Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே15 ( நிறைவு )

15

 

மறுநாள் காலை கவியாழினி மருத்துவமனை சென்ற போது , உடல் முழுவதும் சோர்வு இருந்தாலும் , புன்னகை பொங்க மகளை நோக்கி வரவேற்பாய் கையை நீட்டினார் சதுரகிரி .

 

” ஷ் …அழாமல் போ ” மகிநந்தனின் ரகசிய எச்சரிப்பால் கண்ணீரை விழுங்கியபடி தந்தையின் கை பற்றிக் கொண்டு அருகமர்ந்தாள் கவியாழினி .கை பற்றியபடியே ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்த இருவர் பார்வைகளிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

 




” அட …வீட்டிற்குள்ளேயே எதிர் எதிர் பார்த்தாலும் கண்டுக்காம போவீங்க ,ரெண்டு பேரும் , இப்போ என்ன இவ்வளவு பாசம் …? ” சுந்தரி ஆச்சரியப்பட்டாள் .

 

” அப்பா – மகள் பாசத்தை பார்த்து உனக்கு பொறாமைடி .என் மகன் செத்து பிழைச்சிருக்கான் .பொம்பளைப் பிள்ளைங்க பிறந்த வீடு தேடி வந்திருக்காங்க , சீக்கிரமே வீட்டிற்கு போய் வகையா சமைச்சு வைக்க பாரு .இங்கே என்ன வேடிக்கை ? ” பாட்டியின்  வழக்கமான அதிகாரத்திற்கு முகம் சுளித்த மனைவியை கவனித்த மகிநந்தன் …

 

” பாட்டி சாப்பாடெல்லாம் எனக்குத் தெரிந்த கேட்டரிங்கில் சொல்லியாச்சு .கொஞ்ச நேரம் அத்தையை ப்ரீயா விடுங்க ” மெல்லிய அதட்டலுடன் சொல்ல , கணவனின் முகம் பார்த்தபடி நின்றிருந்த மருமகளை பார்த்த தங்கபுஷ்பம் என்ன நினைத்தாரோ …

 

” சரி ..சரி வாங்க .நாம் போகலாம் .சுந்தரி சாப்பாடு அனுப்புறேன். நீ இருந்து வா ” என்க , அனைவரும் கிளம்பினர்.

 

தனது அறையின் சன்னலை திறந்து வைத்துக் கொண்டிருந்த கவியாழினியை புன்னகையோடு பார்த்தான் மகிநந்தன் .

 

” பயம் போயாச்சா ? ”

 




” பயம் இல்லை மகி .ஒரு குற்றவுணர்வு .அக்கா ரூம் மாற்றிக் கொள்ள கேட்ட போது நான் மறுக்கவும் இதே காரணம்தான் .அவளது அறை சன்னல் வீட்டின் பின்புறத்திற்கு இன்னமும் அருகாமை இருக்கும் .அது பிடிக்காமல்தான் உடனே நம் வீட்டிற்கு போவோமென்று உங்களிடம் கேட்டேன் ”

 

” அடடே இதுதான் விசயமா ? நான் ஏதோ என் பொண்டாட்டி என் மேலிருக்கும் அளவு கடந்த காதலால் அழைக்கிறாள் என்றல்லவா நினைத்தேன் ”

 

” காதல் …உங்கள் மீது .அதனையே நான் இங்கே வந்து இருந்த இந்த இரு வாரங்களில்தான் உணர்ந்தேன் தெரியுமா ? ”

 

” ம் …அதனை உணர்த்தத்தானே நமக்குள் இந்தப் பிரிவையே உண்டாக்கினேன் ”

 

” நிஜமாகவா மகி ? என் அப்பாவை நினைத்து என்னை வெறுத்து விட்டீர்களோ என்று நினைத்துவிட்டேன் .அந்தக் கோபத்தில்தான் அப்பாவிடம் கண்டபடி பேசிவிட்டேன் .என் அத்தனை குற்றச்சாட்டிற்கும் அப்பா ஒரு வார்த்தை பதில் பேசவில்லை தெரியுமா ? அப்படியே பார்த்தபடி நின்றிருந்தார் ”

 

” பதில் சொல்லும் கேள்விகளா நீ கேட்டாய் ? இதற்கு என்ன பதில் சொல்வதென இடிந்து போய் நின்றிருந்திருப்பார் ”

 

கவியாழினி கண்கள் கலங்க தலைகுனிய அவளை நெருங்கி தோளணைத்துக் கொண்டான் மகிநந்தன்.

