Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 35

35

ஒப்பீடுகளுக்கு எனை கொடுத்த
உளறல் இரவுகள் சில
சதா இம்சித்தபடி மனமோரம்,
சவட்டியடிக்கும் சாட்டை விளார்கள்
மட்டும் உன்னோரம்..




“ஏங்க இங்கே வாங்களேன்..” மைதிலி.. பதட்டத்துடன் பரசுராமனை அழைக்க, அவன் வேகமாக எழுந்து வந்தான்.
“கல்யாண் என்னடா இந்த நேரத்தில்..?”
“அண்ணா வந்தனாவிற்கு காய்ச்சல் அடிக்கிறது.. உடல் முழுவதும் கொதிக்கிறது.. ரொம்ப அனத்துகிறாள்.. அண்ணி நீங்கள் ஏதாவது மாத்திரை வைத்திருக்கிறீர்களா..?”
“இதோ கொண்டு வருகிறேன்…” மைதிலி மாத்திரையோடு சூடான பாலும் எடுத்துக் கொண்டு போய் வந்தனாவை எழுப்பி விழுங்க வைத்தாள்..
“நேற்று அவளை மழையில் நனைய விட்டாயே.. அதுதான் இந்தக் காய்ச்சல்.. கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே..” பரசுராமன் கல்யாணசுந்தரத்தை திட்டினான்..
அனத்தல்கள் குறைந்து வந்தனா தூங்க ஆரம்பிக்கவும் இருவரும் தங்கள் அறைக்கு வந்தனர்.. வந்தனாவின் காய்ச்சல் விடிந்ததும் மிக அதிகமாக இருந்தது..
ஈஸ்வரியும், மகாராணியும் வந்து பார்த்து கவலைப்பட அருணாச்சலம் கல்யாணசுந்தரத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போக சொன்னார்.. கல்யாணசுந்தரம் காரில் வந்தனாவை கூட்டிப் போய் எல்லா டெஸ்டும் எடுக்க, டைபாய்டு என்று உறுதி செய்யப்பட்டது..
வீட்டினர் அனைவரும் வந்தனாவை மிக ஜாக்கிரதையாக கவனித்துக் கொண்டனர்.. சுத்தமான வெள்ளை டவலால் இதமான சுடு தண்ணீர் தொட்டு தனது உடலை துடைத்துக் கொண்டிருந்த மைதிலியை கண்ணில் நீரோடு பார்த்தாள் வந்தனா..
“அம்மாவை எங்கே மைதிலி..? நீ ஏன் இதையெல்லாம் செய்கிறாய்..?”
“உன் அம்மா அத்தையோடு கோவிலுக்கு போயிருக்கிறார்கள் வந்தனா.. ஏன் இதையெல்லாம் நான் செய்யக் கூடாதா..?”
“எனக்கு மனசாட்சி உறுத்துகிறது மைதிலி..”
“எதற்கு..?”
“நா.. நான் உனக்கு நிறைய துரோகங்கள் செய்து இருக்கிறேன்.. உன் வாழ்க்கையையே கெடுக்க நினைத்திருக்கிறேன்..”
“ப்ச் அதெல்லாம் முன்பு எப்போதோ.. நீ சிறுபிள்ளைத் தனமாக செய்தது.. அதையெல்லாம் நான் பெரிதாக நினைத்துக் கொள்ளவில்லை..”
மைதிலி வந்தனாவின் கால்களை துடைக்க ஆரம்பிக்க.. வந்தனா எழுந்த அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்..
“வேண்டாம் மைதிலி.. இதற்கெல்லாம் நான் தகுதியானவள் இல்லை..”
“உடம்பு சரியில்லாமல் படுத்திருப்பவர்களுக்கு வேலை செய்வது கடவுளுக்கு சேவை செய்வதற்கு ஒப்பானது.. பேசாமல் இரு..” அவளை அதட்டிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.
உடம்பை துடைத்து வேறு நைட்டி மாற்றிவிட்டு அவள் தலையை சிக்கெடுத்து பின்ன ஆரம்பித்தாள்..




