Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே-14

14

 

மேலும் ஒரு வாரம் ஓடியிருக்க , மகிநந்தன் ஒரு வார்த்தை அவளிடம் பேசியிருக்கவில்லை .அவளது அழைப்புகளையும் தவிர்த்திருந்தான் .கவியாழினி ஒரு முடிவிற்கு வந்திருந்தாள் .

 

” நாளை எங்கள் வீட்டிற்கு போகப் போகிறேன் ” உணவு உண்ணும் போது எல்லோருக்கும் பொதுவாக அறிவித்தாள் .

 

” ம் …இதுதான் சரி .கல்யாணம் முடிந்த பிறகு ஓரு பொண்ணு நாள் கணக்கில் பெத்தவங்க வீட்டில் இருப்பது நல்லாவா இருக்கு ? நீ கிளம்புடா சின்னப்பாப்பு .” முதல் ஆளாக தங்கபுஷ்பம் சொல்ல , எல்லோரும் அவரையே வழி மொழிந்தனர் .

 




” என்னடாம்மா நீயே கிளம்புகிறாயே ? அவர் வந்து கூப்பிடும் வரை இருக்கலாமே ? ” கை கழுவும் இடமருகே வந்து கேட்டார் சதுரகிரி்.

 

அவரை பார்த்ததுமே சுருசுருவென எரிச்சல் தலைக்கு ஏற , கூடவே இதோ இப்போது அவள் கணவனை , புகுந்த வீட்டை விட்டு இருப்பது இவரால்தான் என்பது நினைவு வர சீறினாள் .

 

” உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள் .என்னை பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும் ”

 

” இல்லைம்மா … மகிநந்தனை …வ…வந்து அவரால் உனக்கு எதுவும் பிரச்சனையாம்மா ? அவர் எதற்காவது உன்னை மிரட்டுகிறாரா ? ”

 

கவியாழினி  யோசனையோடு அப்பாவைப் பார்த்தாள் .” உங்களோடு பேசனும் .இன்று இரவு நம் வீட்டிற்கு பின்னால் வாருங்கள் ” சதுரகிரி பதில் சொல்லும் முன் நகர்ந்துவிட்டாள் .

 

அன்று இரவு பத்து மணிக்கு வீட்டின் பின்புறம் சென்ற சதுரகிரி சுற்றும் முற்றும் மகளைத் தேடினார் .

 

” இதோ …இங்கே இருக்கிறேன் ” மகளின் குரல் வந்த பக்கம் பார்த்தவர் அதிர்ந்தார்.

 

செண்பகம் தீ வைத்துக் கொண்டு எரிந்த குடிசை இருந்த இடத்தில் கிடந்த ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தாள் கவியாழினி .நிலா வெளிச்சம் அவளது பாதி முகத்தை காட்ட மீதி முகம் இருளில் இருந்தது .மகளின் அந்த நிலை பார்த்தவருக்கு ஏனோ வயிற்றைப் பிசைந்தது.

 

” சின்னப்பாப்பு …எ…என்னடா …? ”




 

” என்ன பயமில்லாமல் இங்கே  உட்கார்ந்திருக்கிறேனென்று பார்க்கிறீர்களா ? இந்த இடம் எனக்கு ரொம்ப வசதியாகத் தெரிந்தது .அதுதான் …” கையுயர்த்தி சோம்பல் முறித்தாள் .

 

” இ…இங்கே …இ…இந்த இடம் உனக்கு பயமாக இருக்காதாம்மா ? ”

 

தலையுயர்த்தி வான் பார்த்து சிரித்தாள் .” இந்த இடத்தைப் பார்த்து , எரிந்து செத்த செண்பகத்தை நினைத்து நான் என்றுமே பயந்ததில்லை .என் பயமெல்லாம் மனித உருவில் நடமாடும் மிருக ஜென்மங்கள் மேல்தான் ”

 

” பாப்பு ரொம்ப சந்தோசம்டா .செண்பகம் இறந்தது உன்னை மனரீதியாக பாதித்திருக்கிறதோ ? அதனால்தான் இங்கே இருக்க முடியாமல் சென்னைக்கு ஓடிப் போனாயோ ? உனக்கும் மகிக்கும் இதனால் ஏதும் பிரச்சனையோ …? இப்படி என்னை நானே குழப்பிக் கொண்டிருந்தேன் .இன்று அப்படியெல்லாம் ஒன்றுமில்லையென்றானதும் …சிவனே ..என் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டாயப்பா ! ” வான் பார்த்து நிமிர்ந்து சேவித்து மகளருகே நெருங்கி பரிவாய் அவள் தலை வருடினார்.

