Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே-13

13

 

” பாப்பு என்னடா என்ன ஆச்சு ? ”

 

” மகி ” இரு கைகளையும் அவனை நோக்கி நீட்டியவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் .

 

” சரி…சரி …வேண்டாம் ” சின்னப்பிள்ளையை சமாதானப் படுத்துவது போல் பேசி முதுகை தடவிக் கொடுத்தான் .

 

கவியாழினியின் அழுகை கொஞ்சம் குறைந்ததும் , ” என்னடா எதுக்கு அழுகை ? ” மீண்டும் விசாரித்தான் .

 




” இன்று நியூசில் ஒரு செய்தி .பதினான்கு வயது குழந்தையை ஒ…ஒரு ஐம்பது வயது ஆள் …தவறாகப் பயன்படுத்தியிருக்கிறான் .அதனால் அந்தக் குழந்தை கர்ப்பமாகி இ…இப்போது பிரசவத்தை உடல் தாங்காமல் மிகவும் சீரியசாக இருக்கிறாளாம் . இதைக் கேட்டதும் எனக்கு அழுகையாக வந்தது ”

 

” ஓ…ரொம்ப கஷ்டமான செய்திதான் .ப்ச் …என்ன செய்ய ? விடு ”

 

” இது போன்ற செய்திகள் என் மன அழுத்தத்தை இன்னமும் அதிகப் படுத்துகிறது மகி ” தன் தோள் தேடி சாய்ந்து கொண்டவளின் தலையை வருடியவன் மெல்ல அவள் முகம் நிமிர்ந்து விழிகளை ஊடுருவினான் .

 

” செண்பகம் …? ”

 

கவியாழினியின் அழுகை கூடியது .” பதினாறே வயதுதான் அவளுக்கு .அ…அவளை…”

 

” செண்பகம் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தாள் .இதெல்லாம் வெளியே தெரிய வேண்டாமென்று நாங்கள் அன்று மறைத்து விட்டோம் .ஒரு வேளை யாரோ அவளை …ம் யாராக இருக்கலாம் பாப்பு ? ”

 

உடலை தூக்கிப் போடும் விம்மல்களுக்கிடையே கவியாழினி மெல்ல சொன்னாள் .” அப்பா ”

 

” என்ன ? உளறாதே பாப்பு .”

 

” உண்மை. அப்பாவும் , செண்பகமும் அணைத்தபடி நிற்பதை ஒரு நாள் இரவு தண்ணீர் குடிக்க வரும் போது பார்த்தேன் .அடுத்த வாரமே செண்பகம் தீ வைத்துக் கொண்டு இறந்து போனாள் ”

 




” ஓ…அந்த அதிர்ச்சியில்தான் இங்கிருக்க பிடிக்காமல் உன் பெரியம்மா வீட்டிற்கு ஓடினாயா ? ”

 

” ஆமாம் .அப்பாவை பார்க்க பிடிக்காமல் தான் போனேன் .இங்கே வரவே கூடாது என்றுதான் போனேன் ”

 

மகிநந்தன் தன் மார்பில் சாய்ந்திருந்தவளை மெல்ல பிரித்தான் .ஆதரவு தேடி பற்ற முனைந்தவளை விட்டு விலகி எழுந்து அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினான் .

 

மனதில் மூண்ட கவலையுடன் அவனைப் பார்தவாறிருந்தாள் . மகிநந்தனின் முகத்தில் அளவில்லாத வெறுப்பும் , கோபமும் இருக்கக் கண்டாள் .

 

” செண்பகம் தானாக தீ வைத்துக் கொள்ள எண்பது சதவிகிதம் வாய்ப்பில்லை என்பது அப்போது போலீஸ் கொடுத்த ரிப்போர்ட் தெரியுமா ? ”

 

” நி …நிஜமா மகி ? இதெல்லாம் எனக்குத் தெரியாது ”

 

” ஆக , ஏமாற்றுக்காரன் என்பதை தாண்டி கொலைகாரன் எனும் வட்டத்திற்குள் வருகிறார் உன் அப்பா .” ஓங்கி மேசையின் மீது குத்தினான் .அதன் மேலிருந்த சாமான்கள் தரையில் சிதறின .