“நா.. நான் உன்னிடம் நிறைய தப்பாக பேசியிருக்கிறேன்.. மைதிலி.. ப.. பரசு.. அத்தானை பற்றி நா.. நான் சொன்னதெல்லாம் உண்மையில்லை..”
மைதிலி நிதானமாக “தெரியுமே..” என்றாள்..
“தெரியுமா..? எப்போது..?”
“அப்போதே.. நீ என்னிடம் சொல்லும் போதே.. என் புருசனை பற்றி எனக்கு தெரியாதா வந்தனா..?”
வந்தனா சத்தமாக அழத்துவங்கினாள்..
“நீ ரொம்ப நல்லவள் மைதிலி..”
“அப்படி ஒன்றும் இல்லை.. நானும் உன்னைப்போல் சாதாரண மனுசிதான்.. உன்னிடம் நிறைய பேச வேண்டும் வந்தனா.. ஆனால் இப்போது வேண்டாம்.. ஒரு வாரம் போகட்டும் உன் உடல் கொஞ்சம் தேரட்டும்.. அதற்கு பிறகு நாம் இருவருமாக உட்கார்ந்து பேசலாம்.. சரியா..?”
தன் கன்னத்தில் தட்டிப்போன மைதிலியை பிரமிப்பாக பார்த்திருந்தாள் வந்தனா..
மைதிலி பின்வாசல் பக்கம் நின்று கொண்டிருக்கும் போது வீட்டினுள் யாரோ அழைக்கும் சத்தம் கேட்க வேகமாக வந்து பார்த்தாள்.. கௌரிம்மா வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு போய் விட்டார்.. மகாராணியும், ஈஸ்வரியும் வெளியே போயிருக்க வந்தனா தூங்கிக் கொண்டிருந்தாள்..
யாரோ வந்தனாவின் அறைக்குள் போவது போல் தெரிய மைதிலி வேகமாக யாரென பார்க்க அறைக்கு அருகே போனாள்.. உள்ளே கல்யாணசுந்தரத்தின் சத்தம் கேட்க, அப்படியே நின்று விட்டாள்.. உள்ளே கல்யாணசுந்தரம் வந்தனாவிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான்..
“வந்தனா..”
“இங்கே என்னைப் பார்..”
“நான் இப்போது உன்னிடம் பேசியே ஆக வேண்டும்..”
“எதற்காக உன்னை நீயே இப்படி வருத்திக் கொள்கிறாய்..?”
கல்யாணசுந்தரத்தின் இத்தனை கேள்விகளுக்கும் பிறகு வந்தனா மெல்ல வாய் திறந்தாள்..
“நா.. நான் பெரிய தப்பு செய்துவிட்டேன்..”
“நம் கல்யாணம் முடிந்த நாளிலிருந்து இப்படியே பேசிக் கொண்டு இருக்கிறாயே.. அப்படி என்ன தப்பு செய்து விட்டாய்..?”




“நம் கல்யாணமே ஒரு தப்புதான்.. நான் வேறு ஏதோ நினைப்பில் நம் கல்யாணத்திற்கு சரி சொல்லி விட்டேன்.. நம்முடையது தவறான திருமணம்..?”
“ஏன் வந்தனா அப்படி சொல்கிறாய்..?”
“ஆமாம் அப்படித்தான்.. என்னால் உங்களை என் கணவராக நினைக்க முடியவில்லை.. நாம் கணவன் மனைவியாக இணைந்து வாழ முடியாது..?”
“ஏன்..? அப்படி என்ன தவறு நம் திருமணத்தில்..?”
“நான் உங்களை என் கணவரென்ற ஸ்தானத்தில் வைத்து இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க முடியுமென்று தோன்றவில்லை.. இப்படி நமது வாழ்வு வீணாக போவதற்கு பதில் நாம் இருவரும் பிரிந்து விடுவோம்..”
“வாயை மூடுடி..” கல்யாணசுந்தரத்தின் ரௌத்ரத்தில் வெளியே நின்றிருந்த மைதிலியின் தேகம் நடுங்கியது..
கல்யாணசுந்தரம் அமைதியானவன்.. அதிர்ந்து பேசாதவன்.. அவனிடமிருந்து இப்படி ஒரு கோபமா..?
“ஏய் இங்கே பாருடி.. நீ வேண்டுமானால் என்னை கணவன் நிலையில் வைத்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம்.. ஆனால் நான் உன்னை என் மனைவியின் நிலையை தவிர வேறு எந்த மாதிரியாகவும் உன்னை நினைத்து பார்த்ததில்லை.. எனக்கு காதல் என்ற உணர்வை மனதிற்குள் கொண்டு வந்தவளே நீதான்.. என்னுடைய டீன் ஏஜ் பருவ இறுதியிலிருந்து நான் உன்னைத்தான் என் மனைவியாக மனதில் நினைத்திருந்தேன்.. அப்போதுதான் திடீரென உனக்கு அண்ணனை மணம் பேசினார்கள்.. நான் அதிர்ந்து விட்டேன்.. அண்ணனுக்கும், உனக்கும் அதில் விருப்பம் போல் தெரிய, நான் பேசாமலிருக்க வேண்டிய நிர்பந்தம் உங்கள் திருமணம் முடிந்ததும் ஊரை விட்டே எங்காவது போய்விட நினைத்திருந்தேன்.. அப்போது கடவுளின் கருணையால் அந்த திருமண ஏற்பாடு நின்றுவிட நான் சந்தோசமானேன்.. கூடவே நம் இரு குடும்பங்களுக்கிடையே பகையும் வந்து விட்டது..
ஆனால் அதில் எனக்கு கவலையில்லை.. ரொம்ப நாட்களுக்கு நமது குடும்ப பகை நீடிக்காது என எனக்கு தெரியும்.. அதனால் காத்திருந்தேன்.. அண்ணனுக்கும் வேறு இடத்தில் திருமணம் பேசி முடித்து விட, நான் நமது திருமண பேச்சிற்கான சரியான தருணத்திற்காக காத்திருந்தேன்.. இந்த நேரத்தில் மீண்டும் ஒரு தடங்கள்ல.. உன் அப்பா இறந்து போனார்.. அது நான் எதிர்பார்க்காதது..




