Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே -7

7

 

பில்டர்  காப்பி பொடியின் நிறத்தில் ஆங்காங்கே தங்கப் புள்ளிகள் சிதறிய காஞ்சிபுர பட்டு உடை  இடுப்பின் கீழ் பகுதியில் பம்மென விரிந்திருக்க , இடையின் மேல் பகுதி பனாரஸ் பட்டில் அழுத்தமான ஆரஞ்சு நிறத்துடன் முகலாய வடிவமைப்பிலான  பூ , இலைகளை தாங்கி மினுங்கிக் கொண்டிருந்தது.முழங்கை வரை நீண்டிருந்த கை பகுதி காப்பியும் , ஆரஞ்சும் கலந்து ஒரு வகை பொன்னிறத்தில் இருக்க அதில் ஆங்காங்கே வெண்ணிற கற்கள் மின்னின.

 

அணிந்த உடனேயே கவியாழினியின் உடம்போடு மிக விருப்பமாக இந்த முழு நீள கவுன் ஒட்டிக் கொள்ள , சட்டென தன்னை ராஜகுமாரியாக உணர்ந்தாள் அவள் .என்ன அழகான உடை ! ஆசையாக வருடினாள் . தன் பெரிய மகளின் நிச்சயதார்த்தத்திற்கு சின்ன மகளுக்கு சதுரகிரி எடுத்து வந்த உடை இது .

 

அக்காவின் நிச்சயதார்த்தத்தில் தன் உடை  குறித்து கவியாழினி வேறு திட்டம் வைத்திருந்ததால் , தந்தை கொணர்ந்த உடையை சும்மா அணிந்து பார்த்து விட்டு கழற்றி விட எண்ணினாள் .ஆனால் இப்போதோ கழற்றும் எண்ணமின்றி கண்ணாடியில் பார்த்தபடி நின்றிருந்தாள் .




 

” வாவ் என்ன அழகான டிரஸ் ! ” அறைக்குள் வந்த அமிழ்தினி விழிகளை விரித்தாள் .” அப்பா எனக்கும் இதே போல் ஒன்று எடுத்திருக்கலாமே ? ” குறைபட்டாள் .

 

” ஏய் நீ கல்யாணபெண்ணடி .உன் நிச்சயத்தன்று இப்படி கவுன் மாட்டிக் கொண்டா நிற்பாய் ? ” சுந்தரி அதட்டிவிட்டு ” ஆரம்பிங்கம்மா ” என அழகுநிலைய பெண்களிடம் சொல்லிவிட்டு போனாள்

 

தங்கையின் உடையை விட்டு கண்ணெடுக்காமல் அலங்காரத்திற்கு அமர்ந்தாள் அமிழ்தினி.

 

” உங்களுக்கும் அலங்காரம் பண்ண வேண்டும் மேடம் .உட்காருங்கள் ” அழகு நிலையப் பெண் கவியாழினியையும் இழுத்து அமர்த்த திகைத்தாள் .

 

” எனக்கெதற்கு ? அக்காவை பாருங்கள் ”

 

” இல்லை மேடம் அலங்காரத்திற்கு  உங்களுக்கும் சேர்த்துதான் பணம் பேசியிருக்கிறார்கள் ”

 

” ஓ…ஆனால் எனக்கு இதில் விருப்பம் இல்லை .நீங்கள் மணப்பெண்ணிற்கு மட்டும் செய்யுங்களேன் ”

 

” ஏன் மேடம் எங்கள் வருமானத்தை குறைக்கிறீர்கள் ? நான் நன்றாகவே அலங்காரம் செய்வேன் .” அந்த ஒப்பனை பெண்ணின் முகம் வாட கவியாழினி அலங்காரத்திற்கு அமர்ந்து விட்டாள் .

 




இமைகள் , கண்கள் , இதழ்களென தகுந்த வகையில் அலங்கரித்து , தலைக்கு வாட்டர் பால்ஸ் ஹேர்ஸ்டைலுடன் முடித்ததும் , எழுந்து நின்று தன்னைக் கண்ணாடியில் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை .

 

நான்தானா இது ? ஆச்சரியமாய் நின்று கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் அமிழ்தினி .