 

” மகி …” நடுங்கும் குரலுடன் அவன் தோள் தொட்ட கையை எடுத்து விட்டான் .

 




” உனக்கு தெரியுமா இது போல் சிறு குழந்தைகளுக்கு எதிராக செய்யப்படும் பாலியல் துன்பங்களுக்கு எதிராக செயல்பட நான் ஒரு குழு வைத்திருக்கிறேன் .எனது நண்பர்கள்தான் குழு உறுப்பினர்கள் .நமக்கு அருகாமையில் நடக்கும் இது போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவரை நேரிலேயே சென்று போலீசில் மாட்டி விடுவது , சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பவரை நாங்களே தண்டிப்பது , பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பண உதவி செய்வது போன்றவற்றை மிக ரகசியமாக செய்து வருகிறோம் .ஊருக்குள் எங்கெங்கோ நடக்கும் சம்பவங்களை சரி செய்தோம் .இப்போது என் வீட்டிற்குள்ளேயேவா ? சீச்சி …”

 

மகிநந்தனின் முகம் மிகுந்த அருவெறுப்பு காட்டுவதை கவனித்த கவியாழினி மெல்ல அவன் அருகில் வந்தாள் .” மகி ”

 

” கிளம்பு ”

 

” எ…எங்கே ? ”

 

” உன் அம்மா வீட்டிற்கு . நான் நிறைய யோசிக்க வேண்டும் .எனக்கு தனிமை வேண்டும் ”

 

உறுதியான குரலில் சொன்னதோடு கவியாழினியை அழைத்து வந்து அவள் அம்மா வீட்டில் விட்டு விட்டும் போய் விட்டான் .

 

” அவருக்கு ஒரு வாரத்திற்கு நிறைய வேலை இருக்கிறதாம் .அதுதான் என்னை இங்கே இருக்கும்படி விட்டிருக்கிறார் ” அம்மா , அண்ணன் , பாட்டி என அனைவரிடமும் ஒப்புவித்து விட்டு மாடியேறி தன் அறைக்கு வந்தாள் .

 




அமிழ்தினி இல்லாத வீடு வெறுமையாகத் தெரிந்தது .எப்படி அவளால் இருபத்தி நான்கு வருட பிறந்தவீட்டு வாழ்வை மறந்து ஒரே மாதத்தில் புகுந்த வீட்டோடு ஒன்ற முடிந்தது ? எனக்கெல்லாம் அங்கே இப்படி எந்தப் பிடிமானமும் இல்லைப்பா …தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் .

 

சதுரகிரி அவள் அறை வாசலில் வந்து நின்றார் .” சின்னப்பாப்பு , அங்கே ஏதும் பிரச்சனை இல்லையே ? ” தயங்கி தயங்கி கேட்டு நின்றவரை கண்டதுமே இவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

” என்ன  பிரச்சனை வர வேண்டுமென்கிறீர்கள் ? ”

 

மகளின் கத்தல் தகப்பன் எதிர்பாராதது. ” ஒ…ஒண்ணுமில்லடா …ஒண்ணுமில்ல …” லேசான தடுமாற்றத்துடன் படியிறங்கிப் போய்விட்டார் .

 

இரவு தானாகவே கணவன் நினைவு வந்தது. கணவன் …இப்போதுதான் அந்த உறவுக்குள் அவனை பொருத்தி நினைப்பதை உணர்ந்தாள் .அமிழ்தினிக்கும் , அபிநந்தனுக்கும்தான்  நிச்சயமென்று அறிந்த நிமிடமே மகிநந்தன் மேலிருந்த மனத்தாங்கல் மறைந்திருந்தது.

