Serial Stories மனதில் நின்ற காதலியே

மனதில் நின்ற காதலியே-12

12

 

” களை பறிக்க ஏதோ மெஷின் வந்திருக்கிறதாமே ! விசாரித்து சொல்லு மகி ” அபிநந்தன் காலை உணவின் போது தம்பியிடம் சொல்ல அவன் தலையசைத்தான் .

 

” இதற்கெதற்கு மெசின் அண்ணா ? இதனால் எத்தனையோ தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்களே ? ” கவியாழினி இடையிட ,நவரத்தினம் அவளை முறைத்தாள் .

 

” ஆம்பளைங்க தொழில் விசயம் பேசிக் கொண்டிருக்கும் போது நீ ஏன் இடையில் நுழைகிறாய் ? அத்தோடு அதென்ன அண்ணா ? ஒழுங்காக கூப்பிடு ”

 




” எனக்கு அப்படித்தான் வருகிறது .அப்படித்தான் கூப்பிடுவேன் ”

 

” விடுங்கம்மா .கவி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்வாள் .நீ கேட்பது நியாயம்தான்மா .ஆனால் இப்போதெல்லாம் வயல் வேலைக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை .கொஞ்சம் படித்து விட்டாலும் சேற்றில் கால் வைப்பதா என்று இளைய தலைமுறை பிள்ளைகள் விவசாயம் செய்ய மறுக்கிறார்கள் .நமக்கு வேலை நடக்க வேண்டுமில்லையாம்மா ? அதற்குத்தான் மிசினை கேட்கிறேன் ”

 

” நீங்கள் கிரேட் அண்ணா ” மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு தனது குடும்பத் தொழிலான விவசாயத்தை முழு மனதுடன் செய்து வந்த அபிநந்தனை மனதார பாராட்டினாள் .

 

” எனக்கு சின்ன வயதிலிருந்தே விவசாயத்தில் ஆர்வம் .அதனால் செய்கிறேன் .இதோ ..இவருக்கு குடும்பத் தொழிலில் கொஞ்சமும் ஆர்வம் கிடையாது. ஐயா ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் .” தம்பியை சுட்டிக் காட்டினான் .

 

” ஆமாம் யார் யாரையோ கூட்டிக் கொண்டு ஏதேதோ செய்து கொண்டிருப்பார்.கேட்க ஆளில்லைதானே ? ” மகிநந்தன் கவியாழினியை நிமிர்ந்து பார்த்தான் .

 

” இப்போது உனக்கு என்ன தெரிய வேண்டும் ? ” அவனது குரல் உஷ்ணமாக வந்தது .

 

” எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் . இப்போதல்ல கல்யாணத்திற்கு முன்பே ”

 

” ஏய் எழுந்திரு .கிளம்பு ” பாதி சாப்பாட்டில் அவளை எழுப்பினான் .

 

” மகி என்ன இது ? அவளை விடு ” அபிநந்தன் அதட்டினான் .

 




” இல்லை அண்ணா .இவள் சந்தேகத்தை போக்க வேண்டுமே . ஏய் …வா …” அனைவரும் திகைப்பாய் பார்த்துக் கொண்டிருக்க அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

 

சிடுசிடுவென்றிருந்த அவனது முகத்தை ஓரக் கண்ணால் அளந்தபடி காரில் அமர்ந்திருந்தாள் .முதலில் மகிநந்தன் அவளை அழைத்துச் சென்ற இடம் அலுமினிய கன்டைனர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை .

 

” உணவுப் பொருட்கள் சூடு ஆறாமல் இருக்க பயன்படுத்துவார்களே …அதுதான் இது .இந்த தொழிலை நான் ஆரம்பித்து ஐந்து வருடங்களாகிறது .கடந்த இரண்டு வருடங்களாக லாபத்தின் கிராஃப் ஏறிக் கொண்டே போகிறது .”

 

அடுத்து அவன் அழைத்துச் சென்ற இடத்தில் கற்கள் , மண் ,சிமெண்ட் ஆகியவற்றை பெரிய பெரிய இயந்திரங்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்தன.

 

” ரெடிமேட் காங்க்ரீட் கலவை தயார் செய்கிறேன் .இதனை வாங்கி கலந்து கட்டிடத்தில் பரப்பி விட்டால் போதும் .இரண்டே நாட்களில் கட்டிட கூரை தயார் .இப்போது கட்டிட தொழிலில் இதற்கு நல்ல மார்கெட் ”

 

” போர்வெல் , கிரேன் , டிரக் , எர்த் மூவர்ஸ் இவைகளையெல்லாம் வாடகைக்கு விடுகிறேன் ” அடுத்து சென்ற  பெரிய காலி மனையில் ஆங்காங்கே இருந்த ஒன்றிரண்டு வாகனங்களை காட்டி மகிநந்தன் சொல்ல , கவியாழினி அந்த பெரிய மைதானத்தை விழியால் சுற்றினாள் .

