Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே -6

6

 

” எனக்கு இந்த பொட்லி பட்டன் மாடல் ப்ளவுஸ் ரொம்ப பிடித்திருக்கிறது பெரிய பாப்பு ” கவியாழினி அந்த ப்ளவுஸ் டிசைனை வருடியபடி சொன்னாள் .டென்னிஸ் காலர் வைத்து முதுகுப்பகுதியில் வரிசையாக பட்டன் வைத்தது போன்ற தோற்றத்தில் மிக அழகாகவே இருந்தது அந்த ப்ளவுஸ் .

 

” ம்ஹூம் …எனக்குப் பிடிக்கலை .இதெல்லாம் பட்டுசேலைக்கு மேட்ச் ஆகாதுடி .எனக்கு இந்த நாட்நெட் டிசைன்தான் பிடித்திருக்கிறது ” அமிழ்தினி காட்டிய மாடல் கீழிறங்கிய முதுகுப்பகுதியின் இறுதியில் இரண்டு முடிச்சு போட்டாற் போன்ற தோற்றத்தில் இருந்தது.

 

” ஐய்யே இது மட்டும் பட்டுச்சேலைக்கு மேட்சாக்கும் ? ”

 

” நீங்க இரண்டு பேர் சொல்வதும் சரிதான் மேடம் .இரண்டு ஜாக்கெட்டுகளுமே பட்டுச்சேலைக்கு உகந்ததல்ல. வேறு டிசைன் பாருங்கள் ” அந்த தையல்கார பெண்மணி புன்னகையோடு கூறினார் .

 




ஹை நெக் ப்ளவுஸ் , ஷீர் பேக் ப்ளவுஸ் , பெப்லம் ப்ளவுஸ் , ஜூவல் நெக் ப்ளவுஸ் என பலவற்றையும் அலசி மீண்டும் தங்களது முதல் விருப்பத்திலேயே வந்து நின்றனர் அக்காவும் , தங்கையும் .

 

” பொட்லி பட்டன் மாடல் குர்திகளுக்குத்தான் நன்றாக பொருந்தும் மேடம் .இல்லையென்றால் டிசைனர் சாரிகளுக்கு அணியலாம் .பட்டுசேலைக்கு அதுவும் மணப்பெண்ணிற்கு நிச்சயம் பொருந்தாது .நாட்நெட் மாடல் பற்றி யோசித்துக்கோங்க .மாப்பிள்ளை வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா ? ”

 

கிட்டதட்ட பாதி முதுகு  வரை இறங்கி இறுதியில் மெலிதான இரு முடிச்சு மட்டுமே இருந்த அந்த மாடலை அப்போதுதான் உணர்ந்து ஐய்யோவென வாய் மூடிக் கொண்டாள் அமிழ்தினி .

 

” ம்ஹூம் இது வேண்டாம் .அத்தைக்கு பிடிக்காது ? ”

 

” எந்த அத்தைக்கு ? ” கவியாழினி எரிச்சலாக கேட்டாள் .

 

” நந்துவோட அம்மாவுக்குத்தான்டி .அவுங்க கொஞ்சம் பழங்காலம் .இந்த மாதிரி மாடலுக்கெல்லாம் சத்தம் போடுவாங்க .எனக்கு ரவுண்ட் நெக் ப்ளவுசே  தச்சிடுங்க அக்கா ”

 

” அக்கா …யாரோ ஒரு அத்தைக்காக உன் விருப்பத்தை நீ ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் .நாட்நெட் மாடலே செலக்ட் பண்ணலாங்கா.அதில் ஆரி ஒர்க்கும் , பியர்ல்ஸ் டிசைனும் போட்டோம்னா க்ராண்டா இருக்கும் .அப்படியே தச்சிடுங்க அக்கா ”

 




” ஏய் அவுங்க யாரோ ஒரு அத்தை இல்லைடி .என் மாமியார் .அவுங்க மனசு கோணாமல் நடந்துக்க வேண்டியது என் கடமை .” கவியாழினிக்கு அப்படியே  தாய் சுந்தரியை அமிழ்தினியில் பார்த்தாற் போலிருந்தது.