 

மரைனா குறித்த அவனது விளக்கங்களுக்கு பிறகோ , அவன் அப்பழுக்கற்றவனாக தோன்றினான் .இவையெல்லாம் இப்போதுதான் அவனின் பிரிவில்தான் அவள் மூளைக்கு உறைத்தது.

கணவனிடமிருந்து போனை மிகவும் எதிர்பார்த்தாள் .ஆனால் அன்று மட்டுமல்ல அடுத்து வந்த வாரம் முழுவதுமே அபிநந்தன் போன் மட்டுமன்றி எந்த வழியிலும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை .

 

” டேய் ஒரே ஒரு ப்ளவுஸ்தான்டா , நீ போகிற வழிதானே கொடுத்து விட்டு போய்விடேன் ” சுந்தரி மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் .

 

” எனக்கு வேறு வேலை இல்லையென்று நினைத்தீர்களா ? பொண்ணுங்க ப்ளவுஸ் தூக்கிட்டு அலையிற ஆள் நானில்லை ” சிவரஞ்சன் கெத்தாக மோவாய் உயர்த்த அந்த உயர்ந்த இடத்தில் கொஞ்சம் பலமாகவே ஒரு குத்து விட்டாள் கவியாழினி .

 




” என்னண்ணா அந்த அளவு பெரிய ஆள் நீ ? அவரை விடவா உனக்கு வேலை அதிகம் ? இப்போதும் எங்கள் வீட்டில் அம்மா , அண்ணி , நான் என எல்லோருக்கும் ப்ளவுஸ் தைக்க கொடுத்து வாங்கி வருவது அவர்தான் தெரியுமா ? இதிலென்ன அசிங்கம் இருக்கிறது ? ”

 

அடிபட்ட தாடையை தடவியபடி ” ஐய்யய்யோ அத்தான் …” எனக் கத்திக் கொண்டே தனது போனை எடுத்து உடனே மகிநந்தனை அழைத்தான். ஒப்பாரி குரலில் நடந்ததை விளக்கினான் .

 

” என் தங்கையை ஒரே மாதத்தில் உங்கள் பொண்டாட்டியாக மாற்றி வைத்திருக்கிறீர்களே அத்தான் .இது நியாயமா ? நின்றால் உங்கள் பெயர் …நடந்தால் உங்கள் புராணம் …விரல்களை சுருட்டிக் கொண்டு ஒரு குத்து விட்டாள் பாருங்கள் .ஐய்யோ மேலே இரண்டு கீழே மூன்று பற்களை காணவில்லை . இதை சரி பண்ணும் செலவு உங்களதுதான் ஆமாம்…சொல்லிட்டேன் ”

 

அண்ணனின் அதீத விவரிப்பை கேட்டபடி கணவன் தன்னிடம் பேசுவதற்காக காத்திருந்தாள் .ஆனால் …சிவரஞ்சன் பேசி முடித்து விட்டு போனை கட் செய்தான் .

 

” போய்த்தான் ஆக வேண்டுமாம்.அம்மா ப்ளவுஸ் கொடுங்க ” வாங்கிக் கொண்டு கிளம்பினான் .

 

” அவர் என்ன சொன்னார் அண்ணா ? ” அண்ணனுடன் வேகமாக நடந்தபடி கேட்டாள்.

 

” வீட்டுப் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டுமாம் .அவர்களது வேலைகளை தயங்காமல் செய்ய வேண்டுமாம் …இன்னமும் ப்ளா…ப்ளா…சின்னப்பாப்பு  இனி நான் காய்கறி , மளிகையெல்லாம் வாங்க  வேண்டி வந்துவிடுமோ ? ”

 

” ஏன் அதிலென்ன தவறு ..? அவரெல்லாம் …”

 

” அம்மா தாயே ஆளை விடு .உன் புருசன் பித்திற்கு நான் ஆளில்லை ” ஓடி விட்டான் .

 




புருசன் பித்தா ? நான் புருசன் மேல் பித்து பிடித்து திரிகிறேனா ? கவியாழினி யோசிக்க நிறைய விசயங்கள் புரிபடுவது போலிருந்தது .