 

” சின்னப்பாப்பு ரொம்ப அழகாக இருக்கிறாயடி ”

 

பேபி பிங்க் நிற உயர்ரக பட்டில் மணப்பெண் அலங்காரத்துடன் மிக அழகாக இருந்த தமக்கை தன்னை அழகென்றதும் கவியாழினிக்கு உண்மையாகவே பெருமிதமாக இருந்தது. அரைத்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் அக்காவை விட மாநிறமாக இருக்கும் தான் அழகற்றவளென்ற எண்ணம்தான் அவளுக்கு எப்போதும் இருக்கும் .இப்போதோ நானும் அழகுதான் என தலை நிமிர்த்திக் கொண்டாள் .

 

நிமிர்ந்த தலையுடன் மணமகள் அறையிலிருந்து மேடைக்கு வந்தவளின் பார்வையில் முதலில் பட்டது எதிரிலிருந்த மணமகன் அறைக்குள்ளிருந்து வந்த மகிநந்தனே.அன்று உற்சாக சீழ்கையுடன் காணாமல் போனவன் , இதோ இன்றுதான் கண்ணில் படுகிறான் .அவனுக்கு நிறைய வேலையென்ற பேச்சு சில நேரம் அவள் காதுகளில் விழுந்தது .

 

ஆனால் சில வெளியிடங்களில் அவன் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தான் வேறொரு பெண்ணுடன் .ஆம் , யாரோ ஒரு வெளிநாட்டு இளம் பெண்ணுடன் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தான் மகிநந்தன். ஷாப்பிங்கிற்காக வெளியே செல்லும் போது , ஓரிரண்டு தடவைகள் பைக்கில் , காரில் என அந்தப் பெண்ணுடன் தென்பட்டான் .அருகிலிருந்த அம்மா அல்லது அக்காவிடம் காட்டுவதற்குள் கடந்து விடுவான் .

 

இவனென்ன பத்து நாட்களில் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் ? கவியாழினி அவன் மேலிருக்கும் அதிருப்தியை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டாள் .அதற்கு மிக உறுதுணையாக இருந்தான் மகிநந்தன் .

 

இதோ இங்கேயும் அவனது அந்த புது தோழியை அழைத்து வந்திருந்தான் .தமிழ்நாட்டு பெண் போல் காஞ்சிபுர பட்டுடுத்தி , பொன் வண்ணக் கூந்தல் பின்னி மல்லிகைச் சரம் வைத்துக் கொண்டு , நிச்சய ஏற்பாடுகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண் .

 




இவளைக் காட்டி நிச்சயத்தை நிறுத்தினால் என்ன ? கவியாழினி யோசித்து நின்றாள் .

 

” வாவ் …ஃபேரி டேல்ஸ் தேவதைகளில் ஒன்று வழி தவறி இங்கே வந்து விட்டதா என்ன ? ” மகிநந்தனின் கண்களில் நட்சத்திரங்கள் மின்னியது .இரு கைகளையும் விரித்தபடி அவன் வந்த வேகத்திற்கு நிச்சயம் அவன் தன்னை அணைக்கப் போகிறான் என்றே நினைத்தாள் கவியாழினி. வேகமாக பக்கவாட்டிற்கு நகர்ந்து கொண்டு அவனை முறைத்தாள்.

 

” ரொம்ப அழகாக இருக்கிறாய் சின்னப்பாப்பு .இந்த டிரஸ் நான் எதிர்பார்த்ததை விட உனக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறது ”

 

முகத்திற்கு நேரான அவனது பாராட்டில் முதலில் முகம் சிவந்து நின்றவள் , அடுத்த அவனது வார்த்தைகளில் திகைத்தாள் .

 

” டேய் பொண்ணுக்கு போட வேண்டிய வைர நெக்லஸ் உன்னிடம்தானே இருக்கிறது ? ” கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார் மகிநந்தனின் அம்மா நவரத்தினம் .