 

அம்மா இப்படியா ஒரு மண்புழுவை உருவாக்கி வைத்திருப்பீர்கள் ? மனதிற்குள் தாயிடம் சண்டையிட்டபடி தமக்கையை நிமிர்த்தி நிற்க வைக்க முனைந்தாள் .அமிழ்தினியோ குனிந்தேதான் இருப்பேனென அடம் பிடித்தாள் .

 

” பெரிய பாப்பு உனக்கு அழகான உடலமைப்பு .அதனை இன்னமும் அழகாக காட்ட இது போன்ற மாடர்ன் உடைகளை அணிய விரும்புகிறாய் .அடுத்தவர்களுக்காக ஏன் அந்த ஆதி கால ரவுண்ட் நெக் மாடலுக்கே போக நினைக்கிறாய் ? ”

 

”  சின்ன பாப்பு …அது…வந்து…” ஆசைக்கும் , அடக்கத்திற்குமிடையே அல்லாடியபடி அமிழ்தினி நின்றிருந்த போது …

 

” என்ன பிரச்சனை ? ” என அங்கே வந்து நின்றவன் மகிநந்தன்.

 

இவன் …இங்கேயுமா …சுற்றிலும் பத்து தையல்மிஷின்களில் தைத்தபடி பெண்கள் இருக்க ,தைத்த ஜாக்கெட்களை போட்டுப் பார்த்து திருத்த என இருக்கும் இரு அறை வாயில்களிலும் ஐந்தாறு பெண்கள் நின்றிருந்தனர .பெண்களுக்கு மட்டுமேயென இருக்கும் இந்த இடத்தில் இவனுக்கென்ன வேலை ?

 

வெளியே போவென தையல் பெண்மணி சொல்லும் நேரத்தை எதிர்பார்த்து கவியாழினி காத்திருக்க  , அவள் மரியாதையாக எழுந்து நின்றாள் .

 

” வாங்க சார் .உட்காருங்க ” அவனுக்கு உட்கார காட்டப்பட்ட இடம் அந்தப் பெண்மணியின் முதலாளி நாற்காலி .இவன் என்ன இப்படி எல்லோரையும் கைக்குள் வைத்திருக்கிறான் ? கவியாழினி விழித்துக் கொண்டிருக்கையிலேயே , இருபதுக்கு இருபது கொண்ட அந்த சிறிய ஹாலின் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அரசனின் தோரணையுடன் அமர்ந்தான் அவன் .

 




” நல்லாயிருக்கீங்களா கலா அக்கா ? இங்கே என்ன பிரச்சனை ? ” குசலம் விசாரித்து விட்டு விபரம் கேட்டவனுக்கு ஒன்றுமில்லை என்ற பதிலை தரவே கவியாழினி விரும்பினாள் .ஆனால் மற்ற இரு பெண்களுக்கும் அந்த விருப்பம் இல்லை .

 

இருவருமாக பிரச்சனையை மாற்றி மாற்றி விளக்கி டிசைன்களையும் அவன் முன் வைத்தனர் .கை தேர்ந்த தையல் கலைஞன் போல் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனை ஓங்கிக் கொட்டும் ஆசை வந்தது கவியாழினிக்கு .கையை மடக்கி அடக்கிக் கொண்டாள் .

 

” இதோ இந்த பேக் நெட் மாடல் டிசைன் பாருங்கள் .இதில் லோ பேக் கீழ் மாடர்ன் நாட் வைத்து  , மேலே முதுகு புறம் முழுவதும் நெட் சேர்த்து , நெட்டின் மேல் டெம்பிள் டிசைன் போல் தேர் , யானை , குடை போல் எம்பிராய்டரி போட்டுக் கொள்ளலாம் .எப்படி ? ”

 

” சூப்பர் ” குதூகலித்தனர் இரு பெண்களும் .

 

” என் விருப்பம் போல் லோ பேக் ப்ளஸ் நாட் .பார்க்க உறுத்தலில்லாமல் முதுகிற்கு நெட் ” அமிழ்தினி சொல்ல ,” மாடர்ன் டிசைனோடு  மணப்பெண்ணிற்கான டெம்பிள் அலங்காரமும் . ஒரு புது டிசைனையே உருவாக்கி விட்டீர்கள் .கிரேட் சார் ” கலா பாராட்டினாள் .