 

தந்தையின் தொடலுக்கு தீச்சுட்டது போல் விலகினாள் கவியாழினி .” சீச்சி …ஒரு கொலைகாரன் , காமுகன் என்னைத் தொடக்கூடாது ” கத்தினாள் .

 

” பாப்பு ” சதுரகிரி் அதிர்ந்தார் .

 

” நா…நான் பார்த்தேன் .அன்னைக்கு ராத்திரி உங்களையும் ,செண்பகத்தையும் பார்த்தேன் .என் கண்களால் பார்த்தேன் ” குரல் உடைந்தது .




சதுரகிரி மௌனமாக அவளைப் பார்த்தபடி நின்றார் .” அன்றே உங்களை போலீஸ்ல மாட்டி விட்டிருக்கனும் .அ…அம்மாவை நினைத்து பரிதாபப்பட்டு…சை எவ்வளவு பெரிய பாவம் செய்திருக்கிறேன் .இங்கே வரவே கூடாது .உங்கள் முகத்தில் விழிக்கவே கூடாதுன்னுதான் நினைத்திருந்தேன் .ஆனால் விதி …என்னை இங்கே இழுத்து வந்து விட்டது .நான் செய்த பாவம்தான் இப்போது என்னை என் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் செய்கிறது .சொல்லுங்கள்…செண்பகத்தை என்ன செய்தீர்கள் ? ஏன் அவளைக் கொன்றீர்கள் ? ” தந்தையின் சட்டையைப் பற்றி உலுக்கினாள் .

 

சதுரகிரி பதிலேதும் சொல்லாமல் மகளைப் பார்த்தபடியே நின்றிருந்தார் .அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தபடியிருந்தது.

 

” உங்களால்தான் என் கணவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார் .ஒரு கொலைகாரனின் மகளுடன் வாழ முடியாது என்று நினைத்து விட்டார் போலும். இளம் வயது முதல் என் மனதில் துளிர் விட்டிருந்த காதல் ,கடவுள் அருளால் கை கூடியது .இப்போது உங்களால் அது செத்துவிட்டது .என் வாழ்க்கை தொலைந்து விட்டது .இனி நான் நடைப்பிணம்தான் .அன்று செண்பகத்திற்கு நான் செய்த துரோகத்திற்கு எனக்கு இன்று தண்டனை கிடைத்து விட்டது …என் வாழ்க்கை முடிந்துவிட்டது…”கதறலுடன் தந்தையை உலுக்கினாள் .

 

கண்ணீர் வழிய வழிய மகளைப் பார்த்தபடியிருந்த சதுரகிரி கண்கள் சொருக மயங்கி சரிந்தார் .கவியாழினி தன் பிடியிலிருந்து கீழே விழுந்த தந்தையை பார்த்தபடி ஸ்தம்பித்து நின்றாள் .பிறகு அவரருகே அமர்ந்து கன்னங்களை தட்டினாள் .

 

” அப்பா ….அப்பா …”

 

ம்ஹூம் அசைவில்லை .கவியாழினி தனது போனை எடுத்தாள் .

 

” மகி…மகி …அப்பா …அப்பாவிற்கு …கீழே விழுந்து விட்டார் .உடனே வாருங்கள் ”

 




” என்னாச்சு பாப்பு ? எப்படி விழுந்தார் ? ”

 

” நா…நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம் …நான் திட்டியதும் …இ…இங்கே செண்பகத்தை பற்றி கேட்டதும் …”

 

” ஏய்…இரு …செண்பகத்தை பற்றி என்ன பேசினாய் ? பாப்பு …உன் அப்பா மேல் எந்த தப்பும் கிடையாது .நான் விசாரித்து விட்டேன் .நீ ஏதாவது தவறாகப் பேசிவிட்டாயா ? ”

 

கவியாழினிக்கு ஐய்யோவென்றானது .” மகி சீக்கிரம் வாங்க ” போனை கட் செய்துவிட்டு அப்பாவின் தலையை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டாள் .வீட்டினர் யாரையும் அழைக்கும் எண்ணம் கூட இல்லாமல் , மகிநந்தன் வரும் வரை அப்பா அப்பாவென அவர் கன்னங்களைத் தட்டியபடி இருந்தாள் .