 

” அப்பாவை நினைத்து உன்னிடம் வெறுப்பா ? உன் மீது வெறுப்பு கொள்ள என்னால் முடியுமா பாப்பு ? சிறு பிள்ளையிலிருந்தே எப்போதும் உன்னை தூக்கி அணைத்துக் கொஞ்சத்தான் தோன்றும் .கோபமோ வெறுப்போ எப்படி வரும் ? ”

 

அவன் சொன்ன விதத்தில் கன்னங்கள் சிவக்க தலை குனிந்து கொண்டு ” பொய் ” என்றாள் .





” சிறு பிள்ளையிலிருந்தே எப்போதும் என்னை திட்டிக் கொண்டேதானே இருப்பீர்கள் ?”

 

” அப்போதெல்லாம் நீ மிகவும் அப்பாவியாக இருந்தாய் பாப்பு .நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்காமல் உன்னை மிகவும் செல்லமாக வளர்த்து வைத்திருந்தனர் .அதனால் ஒரு நண்பனாக உன்னை அதட்டி , மிரட்டி திருத்தும் கடமை எனக்கு இருந்தது. ”

 

” ஓ…உங்களுக்கு அக்காவைத்தான் பிடிக்கும் .என்னைப் பிடிக்காதென்று நினைத்திருந்தேன் ”

 

” ஹான் …இந்த விசயம் நானே உன்னிடம் கேட்க நினைத்தது .உன் அக்காவிற்கும் எனக்கும் நிச்சயதார்த்தமென்று ஏன் நினைத்தாய் ? எந்த விசயத்தி்ல் எங்களை இணை கூட்டினாய் ? ”

 

மகிநந்தனின் குரலில் கோபம் வந்திருக்க அவனை இறைஞ்சலாய் பார்த்தாள் .” சின்ன வயதிலிருந்தே நீங்க இரண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் .அக்காவிற்காக நீங்கள் எது வேண்டுமானாலும் செய்வீர்கள் …”

 

” அதற்கு காரணம் நட்பு ” இறுகிய குரலில் சொன்னான் .

 

” அதெல்லாம் எனக்கு அப்போது புரியவில்லை மகி .சின்ன வயதுதானே எனக்கு ? ”

 

” ஆமாம் அப்பாவின் ஆதரவான அணைப்பிற்கும் , மற்ற அணைப்பிற்கும் வித்தியாசம் தெரியாதுதானே ? ”

 

கவியாழினியின் முகம் விழுந்து விட்டது . சன்னலருகே போய் நின்று கொண்டாள் . மகிநந்தன் அவளை அணுகி பின்னிருந்து அணைத்துக் கொண்டான் .

 

” சாரிடா செல்லம் .சிறு வயதில்  எனக்கு ஏற்பட்டிருந்த உணர்வு காதலென்று உறுதிப்பட உன் வரவிற்காக காத்திருந்தேன் .நீ வருகிறாயென்று தெரிந்த அன்று சிறிது நேரம் கூட காக்க முடியாமல் ரயில்வே ஸ்டேசனுக்கே வந்தேன் . நீ என்னை விட்டு விலகிப் போனாய் .அமெரிக்கா சென்று விட திட்டம் போட்டாய் .அதனால் சில அதிரடி வேலைகள் செய்து , நீ என்னை காதலிப்பதாக உன் அப்பாவை நம்ப வைத்து நம் திருமணத்தை விரைவாக முடித்தேன் .நீயும் , உன் அப்பாவும் ஒருவரோடொருவர் சரிவர பேசிக் கொள்ளாதது எனது திட்டத்திற்கு மிகுந்த உதவியாக இருந்தது ”

 

” நான் புரிந்து கொண்டதெல்லாம் தவறுதான் .அப்பாவிடம் மட்டுமல்ல உங்களிடமும்தான் .அன்று வீட்டினர் அனைவரும் சினிமாவிற்கு போயிருக்க ,தலைவலியென நான் மட்டும் வீட்டிலேயே படுத்துவிட்டேன் .சிறிது நேரம் கழித்து மாடியிலிருந்து இறங்கி வரும் போதுதான் அப்பாவையும் , செண்பகத்தையும் பார்த்தேன் .அந்த நேரத்தில் என் மனது உடனே நாடியது உங்களைத்தான் மகி .ஏனென்று தெரியவில்லை இந்த விசயத்தை உடனே உங்களிடம்தான் சொல்ல வேண்டும் போல் தோன்றியது ”

 

” நேற்று உன் அப்பா மயங்கி விழுந்ததும் வீட்டிற்குள் இருப்பவர்களை உரக்க கூப்பிட எண்ணாமல் என்னை போனில் அழைத்தாயே அப்படியா ? ”




 

” ம் .அப்படித்தான் .அந்த நேரம் வீட்டில் இருக்கவும் பிடிக்காமல் உங்களைத் தேடி வந்தேன் .அங்கே உங்களையும் , அக்காவையும் பார்த்தேன் ”

 

” பாப்பு யோசித்து பேசு .கண்டபடி உளறாதே ”

 

” என் அன்றைய நிலையை சொல்லி விடுகிறேன் . நாம் எல்லோரும் சந்திக்கும் பார்க்கில் நீங்கள் இருவரும் இருந்தீர்கள் .சற்று முன் அப்பாவையும் , செண்பகத்தையும் போல் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி ….”