 

இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிகிறது ? பெண்கள் மனதை படிக்கும் வித்தை அறிந்தவனோ ? ஆனால் இவன் வித்தை என்னிடம் செல்லாது.கவியாழினிக்கு எரிச்சல் மண்டியது.

 

” சின்னபாப்பு நீ ப்ளவுஸ் டிசைன் பார்க்கவில்லையா ? ” மகிநந்தன் கவியாழினியை கேட்க அவள் முகம் திருப்பிக் கொண்டாள் . ” நான் நிச்சயத்தன்று சேலையே கட்டிக் கொள்ளப் போவதில்லை ”

 

” ஐயோ அப்போ நான் உனக்காக

கஷ்டப்பட்டு  செலக்ட் செய்த சேலை ? ”

 




” அதை தூக்கி ஒரமாக போட்டு விட்டேன் ” சொன்னதும் கவியாழினிக்கு பரம திருப்தி .

 

அவளுக்கு பொருத்தமாக இருக்குமென மகிநந்தன் செலக்ட் செய்ததாக அவளிடம் காட்டப்பட்ட போச்சம்பள்ளி இக்கத் பட்டுப்புடவையை அப்படித்தான் ஓரம் கட்டி வைத்திருந்தாள் .அதென்ன எல்லோரும் இவனுக்கே தலையாட்டுவது ?

 

” அப்போது நீ நிச்சயத்தன்று சுடிதாரா ? ”

 

” இல்லை ஜீன்ஸ் ” சொல்லிவிட்டு முகத்தை கோணலாக்கிக் கொண்டாள் .அப்படி மாடர்னாக இருந்தால் இவன் அம்மாவிற்கு பிடிக்காதுதானே ? ஜீன்ஸ் , லூஸ் கேர் என தன் அலங்காரத்தை அப்போதே தீர்மானித்தும் கொண்டாள் .

 

” உங்களுக்கு வேலை என்று எதுவும் கிடையாதா ? எந்நேரமும் எங்கள் வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே ? ”

 

” இல்லையே பாப்பு .வேலை வெட்டியற்ற தண்டச்சோறு நான் .இப்படி உங்களுடனெல்லாம் ஊர் சுற்றுவதால்தான் எனக்கு கொஞ்சம் பொழுது போகிறது ” முகத்தை சோகமாக்கிக் கொண்டான் .

 

” ஏன் நன்றாக படிப்பீர்களே ? என்ன படித்தீர்கள் ? வேலை கிடைக்கவில்லையா ? ” தனை மீறி படபடத்தாள் .

 

மகிநந்தனின் குடும்பம் பூர்வீக விவசாயக் குடும்பம் . ஏக்கர் கணக்கில் அவர்களுக்கு நிலம் உண்டு .அந்த வட்டாரத்தில் அவர்கள் நிலங்களுக்கு பொன் விளையும் பூமி என்ற பெயர்  .நெல் வயல்களும் , தோப்பு , துரவுகளும் , வற்றாத கிணறுகளும் அவர்களுக்கு நிறைய இருந்தன .இவ்வளவு பெரிய நிலக்கிழார் வேலையற்ற தண்டச்சோறென சொல்வதா ?

 

கவியாழினியின் படபடப்பை வாஞ்சையுடன் பார்த்தவன் , ” எனக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை பாப்பு .நான் தொழில் பார்க்கிறேன் ” என்றான் .

 

தண்டச்சோறென என்னை ஏய்த்திருக்கிறான் .இது புரியாமல் நான் அவனுக்கு பரிந்து போய் …ய்ய்…

 




” நீங்க என்ன செய்தால் எனக்கென்ன ? அந்த உங்கள் தொழிலை பார்க்காமல் எங்களையே ஏன் சுற்றி வருகிறீர்கள் என்பதே என் கேள்வி ”

 

” ஏய் என்னடி நந்து நம் வீட்டிற்கு வருவதற்கு காரணம் வேண்டுமா ? நீங்க வாங்க நந்து .” அமிழ்தினி அவன் கை பிடித்து இழுத்து நடக்க , தன் முன் இணைந்தாடிய அவர்கள் கைகளை வெறித்தபடி தொடர்ந்தாள் .