 

ஆம்பளைங்க எங்களுக்கு ஆயிரம் வேலையிருக்கும் .இங்கே வீட்டு வேலைகளையெல்லாம் நீங்கள்தான் பார்க்க வேண்டுமென , காய் வாங்குவதிலிருந்து , கேஸ் பதிவது , கரெண்ட் பில் வரை பெண்கள் தலையில் கட்டி விட்டு , படுத்து உறங்கவும் , சாப்பிடவும் மட்டுமே வீட்டிற்கு வரும் ஆண்கள் மத்தியில் வீட்டுப் பெண்களின் சிறு சிறு தேவைகளையும் கவனித்து செய்யும் மகிநந்தன் .

 

ஆடை , அலங்காரம் , நகை போன்ற பெண்களின் தேவைகளுக்கு கேலிகள் , கிண்டல்கள் இன்றி அருகிருந்து உதவும் மகிநந்தன் .

 

வாரம் ஒரு முறை சமையல்கட்டிலிருந்து பெண்களுக்கு ஓய்வு வேண்டுமென வெளி உணவு அல்லது தானே சமைத்து வழங்கும் மகிநந்தன் .

 

கணவனை நினைக்க நினைக்க தெவிட்டவில்லை அவளுக்கு .நிஜமாகவே மகிநந்தன் மேல் தனக்கு பித்து பிடித்து விட்டது என்றே உணர்ந்தாள் .கைகள் தன் போக்கில் கணவனின் எண்களை போனில் அழுத்த , எதிர்ப்புறம் எடுக்கப்படவில்லை .மீண்டும் முயல …

 

” வேலை இருக்கிறது .நானே அழைக்கிறேன் ” என்ற சிக்கன வார்த்தைகளுடன் கட் செய்து விட்டான் .

 

கவியாழினி அன்று முழுவதும் மறுநாளும் காத்திருந்தும் மகிநந்தனிடமிருந்து அழைப்பு வரவேயில்லை .ஏனோ அவன் இனி தன்னை அழைக்கப் போவதேயில்லை என அவளுக்குத் தோன்ற வயிற்றை எதுவோ பிசைந்தது.

 

கட்டில் மேல் கிடந்த போனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த போது அது ஒலிக்க ,அரக்க பரக்க ஓடி அதனை எடுத்தாள் .எதிர்முனையில் நவரத்தினம் …

 

” நல்லாயிருக்கியாம்மா ? ” கவியாழினிக்கு ஏனோ அழுகை வரும் போலிருந்தது .

 

” அ…அத்தை  இப்போதுதான் என் நினைவு வந்ததா ? உங்க மூத்த மருமகள்தான் உங்களுக்கு உசத்தி .என்னை அப்படியே தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்கள்ல ? ”

 

” சீ கழுதை .இதென்ன பேச்சு ? அம்மா வீட்டிற்கு போன பெண் , மாமியார் தொல்லை இல்லாமல் கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இருக்கட்டுமென்று நினைத்தால் இப்படி பேசுவாயா நீ ? ”

 

முன்பு போலில்லாமல் மாமியாரின் கழுதை கவியாழினிக்கு நிம்மதியை தந்தது .உரிமை இருக்குமிடத்தில் இது போன்ற செல்ல வசவுகள் சகஜமென உணர்ந்தாள் .

 




அக்காவும் , அத்தானும் எப்படி இருக்கிறார்கள் என ஆரம்பித்து வீட்டுக் கன்றுக்குட்டி வரை நலம் விசாரித்து போனை வைத்தாள் .உறவு அழைத்தல்கள் தானாக நாவில் வந்துவிட்டதை ஆச்சரியமாக உணர்ந்தாள் .

 

வெகு விரைவில் தன் வீடு செல்லப் போகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் .ஆனால் …

 

What’s your Reaction?
+1
5
+1
3
+1
1
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!