Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே -9

9

 

ஜில்லென்ற இளநீர்தான் . ஆனாலும் கவியாழினியின் உள்ளக் கொதிப்பை குறைக்கவில்லை அது .

 

” ஏய் கவி கங்கிராட்ஸ் பா .சொல்லவேயில்லை பார்த்தாயா ? மேடை வரைக்கும் ரகசியமாவே வச்சுக்கிட்டீங்களே ? ”

 

கவியாழினியின் பள்ளித் தோழி பவ்யா , வாழ்த்தும் சாக்கில் காலை வார , கவியாழினியின் மனம் பொருமியது .

 

அடிப்போடி ! எனக்கே என் நிச்சயதார்த்தம் தெரியாது .உனக்கெங்கே சொல்ல ? நினைத்தபடி வெளியே புன்னகைத்து வைத்தாள் .

 




” முதலிலேயே சொன்னால் அவள் கனவுக் கண்ணனை நீ தட்டிப் போய்விட்டால் என்ன செய்வது ? அதுதான் மறைத்துக் கொண்டாள் ” அனுபமாவின் பேச்சில் பொறாமை அப்பட்டமாகத் தெரிந்தது .

 

” யாரடி கனவுக் கண்ணன் ? ” எரிச்சலாக கேட்டாள் .

 

” உனக்கு மட்டும் இல்லைடி நம்ம ஊர் பொண்ணுங்க நிறையப் பேருக்கு அவர்தான் கனவுக்கண்ணன் தெரியுமா ? ”

 

கவியாழினிக்கு இந்தப் பேச்சு நாராசமாய் இருந்தது .சை…என்ன பொண்ணுங்க இவுங்க …அடுத்த ஆணைப் பற்றி இப்படியா வெட்கமில்லாமல் பேசுவார்கள் ? வழியில் பார்த்தவர்களை இளநீர் குடிக்க கூப்பிட்டது தவறோ ?

 

” ம் …நீயும் நானும் வருசம் வருசமாய் கண்ணனை கனவு கண்டு என்ன செய்ய ? இவளைப் போன்ற சாமர்த்தியம் நமக்கில்லையே ”

 

” ஏய் எதையாவது உளறாதீங்கடி .யாராவது கேட்டால் தப்பாக நினைக்க போகிறார்கள் ” தோழிகளை அதட்டியவளை வெறித்தாள் அனுபமா .

 

” நாம் எல்லோரும் சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவங்கதான் .நம் வயதுப் பெண்கள் எல்லோருக்குமே மகிநந்தன் மேல் ஒரு க்ரஷ் உண்டு .ஏதாவது காரணம் சொல்லி அவர் பின்னால் போய் கொண்டிருப்போம்.அப்படி தொடர்ந்து பார்த்துட்டே இருந்தால் ஆள் மேலிருக்கும் கவர்ச்சி போய்விடும்னுதானே இடையில் கொஞ்ச நாட்கள் காணாமல் போனாய் .”

 




” ஆமாம் சரியான வயதில் ஊரை விட்டுப் போய் , இப்போது கல்யாண வயதில் அழகாக திரும்பி வந்து ,நான்கு நாட்கள் அவருடனேயே கை கோர்த்து சுற்றி  அப்படியே மகிநந்தனை முந்தானைக்குள் முடிந்து கொண்டாயே ! ”

 

கவியாழினி அயர்ந்து போனாள்.அவர்களது திடீர் நிச்சயதார்த்தம் இப்படியா ஊருக்குள்  பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது ? நான் மகிநந்தனை விரும்பவில்லை , என் சம்மதம் இல்லாமல் நடந்த நிச்சயதார்த்தம் இது …என்று சூடம்  அணைத்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் போல் தோன்றியது .

 

கவியாழினியின் கோபம் காரணகர்த்தாவான  மகிநந்தன் மேல் திரும்பியது .இவன் காதல் …கண்றாவி என்று ஏதேதோ பேசி , என் அக்காவை முன் வைத்து , என்னை பெற்றவர்களை ஏமாற்றி இந்த நிச்சயதார்த்தத்தை நடத்தி விட்டு ,இப்படி இவர்களிடமெல்லாம் பேச்சு வாங்க வைத்துவிட்டானே !

 

” என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையே ஏமாற்றிவிட்டீர்கள் ” நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தை எடுத்துக் கொண்டு வந்தவனிடம் குறைந்த குரலில் சீறினாள் .