 

” எங்களுக்கு வீட்டிற்கு வழி தெரியும் .காவல்காரன் மாதிரி பின்னாலேயே வர வேண்டாம் ” தங்கள் காரினை பின் தொடர முயன்றவனை தவிர்க்க முயன்றாள் .

 

” கவீ….” அமிழ்தினி அதட்டிக் கொண்டிருக்க மகிநந்தன் அவள் தோள் தொட்டு அழுத்தினான் .

 

” உங்கள் அப்பாவை பார்த்து கொஞ்சம் பேச வேண்டும் சின்ன பாப்பு .அதுதான் வருகிறேன் ”

 

இப்போது அவன் சொன்னது உண்மைதான் போலும் .வீட்டிற்கு வந்ததுமே சதுரகிரிக்கு வாழ்த்துக்கள் சொன்னான் .

 

” துப்பாக்கி தொழிற்சாலையின் அரசாங்க  கான்ட்ராக்டை  எடுக்க முயற்சிக்கிறீர்களாமே ? வாழ்த்துக்கள் மாமா ”

 

” அது …ஆ…ஆமாம் .அது எப்படி உன…உங்களுக்கு தெரியும் ? ”

 

” என்ன மாமா நம் ஊர் என்ன பெரிய சிட்டியா ? அடுத்த வீட்டு விசயம் நமக்குத் தெரியாமலிருக்க . எல்லாம் தெரியும் மாமா ”

 

” ஓ…சரி .ஒரு அவசர வேலை .வருகிறேன் ” சதுரகிரி சென்றதும் , அமிழ்தினியிடம் சீண்டினான் .

 

” என்ன பெரிய பாப்பு உங்கள் அப்பா இப்படி ஓடுகிறார் ? என்ன பயமாம் ? ”

 

” என் அப்பா யாருக்கும் பயப்பட மாட்டார் .அவருக்கு வேலையிருப்பதால்தான் போகிறார் ”

 




அக்காவிடம் கேட்க பதில் சொன்ன தங்கையிடம் திரும்பியவன் புருவம் உயர்த்தினான் .” ஆஹாம் …” என்றான் ராகமிழுத்து .

 

” ஐய்யோ உங்க இரண்டு பேரையும் மேய்க்க என்னால் முடியாது .ஆளை விடுங்க ” சண்டை சேவலாய் களத்தில் நின்ற இருவரையும் பார்த்து பதறி ஓடிவிட்டாள் அமிழ்தினி .

 

அப்பாவின் தொழிலில் இவன் ஏன் தலையிடுகிறான் ? சூடாக கேட்க எண்ணி அவனை நிமிர்ந்து பார்க்க , அவன் வேறு கேட்டான் .

 

” செண்பகத்தின் சாவை உன்னால் மறக்க முடியவில்லையா பாப்பு ? அதனால்தான் எங்களை விட்டு , இந்த ஊரை விட்டுப் போனாயா ? ”

 

” உங்களை பிடிக்காமல் , உங்கள் முகத்தில் விழிக்க கூடாதென்றுதான் ஊரை விட்டு ஓடினேன் ” தனை மறந்து கத்தினாள் .

 

மகிநந்தனின் முகம் வாடியது .லேசாக தொண்டையை செருமிக் கொண்டான் .” ஏ…ஏன் பாப்பு ? எதனால் என்னைப் பிடிக்கவில்லை ? ”

 




” பழையதாக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் . அதை விட இப்போது அக்காவை மணம் முடிக்க இருப்பவன் தங்கையை விரட்டி பின் தொடர்ந்து கொண்டிருந்தால் எந்தப் பெண்ணிற்குத்தான் பிடிக்கும் ? ”

 

உய் என்று மெலிதான , நீண்ட விசிலொலி கேட்க திகைத்து பார்த்தவள் குழம்பினாள் .கண்கள் பளபளக்க உதடு குவித்து சீழ்கை ஒலித்து நின்றிருந்தான் மகிநந்தன்.

 

What’s your Reaction?
+1
5
+1
5
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!