரத்தில் மேடையோரம் கும்பலாக கூடிக் கொண்டு …? கவியாழினி அவர்களை குழப்பமாக பார்த்தாள் .ஏனோ அவள் மனது படபடவென அடித்துக் கொண்டது .

 




அமிழ்தினி அவள் கை பிடித்து தன்னருகே இழுத்தாள் .” சின்னப்பாப்பு என்னடி ஏதாவது பிரச்சனையா ? ” கலங்கி வடியத் தயாராக இருந்த அக்காவின் கண்களிலிருந்து இந்த நிச்சயம் அவளுக்கு எவ்வளவு முக்கியமென்பதை அறிந்தாள் கவியாழினி.

 

” நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்கும்தானே ? ” இவன்தான் ஏதோ தில்லுமுல்லு செய்கிறான் என்ற எண்ணம்தான் கவியாழினிக்கு .ஆனாலும் மகிநந்தனிடமே போய் நின்றாள் .

 

” ஒன்றுமில்லடா நிச்சயம் இரண்டு மடங்கு நன்றாக நடக்கும் பாரேன் ” சமாதானம் போல் அவன் பேசிய அதே நேரம் , நவரத்தினம் மேடையின் நடுவில் வந்து நின்றார் .

 

” என் மூத்த மகனின் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .இதே மேடையிலேயே எனது இரண்டாவது மகனின் நிச்சயத்தையும் சேர்த்து நடத்த முடிவு செய்துள்ளோம் .சதுரகிரி அண்ணனின் முதல் மகளை என் மூத்த மகனுக்கும் , இரண்டாவது மகளை எனது இரண்டாவது மகனுக்கும் இந்த மேடையில் நிச்சயம் செய்யப் போகிறோம் .அனைவரும் இருந்து மணமக்களை வாழ்த்தி விருந்துண்டு செல்லுமாறு  கேட்டுக் கொள்கிறேன் ” கை கூப்பி கேட்டுக் கொண்டார் .

 




தொடர்ந்து நிச்சய தட்டுக்கள் இரண்டாக்கப்பட்டு மாற்றப்பட , நிச்சய பத்திரிக்கையும் இரண்டாக வாசிக்கப்பட்டது .உறவினர்கள் , நண்பர்களென  கை பிடித்து வாழ்த்துக்கள் சொல்ல ,தன்னை சுற்றி என்ன நடக்கிறதென புரியாமல் உறைந்து நின்றாள் கவியாழினி .

 

What’s your Reaction?
+1
7
+1
4
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!