 

” மாஸிவ் அட்டாக் நாளைதான் உறுதியாக சொல்லமுடியும்  ” என்றார் டாக்டர் .

 

அழுதழுது ஓய்ந்த சொந்தங்களிடையே அழாமல் விரைப்பாக நின்றிருந்த கவியாழினி மகிநந்தனுக்கு கவலை கொடுத்தாள் .

 

சுந்தரியும் , சிவரஞ்சனும் மருத்துவமனையில் தங்க , மற்றவர்களை அழைத்துக் கொண்டு வீடு வந்தான் மகிநந்தன் .நவரத்தினம் அனைவரையும் சாப்பிட வைத்து படுக்க வைத்தார் .மகிநந்தன் கவியாழினியை தேட , அவள் வீட்டின் பின்புறம் செண்பகம் எரிந்த இடத்தில் நின்றிருந்தாள் .

 

” இங்கே என்ன செய்கிறாய் பாப்பு ? ”

 

” நான் ரொம்ப பேசிட்டேன் மகி .அ…அப்பா …”  .

 




” அப்பா குற்றவாளி என்று தெரிந்தும் உன்னால் அவரை தண்டிக்க முடியவில்லை .அதிகபட்சம் ஒரு நேரம் அவரை பட்டினி போட்டாய் .அவ்வளவுதான் .இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாயே ? ஏன் அவரை நம்பாமல் போனாய் பாப்பு ? ”

 

” தப்பு செய்துட்டேன் மகி …” கரகரத்தாள்.

 

” உன் அப்பா அப்பழுக்கற்றவர் , செண்பகத்தின் கர்ப்பத்தின் காரணம் வேறு ஒருவன் .அவனைக் கண்டுபிடித்து செண்பகத்திற்கு திருமணம் செய்து கொடுப்பதாக அவளுக்கு உறுதி கொடுத்திருந்தார் அவர் .அது போலொரு ஆறுதல் நேரத்தைத்தான் நீ அன்று பார்த்திருக்க வேண்டும் .செண்பகம் பழிச்சொல்லுக்கு அஞ்சி அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள் .இவை எல்லாவற்றையும் நான் விசாரித்து உறுதி செய்துவிட்டேன் . பாப்பு இதோ இங்கே பார் …” மகிநந்தன் அவள் தலைமுடிக்குள் இரு கை விட்டு அழுத்திப் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தான் .

 

” உன் அப்பா அப்பழுக்கற்றவர் …வீட்டு வேலைக்கு வந்த அப்பாவிப் பெண்ணின் துயரத்தையும் போக்க நினைப்பவர் , தன் மனைவி , குழந்தைகள் , குடும்பம் மீது தீராத பாசம் வைத்திருப்பவர் .உன் மனதில் ஐந்து வருடங்களாக ஏறி இருந்த பாரம் இறங்கிவிட்டது .நீ இலகுவாகி விட்டாய் .இப்போது அழு …உன் கவலைகள் தீர்ந்த்தென்று அழு …உன் பாசமான அப்பாவை நினைத்து அழு …நம் அழகான எதிர்கால வாழ்வை நினைத்து அழு …அழுது விடு …ம் …அழு…” அவள் முடியை வலுவாக பற்றி உலுக்க , கவியாழினி வெடித்து அழுதாள் .

 




” அப்பாஆஆ…மகிகீ…அப்பாஆ…மகிகீ…” கதறலாய் அவள் அழுகை தொடர அவளை அணைத்தபடி வெகுநேரம் நின்றிருந்தான் மகிநந்தன்.

 

What’s your Reaction?
+1
8
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!