 

” எல்லா வாகனங்களில் ஐம்பது வரை இருக்கிறது .இப்போது எல்லாமே வெளியே போயிருக்கிறது ”

 

கவியாழினியின் புருவங்கள் உயர்ந்தன. ஆறே வருடங்களில் இவ்வளவு முன்னேற்றமா ? மகிநந்தனுக்கு கை தட்ட தோன்றினாலும் , அவளுக்குத் தேவையான விபரங்கள் இன்னும் வரவில்லையே ! எனவே தன் முகத்தை கல் போன்றே வைத்துக் கொண்டாள் .

 

” காகிதப்பை தயாரிக்கும் தொழில் தொடங்கும் நிலையில் இருக்கிறது .லோன் சேங்ஷன் ஆகிவிட்டது .மெஷினரீஸ் ஆர்டர் போட்டிருக்கிறேன் .வந்ததும் ஆரம்பிக்க வேண்டியதுதான் .” சொன்னபடி கார் ஓட்டியவனை பார்க்காமல் வெளியே பார்த்தாள் .




ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக சென்ற கார் நிற்க , இறங்கி அவள் பக்கம் வந்து கை பிடித்து அவளை இறக்கினான் .” இது என் ஆத்ம திருப்திக்காக நான் செய்யும் தொழில் .மற்ற தொழில்களை போல் இதில் பெரிய அளவு லாபம் இல்லையென்றாலும் , எனக்கு பெரிய மன திருப்தி கிடைக்கிறது ”

 

கீழே இறங்கிப் பார்த்த கவியாழினி ஆச்சரியமானாள் .அது வீணை தயாரிக்கும் தொழிற்சாலை .இதிலெல்லாம் இவனுக்கு ஈடுபாடு உண்டா ?

 

” தஞ்சாவூர் வீணைகள் உலகப் புகழ் பெற்றவை .இப்போது இந்த தொழில் அழிந்து வருகிறது .நமது மண் வாசம் கொண்ட இந்த தொழிலை அழிய விடக் கூடாது என்பதுதான் என் லட்சியம் .” மகிநந்தன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே , கவியாழினியின் உள்ளத்து நெருடல் அங்கே உதயமானது .

 

” ஹாய் மகி ! ஹாய் கவி ! ” என்றபடி வந்தாள் மரைனா .

 

” மரைனா ப்ரான்ஸ் நாட்டவள் . வீணை பற்றிய ஆராய்ச்சிக்காக இங்கே வந்திருக்கிறாள் .நானே வெளியே போ என்று துரத்தினாலும் இவள் இங்கிருந்து நகர மாட்டாள் .அந்த அளவு இந்த வீணைகளின் மேல் இவளுக்கு தீராத காதல் வந்துவிட்டது ”

 

கவியாழினி சட்டென அவனைத் திரும்பிப் பார்க்க ” வீணைகளின் மீது …” என்றான் அழுத்தமான குரலில் .

 

” முதன் முதலாக நம்ம தொழிற்சாலைக்கு சேர்ந்து வந்திருக்கிறீர்கள் .சாப்பிடுங்கள் ” மரைனா மணமான பில்டர் காபியை பித்தளை டபராவில் வைத்து நீட்ட ஆச்சரியமாக பார்த்தாள் கவியாழினி .

 

” உங்க ஊர் காபி எனக்கு ரொம்ப பிடித்து விட்டது .நானே போட கற்றுக் கொண்டேன் ” காட்டன் சேலையணிந்து , தலை பின்னி மல்லிகை பூ வைத்துக் கொண்டு , ஆங்கிலம் பேசியபடி பில்டர் காபி ஆற்றிய அயல்நாட்டு நங்கை அழகாக புன்னகைத்தாள் .

 

” இன்று ஏகாண்ட வீணை எத்தனை தயார் நிலையில் இருக்கும் மரைனா ? ”

 

” மூன்று .சாதா வீணை ஐந்து ” சொல்லிவிட்டு தொழிற்கூடத்திற்குள் போய்விட்டாள் .

 

” இவர்கள் இங்கே வேலை பார்க்கிறார்களா ? ”

 

” பிரான்சில் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் மரைனா .இசையின் மீது அவளுக்கிருக்கும் ஈடுபாட்டினால் இங்கேயே விழுந்து கிடக்கிறாள் .”