 

மகிநந்தன் அவள் தோள்களைப் பற்றி நெறித்தான் ” ஏய் என்ன பேசுகிறாயடி ? ” உறுமினான் .

 

” இன்று காரணம் புரிகிறது மகி .ஆனால் அன்று …? அதுவும் அப்போது  நானிருந்த மனநிலையில் …? கவலையேபடாதே அமிழ்து எத்தனை வருடங்கள் போனாலும் நீதான் எங்கள் வீட்டு மருமகள் என்று நீங்கள் அக்காவிற்கு வாக்கு கொடுத்துக் கொண்டிருந்தீர்கள் ”

 

புருவம் சுருக்கி யோசித்த மகிநந்தன் ” ம் அன்றைய நாள் நினைவு வருகிறது .அண்ணாவும் ,அமிழ்துவும் ஒருவரையொருவர் விரும்புவதை அன்று தியேட்டரில் வைத்துத்தான் தெரிந்து கொண்டேன் .திரும்ப வீட்டிற்கு வரும்போது உன் வீட்டினரை முன்னால் அனுப்பி விட்டு அமிழ்துவை பார்க்கிற்கு அழைத்துப் போய் பேசினேன் .படிக்கும் வயதில் என்ன இது ? என்று அதட்டினேன் .அண்ணன் பெரியவர் .அவரை சொல்ல முடியாது .அமிழ்து என் தோழி .அவளை அதட்டும் உரிமை எனக்கு இருக்கிறதென கேட்டேன் .அவள் அழுதாள் .எங்களைப் பிரித்து விடாதே என்றாள் .முதலில் படிப்பை முடி .பிறகு இந்த காதலெல்லாம் பார்க்கலாம் .எத்தனை வருடங்கள் ஆனாலும் நீதான் எங்கள் வீட்டு மருமகளென்று உறுதி கொடுத்தேன் ”

 

” இந்த விபரங்களை இன்று நீங்கள் சொல்லும் முன்பே என்னால் உணர முடிந்தது மகி .ஆனால் அன்று …ப்ளீஸ் என்னைப் புரிந்து கொள்ளுங்கள் .அந்த நேரம் இந்த உலகில் எனக்கு யாருமேயில்லையென்று தோன்றியது . வாழ்க்கையே வெறுத்தது.நடைப்பிணமாக வீடு திரும்பி என் அறைக்குப் போய் படுத்தேன் .பிறகே இங்கே இருக்க பிடிக்காமல் ஊரை விட்டே ஓடிப் போனேன் ”

 

மகிநந்தனின் கைகள் சன்னல் கம்பிகளை இறுகப் பற்றி நெரித்தது. நரம்புகள் புடைத்த அவன் புறங்கைகள் அவன் ஆத்திரத்தின் அளவை சொல்ல மெல்ல அந்நரம்புகளை வருடி சமன் செய்ய முயன்றாள் கவியாழினி .

 

” உங்கள் யாழுக்காக இதையெல்லாம் மறக்க முடியாதா மகி ? ” கொஞ்சலாக கேட்டாள் .

 




அவன் திரும்பி புருவம் உயர்த்த ” உங்களது அனைத்து கம்பெனிகளின் பெயர் ” யாழ் ” .இது என்னை நினைத்து வைத்ததுதானே ? எல்லோரும் யாழின் மீது உங்களுக்கு இருக்கும் பற்றுதலால் வைத்ததென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .என் மீது கொண்ட பற்றுதலே அந்தப் பெயர்க்காரணமென்பதை …” கவியாழினியின் வார்த்தைகளை  அவள் இதழ்களை மென்று நிறுத்தியிருந்தான் மகிநந்தன் .

 

மூச்சு வாங்க தன் மார்பில் சாய்ந்த மனைவியை அணைத்தபடி மெல்லிய குரலில் பாடினான் .” எனக்கொரு காதலி இருக்கின்றாள் .அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ” .




 

–  நிறைவு –

What’s your Reaction?
+1
10
+1
15
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!