 

” ஆமாம் அம்மா .இங்கே பாருங்களேன் சின்னப்பாப்பு அலங்காரத்தை ”

 

” ம் …” நவரத்தினம் அவளை ஏற இறங்க பார்த்து தலையாட்டிக் கொண்டார் .” அக்கா அளவு இல்லையென்றாலும் பரவாயில்லைதான் .நீ சொன்ன மாதிரி இந்தக் கலர் இவளை கொஞ்சம் நிறமாகத்தான் காட்டுகிறது .உன் அலங்கார பெண்ணும் திறமையாக செயல்பட்டிருக்கிறாள் போலும் .நிறையவே தேறிவிட்டாள் இவள் ”

 

கவியாழினிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி .அப்பா எடுத்ததாக அம்மா இவளிடம் சேர்ப்பித்த இந்த உடை இவர்கள்  தேர்ந்தெடுத்ததா ? அழகு படுத்திக் கொள்ளவே கூடாதென்ற இவளது உறுதியை உளைத்ததும் இவன்தானா ? ஜீன்ஸ் , லூஸ்கேர் என்ற தனது முடிவை கலைக்க மகிநந்தன் செய்த சூழ்ச்சி இதுவென உணர்ந்தவளின் மனதுள் தங்கள் தேர்ந்தெடுப்பை மெச்சியபடி நின்றிருந்த அம்மா , மகன் மேல் மிகுந்த வெறுப்பு வந்தது.

 

” ஆமாம் …அதென்ன புள்ள திடீர்னு சொல்லாமக் கொள்ளாம  ஊரை விட்டு ஓடிப் போயிட்ட ? ” நவரத்தினம் முகவாயில் கை வைத்து கேட்க , கவியாழினியின் வாய் கட்டுப்பாட்டை மீறி திறந்து கொண்டது .




” ஹலோ மேடம் என்ன உங்கள் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே போகிறீர்கள் ? என்னைப் பார்த்தால் ஓடிப் போகிறவள் மாதிரியா தெரிகிறது ? ”

 

” இப்போ அப்படி தெரியலை .நல்லா ஜிகு ஜிகுன்னு சைனா பொம்மை மாதிரிதான் இருக்க . முன்னெல்லாம் எண்ணெய் சார்த்திய கருமாரியம்மன் சிலையாட்டம் இருப்ப , உன்னை மாத்தினது  என் பையன்தானே ? அவன் நினைச்சதை சாதிக்கிறவன் .உன் விசயத்திலும் சாதிப்பான் ”

 

” இங்கே பாருங்க அவ்வளவுதான் உங்களுக்கு …உங்க மகன் புகழ் பாடுறதெல்லாம் என்கிட்ட வேண்டாம் .பிள்ளையா பெத்து வச்சிருக்கீங்க ? சரியான ரவுடி .எங்கேயாவது அக்காவை நிச்சயம் பண்ண வந்துவிட்டு ….”

 

மகிநந்தன் அவசரமாக அவர்கள் இருவருக்குமிடையே நுழைந்தான் .” அம்மா நீங்க உள்ளே போங்க .இவளை நான் பார்த்துக் கொள்கிறேன் . சின்னப்பாப்பு நீயும் உள்ளே போ ”

 

நான் ஏன் போகவேண்டும் ? இரு பெண்களுமே எகிற ,”  அப்போ நான் போய் விடவா ? ” மகிநந்தன் கோபப்பட , நவரத்தினம் அவளை முறைத்தபடி அறைக்குள் போக , மகிநந்தன் அவள் கையை பற்றி இழுத்து மேடை அலங்காரத்தின் ஓரமாக சற்றே மறைவான இடத்திற்கு இழுத்துப் போனான் .

 

போன அடுத்த நொடியே நச் நச்சென இரண்டு கொட்டு அவள் உச்சந்தலையில் .” முட்டாள் உன் மடத்தன நினைப்பை அம்மாவிடம் உளற பார்த்தாயே ? அவர்கள் மனம் வருந்த மாட்டார்களா ? ”

 

” உங்கள் அம்மா வருத்தப்பட்டால் எனக்கு என்ன ? மகனின் பொறுக்கித்தனத்தை அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே ”

 

” ஏய் இங்கே வாடி ” அவள் கை பிடித்து மணமகன் அறைக்கு இழுத்தான் .

 




” டி யா ? நான் டா சொல்லவா ?” கேட்டபடி அவனுடன் இழுபட்டு அறைக்குள் வந்தவளை …

 

” வாம்மா நன்றாயிருக்கிறாயா ? ” என வரவேற்றவன் அபிநந்தன் .மகிநந்தனின் அண்ணன் .மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்தவனும் அவனே .

 

What’s your Reaction?
+1
8
+1
5
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!