 




” அப்படி என்ன ஈடுபாடு ? ” கேட்டவளை உறுத்துப் பார்த்தான் .” கேட்க நினைப்பதை வெளிப்படையாக கேட்டுவிடு ”

 

” இரண்டு பேருமாக சேர்ந்து அடிக்கடி வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே ? அது ஏன் ? ” தனது மன உறுத்தலை கேட்டே விட்டாள்.

 

மகிநந்தன் இரு கை கோர்த்து மேசையில் ஊன்றி அதில் தன் தாடையை பதித்துக் கொண்டு அவளை ஊடுறுவி பார்த்தான் .” உன் பெயரின் அர்த்தம் உனக்குத் தெரியுமா ? யாழ் என்றொரு இசைக்கருவி இருந்தது தெரியுமா ? ”

 

” எப்போதோ பள்ளியில் தமிழ் பாடத்தில் யாழ் பற்றி படித்த ஞாபகம் .என் பெயர் அப்பா வைத்தது .நல்ல தமிழ் பெயர் அவருக்கு பிடிக்குமென்பதால் இப்படி பெயர் வைத்ததாக அம்மா சொல்வார்கள் ”

 

” யாழ் இசைப்பவள் யாழினி .கவி பாடி யாழிசைப்பவளாக உன் பெயர் அர்த்தத்தை கொள்ளலாம் .இசை பற்றிய ஞானம் இல்லையென்றாலும்  இசைக்கருவிகள் மேல் எனக்கு ஓர் பிடிப்பு உண்டு .நம் தஞ்சை வீணையை உலகம் முழுவதும் பரப்பும் ஆசை இருக்கிறது .ஒரு நாள் யாழ் எனும் கருவி பற்றி எனக்கு தெரிய வந்தது .இப்போது வழக்கில் இல்லாத அந்தக் கருவியை மீண்டும் இசை உலகிற்கு அறிமுகப்படுத்த நினைத்தேன் .அது சம்பந்தமான ஆராய்ச்சியில் இருக்கும் போதுதான் முகதூல் மூலம் மரைனா எனக்கு அறிமுகம் ஆனாள் .அவளும் யாழ் பற்றிய ஆராய்ச்சியில் இருந்தாள் .யாழின் பிறப்பிடம் இந்தியா …அதிலும் தமிழ்நாடு என்றறிந்து மேலதிக  தகவல்களுக்காக இங்கே வந்தாள் .நம் ஊர் வீணை மேல் ஒரு வகை பைத்தியமாகவே ஆகிவிட்டாள் .நாங்கள் இருவரும் யாழ்தான் வீணையாக உருமாறியிருக்கிறது என கண்டறிந்து , மீண்டும் யாழினை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம் .இருவரும் ஒன்றாக அங்கிங்கு அலைவது இதற்காகத்தான் ”

 

தனது மன கோணல்களையெல்லாம் கண்டு கொண்டு ஒரே நாளில் அவற்றை சரி செய்தவனை முகத்திற்கு நேராகப் பார்க்க கூசி , வீட்டிற்கு திரும்பும் வழியெங்கும்  தலை குனிந்தே அமர்ந்திருந்தாள் .இவனிடம் சாரி கேட்க வேண்டுமே எப்படி ?

 

வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் ” கஷ்டமென்பது போல்  பாவலாவாக கண்ணீர் வடிப்பதெல்லாம் இன்று செல்லாது .தயாராக காத்திரு கண்ணே ” எனக் கண்ணடித்தான் .

 

அவன் பேச்சு புரிந்து முகம் சிவக்க வேகமாக கீழிறங்கப் போனவளின் தோள் பற்றி தன் பக்கம் இழுத்தான் .பிணைந்து கொண்ட இதழ்கள் இத்தனை வருடங்களாக பேசாமல் விட்ட கதைகளை பேச ஆரம்பித்தன .

 




” இது சாம்பிள்தான் .” சிறு புன்னகையோடு அவளை விடுவித்த மறு நொடியே கவியாழினி வீட்டிற்குள் ஓடியிருந்தாள் .

 

அன்று இரவு தன் காதல் மனைவி பற்றிய நினைவுகளுடன் , தங்களுக்கான தனிப் பொழுதினை எதிர்பார்த்து விரைவில் வீடு திரும்பிய மகிநந்தன் , படுக்கையறை கட்டிலில் சுருண்டு படுத்து முகம் வீங்க அழுது கொண்டிருந்த மனைவியை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

 

What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!