அப்பா இறந்த துக்கத்தில் கதறி அழுது கொண்டிருந்த உன்னை வாரி எடுத்து அணைத்து ஆறுதல் கூற நினைப்பேன்.. ஆனால் முடியாது.. நீ என் பக்கமே திரும்பக் கூட மாட்டாய்.. நான் வான் தேவதையை பார்த்திருக்கும் பக்தனாய் உன்னைப் பார்த்தபடி நிற்பேன்.. நீயும், அத்தையும் நம் வீட்டிற்குள் வரவும் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது.. எப்படியும் நமது திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கை..
நேரம், காலம் கூடி வந்து நம் வீட்டில் பெரியர்களாகவே நம் திருமண பேச்சை தொடங்கிவிட நான் சந்தோசமாக சம்மதித்தேன்.. நீயும் சந்தோசமாகத்தான் நம் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாய் என நினைத்தேன்.. ஆனால் நீ நம் திருமணம் முடிந்த நாளிலிருந்து அழுகிறாய், தவிக்கிறாய், என்னைத் தவிர்க்கிறாய்.. ஏன் வந்தனா..? என்ன காரணம்..? என்னைப் பிடிக்கவில்லையா..? இதோ இப்போது கூட ஒரு வாரமாக காய்ச்சலில் விழுந்து கிடக்கிறாய்.. என் மனது வலிக்கிறது.. உனக்கு சிகிச்சைக்காக என்று கூட உன் அருகில் என்னால் வர முடியவில்லை.. நீ என்னை அதற்கு அனுமதிக்கவில்லை.. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது வந்தனா..”
கல்யாண சுந்தரம் பேசி முடித்ததும் வந்தனா சத்தமாக அழத்துவங்க.. அவன் அவளை அள்ளி எடுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்.. தலை வருடி சமாதானம் செய்யத் துவங்கினான்..
“வேண்டாம்டா.. அழாதடா.. என் செல்லம் இல்ல.. அழக் கூடாது..” சேயை சமாதானப்படுத்தும் தாயாக மாறினான்..
“விடுங்க என்னை.. நீங்க முதல்ல இங்கிருந்து போங்க.. நான் யோசிக்கனும்..” வந்தனா விம்மியபடி சொல்ல கல்யாணசுந்தரம் அவளை மெதுவாக தன்னிடமிருந்து பிரித்து கட்டிலில் படுக்க வைத்தான்.
“ஒரு வாரம் போகட்டும் வந்தனா.. உன் உடம்பு முழுக்க சரியானதும் நாம் பேசுவோம்..”
தலையை அன்பாக வருடிவிட்டு வெளியேற மைதிலி வேகமாக அடுப்படிக்கு வந்துவிட்டாள்.. அவள் மனம் சிட்டுக்குருவியாக சிறகடித்தது.. அவள் எப்படி பயந்து கொண்டிருந்தாள்.. உன் பயம் அர்த்தமற்றது என்று கூறும் விதமாக எவ்வளவு அற்புதமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன..
கல்யாணசுந்தரத்தின் காதல் அவளுக்குள் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர கொடுத்தது.. அவன் மேல் ஒரு புதிய மரியாதையே வந்திருந்தது..




உடனே மிக உடனேயே அவளுக்கு பரசுராமனை பார்க்கும் ஆசை வந்தது.. இந்த நல்ல செய்தியை அவனுக்கு சொல்ல வேண்டுமே.. மதிய உணவுக்கு அவன் வரும் நேரத்திற்கு காத்திருக்க, சாப்பாட்டை கடைக்கு கொடுத்து விடும்படி போன் வந்தது.. இனி இரவுதான் வீட்டிற்கு வருவான்..
ம்ஹூம் அதுவரை என்னால் பொறுக்க முடியாது.. யோசித்த மைதிலி, ஒரு முடிவுக்கு வந்தாள்.. வீட்டிற்கு வந்த மகாராணியிடம் சொல்லி விட்டு, கடையில் இருக்கும் தன் குடும்பத்தினருக்கான உணவு கேரியருடன் தானே கடைக்கு கிளம்பினாள்..
தான் அறிந்து கொண்ட நல்ல செய்தியை கணவனிடம் பகிர்ந்து கொள்ள அவள் மனம் துடித்துக் கொண்டிருந்தது..

What’s your Reaction?
+1
8
+1
4
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!