 

” உன் குடும்பத்தை சரி .உன்னை என்னம்மா ஏமாற்றினேன் ? ” இவளிடம் முணுமுணுப்பாய் கேட்டுவிட்டு ” இதைப் பாருங்கள் …” மணமக்களின் வித வித போட்டோக்களை மாத காலண்டராக உருவாக்கியிருந்ததை எடுத்து எல்லோருக்கும் காட்டினான் .

 

” வாவ் …அமேசிங் …சூப்பர் …” என ஆளாளுக்கு அந்தக் காலண்டரில் பார்வை பதித்திருக்க மகிநந்தனின் புருவம் இவளிடம் கேள்வியாய் சுருங்கியது .

 

” அப்போ என் குடும்பத்தை ஏமாற்றியிருக்கிறீர்கள் ? ”

 




” ஓவ்…உனக்கே தெரியாதா ? நானாகத்தான் உளறிவிட்டேனா ? ஓட்டை வாய்டா மகி உனக்கு ” பிறர் அறியாமல் தன் நெஞ்சை ஆட்காட்டி விரலால் குத்திக் கொண்ட மகிநந்தனால் சிரிப்பு வர , அதை வெளிக்காட்டாமல் அடக்கினாள் .

 

” பேச்சை மாற்றாதீர்கள் .பதில் சொல்லுங்கள் .”

 

” சொல்கிறேன் ” மகிநந்தன் அவளருகே அமர்ந்து குரல் குறைத்து குனிய ,

 

” நோ…இதற்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் .இந்த அநியாயத்தை கேட்க இங்கே யாருமே இல்லையா ? ” அமிழ்தினி குரலை உயர்த்தினாள் .

 

” என்ன பெரிய பாப்பு ? ” ஆளாளுக்கு கேட்க அமிழ்தினியின் கீழுதடு பிதுங்கியது .கண்களில் பொறாமை அப்பட்டமாக தெரிந்தது .

 

” இத்தனை பேர் இருக்குமிடத்தில் இவர்கள் இரண்டு பேர் மட்டும் இப்படி இருப்பார்களா ? ” அருகருகே உரசிக் கொண்டிருந்த தோள்களை காட்டினாள் .

 

” உன் அக்காவிற்கு அவள் ஆள் நினைவு வந்துவிட்டது ” சொல்லிவிட்டு எழுந்து நின்று கொண்டான் மகிநந்தன் .

 

” இப்போ ஓ.கேவா அமிழ்து ? ”

 

” ம்க்கும் …எல்லா உரசலையும் முடிச்சுட்டு இப்போ ஷோ காட்டியாகிறது ? அடச்சீ உட்காரு ” இன்னமும் அமிழ்தினி எரிச்சல் குறையவில்லை .

 




” அண்ணன் நேற்று திருச்சி ஜவுளிக்கடைக்கு போனார் தெரியுமா ? ”

 

” அப்படியா …? யாருக்கு டிரஸ் வாங்கினார் ? ” அமிழ்தினியிடம் எரிச்சல் குறைந்திருந்தது.

 

” யாருக்கு தெரியும் ? என் பர்சனல் நீ வராதேடான்னுட்டார் .அப்படி என்ன பர்சனலோ ? ”

 

” அது …நான்தான் ஒண்ணு கேட்டேன் .அதுக்காகத்தான்னு நினைக்கிறேன் ” திடுமென ரோஸ் பட்டராக ஜொலிக்கும் தமக்கையின் முகத்தை ஆச்சரியமாக பார்த்து நின்றாள் கவியாழினி .தொடர்ந்து அவள் போட்டோ ஆல்பத்திற்குள் தன்னை புதைத்துக் கொள்வதை …பிறரறியாமல் தன்னவனை நுனி விரலால் வருடிப் பார்ப்பதை அயர்ந்து போய் பார்த்தாள் .

 

இது என்ன திடீர் மாற்றம் ?

 

” அதுதான் காதல் ” கிசுகிசுத்து மகிநந்தன் பேசிய விதம் அவள் கழுத்து முடிகளை எழுந்து நிற்க வைக்க ,அநிச்சையாக கழுத்தை தடவி விட்டபடி …

 

” நீங்க சொன்னது நிஜமா ? ” என்றாள் .

 

” அபி திருச்சிக்கு போனது நிஜம்தான் .ஆனால் மாடுகளுக்கு புண்ணாக்கு வாங்கப் போனான் . அமிழ்துவோட ஆசைப்படி முகூர்த்த புடவையில் மணமக்கள் பெயரை பதித்து வாங்கி வந்தது நான்தான் ”

 

கவியாழினி பரவசம் நிறைந்த முகத்தோடிருந்த அக்காவை பார்த்தாள் . இவள் ஏமாற்றப்படுகிறாள் …அதனை அறிவாளா ?

 

” நீங்கள் தப்பு செய்கிறீர்கள் . இதெல்லாம் காதலர்கள் அந்தரங்கம் .இதில் நீங்கள் எப்படி தலையிடலாம் ? ”

 

” அபிக்கு வேலை அதிகம் பாப்பு .அதனால்தான் …”

 

” எந்த சமாதானத்தையும் நான் ஒத்துக் கொள்ளமாட்டேன் .நீங்கள் உங்கள் எல்லையைத் தாண்டுகிறீர்கள் ”

 




கவியாழினியின் குரல் சற்று உயர்ந்து விட்டது போலும் .” என்னடா சின்னப்பாப்பு ஏதும் பிரச்சனையா ? ” என வந்து நின்றார் சதுரகிரி .

 

கவியாழினி திருதிருவென விழித்தாள் .அப்பா …இவரிடம் என்ன சொல்வது ? சதுரகிரி மகளின் முகத்தை ஆராய்தலாய் பார்த்துக் கொண்டிருந்தார் .

 

” ஆமாம் மாமா உங்கள் மகள் பிரச்சனை பண்ணுகிறாள் ” எளிதாக போட்டுக் கொடுத்தான் மகிநந்தன் .

 

” என்னடாம்மா எதுவும் அதிருப்தியா உனக்கு ? ”

 

அருகே அமர வந்த அப்பாவின் அருகாமையை தவிர்த்து எழுந்து நின்று கொண்டு , எதிர்புற சுவற்றில் பார்வையை பதித்துக் கொண்டாள் .

 

” அதெல்லாம் ஒன்றுமில்லை ” முணுமுணுத்தாள் .

 

” அடுத்த மாதம் வரை ஏன் கல்யாணத்தை தள்ளிப் போட வேண்டும் ? அடுத்த வாரமே வைக்க வேண்டியதுதானேன்னு அடம் பிடிக்கிறாள் மாமா உங்கள் மகள் ”

 

மகிநந்தன் கூசாமல் புழுக , கவியாழினி அதிர்ந்தாள் .இதென்ன கொடுமை …அவள் ஆதரவிற்காக அக்காவை பார்க்க , அமிழ்தினியின் முகத்தில் கார்த்திகை தீபங்கள் .

 

” இது நல்ல ஐடியாதானேப்பா ? ” அப்பாவை கெஞ்சுதலாகப் பார்த்தாளவள் .

 

சதுரகிரி பொறு என்பதாக பெரிய மகளுக்கு கையசைத்து விட்டு ” சின்னப்பாப்பு நீ சொல்லுடா ” என்றார் .

 

எதைக் கேட்கிறார் ? கவியாழினி விழிக்க , ” உன் கல்யாண விசயத்தை கேட்கிறார் .அடுத்த மாதமா ? அடுத்த வாரமா ? உன் அப்பா முகம் பார்த்து பேசு பாப்பு ” மகிநந்தன் அவள் முகத்தை தந்தையை நோக்கி திருப்ப , கவியாழினி அங்கிருந்து நகரத் துவங்கினாள் .

 

” இதெல்லாம் எனக்கென்ன  தெரியும் ? நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள் ” விடுவிடுவென மாடியேறி போய்விட்டாள்.

 

” அப்போ அடுத்த வார முகூர்த்தத்தையே பிக்ஸ் பண்ணி விடலாமா மாமா ? ” மகிநந்தன் புருவம் உயர்த்தி கேட்க , சதுரகிரி தடுமாறி விழித்தார் .

 

” அதெல்லாம் பண்ணிடலாம் .ஏற்கெனவே கல்யாண நகைகள் ,துணிமணிகளெல்லாம் வாங்கியாச்சு .கல்யாணமண்டபம் நம்ம மண்டபமே ப்ரீயாகத்தான் இருக்கு .பத்திரிக்கை அடிப்பது , கொடுப்பதுதான் வேலை .இதற்கு ஒரு வாரம் போதாதா ? ” தங்கபுஷ்பம் சொல்ல, அமிழ்தினி அவரை கட்டிக் கொண்டாள் .

 




” சூப்பர் பாட்டி .சரிதானேப்பா ? ”

 

சதுரகிரி தலையசைத்தார் .அன்றிலிருந்து எட்டாவது நாள் அபிநந்தன் – அமிழ்தினி , மகிநந்தன் – கவியாழினி திருமணம் இனிதாக நடந்து முடிந்தது .

 

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!